இருபது ரூபாய்க்கு விற்கப்படுவதனாலேயே காந்தியின் சுயசரிதையான சத்தியசோதனை பரவலாக அறியப்படும் நூலாக இருக்கிறது. எல்லாப் பள்ளிகளிலும் அதைத்தான் அடுக்கடுக்காக வாங்கிப் பரிசுகளாகக் கொடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர்கள் இளமையில் வாசித்த முதல் நூலாக அது திகழ்கிறது. அந்த வயதில் அவர்களிடம் அது ஆழமான செல்வாக்கை செலுத்துகிறது. இலட்சியவாழ்க்கை ஒன்றைப்பற்றிய இனிய கனவொன்றை நம் மனதில் உருவாக்கக்கூடிய வல்லமை அந்நூலுக்கு உண்டு
பின்னர் நம் சூழலில் பரவி மிதக்கும் காந்திக்கு எதிரான அவதூறுகள் வசைகள் ஆகியவற்றால் மூடப்பட்டு அந்த இலட்சியவாதக் கனவு மறைந்துபோகிறது. காந்தியே மூழ்கிப்போய்விடுகிறார். யதார்த்தபோதம் ஒருபக்கமும் நம் அன்றாட அரசியலின் அறமற்ற சொற்பெருக்கு இன்னொரு பக்கமுமாக காந்தியை மூடிவிடுகின்றன. அதன்பின் இளமைதாண்டிய வயதில் எங்கோ எப்போதோ மானுடத்தின் இலட்சியவாதத்தின் ஆழத்தை நாம் மீண்டும் கண்டுகொள்கிறோம். அப்போது காந்தி மீண்டு வருகிறார்.
அந்த ஆரம்பகட்ட வாசிப்பில் நாம் காந்தியின் சத்தியசோதனையில் விவரிக்கப்படும் நூற்றுக்கணக்கான வாழ்க்கை நுட்பங்களை கவனிப்பதில்லை. நம் கவனம் காந்தி என்ற ஆளுமையிலேயே குவிந்திருக்கும். அடுத்தகட்டத்தில் காந்திய இலக்கியங்களை நாம் வாசிப்போமே ஒழிய மீண்டும் சத்தியசோதனைக்குள் செல்வதில்லை. அதை நாம் வாசித்துவிட்டோம் என்ற பிரமை நமக்குள் இருந்துகொண்டிருக்கும். ஏனென்றால் இளமையில் நாம் வாசித்த சத்தியசோதனையின் பக்கங்கள் அப்படியே நமக்கு நினைவிருக்கும்.
ஆனால் வாழ்க்கையையும் இலக்கியத்தையும் அறிந்தபின், ஒரு முதிர்ந்தவாசகனாக சத்தியசோதனை என்ற இந்த மகத்தான நூலுக்குள் செல்வதைப்போல பேரனுபவம் ஏதுமில்லை. இன்று என்னைக் கவர்ந்து உள்ளிழுக்கும் புதிய புனைகதைகளை அபூர்வமாகவே காண்கிறேன். என் மனம் முழுக்க நிறைந்திருக்கும் என் சொந்தப்புனைவுலகை வென்று அவை உள்ளே செல்லவேண்டியிருக்கிறது. அது பேரிலக்கியவாதிகளால் மட்டுமே முடிகிறது. அத்துடன் இன்று எனக்கு மனமகிழ்ச்சிக்காக, அழகனுபவத்துக்காக, கருத்துக்களுக்காக இலக்கியம் தேவையில்லை. எனக்கு அதில் வாழ்க்கைத்தரிசனம் தேவை. கவித்துவமும் ஆன்மீகமும் இணைந்த உச்சியில் அது நிகழ்ந்திருக்கவேண்டும். அது எப்போதுமே மிக அபூர்வம். ஆகவே சென்ற பதினைந்தாண்டுக்காலமாக என்னுடைய ஆர்வம் புனைகதைகளில் இருந்து வாழ்க்கைவரலாறுகளை நோக்கி நகர்ந்திருக்கிறது.
