பாலகுமாரனின் உடையார் பற்றி

அன்புள்ள ஜெமோ,

நலம்தானே ? ஒரு சிறியவிளக்கம் கோரி இந்தக் கடிதம். நீங்கள் பாலகுமாரனின் உடையார் நாவல் நல்ல நாவல், வாசிக்கலாம் என்று 2006 இல் சொல்லியிருந்தீர்களா. 2010இல் அந்நாவலை முழுக்க வாசிக்கவில்லை, வாசிக்கமுடியவில்லை என்று சொன்னீர்களாம். உங்கள் புத்தகத் தேர்வுகள் எவையும் நம்பக்கூடியவை அல்ல என்று என் நண்பர் சொல்கிறார். உங்கள் கருத்து என்ன?

ஜே.எஸ்.

அன்புள்ள ஜே.எஸ்,

உங்களுடைய பழைய மின்னஞ்சல்களைத் தேடிப்பார்த்தேன். உடைந்த ஆங்கிலத்தில் செல்பேசியில் இருந்து இந்த வினாக்களை அனுப்புகிறீர்கள். நான் எழுதும் எதைப்பற்றியும் நீங்கள் எதிர்வினையாற்றியதில்லை. உங்கள் கடிதங்கள் எப்போதுமே எவராவது எதையாவது சொன்னதற்கு என்னிடம் விளக்கம் கோருவன மட்டுமே. அவை உங்களிடம் சொல்லப்பட்டவையா இல்லை நீங்களே அவற்றைத் தேடித்தேடி வாசிக்கிறீர்களா?

உங்களுக்கு ஏன் இந்த அவஸ்தை? நீங்கள் என்னைப் புறக்கணிக்க விரும்பினீர்கள் என்றால் எளிதாக அதைச்செய்துகொண்டு போகலாம். உங்களை எவரும் கேட்கப்போவதில்லை. என்னுடையது தமிழில் ஒலிக்கும் இலக்கியக்குரல்களில் ஒன்று மட்டுமே. இதைக் கேளாமலிருப்பதனால் உங்களுக்கோ எனக்கோ ஒன்றும் ஆகப்போவதில்லை.

நீங்கள் குறிப்பிடும் ‘நண்பரை’ப் போன்றவர்களின் பிரச்சினை என்னை நிராகரிப்பது. என் கருத்துக்களையும் புனைவுகளையும் நிராகரிக்க முடியாதபோது இந்தவகையான ஏதாவது சல்லி விவகாரங்களை எடுத்துக்கொள்கிறார்கள். இது ஒரு வாசகனின் உண்மையான ஐயம் என்றால் அதை முதலில் என்னிடம்தான் கேட்பார்கள். அல்லது என்னிடம்கேட்கத் தயக்கமிருந்தால் இணையத்திலேயே தகவல்களைத் தேடி அதன்பின்னணியை அறிந்துகொள்ள முயல்வார்கள். இவர்கள் இப்படி ஏதாவது ’பிடி’ கிடைத்ததும் மேலே ஆராய்வதே இல்லை. அப்படியே அவதூறு-வெறுப்புப் பிரச்சாரத்தில் இறங்கிவிடுகிறார்கள்.

இது வாசகக்குரல் என்றால் இது முதலில் ஒரு ஐயமாக, குழப்பமாக இருக்கும். இதற்கான விடை கிடைக்காதபோதுதான் அடுத்தகட்ட முடிவுகளுக்குச் செல்வார்கள். ஆனால் இவர்கள் முதலிலேயே முடிவுகளுக்குச் சென்று அம்முடிவுகளை வெறுப்புப்பிரச்சாரமாக ஆக்கிக் கொள்வதை கவனியுங்கள். இதற்கு உரிய விளக்கம் கொடுத்தேன் என்றால் ஒரு வாசகன் நிறைவடைவான். இவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள். ஆராயாமல் சொல்லிவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சியோ, தாழ்வுணர்ச்சியோ எழாது. இதை இப்படியேவிட்டுவிட்டு அடுத்த குற்றச்சாட்டுக்குத் தாவுவார்கள். இது ஒரு மனச்சிக்கல் மட்டுமே. அவர்கள்தான் அதைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். நான் இவர்களைப் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.

