கேரளத்தில் பாலக்காடு அருகே கொடுந்திரப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்த இரு சிறுவர்களைப்பற்றி 1992ல் மலையாள மனோரமாவின் நிருபர் ஜாய் சாஸ்தாம்படிக்கல் ஒரு செய்தியை வெளியிடார். ‘எரியும் சிறுவர்கள்’ என்ற தலைப்பிலான அச்செய்தி கேரளத்தை கவனிக்கவைத்தது. பின்னர் ஆங்கில ஊடகங்கள் வழியாக இந்தியாவெங்கும் அது கவனத்துக்கு வந்தது.
நாவக்கோடு கிருஷ்ணன் மற்றும் குமாரி தம்பதிகளுக்குப் பிறந்தவர்கள் இந்த பையன்கள். முத்த பையனின் பெயர் சுபாஷ், அவனுக்கு ஆறு வயது. இரண்டாமன் பெயர் சுரேஷ், ஐந்து வயது. இருவருக்கும் ஒரு விசித்திரமான நோய் இருந்தது. இருவருக்கும் உடலில் வியர்வைத்துளைகள் இல்லை.
ஆகவே அவர்களால் உடலின் வெப்பத்தை ஆற்ற முடியாது. சிறு குழந்தையாக இருக்கும்போதே சுபாஷ் தவழ்ந்துபோய் தண்ணீரில் இருப்பான். தண்ணீரை அள்ளி மேலே விட்டுக்கொள்வான். எங்கே தண்ணீரைப்பார்த்தாலும் குடித்துவிடுவான். பின்னர் சிறியவனுக்கும் அதே பிரச்சினைகள் இருந்ததைக் கண்டார்கள். அவர்களால் இருபது நிமிடங்கள் வரைத்தான் நீரில் நனையாமல் இருக்கமுடியும். அதற்குள் உடலில் நீரை ஊற்றிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தோல் வெந்து வழன்றுவிடும். கதறித்துடிப்பார்கள். ஆகவே எங்கே விளையாடிக்கொண்டிருந்தாலும் அங்குள்ள நீரில் குதித்து விடுவார்கள். பெரும்பாலும் சாக்கடைகளில்.
இவர்களை பாலக்காடு தலைமை மருத்துவமனையிலும் பின்னர் சென்னை மருத்துவமனைகளிலும் சிகிழ்ச்சைக்காகக் கொண்டுசென்றார்கள். பல ஊர்களில் இவர்களுக்குச் சிகிழ்ச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நிபுணர்கள் அறிவித்தார்கள், இது ஒரு மரபணுப்பிரச்சினை, இதற்கு சிகிழ்ச்சை இல்லை என்று. இவர்கள் வாழ்நாளெல்லாம் ஈரத்தில் வாழவேண்டியதுதான் என்றுபாலோசனை வழங்கப்பட்டது. வியர்வைத்துளைகள் இல்லாமல் இருப்பது ஓர் ஊனம்போல என்று சொல்லப்பட்டது.
இச்செய்தியைஇதழ்களில் வாசித்தார் கேரளத்தின் புகழ்பெற்ற ஆயுர்வேத இளம்பிள்ளை மருத்துவரான கங்காதரன் வைத்தியர். இவர் பாலக்காட்டில் மேழத்தூர் என்னும் இடத்தில் உள்ள சாத்துநாயர் சிகிழ்ச்சாலயத்தில் அந்தக்குடும்ப பாரம்பரியத்தின் இப்போதைய வைத்தியர்.அவர் உடனே தன் மூத்தவர்களிடம் இந்நோயைப்பற்றி விசாரித்தார். பழைய நூல்களை ஆராய்ந்தார்.
