ஆந்திர வாழ்வாதாரமும், வாழ்தல் நிலையும், பொருளாதார நிலைக்கும் தமிழகத்திற்கும் பெரும் வேறுபாடிருக்கிறது. ஆந்திரத்தில் மிடில் க்ளாஸ் என்ற ஒரு சமூகம் இன்னும் உருவாகவில்லை என்றே சொல்வேன். அது தமிழகத்தை விட ஒரு இருபது ஆண்டுகளேனும் பின் தங்கியே இருக்கிறது. அங்கு பெரும்பாண்மை மக்கள் மிகவும் பொருளாதார ரீதியில் வறுமையானதொரு வாழ்கையையே வாழ்கிறார்கள். மகபூப்நகர், கரீம்நகர் போன்ற பகுதிகளிலும் தெலுங்கானா பகுதிகளிலும் வறுமை இன்னும் அப்படியே இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கோஸ்தா மற்றும் ஆந்திரா பகுதிகள் பரவாயில்லை எனினும் மிகவும் பணக்காரர்களும், மிகவும் ஏழைகளும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். அதுவும் பிரச்சனைதான்.
அங்கிருப்பவர்கள் ஒரு சூப்பர் ஹீரோவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதேனும் செய்தால் மாற்றம் வந்துவிடாதா. யாராவது தங்கள் வாழ்கையை அப்படியே அடியோடு மாற்றிவிடமாட்டார்களா என்று ஏங்குகிறவர்கள். அவர்களுக்கு படம் பண்னுகிறவர்களிடமிருந்து எப்படிப்பட்ட படத்தை எதிர்பார்க்கிறீர்கள்?அது இப்படித்தான் இருக்கும். ஆந்திரத்தில் கலைப்படங்களுக்கு பெரிதும் மதிப்போ, அவசியமோ இல்லை. அங்கு பணமும், வெற்றியும் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. (கிரஹனம் என்றொரு திரைப்படம் தனிகல பரணி நடித்தது. நன்றாகத்தான் இருக்கிறது. கிடைத்தால் பார்க்கவும். எனக்கு கிடைத்தால் நானே அனுப்புகிறேன்)
பிழை என்னவென்றால் காசுக்காக மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து பலரும் அங்கே போய் “கலைச்சேவை” புரிய ஆசைப்படுகிறார்கள். அதில் சிலர் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். நமது இளைய தளபதியின் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் பெரும் வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே தெலுகிலிருந்து ஃப்ரேம் பை ஃப்ரேம் ரீமேக் செய்யப்பட்ட குப்பைகளே.(உதா: கில்லி, போக்கிரி.. மற்றும் பல). இதை இங்கு ரீமேக் செய்தவர்கள் ஏதோ பெரிய சாதனை புரிந்ததுபோல பேசுவது நகைப்புக்கிடமாகிறது. (உதா: கில்லி இயக்குனர் பேசியது.. அவர் சார்மினாரை லைட் ஹவுஸ் என்றும் ஊர்பேர்களை மாற்றியதும் தவிர ஏதும் செய்யவில்லை)
எனக்கு தெலுகு திரைப்படத்துறையை சார்ந்த சிலருடன் சொற்ப தொடர்புண்டு. அது ஒரு கேடுகெட்ட சாதி அமைப்பு சார்ந்த, குடும்ப சார்பு சார்ந்த ஒரு அமைப்பாக இருக்கிறது. (தாசரி, ராமோஜி, ராமாநாயுடு குடும்பம், அக்கினேனி குடும்பம், நந்தமூரி குடும்பம், சிரஞ்சீவி குடும்பம் இவர்களது அடிவருடிகளின் குடும்பம், இதைத்தாண்டி யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்பது நிச்சயம்.) உங்கள் நண்பர்கள் யாரும் அந்தப்பக்கம் போனால் தடுத்து நிறுத்தவேண்டியது உங்கள் பொறுப்பு தயவுசெய்து நிறுத்திவிடவும். இல்லையென்றால் உயிருக்கும் மூளைக்கும் யாரும் உத்தரவாதம் தர இயலாது.
ஒரு உயிர் போனது போதும்.
–ராம்
அன்புள்ள ராம்
தெலுகு சினிமா பற்றி எழுதியிருந்தீர்கள். தெலுங்கு சினிமாவைப்பற்றி மட்டும் அல்ல உலக அளவில் வரும் வணிகப்படங்களை முன்வைத்தே நாம் நிறைய விஷயங்களை யோசிக்க வேண்டியிருக்கிறது. இப்போது நான் சினிமாவுக்குள் இருப்பதனால் இதைப்பற்றிய ஒரு மனப்பதிவு எனக்கும் உள்ளது.