தன்வரலாறுகள் இரு அம்சங்களால்தான் முக்கியமானவை ஆகின்றன. ஒன்று அதை எழுதுபவரின் வாழ்க்கையின் மகத்துவம். இரண்டு அவரது அவதானிப்புத்திறன். வாழ்க்கையை ஒரு மனிதர் எதிர்கொள்ளும் விதம் மூலமே அவர் மகத்தானவர் ஆகிறார். வாழ்க்கைக்கு என நிறமோ குணமோ ஏதுமில்லை. அது நிகழ்வுகளின் கடல்அலைக்கொந்தளிப்பு மட்டுமே. அதை நோக்கும் மனிதரின் தகுதியே அந்த பெரும்விரிவில் இருந்து அரிய கணங்களைக் கண்டடையச் செய்கிறது. மகத்தான மனிதர்களின் வாழ்க்கையின் எல்லா கணங்களுமே மகத்தானவையாகத்தான் தெரிகின்றன.
எழுதும் மனிதரின் ஆளுமையின் சிறுமை வாழ்க்கை வரலாறுகளை இருள்படிந்தவையாக ஆகச்செய்யும். சில சமயம் சில தன்வரலாறுகளை வாசித்தமைக்காக நாம் கூச நேரிடும். ஒவ்வாத ஒன்றை உண்டதுபோல குமட்டிக்குமட்டி வரும். இருபதாண்டுகளுக்கும் மேலாக அப்படி என்னுள் கிடந்து இம்சைப்படுத்தும் ஒரு நூல் நிராத் சௌத்ரி எழுதிய ‘ஆட்டோபாயாக்ரஃபி ஆஃப் ஆன் அன்னோன் இண்டியன்’.அற்பத்தனம் அன்றி எந்த அடிப்படைக் குணாதிசயமும் இல்லாத ஒரு ஆசாமியின் தன்வரலாறு அது. இன்னொரு உதாரணம் அழகியநாயகி அம்மாளின் ‘கவலை’. சகமனிதன் மேல் வெறுப்பு மட்டுமே வெளிப்படும் ஆக்கம் அது. அதற்கான காரணங்கள் அந்த அம்மையாரின் வாழ்க்கையில் உள்ளன என்பது அந்நூலில் உள்ளது, ஆனால் எனக்கு அது முக்கியமல்ல.
ஆனால் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவர்கள் கூட அவதானிப்புத்திறனுடன் இருப்பதில்லை. மிகக்கொந்தளிப்பான, பரபரப்பான வரலாற்றுச் சந்தர்ப்பங்கள் வழியாகக் கடந்துசென்ற ஒரு மனிதர் மிகச்சாதாரணமான ஒரு வாழ்க்கைவரலாற்றை எழுதிவிடமுடியும். மிகச்சிறந்த உதாரணம், டாக்டர் ராஜேந்திரப்பிரசாத்தின் தன்வரலாறு. அது ஒரு சில்லறைக் கணக்குப் புத்தகம் மட்டுமே. அதேசமயம் பெரிதாக எதுவுமே நிகழாத ஒரு வாழ்க்கை வழியாகச் சென்ற ஒரு எளியமனம்கூட மறக்கமுடியாத தன்வரலாற்றை முன்வைக்கமுடியும். மிகச்சிறந்த உதாரணம் பாரததேவி எழுதிய ’நிலாக்கள் தூரதூரமாய்’
நான் இத்தனை தூரம் வாழ்க்கை வரலாறுகள் வழியாக வந்து சேர்ந்தும்கூட நான் வாசித்தவற்றில் முதன்மையான தன்வரலாறு சத்தியசோதனைதான் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ஒரு வரலாற்று ஆவணம் என்றவகையில் இன்று இதை நான் பார்ப்பதில்லை. ஒரு மகத்தான ஆளுமை உருவாகி முதிர்வதன் அற்புதமான சித்திரத்தை அளிக்கும் மாபெரும் படைப்பு இது. புனைவில் இதற்கு நிகரான ஒன்றை எழுத தல்ஸ்தோயால் மட்டுமே முடியும். அவ்வகையிலேயே இது மாபெரும் மானுட சாசனம்.
