மறுபிறப்பு

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

வணக்கம்.அண்மையில் வாசித்த இரண்டு விடயங்கள் நீண்டகாலமாக அடிமனதில் ஓடிக்கொண்டிருந்த ஒன்றை மேற்கிளப்பி விட்டது.

ஒன்று.ஆனந்த விகடனிற்கு(8.8.12 ) வழங்கிய பேட்டியில் எழுத்தாளர் அசோகமித்திரனின் பதில்.

“திடீரென ஒரு நாள் விஞ்ஞானிகள் கடவுள் இல்லை என்பதை அறிவியல்ரீதியாக நிரூபித்து அறிவித்தால்,அதற்குப் பின் இந்த உலகம் எப்படி இருக்கும்?”
“நான் ஒரு நாள் கோமாவில் இருந்திருக்கிறேன்.அந்த நாளை ஞாபகப்படுத்திப் பார்க்கும்போது,ஒன்றுமே இல்லாத சூழலில் இருந்த மாதிரிதான் உணர்கிறேன்.கிட்டத்தட்ட சாவுக்குப் பிறகான நிலை அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நாம் ஒன்றுமே இல்லை என்பதுதான் பெரிய உண்மை.என்னுடைய சாம்பலைக் கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள் என்றுதான் என் குடும்பத்தாருக்கே சொல்லி இருக்கிறேன்.இந்த உலகத்தை ஏதோ ஒரு சக்தி,அவன் அல்லது அவள் அல்லது அது ஆள்கிறது என்று நம்புகிறோம்.அதுவும் இல்லாமல் போனால்…எனக்குச் சொல்லத் தெரியவில்லை!”

இரண்டு.நக்கீரனில்(2012 ஆக.22-24) வெளிவந்த செய்திக்கட்டுரை.

அடுக்குமாடிக் குடியிருப்பில் மேல்மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பத்மஸ்ரீ என்ற பன்னிரெண்டு வயதுச் சிறுமி கீழே விழுந்து மண்டை பிளந்து மூளைச்சாவு நிலைக்குச் சென்றுவிடுகிறாள்.அந்த சிறுமி இறந்து விட்டதாக உள்ளூர் மருத்துவமனைகள் கைவிட்டுவிட்டன.இந்தச் சூழலில் குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனையில் பத்மஸ்ரீயை சேர்த்தனர்.அங்கு மருத்துவர் முத்துக்குமார் தலைமையிலான குழுவினரின் அர்ப்பணிப்பான கடின முயற்சியால் நான்கு மாத கோமா நிலையில் இருந்த சிறுமி அதில் இருந்து மீண்டு பாடசாலைக்கு செல்லத்தொடங்கி விட்டாள்.

“விளையாடிக்கிட்டிருந்ததுதான் எனக்கு ஞாபகம் இருக்கு அங்கிள்.நான் எப்படி விழுந்தேன்கிறதே எனக்கு தெரியலை.நாலு மாசமா ஆஸ்பிட்டல்லே இருந்திருக்கேன்.நாலு மாசமும் எனக்குப் பேச்சே வரலைன்னு அம்மா சொன்னப்போ…பேசாம எப்படி கெடந்திருப்போம்னு யோசிச்சிப் பார்த்தால் எதுவுமே ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது அங்கிள்.ஸ்கூலுக்குப் போனா…நிறைய பாடம் நடத்தி முடிச்சிருக்காங்க.எல்லாப் பாடத்தையும் இப்பதான் காப்பி பண்ணிக்கிட்டிருக்கேன்” என்கிறாள் பத்மஸ்ரீ.

சாவைப் பற்றிச் சிந்திக்கும் போது அது மனிதனின் இறுதியான முடிவு,அதற்கு பின் எதுவும் இல்லை என்பதே உண்மை என்று மனதில் தோன்றும்.அந்த எண்ணம் ஆரம்பத்தில் அளித்த அதிர்ச்சியை நான் தொடர்ந்து அது குறித்து சிந்திப்பதனூடாகக் கடந்துவர முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.