கங்காதரன் நாயர்
பின்னர் நிருபர் ஜாய் சாஸ்தாம்படிக்கல் அவர்களை தொடர்பு கொண்டு அக்குழந்தைகளுக்கு அவர் சிகிழ்ச்சை அளிக்க விரும்புவதாக தெரிவித்தார். எல்லா சிகிழ்ச்சைகளையும் நிறுத்திவிட்டு குழந்தைகளை அவர்களின் பெற்றோர் ஊருக்கே கொண்டுவந்துவிட்டிருந்தனர் அப்போது. தன்னுடைய செலவிலேயே சிகிழ்ச்சை அளிப்பதாகவும் பலன் தெரிய குறைந்தது ஒருவருடம் ஆகலாமென்றும் கங்காதரன் நாயர் சொன்னார். ஒப்புக்கொண்டு குழந்தைகளை கொண்டுவந்தார்கள். அருகில் ஒரு குடில் கட்டி அதில் தங்க வைத்து சிகிழ்ச்சையை தொடங்கினார் கங்காதரன் நாயர்
இதற்குள் கங்காதரன் நாயர் குழந்தைகளை சிகிழ்ச்சைக்காக ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் ஒருவருடத்தில் முழுமையாகக் குணமடையும் என உறுதியை அளித்திருப்பதாகவும் ஜாய் சாஸ்தாம்படிக்கல் மலையாள மனோரமாவில் எழுத அச்செய்தி ஆங்கில ஊடகங்களிலும் வெளிவர கங்காதரன் நாயர் மேல் இந்தியா மருத்துவ உலகின் கவனம் திரும்பியது. அது அவருக்கு பெரும் பொறுப்பை உருவாக்கியது.
குழந்தைகளை கங்காதரன் நாயர் கூர்ந்து பரிசோதனைசெய்தார். தோலில் வியர்வைத்துளைகள் இல்லை என்பது உண்மை. ஆனால் அதற்குக் காரணம் தோல் முறையாக வளரவில்லை என்பதே. தோல் நன்றாகச் சுருங்கி தோலின்மேல் முடியே இல்லாமல் இருந்தது. முடி இருக்கும் இடங்களை நன்றாக தேடிப்பார்த்தார். இருந்த சில முடிகள் செம்பட்டையாக இருந்தன. தோல் சுருங்கி உள்ளே இழுத்துக்கோண்டு இருப்பதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் வரவில்லை, எனவேதான் முடி செம்பட்டையடித்திருக்கிறது என்று கண்டு பிடித்தார். தோல் வளர்ச்சி அடையாமல் இருந்தமையால்தான் அதில் வியர்வைச்சுரப்பிகளும் துளைகளும் உருவாகவில்லை என ஊகித்தார்
பையன்கள் கண்ட நீரை குடித்தமையால் வயிறு முழுக்க பலவகையான பூச்சிகள் பெருகி உப்பி குடம்போல இருந்தது. சிறுவயதிலேயே பூச்சிகள் தாக்கி ஈறுகள் பாதிக்கப்பட்டமையால் பற்களும் அவர்களுக்கு முளைக்கவில்லை. வாயும் குடல் வழியும் முழுக்க புண்ணாக இருந்தன. கொஞ்சம் கூட காரமோ உப்போ உண்ண முடியாது . கஞ்சிநீரும் பாலும் மட்டுமே உணவாக உண்ண முடியும். அவர்களின் ஈரலும் கெட்டிருந்தது.
அருகெ இருந்த தங்கள் குலதெய்வமான சாஸ்தா [அய்யப்பன்] கோயிலுக்குக் கொண்டுசென்று பூஜைசெய்து பிரசாதம் வாங்கி அவர்களுக்குக் கொடுத்தபின் கங்காதரன் நாயர் சிகிழ்ச்சையை ஆரம்பித்தார். முதலில் அவர்களின் வயிற்றைச் சுத்தம்செய்தார். ஆயுவேதமுறைப்படி வயிற்றைச் சுத்தம்செய்வதென்பது கசப்பான மூலிகைகள் வழியாக பூச்சிகளை வெளியேற்றுவதும் பூச்சிகளை எதிர்க்கும் சக்தியை வயிற்றுக்கு அளிக்கும் மருந்துகளை அளிப்பதும் ஆகும்.