காந்தி ஒரு இலக்கியவாதி அல்ல. அவர் காட்சிகளையும் சூழல்களையும் விவரிக்க முனைவதே இல்லை. இந்த நூல்வழியாக ஒருவர் போர்பந்தரையோ,ஜொகன்னஸ்பர்க்கையோ , சபர்மதியையோ கண்ணால் கண்டுவிடமுடியாது. காந்தி விவரிப்பதே இல்லை, முடிந்தவரை சுருக்கிச் சொல்லவே அவர் முனைகிறார். உணர்ச்சிகரமாக எழுதப்பட்ட ஒருவரி கூட இந்நூலில் இல்லை. ஆனால் இது ஒரு மாபெரும் இலக்கிய ஆக்கம். காரணம் இதன் நுண்சித்தரிப்புகள்.
எந்தப்புனைகதையாளனையும் மூளையில் மின்னதிர்ச்சி பெற்ற அனுபவத்துக்குள்ளாக்கி வாழ்க்கையின் சாராம்சமான ஒரு முனை நோக்கிக் கொண்டுசெல்லும் நூற்றுக்கணக்கான தருணங்கள் கொண்டது சத்தியசோதனை. ஒரு பெரும் விதைநிலம் இது.
ஓர் உதாரணம், நேட்டாலில் தான் வைத்த குடித்தனம் பற்றி காந்தி சொல்லும் 23 ஆவது அத்தியாயம். காந்தி நேட்டாலில் ஒரு வீடு எடுத்துத் தங்குகிறார். சமையற்காரரையும் உதவியாளரையும் வைத்துக்கொள்கிறார். அவரது குமாஸ்தாக்களும் அவருடன் அங்கேயே இருக்கிறார்கள். ஊழியர்களை எப்படி நடத்துவது என அவருக்குத் தெரியவில்லை. மேலும் அதிகாரம் காட்டுவதில் அவருக்கு நம்பிக்கையும் இல்லை. அவர்கள் சமநிலையில் சகாக்களாக அந்த வீட்டில் குடியிருக்கிறார்கள்.
அவரது குமாஸ்தா ஒருவர் இந்த இடத்தைத் தனக்குச்சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். இன்னொரு குமாஸ்தாவை விரட்டுகிறார். சமையற்காரரை மிரட்டித் தனக்குக் கட்டுப்பட்டவராக ஆக்குகிறார். காந்திக்குத் தெரியாமல் அவரது வீட்டைத் தன் வசத்தில் வைத்திருக்கிறார். காந்தி அவரை முழுமையாக நம்புவதனால் அவரைப்பற்றி எவரும் காந்தியிடம் எதுவும் சொல்வதில்லை.இதனிடையே சமையற்காரர் விடுமுறையில் செல்கிறார். பதிலுக்கு ஒருவர் வருகிறார். அவர் பரமபோக்கிரி. தொழில்முறைத் திருடர்.
வந்ததுமே புதிய சமையற்காரருக்கு அந்த வீட்டில் நடப்பதென்ன என்று தெரிந்துவிடுகிறது. அவர் எவரையும் பயப்படுவதும் இல்லை. ஒருநாள் நீதிமன்றத்தில் இருந்த காந்தியை ஓடிப்போய்க் கட்டாயப்படுத்திக் கூட்டிவருகிறார். ‘நீங்களே பாருங்கள்’ என்கிறார். அந்த குமாஸ்தா ஒரு விபச்சாரியை வீட்டுக்குக் கொண்டுவந்து கொஞ்சிக்கொண்டிருந்தார். காந்தி அந்த குமாஸ்தாவை உடனடியாக வீட்டை விட்டு அனுப்பிவைக்கிறார். அவர் செய்த நம்பிக்கைத் துரோகத்துக்காக மனமுடைந்துபோகிறார்.