மலையாள, தமிழ் சினிமாக்களை ஒப்பிடும்போது இந்த மனச்சித்திரம் எனக்கு உருவானது. இப்போது வெறும் வணிகப்படங்களின் எண்ணிக்கை அங்கே மிதமிஞ்சி பெருகிவிடது என்றபோதிலும் கூட மலையாளத்தில் இப்போதுகூட மிகவும் தரமான , கலையமைதி கைகூடிய , படங்களை உருவாக்க முடியும். இந்தவருடமே ‘வெறுதே ஒரு ·பார்ய‘ ‘அச்சண்டே மகன்‘ போன்ற தரமான படங்கள் வெளிவந்து அங்கே வணிக வெற்றி அடைந்திருக்கின்றன. அதை தமிழில் யோசிக்கும்போது நமக்கிருக்கும் தடை என்ன?
கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் திரையரங்குகளுக்குச் சென்று படங்களைப் பார்த்தால் அந்த வேறுபாட்டை நாம் உணரலாம். கேரள ரசிகர்களில் கேரளம் முழுக்க ஒரு சீரான தன்மை இருக்கிறது. சமூக, பொருளியல், பண்பாட்டு தளங்களில் உள்ள பொதுத்தன்மை என இதை நாம் சொல்லலாம்.
இந்தத் தன்மை 1. சமூகம் சீரான பொருளியல் வளர்ச்சி அடைவது 2. நவீனக்கல்வி பரவலாக அனைவரையும் சென்றடைவது 3. சமூகம் முழுக்க பொதுவான ஊடகப்பரிமாற்றம் நிகழ்வது ஆகியவற்றின் மூலம் உருவாகிறது. கேரளம் சென்ற ஐம்பது வருடங்களிலேயே இந்நிலையை அடைந்து விட்டது.
ஆனால் தமிழ்நாடு அப்படி இல்லை. இங்கே படம் பார்க்கவருகிற மக்களின் பன்முகத்தன்மை பயமுறுத்துகிறது. சென்னையின் உயர்குடிமக்கள் முதல் கல்வியே இல்லாத நரிக்குறவர் வரை. தமிழர்களில் வீட்டில் கன்னடமும் தெலுங்கும் சௌராஷ்ட்ரமும் உருதுவும் பேசக்கூடிய, தமிழின் நுட்பங்களை உணரமுடியாத மக்கள் மூன்றில் ஒருபங்கினர் இருப்பார்கள். வரண்ட மேய்ச்சல் நிலப்பண்பாடு இங்கெ உள்ளது. நஞ்சை நிலப்பண்பாடும் உள்ளது.
இங்குள்ள குடும்ப உறவுகள், சமூக உறவுகள் பல்வேறுவகையானவை. சர்வசாதாரணமாக ‘அறுத்துக்கட்டும்‘ சாதிகள் பல உள்ளன. கணவன் இறந்தால் ‘மொட்டை அடிக்கும்’ சாதிகள் உள்ளன. இங்குள்ள பாலியல் ஒழுக்கம் என்பது சாதி க்கொன்ன்றாக உள்ளது. ஒரு சாதி இன்னொரு சாதியுடன் கலந்துரையாடுவது கிராமங்களில் அனேகமாக இப்போதும் கிடையாது. பலருக்கு சக சமூகங்களைப்பற்றி ஒன்றுமே தெரியாது. ஆசாரங்கள் சடங்குகள் குறியிடுகள் என தமிழகத்தில் இன்றுவாழும் மக்களின் பண்பாடு என்பது ஒரு பெரும் தேசம் அளவுக்கே பரந்து விரிந்தது.
மேலான சினிமா என்பது பண்பாட்டின் ஒரு முடிச்சில் இருந்து உருவாகிறது. அந்த சிக்கலை அது உணர்ச்சிகரமாக, ஆன்மீகமாக ஆராய்கிறது. அத்தகைய நுட்பமான ஒரு பண்பாட்டு முடிச்சு படமாக வருமென்றால் அது பெரும்பாலானவர்களுக்கு புரியவேண்டும், உணர்ச்சிகரமாக அவர்களைப் பாதிக்கவேண்டும். அப்போதுதான் அந்த படம் வெற்றிபெறும்
கேரளத்தில் உருவாகியுள்ள சராசரித்தன்மை காரணமாக அது சாத்தியமாகிறது. தமிழில் அப்படி இல்லை. அது ஒரு நிலப்பகுதிக்குள் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குள் மட்டுமே உணர்ச்சிகரமாக உள்வாங்கப்படும். மிச்சபேருக்கு அது என்னவென்றே புரியாது. ஆகவே உண்மையான பண்பாட்டுக் கூறுகளை படமாக்குதல் என்பது இங்கே மிகவும் கடினம்.
