வெண்மைப்புரட்சி எங்கே?

[பாலா இந்த தளத்தில் எழுதிய வெண்மைப்புரட்சி பற்றிய கட்டுரை தொடர்பாக ஒரு விவாதம்]

அன்புள்ள பாலா ,

நாங்கள் எங்களது இந்தியப் பயணத்தில் குஜராத், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் எல்லாம் சராசரியாக சாலைக் கடைகளில் ஒரு கோப்பை தேநீர் ரூபாய் 10 என வாங்கிப் பருகினோம், தமிழகத்தில் சாலைக் கடைகளில் அதே அளவு சில சமயம் கூடுதலான அளவு ஒரு கோப்பை 4 முதல் 6
வரை மட்டுமே . ஈரோட்டில் கடைகளில் சராசரி 6 . ஒரு லிட்டர் பாலின் விலை தமிழகத்திற்கும் குஜராத்திற்கும் வேறுபாடில்லை , அதே போலப் பிற மாநிலங்களுக்கும் . என்றாலும் மாநிலங்களிடையே சரியான விலை பற்றிய ஒப்புநோக்கிய தகவல் எனக்குத் தெரியவில்லை.

பாலின் விலையோ அல்லது ஒரு கோப்பை தேநீரின் விலையோ தமிழகத்தைவிடக் கூடுதல் என்றால் இந்த வெண்மைப் புரட்சியின் பயனும் மதிப்பும் என்ன. மேலும் உங்கள் கட்டுரையில் இந்த வெண்மைப் புரட்சி காரணமாகப் பயனாளிகள் அல்லது பொது மக்கள் (விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்போர் அல்ல ) அடைந்த லாபம் என்ன , அதாவது இந்தக் கூட்டுறவு வெண்மைப் புரட்சிக்கு முன் குஜராத்தில் பாலின் விலை இவ்வளவு பிறகு இவ்வளவு குறைந்துள்ளது அல்லது விலைவாசி ஏற்றம் இதை பாதிக்கவில்லை போன்ற நோக்கில் இல்லை. இது அப்போதே உறுத்தியது , பதில் வேண்டுகிறேன். பதிலைத் தனி மடலில் அனுப்பினாலும் சரி குழுமத்தில் பதிந்தாலும் சரி.

கிருஷ்ணன்.

கிருஷ்ணன்,

மிக நியாயமான கேள்வி.

பாலின் கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள இடைவெளியை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பாலினுள் உள்ள கொழுப்பும், மற்ற திடப் பொருள்களும்தான் பாலின் விலையை நிர்ணயிக்கின்றன. குஜராத்தில் பெரும்பாலும் எருமைப் பால். அங்கே, கூட்டுறவுச் சங்கங்கள், கிலோ கொழுப்புக்கு ரூபாய் 450 வரை கொடுத்துக் கொள்முதல் செய்கின்றன. அதாவது 8% கொழுப்புள்ள எருமைப் பால், லிட்டர் 36 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப் படுகிறது. அமுல் ஸ்டாண்டர்டைஸ்ட் பால், லிட்டர் ரூபாய் 36க்கு விற்கப்படுகிறது. ஆனால், இந்தப் பாலில் கொழுப்பு 4% மட்டுமே இருக்கும். அதிலிருந்து 4% கொழுப்பு நீக்கப் பட்டு, வெண்ணெய், நெய் போன்ற பொருட்கள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. பொதுவாக, விற்பனை விலையில் 80% வரை உற்பத்தியாளரைச் சென்றடைய வேண்டும் என்பது அமுல் மாடல். வருட இறுதியில், வரும் லாபம் (கிட்டத் தட்ட லிட்டருக்கு 1 – 1.50 ரூபாய் வரை உபரியாகச் சென்றடைகிறது). குஜராத்தில், அரசியல்வாதிகளால் கூட்டுறவு சங்கங்கள் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தாலும், அவை தத்தம் தனித்துவமிக்க நிர்வாகத்தைக் கொண்டுள்ளன

ஆனால், தமிழகத்தில் பெரும்பாலும் மாட்டுப் பால். இதில் கொழுப்பு 3.5 – 4% வரைதான். இங்கு, 20 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படும் பால், 24 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. நுகர்வோர் செலுத்தும் விலையில், 83% உற்பத்தியாளரைச் சென்றடைகிறது. ஆனால், இங்கு, கொள்முதல் விலை, விற்பனை விலை இரண்டுமே அரசால் நிர்ணயிக்கப் படுகிறது. மீதி யிருக்கும் 17 சதம், கொள்முதல்ச் செலவு, போக்குவரத்து, பதப் படுத்தும் செலவு, பேக்கிங் செலவு எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, இவ்வியாபாரம் செய்யும் ஆவினுக்கு அது நஷ்டமாக முடிகிறது. அந்நஷ்டத்தை, அரசு சரி செய்து வருகிறது. இது ஒரு சலுகையே. எனவே பால் விலை குறைவு. பால் சந்தையின் மிகப் பெரும் நிறுவனமாக இருப்பதால், மற்ற தனியார் துறையினரும் விலையை மிக அதிகம் ஏற்ற முடிவதில்லை. 3% கொழுப்பு பால், தனியார் ப்ராண்டுகள் ரூபாய் 28 வரை விற்கின்றன.