ஒரு முறை,பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர், மதக் குறுங்குழு ஒன்றின் பிரச்சாரகர்களிடம் தற்செயலாக மாட்டிக்கொண்டேன்.அவர்கள் ‘விரைவில் உலகம் அழியப்போகின்றது.தேவனுடைய இரட்சிப்பின் பாதைக்கு வந்துவிடு.இல்லாவிடின் மீளாநரகம் காத்திருக்கின்றது’ என்று குழையடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.இவர்களைப் பேசவிட்டால் நம்மைப் பைத்தியமாக்கிவிடுவார்கள் என்பதால்,நான் கூறும் விடயத்தை நன்றாக யோசித்த பின்பு நீங்கள் எனக்கு போதனை செய்யலாம்.உடனடியாக பதிலெதுவும் கூற முயலவேண்டாம் என்றொரு தடுப்பைப் போட்டபின்னர்,மனிதனின் சாவு அவனை இல்லாமலாக்கி விடுகின்றது.அவனே இல்லாமல் போகும் போது அவனைப் பொறுத்தவரை இந்த உலகமும் அழிந்து விடுககின்றது.எனவே உலக அழிவென்பது இனித்தான் வரப்போகும் ஒன்றல்ல.ஒவ்வொரு மனிதனும் இறக்கும் போது அவனுடன் அவனது உலகமும் இல்லாது போய்விடுகின்றது என்றேன்.அவர்களின் முகம் போன போக்கை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது.

இது அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சொல்லப்பட்டாலும் என்னிடம் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணம்தான்.மனிதனை அதிரவைக்கும் இதனை ஆற்றுப்படுத்துவதற்கும் அவனை அமைதிப்படுத்துவதற்கும் ‘உடலினில் இருந்து தனியாக வேறுபட்டதான உயிர் அல்லது ஆத்மா,..சொர்க்கம் நரகம், மறுபிறப்பு போன்ற எத்தனையோ கற்பிதங்களை அவன் உருவாக்கிக்கொண்டாலும் அவனது ஆழ்மனது உண்மையை அறிந்திருப்பதாகவே தோன்றுவதுண்டு.

இந்த உலகத்தில் எதோ ஒருவகையில் தன்னைத் தக்கவைத்திருப்பதற்கு படைப்பூக்கம், சாதனைகளுக்கான ஆர்வம்,தனது பிள்ளைகள்..சந்ததிகள் மீதான அக்கறை,பாசம் போன்றன அவனிடம் இயல்பாகவே பின்னிப்பிணைந்துள்ளன.அதனால்தான் அவற்றால் அவன் மனதிற்குப் பெரும் திருப்தி கிடைக்கின்றது என்று நினைப்பதுண்டு.

ஒரு முறை நடிகர் கமல்ஹாசனிடம் மறுபிறப்பைப் பற்றிக் கேட்கப்பட்டபோது,எனது மறுபிறப்பென்பது எனது பிள்ளைகள்தான்.அவர்கள் என்னைப் புதிதாக மறுவார்ப்புச் செய்யப்பட்டவர்கள்.இதனைவிட வேறு மறுபிறப்புக் கிடையாது என்பதாகப் பதிலளித்திருந்தார்.பல சந்தர்ப்பங்களில் இப்பதிலை நான் பொருத்திப் பார்த்திருக்கிறேன்.

இடையறாது ஓடிச்செல்லும் மரபணு ஆற்றில் தோன்றும் ஒரு குமிழியாகவே ‘நான் என்று சிந்திக்கக் கூடிய’ தனிமனிதன் இருக்கிறான் என்பதாக மனதிற்குப் படுகின்றது.

சாவின் பின்னரான ஏதுமற்ற நிலை என்ற தவிர்க்க முடியாத முட்டுச்சந்து மனிதனின் மேல் மனதிற்கு ஒரு பேரதிர்ச்சியை அளித்தாலும்,அம்முடிவு அவன் வாழும் வாழ்வை ஒரு முழுமையான நோக்கில் பார்க்க வழி சமைக்கின்றது என்ற எண்ணம் ஏற்படுகின்றது.