இப்பிரச்சினையை சமாளிக்க நம் சினிமா கண்டுகொண்ட வழி, அல்லது சினிமா என்ற ஊடகத்தின் பரிணாம வளர்ச்சி வழியாக உருவான வழி ஒன்று உண்டு. எது தமிழகம் முழுக்க அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்கிறதோ அதை மட்டுமே பயன்படுத்தி படைப்புகளை உருவாக்குவது. படித்த நடுத்தர வற்கம் தமிழகம் முழுக்க ஓரளவு பொதுத்தன்மைகள் கொண்டது. அந்தச் சராசரியை நம்பியே இங்கே படைப்புகள் உருவாய்ன. அதேபோல தமிழகமெங்கும் பரவலாக அறிமுகமான புராணக்கதைகளும் பயன்படுத்தப்பட்டன.
இதன் அடுத்த கட்டத்தில் தமிழ் சினிமா தானே உருவாக்கிக்கொண்ட அச்சுகளை [ டைப்] பயன்படுத்த ஆரம்பித்தது. இந்த அச்சுகள் ஏற்கனவே அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தவை. மிக எளிதில் எல்லாருக்கும் புரியக்கூடியவை. அச்சுகள் சமூகத்தில் இருந்து ஊடகம் உருவாக்கிக் கொண்ட சராசரி வடிவங்கள்.
அச்சுகள் என்பவை உண்மையில் சமூகத்தில் இருந்து ஒரு கலைப்படைப்பால் எடுக்கப்படுபவை. அந்தக்கலைப்படைப்பு அதை வெகுஜன மனதில் நிலைநாட்டி விடுகிறது. பின்னர் அந்த அச்சை பிறர் சிரமமே இல்லாமல் பயன்படுத்தலாம். டாக்டர், பாதிரியார், தலைமை ஆசிரியர், நீதிபதி , பஞ்சாயத்துத்தலைவர், போன்ற கதாபாத்திரங்களை நினைத்தாலே நமக்கு அச்சுக்கதாபாத்திரங்கள் தான் நினைவுக்கு வரும், அந்த அளவுக்கு அவை நம்மிடையே ஊறிவிட்டவை. இப்போதுகூட ஒரு கதாபாத்திரத்தின் குணச்சித்திரத்தை ஒரு கதையில் போதிய அளவுக்கு காட்ட இடமில்லை என்றால் அதை அச்சுக் கதாபாத்திரமாக அமைப்பதே வசதியானது
நெடுங்காலம் நம்முடைய மொத்த பொழுதுபோக்குக் கலையே டைப் கதாபாத்திரங்கள் மட்டும் அடங்கிய ஒன்றாக இருந்தது. எம்ஜியார் படங்களில் அச்சு அல்லாத கதாபாத்திரமே வருவதில்லை. கடத்தல்கார/ கொள்ளைக்கார வில்லன், வெலைக்கார/தோழனான காமெடியன், இலட்சியவாதியான கதாநாயகன், அவனது பாசமான அம்மா, கண்டிபான அண்ணா அல்லது அப்பா, களங்கமில்லா கதாநாயகி…இபப்படியே சொல்லிக்கொண்டே செல்லலாம்.
இதேபோல அச்சு கதைகளும் உருவாகிவந்தன. சினிமாவில் உள்ள தொழில்முறையாளர்கள் எந்த சினிமாவையும் அச்சுக்குள் சட்டென்று பொருத்துவதைக் காணலாம். கிரைம் சப்ஜெக்ட்,லவ் ப்ஜெக்ட், ·பேமிலி சப்ஜெக்ட் என்பார்கள். இவற்றுக்கென ஓர் அமைப்பு இருக்கிறது. பேசப்படும் விஷயம் அந்த எல்லைக்குள் மட்டுமே நிற்க முடியும். இதெல்லாம் நல்ல சினிமா எடுக்கக் கூஆது என்பதற்காக அல்ல, புரியவேண்டும் என்பதற்காக மட்டுமே. தமிழ் சினிமாவுக்குள் சென்ற பின் நான் கண்டது, அங்குள்ள சாதாரணமான தளத்தைச் சேர்ந்தவர்கள் கூட நன்றாகப் படம் பார்க்கிறவர்கள். நல்ல சினிமாவை அறிந்தவர்கள் என்பது.