நுகர்வோர் விலையில் 80% சதம் உற்பத்தியாளரைச் சென்றடையும் தொழில் மாதிரியில், இடைத் தரகர்களுக்கோ, மில்லியன் டாலர் C.E.Oக்களுக்கோ இடமில்லை. it is a near perfect transaction. (அண்ணன் அரங்கசாமி, இக்கூற்றை ஆமோதிப்பார் என்று நம்புகிறேன்). ஆவினில் ஊழல் என்று பேசுபவர்களுக்கு, தனியார் துறையைப் பற்றி ஒன்றும் தெரியாது.

அடுத்த கேள்வி – பால் உற்பத்தி 20 மில்லியன் டன்னிலிருந்து 120+ மில்லியன் டன் ஆகியும் ஏன் பால் விலை குறையவில்லை –

அதிக உற்பத்தியும், உற்பத்தித் திறனும், பொருளின் விலையைக் குறைக்க வேண்டும் என்பது ஒரு பொருளியல் நோக்கு. ஆனால், ஒவ்வொரு பொருளும், உற்பத்தி செய்யப்படுவதற்கு, பல கச்சாப் பொருட்கள் தேவைப் படுகின்றன. அவற்றின் விலை ஏற்ற இறக்கங்கள், சந்தையின் அளவு, மெக்கனைசேஷன், அரசு வரிகள், consumer demand எனப் பல விஷயங்கள் அவற்றின் இறுதி விலையைப் பாதிக்கின்றன.

எனவேதான், 3 லட்சம் மாருதி கார், இன்று 2.5 லட்சமாக உள்ளது. சில துறைகளில் போட்டியும், பொருள் விலையைக் குறைக்க உதவியுள்ளன. உதாரணம் – செல் போன்.

ஆனால், அடிப் படைத் தொழில்களின் கச்சாப் பொருட்கள் மிகக் குறைவு. பால் உற்பத்திக்குத் தேவை உரங்கள், தொழிலாளர் மற்றும் மாடுகளின் விலை முதலியன. அவற்றின் விலைகள் எவ்வாறு ஏறியுள்ளன என்பதை நாமனைவரும் அறிவோம். ஆகவே பால் உற்பத்தி விலை அதிகரிக்கிறது. எடுத்துக் காட்டாக இரண்டு எருமை வைத்து, சராசரியாக, 15 லிட்டர் பால் கறந்தால், விவசாயிக்கு, ஒரு நாளைக்கு 540 ரூபாய் கிடைக்கும். அதில் தீவனம் மற்றும் பராமரிப்புக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் 250. போக, மீதி அவனின் உழைப்புக்கும், முதலுக்கும் கிடைக்கும் வருமானம் மாதத்துக்கு – 9500- 10000. இது, வருடத்துக்கு, 8 மாதம் தான். இன்னொரு ஆறு மாதம், எருமையைச் சும்மா வைத்துச் சோறு போட வேண்டும். இந்த அளவு வருமானம் இருக்கும் போதுதான், அத்தொழிலை மேலும் மேம்படுத்த விவசாயிகள் முன்வருவார்கள். முடியாதவர்கள், என் பெற்றோரைப் போல், பையனைப் படிக்க வைத்துப் பொட்டி தட்ட அனுப்பிவிடுவார்கள்.

லாபம் (விவசாயிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இருவருமே) ஈட்டியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள குஜராத் கூட்டுறவு சங்கங்கள், அதிக விலையில் பால் கொள்முதல் செய்து, அதிக விலையில் விற்கின்றன. தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்கள் அரசின் கட்டுப் பாட்டுக்குள் உள்ளன. கொஞ்சம் விவசாயியின் தலையில் குல்லா போட்டு, குறைந்த விலைக்கு பால் வாங்கி, குறைந்த விலைக்கு நுகர்வோருக்கு விற்கின்றன. இதை எதிர்த்து, விவசாயிகளை ஒன்று திரட்டும் தலைமை இங்கில்லை. இது ஒரு நஷ்டத்தை ஏற்படுத்தும், ஆனால், அரசியல் ரீதியாகத் தேவையான மாடல் என்பதால், குறைந்த அளவு நஷ்டத்தில், தமிழக எல்லைக்குள் மட்டுமே தொழில் செய்கிறது ஆவின். லாபத்தில் இயங்குவதால், உலகெங்கும் தன் ப்ரிமீயம் பொருட்களை, விற்றுத் தொழில் செய்கிறது அமுல் (அமுலினாலும் வெறும் பாலை உலகெங்கும் கொண்டு செல்ல இயலாது). அமுல் 13000 ஆயிரம் கோடி என்கிறார்கள். ஆவின் 3000 கோடி இருக்கலாம்.

மூன்றாவது முக்கிய காரணம். பண வீக்கம். 1990ல் என் மாத சம்பளம் 2920. இன்று அது, நூறு மடங்கிலும் அதிகம். அன்று பால் விலை ரூபாய் 8. இன்று 24. 3 மடங்கு அதிகம். 25 ஆண்டு காலப் பண வீக்கத்தை டிஸ்கவுண்ட் செய்து பார்த்தால், இன்று பால் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. எங்கேயோ மனிதர்கள், வியர்வை சிந்தி, நமக்காக உழைக்கிறார்கள். பாவம்.

பாலா

அன்னியமுதலீடு பாலா

முந்தைய கட்டுரைமுரளியின் மகன்
அடுத்த கட்டுரைஎழுத்தின் வழிகள்-கடிதம்