புதியசமையற்காரர் சமைப்பதற்காக வரவில்லை, திருடத்தான் வந்தார். அவருக்கு சமையலே தெரியாது. குமாஸ்தாவைப் பிடித்துக்கொடுத்ததுமே அவரும் கிளம்பிவிட்டார். ‘நான் உங்கள் வீட்டில் இருக்கமுடியாது. உங்களைப் பிறர் எளிதாக ஏமாற்றிவிடுகிறார்கள். இது எனக்கேற்ற இடமே அல்ல’ என்று சொல்லி கிளம்பிவிடுகிறார்.
அந்தப் புதியசமையற்காரரைப்பற்றி யோசிக்கையில் மானுட மனத்தின் விசித்திரங்கள் இதழிதழாகத் திறந்துகொள்கின்ற்ன. அவர் போக்கிரியானதனால் தீமையை மிக எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறார். அதை காந்தியால் காணமுடியவில்லை. ஆனால் அந்தப் போக்கிரி அந்தத் தீமையுடன் சென்று இணைந்துகொள்ளவில்லை. அந்த குமாஸ்தாவை அந்த விபச்சாரி விவகாரத்தைக் கொண்டே மிரட்டிக் கைக்குள் போட்டுக்கொண்டு தன் வேலையைக் காட்டுவதுதானே அவருக்கு நல்லது? அவரது வழி அதுவாகத்தானே இருக்கவேண்டும்? ஏன் செய்யவில்லை?
மாறாக அவர் காந்தியின் பக்கம் வருகிறார். அவருக்கு அந்த நம்பிக்கைத் துரோகத்தை காட்டிக்கொடுத்து ஆலோசனையும் வழங்குகிறார். ஆனால் அங்கே நீடிக்கவில்லை. தனக்கு ஏற்ற இடமல்ல அது என்று சொல்கிறார். ‘நீங்கள் எல்லாரையும் எளிதில் நம்பிவிடுகிறீர்கள்’ என்று அவர் சொல்கிறார். அப்படிப்பட்டவர்தானே அவருக்குத் தேவை? காந்தியின் நம்பிக்கையைப் பெற்றபின் அவருடன் தங்கி அவர் தன் மோசடிவேலையைச் செய்யலாமே. ஏன் செய்யவில்லை?
சரி, காந்தியின் எளிய நேரடியான ஆளுமையால் அவர் கவரப்பட்டிருக்கலாம். அவரது ஆன்மாவின் மிக மென்மையான ஒரு பகுதி தீண்டப்பட்டிருக்கலாம். அப்படியென்றால் ஏன் அவர் காந்தியுடன் தங்கவில்லை. மீண்டும் அவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் காந்தி சொல்லவில்லை. அவர் காந்தியை நிரந்தரமாக விட்டுச்சென்றார். அதாவது தன் குற்றவுலகுக்குத்தான் சென்றார். ஏன்?
அறுநூறு பக்கங்களுள்ள காந்தியின் சத்தியசோதனையில் மூன்று பக்கங்களுக்கொருமுறை வாழ்க்கையின் விளக்கமுடியாத நுண்ணிய மடிப்புகள் திறந்து தங்களைக் காட்டுகின்றன. தேர்ந்த இலக்கியவாசகனுக்கு மட்டுமே கண்ணில் படுபவை அவை. வேறெந்தத் தன்வரலாற்று நூலிலும் இந்த ஆழ்ந்த அவதானிப்புகளை நான் கண்டதில்லை.
ஞானம் என்றால் என்ன என்ற வினாவுக்கு ஞானியின் இயல்பு என நாராயணகுரு ஒருமுறை சொன்னார். ஒருவரின் வாழ்க்கை, உண்மைக்கு அருகே இருக்கையில் சொற்களெல்லாமே இலக்கியத்தகுதி கொள்கின்றன. காந்தியால் இலக்கியத்தகுதி இல்லாத எதையும் எழுதிவிடமுடியாதென்றுகூட நினைத்துக்கொள்கிறேன்.