இன்றும் தமிழில் ஒரு கிறித்தவ கதை, ஒரு முஸ்லீம் கதை எடுக்க முடியாது. அதை பெருவாரியான மகக்ளுக்கு கொண்டுசேர்க்கமுடியாது. தமிழ் சினிமாவில் முஸ்லீம்களும் கிறித்தவர்களும் பலர் உள்ளனர். அனைவருமே இந்து கதைகளையே எடுத்துள்ளனர். காரணம் நம் சினிமாவுக்கான சராசரி இந்து அடையாளத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே. தமிழில் உள்ள மிகப்பெரும்பாலான சாதிகள் சினிமாவுக்குள் வந்ததே இல்லை. அவர்களின் வாழ்க்கையை பிறருக்கு சொல்லிப்புரியவைக்க எளிதில் முடியாது.
இப்படி தேய்ந்த கதாபாத்திரங்கள் தேய்ந்த கதை ஆகியவற்றின் மூலம் படம் எடுப்பவர்கள் ஒன்றும் தெரியாத மூடர்கள் அல்ல. மாறாக பின் தகவல் [ ·பீட் பேக்] மூலம் துல்லியமாக தமிழக ரசனையை அறிந்து வைத்திருப்பவர்கள். ”சார் பேமிலி மேட்டர் பொதுவா கடலூர் பாண்டி வட்டாரத்தில போகாது ”என்று ஒருவர் சொல்கிறார் என்றால் அது ஒரு பெரிய புரிதல். அங்கே அர்ஜுனின் ஆக்ஷன் படங்கள்தான் ஓடும். காரணம் அங்கே கடற்கரைகள் அதிகம் .அவர்கள்தான் அதிகம் படம் பார்க்கிறார்கள். அம்மக்கள் ரத்த வன்முறை குறைவான அடிதடிகளை விரும்பிப் பார்ப்பார்கள்.·
தமிழகம் முழுக்க ஒரு விஷயத்தை சீராகத் தொடர்புறுத்துவதென்பது அனேகமாகச் சாத்தியமல்ல. காரணம் தமிழ் சமூகத்தின் பிரம்மாண்டமான பன்மைத்தன்மை. ஆகவே சினிமா தனக்கென ஒரு சராசரித்தன்மையை சமூகமனதில் தானே மெல்ல மெல்ல உருவாக்கி வைத்துக்கொண்டு அதற்குள் நின்று பேசுகிறது. அதன் மூலமே அது தன்னைத் தொடர்புறுத்துகிறது. எதை யோசிக்கும்போதும் ‘யாருக்காக?’ என்றும் ‘போய்ச்சேருமா?’ என்றும் யோசித்தாகவேணிய நிலை இங்குள்ளது. சமூகங்கள் கலந்து உரையாடுவதன் மூலமும் கல்வி பரவலாவதன் மூலமும் ஒரு சராசரி உருவாகும் தோறும் புரிதலின் அளவு அதிகரிக்கிறது. அது இப்போதுதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது
தமிழில் எந்த ஒரு புதிய விஷயத்தையும் இந்த சராசரித்தன்மைக்குள் நின்று கொண்டெ சொல்ல முடியும். நாம் பெரிதும் கொண்டாடும் யதார்த்தமான புதுமையான படங்கள் கூட பெரும்பகுதி தமிழ்சினிமாவின் சராசரி இலக்கணத்துக்குள் நின்றுகொண்டு சிறுபகுதியை மட்டுமே வெளியே நீட்டியிருக்கும். பதினாறு வயதினிலே முதல் பசங்க வரை. இதுவே இங்கே சாத்தியம். அந்த புதிய விஷயம் கொஞ்சம் குழப்பத்துக்குப் பின் ஏற்கப்படுமென்றால் படம் பெரும் வெற்றி அடைகிறது — கல்யாணபரிசு முதல் சேது வரை உதாரணம்.