நீங்கள் எழுதிய’ சிறுகதை எழுதுவது எப்படி?’ என்பதில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பீர்கள்.’சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது.’மனித வாழ்வென்னும் சிறுகதையின் முடிவைப் பற்றிச் சிந்திக்கும் போதும் இது பொருந்துவதாகத் தோன்றுகின்றது.

என்னதான் யோசித்தாலும் மரணத்தின் பின் ஏதுமற்றநிலை..சூனியம்..என்பதனை ஏற்றுக் கொள்வது கடினமாகத்தான் இருக்கின்றது.நீங்கள் சொல்லுங்கள் மரணத்தின் பின்னரான மனிதனது நிலையை எவ்வாறு சிந்திக்கின்றீர்கள்?அதனை மனிதவாழ்வோடு எவ்வாறு அர்த்தப்படுத்துகிறீர்கள்?

ந.சிவேந்திரன்

அன்புள்ள சிவேந்திரன்,

சிந்திப்பவர் எவருக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மரணம் பற்றிய அடிப்படை வினாக்கள் எழும். மனிதன் சிந்தனைசெய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்து அதற்கான பதில்கள் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவன் எல்லா பதில்களிலும் தட்டி முட்டி எங்கோ ஓர் இடத்தில் நின்றுவிடுவான்.

நாங்கள் சிறுவயதில் ராக்கெட்வாணத்தைக் கொளுத்தி தென்னந்தோப்புக்குள் எறிவோம். அது தென்னைமரங்களில் விதவிதமாக முட்டித் திரும்பித்திரும்பிச் சென்று ஓரிடத்தில் விழும். அதேபோலத்தான் இந்தப்பயணமும். உள்ளிருக்கும் கனலின் வேகம் தீர்ந்ததும் எங்கோ ஓரிடத்தில் விழுந்து அதையே பதிலாகக் கொண்டுவிடுகிறார்கள். மிகப்பெரும்பாலும் அது மரபான பதிலாகவே இருக்கும்.

மதங்கள் அளிக்கும் பதில்கள் தத்துவம் மூலம் நிலைநாட்டப்படுகின்றன. வலிமையான படிமங்கள் மூலம், சடங்காசாரங்கள் மூலம் ஆழ்மனத்தில் செலுத்தப்படுகின்றன. அவற்றை அவற்றுக்கிணையான நவீன சிந்தனைகள் மோதுகின்றன. இது அளிக்கும் கொந்தளிப்பு இளமையில் அலைக்கழிக்கிறது. பின்னர் நாம் பெரும்பாலும் அந்த வினாக்களின் பிராந்தியத்தில் இருந்தே விலகிவிடுகிறோம்.

மரணம் பற்றிய வினாக்கள் என் இளமையில் என்னைத் தாக்கின. காரணம் நண்பனின் மரணம். அம்மா அப்பாவின் மரணம். அவை வழியாகவே நான் வாசித்தேன், அலைந்தேன், எழுதினேன். என் ஆசிரியர்களைக் கண்டுகொண்டேன்.

இன்று என் ஞானாசிரியர்கள் என நான் நினைப்பவர்களில் நாராயணகுருவும் ,காந்தியும், அம்பேத்காரும், நடராஜகுருவும், நித்யாவும் மறுபிறப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் என்னால் அந்த நம்பிக்கையைக் கொள்ளமுடியவில்லை.

நித்யா சொன்னார். ‘மறுபிறப்பு உண்டு என என்னிடம் நடராஜகுரு சொன்னபோது எனக்கு அது திருப்திகரமான பதிலாக இருக்கவில்லை. ஆனால் நான் இப்படி நினைத்துக்கொண்டேன். தர்க்கபூர்வமாகப் பார்த்தால் அறியமுடியாது என்பதே பதில்.

