அன்புள்ள ஜெயமோகன்,
“ஒரு கொடூர எதிர்வினை” என்ற தலைப்பில் நான் உங்களுக்கு எழுதியது, நான் உங்கள் கருத்தை முழுமையாக ஆமோதித்து எழுதிய கடிதம் என்று இத்தனை நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன்.
எங்கள் யூத்துக்களை நான் கிண்டல் செய்தும், எங்களையே நொந்து கொண்டும் எழுதிய கடிதம் தானே அது ! அதைத் தவறாகப் புரிந்து கொண்டார்களோ என்று ஐயப்படுகிறேன். என் மொழி ஆற்றல் கொஞ்சம் மோசம் தான்.
iphone 5 இந்தியாவில் ரிலீஸ் கூட ஆகவில்லை என்று நினைத்துதான் விளையாட்டாகக் கடிதத்தின் கீழே (அதுவும் தமிழில்) போட்டேன். நான் என் கையில் வைத்திருப்பது அடிப்படை நோக்கியா மட்டுமே. அதில் காமிரா கூட கிடையாது.
~ அர்விந்த்
அர்விந்த்
படித்துப்படித்துச் சொன்னாலும் யாருமே கேட்பதில்லை. நகைச்சுவை என்றால் அதை வெளிப்படையாகச் சொன்னால் என்ன? நானெல்லாம் அப்படி சொல்லித்தானே எழுதுகிறேன்?
ஜெ
ஜெ,
யூத்து கட்டுரைக்கு அர்விந்தின் பதில் ஒரு சிறந்த பூடகமான நகைச்சுவை என்று நினைத்து இருந்தேன்… அதன் எதிர்வினைகளைப் பார்க்கும் போது எனக்கே சந்தேகம் வந்து விட்டது…
உண்மையைச் சொல்லுங்கள்.. எனக்குத் தான் நகைச்சுவை உணர்வு ஒருவேளை அளவுக்கு அதிகமாகப் போய் விட்டதோ ?
ரத்தன்
ரத்தன்,
நாலுவருடம் முன்பு மதுரையில் ஒரு இடத்தில் இருந்தேன். நாட்டுப்புறம். அப்பால் பாறைகளை வெடிவைத்துத் தகர்க்கும் ஒலி. ஒரு வெடியொலிக்குப்பின் பக்கென்று என் பார்வை பறி போய்விட்டது ‘ஆ கண்ணு தெரியல்ல’ என்றேன். ’சும்மாருங்க ஜெ, எனக்கும்தான் தெரியலை. கரெண்ட் போயிடுச்சு’ என்றார் நண்பர்
எனக்குத்தான் ஏதோ பிரச்சினை என்று நினைத்தேன். நீங்களும் சிரித்திருக்கிறீர்ககள்
நன்றி
ஜெ