இந்த கோணத்தில் பார்த்தால் சினிமாவுக்குள் ஒரு முரணியக்கம் இருக்கிறது. அதன் சராசரித்தன்மையை வலியுறுத்தும் ஒரு தரப்பு. அதில் புதுமைக்காக முனையும் இன்னொரு தரப்பு. இவ்விருவர் நடுவே உள்ள ஒரு சமரசப்புள்ளியே சினிமாவாக அமைகிறது. பணம்போடுகிறவர் அந்தப்படம் தமிழகம் முழுக்க பொதுவாக புரியப்படவேண்டும் ரசிக்கப்படவேண்டும் என எதிர்பார்க்கிறார். அது நியாயமே. ஆனால் அவரை கொஞ்சமாவது மீறாமல் நல்ல படம் எடுக்கவும் முடியாது.
இந்த மோதல் எல்லா படத்திலும் உண்டு. இது ஒரு தவிர்க்கமுடியாத பிரச்சினை. உண்மையில் இபப்டி இல்லாவிட்டால் இந்த அமைப்பே சிதறிப்போய்விடக்கூடும். தெலுங்கில் தமிழை விட பன்முகத்தன்மை அதிகம். மிகமிகப்பெரிய மாநிலம் அது. மிக வேறுபட்ட மகக்ள் வாழும் நிலம். ஆகவே அங்குள்ள சராசரி என்பது மிகமிக மேலோட்டமானதாக இருக்கிறது. ஆகவே அங்கே புதுமைசெய்யப்புகும் இயக்குநருக்கு தயாரிப்பாளரின் கட்டுப்பாடு அதிகமாக இருப்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
நல்ல படம் என்பது ரசிகரசனையைப் பற்றி கவலையே படாமல், அடூர் கோபாலகிருஷ்ணனும் அரவிந்தனும் எடுத்தது போல வரும் என்றால் அது வேறு விஷயம். அப்படங்களின் முதலீட்டுக்கான பணம் வேறு தளங்களில் திரட்டப்படுகிறது. ஆனால் படம் அதன் முதலீட்டை மக்களிடம் பெற்றாகவேண்டுமென்றால் மக்கள் ரசனையுடன் அது சமரசம் செய்தாக வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட மக்களின் ரசனையில் உள்ள சிறிய சராசரிப்பகுதியில் நின்று பேசியாக வேண்டும்.
அதுதான் இப்போதுள்ள சிக்கல். அந்த சராசரியின் குரலாக ஒலிக்கும் தயாரிப்பாளரை எப்படி சமாளிக்கிறார் என்பதில்தான் இன்று தமிழிலும் தெலுங்கிலும் எல்லாம் இயக்குநரின் சவாலே உள்ளது. ஒரு படம் கொஞ்சம் வித்தியாசமாக வந்ததுமே அதை உலகப்படங்கலுடன் ஒப்பி ட்டு நாம் கிழி கிழி என்று கிழிக்க ஆரம்பிக்கிறோம். அந்த இயக்குநர் அந்தபப்டத்துக்காக எங்கெங்கெல்லாம் மோதியிருப்பார் என்று யோசிப்பதில்லை. அந்த மோதல் உண்மையில் கண்ணுக்குத்தெரியக்கூடிய தயாரிப்பாளர்- வினியோகஸ்தர்களுடன் அல்ல. கண்ணுக்குத்தெரியாத தமிழ் சமூகம் என்ற பிரம்மாண்டமான அமைப்புடன் தான். அவர் கொண்டுவரும் படம் அந்த மோதலில் அவருக்கும் சமூகத்துக்கும் இடையே உள்ள ஒரு சமரசப்புள்ளியில் நிகழ்கிறது.
இந்தியில் சமீப காலம் வரை படங்கள் தெலுங்கை விட கேவலமாகத்தான் இருந்தன. ஆனால் அங்கே பெருநகரங்களில் பெரிய திரையரங்க வளாகங்கள் உருவாயின. படங்களை அங்கே மட்டும் ஓட்டினாலே சிலகோடிகளை எடுத்துவிடலாம் என்ற நிலை வந்தது. அங்கே வரும் ரசிகர்களிடம் ஒரு பொதுத்தன்மை உண்டு. அதன் விளைவாகவே சீனி கம், வெட்நெஸ்டே போன்ற படங்கள் வந்தன. தமிழிலும் தெலுங்கிலும் அப்படி ஒரு சராசரிப்பொது ரசனை கொண்ட ரசிகர்கள் உருவாவது நடக்கக்கூடும். அது இன்னும் பத்து வருடங்களில் நிறைவேரும் என்றால் இன்னும் மேலான படங்கள் தமிழில் வரும்
ஜெ
பண்பாடு: ஆதங்கம்,அவநம்பிக்கை:ஒரு கடிதம்
சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.
தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை