காந்தியின் சிலுவை-கடிதங்கள்

சார் நலமா?

காந்தியின் சிலுவை படித்தேன். இப்போதைய சூழலை ஒட்டி அமைந்த அருமையான உரை.

தான் தொட்டதையெல்லாம் தங்கமாக்கும் ரசவாதக்கல்தான் எந்த உண்மையான சிந்தனையும். அதனால் எவ்வளவுதான் தீண்டப்பட்டாலும் தங்கமாக மாற முடியாதவர்கள், தங்கள் மனசாட்சியால் உரசிப்பார்த்துக் கொள்ளவேண்டியது தங்களையே தவிர அச்சிந்தனைகளையல்ல.

தெளிவாகப் புரிய வைத்தமைக்கு நன்றி…

ஆனந்த் உன்னத்.

அன்புள்ள ஜெமோ,

வணக்கம்.புதுக்கோட்டை காந்திப்பேரவை விழாவில் கலந்துகொள்ள முயற்சித்து சில புறச்சூழலால் முடியாமல் போனது வருத்தமளித்து.

நேற்றைய நாள் முழுதும் என் சிந்தையை நிறைத்திருந்த காந்தியின் நினைவுகளுக்கு ”காந்தியின் சிலுவை” உரையின் பதிவு மிகுந்த நிறைவளித்தது.
//”இன்றைய இந்தியா காந்தியை ஓர் அடையாளமாக மட்டுமே கொண்டிருக்கிறது. அக்டோபர் இரண்டில் மட்டுமே நினைக்கிறது. ஆனால் காந்தியை அது எங்கும் தன் அடையாளமாகப் பரப்பி வைக்கிறது. தன்னுடைய இயலாமையை அடக்குமுறையை வன்முறையை காந்தியைக் கொண்டு மறைக்கிறது. அதற்காக காந்தியை அது மழுங்கடிக்கிறது.

காந்தியம் அதன் உண்மை வடிவில் கொதிக்கும் அமிலம் போன்றது. சமரசமில்லாமல் நீதிக்கும் உண்மைக்கும் விசுவாசமாக இருப்பது என்ற சவாலை அது நமக்கு அளிக்கிறது. இயற்கைச்சூழலைக் காக்க, மானுட சமத்துவத்துக்காக , அதிகார மையப்படுத்தலுக்கு எதிராக முழுமூச்சான போராட்டங்களைச்செய்ய அது நம்மிடம் அறைகூவுகிறது. அந்தப்போராட்டம் முழுமையாகவே அறப்போராட்டமாக இருந்தாகவேண்டும் என நம் ஆன்ம வல்லமைக்கு ஆணையிடுகிறது”//—– என்ற உங்களின் வரிகள் எத்தனை உண்மையானவை.

இந்த மனிதர் இல்லாமல் போயிருந்தால் மானுடம் எத்தனை பெரிய பேரழிவுக்குள் சிக்கியிருக்கும்.

’காந்தியம்’ தான் உலகில் இயங்கும் தளமெங்கும் மகத்தான விளைவுகளை ஆக்கிக்கொண்டே இருக்கிறது.

உலக அரசுகள் அனைத்தையும் பேரழிவு அணுசக்தி சார்ந்த தங்கள் எரிசக்தி கொள்கையை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத்தள்ளியுள்ள கூடங்குளம் மக்களின் காந்தியவழிப்போராட்டம் நாம்வாழும் காலத்தில் இதை நம் கண்முன்னே நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.
இயற்கையை சுரண்டிக்கொழுத்த இன்றைய மானுடத்தின் நெருக்கடிகள்,ஒற்றப்படையாய் அதிகாரத்தை மையத்தில் குவித்து பெருத்து வீங்கியிருக்கும் இன்றைய அரசுகளின் நெருக்கடிகள்,அறமற்று நுகர்ந்து பெரும் பொருளியல் சிக்கலுக்குள் நொந்துகிடக்கும் தனிமனித நெருக்கடிகள் என அனைத்திற்கும் காந்தியே ஒற்றைத் தீர்வு.