ஆனால் அதற்கடுத்து சொல்லப்படும் பதில்களில் மறுபிறப்பு ஒன்றே முழுமையானதாக இருக்கிறது. ஏனென்றால் மனிதனுக்கு நிரந்தரத்தன்மை என்ற ஒன்று தேவையாகிறது. மனிதன் வாழ்நாளெல்லாம் சேர்க்கும் அறிவும் ,அவன்செய்யும் நற்செயல்களின் பயன்களும், அவன் உறவுகளின் உணர்வுகளும் எல்லாம் அழிவதில்லை என்ற எண்ணம் அவனுக்களிக்கும் உறுதிப்பாடு வாழ்க்கையை அர்த்தமாக்குவதுபோல வேறெதுவும் செய்வதில்லை.

இயற்கையில் உள்ள எல்லாப் பொருளும் அழியாமல் சுழன்றுவருவதைப்போல உயிரும் சுழன்றுகொண்டிருக்கிறது என்ற விளக்கம் முற்றிலும் பொருத்தமாக உள்ளது. அதுவன்றி மரணத்துக்குப்பின் நரகத்துக்கோ சொர்க்கத்துக்கோ போவது என்ற கற்பனை குழந்தைத்தனமானதாகவே தெரிகிறது.ஆகவே தற்காலிகமாக மறுபிறப்புக் கொள்கையை நான் ஏற்கிறேன். இதைப்பற்றி விவாதிக்கமாட்டேன் என முடிவெடுத்தேன்” என்று நித்யா சொன்னார்.

’அந்தமுடிவில்தான் இப்போதும் இருக்கிறீர்களா” என்று நான் கேட்டேன்.

“இல்லை. நடராஜகுரு என்னிடம் சொன்னபோது குரு இருந்த நிலையில் நான் இன்று இருக்கிறேன்” என்றார் நித்யா. அவரது முகத்தை நன்றாக நினைவுகூர்கிறேன்.

‘மறுபிறப்பு இருக்கிறதென நீங்கள் உறுதியாக அறிவீர்களா?’ என்று கேட்டேன்.நித்யா பேசாமலிருந்தார்.

பின்னர் இன்னொரு தருணத்திலும் அதைக் கேட்டேன். ‘வேதாந்தத்தின் சாரம் என்பது நிலையின்மையின் சாரமாக உள்ள நிலைத்த ஒன்று பற்றிய திட்டவட்டமான தன்னுணர்வுதான். அழிவற்றதும் சாரமானதுமான ஒன்றை வெளியேயும் உள்ளேயும் உணரும் ஒரு நிலை உண்டு. அப்போது இந்தப் புற இருப்பு என்பது ஒரு பாவனை என்றும் அக இருப்பு என்பது அழியாதது என்றும் தெரியும்.

மறுபிறப்பு உண்டா, அது எப்படிப்பட்டது என்றெல்லாம் சொல்ல எந்த மனிதனாலும் முடியாது. அது பிரபஞ்சசிருஷ்டியைச் நிகழ்த்திய ஆற்றலால் மட்டுமே பதிலளிக்க முடியக்கூடிய வினா. அந்தவினாக்களுக்கு ஒருபோதும் ஞானிகள் திட்டவட்டமான பதிலளிப்பதுமில்லை. அவர்கள் உணர்வது ஒரு certitude ஐ மட்டுமே. அதற்கு மிக நெருக்கமான விளக்கம் மறுபிறப்புக் கொள்கைதான்.

அது உனக்குப் பிடிக்கவில்லை என்றால் இப்படி வைத்துக்கொள். ஒருவன் மாறிமாறி தன்முன் வரும் கண்ணாடிகளில் தன்னைப் பார்த்துக்கொள்வது போல. நிரந்தரமான ஒன்றின் தற்காலிக இருப்புகளின் ஒரு சுழற்சியே உயிர். இதை இப்போது அவர்கள் சொல்லி நான் சொல்லவில்லை.இது என் அறிதல்…”.

ஆனால் என்னைப்பொறுத்தவரை இப்போதும் அது எனக்களிக்கப்பட்ட பதிலாகவே இருக்கிறது. என் அனுபவமாக, என் அறிதலாக இல்லை. ஆகவே நான் எதையும் எத்திசையிலும் உறுதிப்படுத்திக்கொள்ளவில்லை. நான் காத்திருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசெக்,பிரகாஷ்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்