இனி உடையார் பற்றி. உடையார் நாவலை எனக்குப்பரிந்துரைத்தவர் நண்பர் மரபின்மைந்தன் முத்தையா. அந்நாவல் ஆரம்பத்தில் இருதொகுதிகளாக வெளியிடப்பட்டது. அன்று அதை வாசித்தவர்கள் ஏறத்தாழ அனைவருமே அந்நாவல் அந்தவடிவில் முழுமையடைந்தது என்றே நினைத்தார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். எனக்கு அந்நாவலை அப்படித்தான் என் பதிப்பாளநண்பர் வாங்கி அனுப்பினார். அவ்வடிவில் அந்நாவலை வாசிக்கத்தக்க ஒரு நல்ல வரலாற்று மிகுபுனைவு [ ரொமான்ஸ்] என்று குறிப்பிட்டேன். அதைப்பற்றி எழுதும் எண்ணமும் இருந்தது. அதைக் கூறவும் செய்தேன்.

ஆனால் பின்னர் உடையார் வளர்ந்துகொண்டே சென்றது. பின்னர் ஆறுபாகங்கள் வரை வந்திருப்பதாகச் சொன்னார்கள். மூன்று ,நான்கு பாகங்கள் என்னிடம் இருக்கின்றன. மூன்றாம்பாகத்திலேயே மேலே வாசிக்க ஆர்வமில்லாமல் நிறுத்திவிட்டேன். முழுமையாக வாசிக்காமல் முடிவான கருத்து ஏதும் சொல்லலாகாது என்பதனால் அந்நாவலைப்பற்றி மேலே ஏதும் எழுதவில்லை. முழுமையாக வாசிக்கவில்லை என்று மட்டுமே சொல்லி நிறுத்திக்கொண்டேன்.

வாசித்தவரை அந்நாவலின் பிரச்சினை என நான் நினைப்பது அது நாவலாக அன்றி நீண்ட கதைசொல்லலாகவே சென்றுகொண்டிருப்பதுதான். ஆரம்பத்தில் தனக்குப் பிடிகிடைத்த ஒரு வடிவத்தை, கதாபாத்திரங்களை விரித்து நீட்டிக்கொண்டே செல்கிறார் பாலகுமாரன். எந்தநாவலும் அதன் ஒட்டுமொத்தக் கட்டுமானத்தால்தான் முக்கியத்துவம் பெறுகிறது. அந்தக் கட்டுமானம் அந்நாவலின் மையத்தை, இலக்கை அடிப்படையாகக் கொண்டது. அந்த வடிவ ஒருமை தொடர்கதைகளில் அமைவதில்லை. பாலகுமாரன் உடையார் நாவலை எங்கோ தொடர்கதையாக எழுதினார் என்று கேள்விப்பட்டேன். உடையார் நீண்டு செல்லச்செல்ல இலக்கை இழக்கிறது.

இவ்வளவு நீளும் ஒரு நாவல் அள்ளியாகவேண்டிய வாழ்க்கையும் பேசியாகவேண்டிய சிந்தனைகளும் இன்னும் பற்பல மடங்கு இருக்கவேண்டும். இலக்கியமாக அன்றி ஒரு ரொமான்ஸ் என்று கொண்டாலும்கூட உடையார் மிகவிரைவிலேயே வாசிப்பு சுவாரசியத்தை இழக்கிறது.

அத்துடன் வாயால் சொல்லி எழுதவைத்தது போல அடர்த்தியற்ற நடை. நாவல் காட்சியாக, எண்ணங்களாக வளரவில்லை. வெறும் பேச்சாகவே ஒலிக்கிறது. முழுமையாக ஆறுபாகங்களையும் வாசித்த நண்பர்கள் எவரும் இல்லை, ஆரம்பத்தில் பரிந்துரைத்தவர்கள்கூட. ஆகவே நான் அந்நாவலை மேலே வாசித்துமுடிக்கவேண்டிய ஒன்றாக நினைக்கவில்லை. ஒரு விமர்சகனாக பாலகுமாரனின் எந்த நாவலையும் இலக்கியத்தகுதி கொண்டதாக நான் எண்ணவில்லை.

ஜே.எஸ் ஆறுதலடையுங்கள். மேலும் மனக்குழப்பங்களுக்கு ஆளாவதைத் தடுக்க என்னை வாசிப்பதை விட்டுவிடுங்கள். மேலும் ஓர் ஐந்து வருடம் போகட்டும், நாம் சந்திப்போம்.

ஜெ

முந்தைய கட்டுரையூத்து-சிரிப்பு-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகருநிலம்,கடிதங்கள்