அன்புள்ள ஜெயமோகன்,
உண்மை மனிதர்களைப் பற்றிய உங்கள் புனைகதைகள் பலவற்றை வாசித்திருக்கிறேன். முதன்முதலாக யானை டாக்டர் கதையை தமிழினியில் வாசித்தபோது அதை ஒரு கட்டுரை என்றே நினைத்து வாசித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் சிலகாலம் வனத்துறை அதிகாரியாக வேலை செய்தீர்கள் என்று வேறு நினைத்துக் கொண்டேன். ‘புண்படுதல்’ பதிவில் நகைச்சுவை என்று கொட்டை எழுத்துக்களில் போடுகிறேன் என்று சொல்லியிருந்தது போல சிறுகதை என்று அதில் கொட்டை எழுத்துக்களில் போடாததால் வந்த வினை! டாக்டரின் ஆளுமையால் கவரப்பட்டு அவரைப் பற்றி உடனே கூகிளில் தேட வேண்டும், பலரிடமும் தெரிவிக்க வேண்டும், முடிந்தால் அவரைச் சந்திக்கலாம் என்றெல்லாம் நினைத்திருந்தேன். பின்பு பக்கத்தைத் திருப்பும்போது ஓரமாகச் சிறுகதை என்று போட்டிருந்ததைப் பார்த்து மிகுந்த ஏமாற்றமடைந்தேன். அவர் பத்மஸ்ரீ (பிரம்மஸ்ரீ?) வாங்காத நிகழ்வை விட இதுதான் மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. பல மாதங்கள் கழித்து உங்கள் blog-இல் அவர் உண்மையாக மண்ணில் வாழ்ந்த மனிதரே என்பதை அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதிலிருந்து இதுபோல் உண்மை மனிதர்கள் பற்றிய புனைவுகளைப் படிக்கும்போது உடனே அவரைப் பற்றி கூகிளில் படித்து விடுவதை வழக்கமாகக் கொண்டேன்.
சில நாட்களுக்கு முன் உங்கள் வாசகர் ஒருவர் கொடுத்திருந்த விமர்சனத்தின் பேரில் ‘தேவதை’ என்ற கதையைப் படித்தேன். அபாச்சா காந்தியைப் போலவே ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பதை ஆர்வத்துடன் கவனித்தேன். நைஜீரியச் சூழ்நிலையில் காந்தி வாழ்ந்ததைப் போலவே ஒரு சித்திரம், காம சோதனைகள் உட்பட! ஆனால் அவரைப்ம் பற்றி கூகிளில் தேடுகையில் கூகிள் அப்படி ஒருவரையும் காட்டவில்லை. கூகிள் கொடுத்த ஒரே உருப்படியான தளம் உங்கள் சிறுகதையையே மறுபடியும் சுட்டியது. அப்படியானால் ‘கருப்புக் காந்தி’, ‘எல்லைக் காந்தி’ என்று சொல்வதுபோல் நைஜீரியக் காந்தி இல்லையா? நீங்கள் சுட்டிய ‘ I Experimented Christ! ‘ என்ற புத்தகமும், மேரி போன்சாம் புளூவூட்ஸும் புனைவின் பகுதிகள் தானா? மீண்டும் ஏமாற்றமாக இருக்கிறது. ஏமாற்றமும் இலக்கியச் சுவைகளுள் ஒன்று தானா என்ன?
அன்புடன்,
த.திருமூலநாதன்.
அன்புள்ள திருமூலநாதன்
ஏறத்தாழ ஏழாண்டுகளுக்கு முன்புதான் நான் உண்மைநிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளை அதிகமாக எழுத ஆரம்பித்தேன். அதற்கு முன்பும் கூட என் நாவல்களில் உண்மை மனிதர்கள் வருவது நிறையவே நிகழ்ந்திருக்கிறது. என் ஆர்வம் இலக்கியப்படைப்புகளில் இருந்து வாழ்க்கைவரலாறுகளை நோக்கி நகர்ந்ததுதான் இந்த மாற்றத்துக்கான காரணம் என நினைக்கிறேன்.
ஏன் இலக்கியப்படைப்புகள் எனக்கு சலிப்பூட்ட ஆரம்பித்தன என எண்ணிப்பார்த்தேன். என்னுடைய சொந்தக் கற்பனைகள் எனக்குள் நிறைந்து தளும்பிக்கொண்டே இருப்பதுதான் எனக் கண்டடைந்தேன். நான் எழுதிய கதைகளை விட எனக்குள்ளே சொல்லிப்பார்த்து விட்டுவிட்ட கதைகளே அதிகம். இந்தக்கதைகளை விட சுவாரசியமான கதைகள் எனக்குத் தேவைப்படுகின்றன. அவை அபூர்வமாகவே கிடைக்கின்றன.
ஆனால் வாழ்க்கைவரலாறுகள் அப்படி அல்ல. அவை கதைகள் அல்ல, கதைகளுக்கான மூலப்பொருட்கள் மட்டுமே. வாழ்க்கை வரலாறுகளில் புனைவுக்கான இடைவெளிகளைத்தான் நான் அதிகமும் கவனித்து வாசிக்கிறேன். அவற்றின் வழியாக அந்த வாழ்க்கையை விரிவாக்கம் செய்துகொள்கிறேன். உண்மையில் நான் வாசிக்கும் ஒவ்வொரு வாழ்க்கைவரலாற்றிலும் அந்த நாயகனின் இடத்தில் இருந்து நான் வாழ்ந்து முடிக்கிறேன். அவை மீளமீளப் பிறப்பெடுக்கும் பரவசத்தை அளிக்கின்றன.
இந்தக் கற்பனை ஓட்டத்தின் ஒரு பகுதியாகவே நான் உண்மைமனிதர்களின் கதைகளை எழுத ஆரம்பித்தேன். உண்மை மனிதர்களாக என்னை நானே எளிதில் நிறுத்திக் கொள்ள முடிவதுதான் அதற்கான காரணம். காந்தியோ கோமல்சுவாமிநாதனோ ஒரு தருணத்தில் என்ன செய்வார்கள் என்பதை நான் அவர்களாக நின்று கற்பனைசெய்கிறேன். அக்கதைகள் அப்படி உருவானவை.
சிலகதைகளில் அக்கதையின் நாயகன் யார் என்பதைக் காட்டுவதற்கு புனைவு முயலும். சில கதைகளில் மறைப்பதற்கு முயலும். சிலகதைகளில் கொஞ்சமாக சொல்லி மறைக்க முயலும். அந்த அலகிலாப் புனைவாடல் எனக்கு உவப்பளிக்கிறது. இலக்கியமென்பதே உண்மையை கற்பனைமூலம் சொல்லமுயலும் கலை அல்லவா?
ஜெ