விடங்கரஜனி என்ற அவர்களின் கிருமிநீக்கி மருந்தும் சில கசப்பு குளிகைகளும் ஒருமாதம் தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்டன. விளைவாக வயிறு சரியாகியது. அவர்களின் வாய்ப்புண் ஆற ஆரம்பித்தது. சாதாரணமான உணவுகளை உண்ணலாமென்ற நிலை வந்தது. தோல்மேல் தொடர்ச்சியாக குளிர்விக்கும் எண்ணைகள் தேய்க்கப்பட்டன.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்து என்பது ஒரு மோர்கஷாயம். பல்வேறு மூலிகைகள் சேர்த்த அந்த கஷாயத்தை தினமும் அவர்களுக்கு கொடுத்து தோலின் ஆரோக்கியத்துக்கான எண்ணைகளையும் பூசிக்கொண்டிருந்தார்கள். லாக்ஷாதி என்ற இந்த எண்ணை சுத்தமான தேங்காயெண்னையில் பலவகையான மூலிகை கலந்து காய்ச்சி தயாரிக்கப்பட்டது. பஞ்சகந்தம் என்ற ஐந்து மூலிகை போட்டு கொதிகச்செய்து ஆறவைத்த நீரில் அவர்கள் தொடர்ச்சியாக நீராட்டப்பட்டார்கள்.
இதைவிட முக்கியமான சிகிழ்ச்சை உணவில்தான். பெரும்பாலும் அவர்களுக்கு பழங்களே உணவாக அளிக்கப்பட்டன. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் ஆகியவை சரியான விகிதத்தில் அளிக்கப்பட்டன. மெல்லமெல்ல அவர்கள் தேறினார்கள். முதலில் அவர்களின் பசி அதிகரித்தது. தோலின் சுருக்கமும் தடிப்பும் அகன்று பளபளப்பு வந்தது. தோல்மீது கரியமுடி வர ஆரம்பித்தது.
தோல் ஓரளவு எதிர்வினை காட்ட ஆரம்பித்த பின்னர்தான் கங்காதரன் நாயர் நிம்மதிப்பெருமூச்சு விட்டார். அதுவரை அவர் கடுமையான விரதம் எடுத்து சாஸ்தாவை கும்பிட்டுவந்தார். அதன்பின் நவரக்கிழி என்னும் மருத்துவம் ஆரம்பித்தது .மூலிகைகளை போட்டு சூடு பண்ணிய துணிப்பொதியால் உடம்பை ஒற்றி எடுப்பது அது. தலை பொதிச்சில் என்ற சிகிழ்ச்சையும் அளிக்கப்பட்டது. தலையை மூலிகைகளால் பொதிந்து வைப்பது.
பதினைந்து நாள் சிகிழ்ச்சை, பதினைந்து நாள் எந்த சிகிழ்ச்சையும் இல்லாமல் விடுவிடுவது– இதுதான் முறை. அக்காலத்தில் பாலக்காடு கலெக்டராக இருந்த ஜெயகுமார் கேரளத்தில் எழுத்தாளராகப் புகழ்பெற்றவர். அவர் பத்துநாட்களுக்கு ஒருமுறை நேரில்வந்து குழந்தைகளை பார்த்துச்செல்வார். குழந்தைகள் மெல்லமெல்ல சீரடைந்தன. ஈறுகள் சிவப்பாக ஆகின. அவற்றில் பற்களும் முளைக்க ஆரம்பித்தன.