நன்றி.

பூபாலன்

 

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,

உங்களுடைய ‘காந்தியின் சிலுவை’ படித்தேன். சில வருடங்களாக நீங்கள் காந்தியைப் பற்றி நிகழ்த்தும் உரையாடல்களில் மற்றும் ஓர் மகத்தான் கட்டுரை.
‘இன்றைய காந்தி’ மற்றும் வெவ்வேறு இடங்களில் நீங்கள் நிகழ்த்தி வரும் பேருரைகள் யாவும் சமகாலத்தில் காந்தியத்தைப் பற்றி நிகழ்த்தபடும் மிகமிக முக்கியமான விவாதமாகக் கருதுகிறேன்.
இது ஒரு மாபெரும் நிகழ்வு. இது தமிழையும் தாண்டி, உலகமெல்லாம், முக்கியமாக இந்தியாவின் மற்ற பகுதிக்கெல்லாம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

‘இன்றைய காந்தி’ யை யாராவது மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார்களா? இது பல்வேறு பல்கலைக்கழகங்களில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
தமிழகப்பல்கலைக்கழகங்களில் எனக்கு நம்பிக்கை போய்விட்டது. எத்தனை பேர் ஒரு மகத்தான விஷயத்தை இழக்கின்றனர் (உங்களுடைய மற்றும் தமிழின் பல மகத்தான படைப்புகளை இழப்பது போல்)

நம்பிக்கை என்றவுடன், நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட ‘vision statement’ நினைவிக்கு வருகிறது, அது நிஜமாகிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால் காந்தி பிறந்தநாளன்று, கிராம சுயராஜ்ஜியத்தைப் பற்றி ஒருவர் பேசியது மகிழ்வைத் தந்தது.

இப்படிக்கு,
ராஜசேகர்

அன்புள்ள ஜெயமோகன்,
என் சிறுவயதில் காந்தி அணிந்திருந்த உடைக்கான காரணம் அறிந்த கணத்திலிருந்து எனக்குப் பிடித்தவரானார் .இது போல் தான் அந்த வயதிலேயே ”தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற வரியை அறிந்த கணம் முதல் பாரதியையும்.
முன்பு நான் குடிப்பேன்,குடித்த பிறகு என்னால் யாரும் அறியாதவாறு குடிக்காத மாதிரி நடந்து கொள்ள முடியும் ஆனால் என் அம்மா முன் நிற்க முடியாது ,குடித்தால் அன்று வீட்டிற்குச் செல்வதை எப்படியாவது தவிர்த்து விடுவேன் . அது போன்று இப்போது காந்தி எனக்கு ,நான் செயல்படுபவன்,நேர்மையாய் இருப்பவன் என்று யாரிடமும் உறுதியாகப் பேசுவேன் ஆனால் காந்தியிடம் அது எனக்கு நடக்காது ,அவர் படம் என்னை ஒரு துரும்பு போல் நினைக்க வைக்கிறது ,குறைந்த பட்சம் என் மனதிற்குத் திருப்தியாக நடந்தால் கூட நான் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் .
இன்று காந்தி எழுதிய எழுத்துகள் முக்கியமாக சுய சரிதம் பொதுவெளியில் உள்ளது ,பிறகு உங்களைப் போன்றவர்களின் காந்தியை நெருக்கமாக உணர வைக்கும் எழுத்துகள் . தன் மனதிற்கு உண்மையாய் இருப்பவன் ஒருவன் காந்தியை அறியும் பட்சத்தில் அவரை ஒதுக்கி விட்டுக் கடந்து விட முடியாது . உங்கள் இந்த உரை காந்தியை சிலகாலம் தவிர்த்த எனக்கு காலில் தைத்த முள்ளாக இருக்கிறது

ராதாகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகிருஷ்ணமூர்த்தி நூலகம்-கடிதம்
அடுத்த கட்டுரைஇந்த இணையதளம்-கடிதங்கள்