நீரில் அவர்கள் நிற்கும் நேரம் குறைந்து கொண்டே வந்தது .அவர்களின் முடி ஆரோக்கியமாக வளர ஆரம்பித்தது. நீராவி மூலம் அவர்களை வியர்க்கச் செய்வது என்னும் சிகிழ்ச்சை முறை ஆரம்பித்தது. பின்னர் வெயிலில் நிறுத்தும் சிகிழ்ச்சைமுறை. வெயில் தோலுக்கு மிகப்பெரிய மருந்து. உடல் வெம்மை காரணமாக அக்குழந்தைகள் வெயிலையே அறிந்ததில்லை அதுவரை. வெயில் அவர்களை சீக்கிரமாகவே குணப்படுத்தியது
அத்துடன் மன அளவில் அவர்கள் மீளவேண்டியிருந்தது. ஆகவே அவர்களை விளையாடச்செய்தார். விளையாடுவதன்மூலமே குழந்தைகள் வாழ்க்கைமேல் பிடிப்பு கொள்கின்றன. நோயில் இருந்து மீள்வதற்கு வாழ்க்கைமேல் பிடிப்பு அவசியமானது. அவர்களுக்கு விளையாடி பழக்கமில்லை. ஆகவே அவர்களை விளையாடச் செய்து அவர்களுடன் கங்காதரன் நாயரும் சேர்ந்தே விளையாடினார். அவர்களை சைக்கிள் கற்றுக்கொள்ளச் செய்தார். ·புட்பால் விளையாடச் செய்தார். அவர்களின் தன்னம்பிக்கைக்காக மதியவெயிலிலேயே அவர்களை ·புட்பால் விளையாடச் செய்தார். ·புட்பால் விளையாட்டு அவர்களை உற்சாகப்படுத்தியது.
அவர்களின் தோல் புதிதாக முளைத்து வந்தது என்றே சொல்லவேண்டும். அதில் வியர்வைத்துளைகள் இருந்தன. சாதாரணமான அளவில் வியர்வைத்துளைகள் இருக்கவில்லை. ஆனால் உடலைக் குள்ர்விக்க போதுமான அளவில் வியர்வைத்துளைகள் இருந்தன. ஆகவே வியக்கத்தக்க வகையில் அவர்கள் மீண்டு வந்தார்கள்.
அவர்களை பரிசோதனைசெய்யவும் பிற சிறிய சிகிழ்ச்சைகளுக்கும் உள்ளூர் அலோபதி மருத்துவர்கள் உதவினார்கள். கங்காதரன் நாயரின் மகனும் மருமகளும் அவர்களைக் கவனித்துக்கொண்டார்கள். அவர்கள் குணமடைந்த செய்தி மலையாள மனோரமாவில் வந்ததும் கடிதங்கள் வந்து குவிந்தன. பெரும்பாலானவர்கள் பணம் அனுப்ப தயாராக இருந்தார்கள். கங்காதரன் நாயர் பணத்தை அந்தப்பையன்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டார். அவர் நினத்த அளவுக்குக்கூட பணம்செலவாகவில்லை. சிகிழ்ச்சை எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே முடிந்தது.
சுரேஷ் சுபாஷ் இருவரும் இப்போது பெரிய பையன்கள். இருவருமே பிளஸ் டூ முடித்து விட்டார்கள். மீசையெல்லாம் முளைத்து உடல் தடித்து ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். மாதத்தில் ஒருமுறை அவர்கள் இருவருமே தங்களைக் காண வருவதுண்டு என்று கங்காதரன் நாயர் சொன்னார்.
பாஷாபோஷினி 2009 ஆண்டு மலரில் கங்காதரன் நாயர்ரின் சுயசரிதை சார்ந்த விரிவான பேட்டி வெளிவந்திருக்கிறது. விதவிதமான நோய்களின் மீட்புகளின், மீளமுடியாமைகளின் கதைகள். ஆயுர்வேதம் அலோபதியில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பதைக் காட்டுகிறது இந்த தன்வரலாறு. அலோபதி உடலை பழுது பார்க்கிறது. ஆயுர்வேதம் உடலை தன் இயல்பான நிலைக்குக் கொணுசெல்ல முயல்கிறது. அலோபதி நோயாளியின் வாழ்க்கைக்குள் நுழைகிறது. ஆயுர்வேதம் நோயாளியை தன் வாழ்க்கைநோக்குக்குக் கொண்டுவர முயல்கிறது. அதுதான் ஆயுர்வேதத்தின் பலமும் பலவினமும்.