கேரளத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராகிய எம்.கோவிந்தனுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார் ‘காந்தி சுடப்பட்டபின்பும் உயிருடன்தான் இருந்தார். ஏனென்றால் அவர் ஒரு மனிதன் மட்டுமல்ல, ஒரு கருத்து. ஒரு மெய்ஞானத்தின் பருவடிவம். அதை ஒரு வெறும் பருப்பொருளான துப்பாக்கிக் குண்டு எப்படி அழிக்க முடியும்? துப்பாக்கிக் குண்டு ஊடுருவியதும் காந்தி உருமாறினார் என்று சொல்லலாம். அதுவரை ஒரு மனிதனாகவும் அவன் சொல்லும் கருத்தாகவும் இருந்தவர் வெறும் கருத்தாக எஞ்சினார். அந்த மனிதனின் குரலாகப் பார்க்கப்பட்ட அந்தக்கருத்து அந்த மனித ஆளுமையில் இருந்து விடுதலை அடைந்தது. தூய்மையான கருத்து மட்டுமாக ஆகியது. தன்னுடைய சொந்த பலத்தால் நிற்க ஆரம்பித்தது. ’
‘….ஆனால் அது இரண்டு நாட்களுக்குத்தான். அதன்பின் அந்தக்கருத்து கொல்லப்பட்டது. அதைச்செய்தவர்கள் காந்தியின் சீடர்கள். அவர்கள் அந்தச் சடலத்தை ஒரு பீரங்கிவண்டியில் ஏற்றினார்கள். அந்த பீரங்கிவண்டியில் ஆர்ப்பாட்டமான மலர் அலங்காரங்களுடன் அதிகாரபூர்வ ராணுவ அணிவகுப்புடன் ராஜமரியாதைகளுடன் டெல்லியின் ராஜவீதிகள் வழியாக அந்தச்சடலம் கொண்டுசெல்லப்பட்டபோது காந்தி என்ற கருத்துவடிவம் கொல்லப்பட்டது. அதைக்கொண்டாடும்படியாக மரியாதைக்குண்டுகள் வெடித்து வானத்தில் எதிரொலித்தன. ’காந்தி இறந்தார், வாழ்க காந்தி’ என்று இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.’
எம்.கோவிந்தனின் உரையாடல்களை ‘மின்னல் கோர்க்கும் பேச்சு’ என்றார் ஆற்றூர் ரவிவர்மா. அந்த இளம் வயதில் அதைக் கேட்பது சிந்தனையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எம்.கோவிந்தனின் அந்தப்பேச்சை நான் சொல் சொல்லாக என் சிந்தனையில் நிகழ்த்திக்கொண்டிருந்தேன். அதற்கு என்னதான் அர்த்தம்?
காந்தியை அந்தத் துப்பாக்கிக் குண்டு கொல்ல முடியாது. ஏன் ?காந்தி ஒரு மனித உடல் அல்ல, ஒரு கருத்துவடிவம். அவர் தன்னை அப்படி ஆக்கிக் கொண்டிருந்தார். ஒருவர் தான் நம்புவதை தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆரம்பித்தாரென்றால் அந்த நம்பிக்கைகளின் தூலவடிவமாகவே அவரது உடலும் பேச்சும் ஆகிவிடும்.
இதை நாம் எதிர்மறையாகவும் காணலாம். குற்றங்கள் செய்பவர் குற்றங்களின் வடிவமாகவே தெரிகிறார். ஒழுக்கமற்றவர் ஒழுக்கமீறலின் வடிவமாகவே தெரிகிறார். அவர்களுடைய முகமும் சிரிப்பும் பாவனைகளும் ஏன் அவர்களின் புகைப்படம் கூட அவர்கள் யாரோ அதைக் காட்ட ஆரம்பித்துவிடுகிறது.
அதேபோல ஞானத்தை தன் வாழ்க்கையாகக் கொண்டவர் அதுவாகவே தெரிய ஆரம்பிக்கிறார். பல பேரரறிஞர்கள் அவர்களின் இளமையில் சாதாரணமாகத் தெரிகிறார்கள். முதுமையில் பேரழகுடன் தோன்றுகிறார்கள். ஒரு பிஞ்சு கனிவதுபோலத்தான் அதுவும். அந்த மனிதர்களுக்குள் அவர்களுடைய ஞானம் முற்றிக் கனிந்து அவர்கள் உடலாக மனமாக ஆன்மாவாக ஆகிவிடுகிறது.
காந்தி கனிந்துகொண்டே இருந்தார். தன் தாய்மீது கொண்ட ஈடிணையற்ற பிரியத்தால் அவளுடைய ஆணைகளை தன் வாழ்க்கையின் நெறிகளாகக் கொள்ள ஆரம்பித்த இடத்தில் அவரது கருத்துக்கள் அவருக்குள் குடியேறுகின்றன. மற்றவர்களைப்போல காந்தி கற்பதில் ஆர்வம் காட்டியவரல்ல. கற்றவற்றைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக்கொள்வதில் ஆர்வம் காட்டியவர். ஆகவேதான் அவரது சமகாலப் பேரறிஞர்களின் நூற்றில் ஒரு பங்கு நூல்களைக்கூட காந்தி வாசித்ததில்லை. ஆனால் வாசித்த ஒவ்வொரு கருத்தையும் அவர் தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு பரிசீலனை செய்தார். அவற்றை தன் வாழ்க்கையில் முழுமையாகக் கடைப்பிடிக்கமுடியுமா என்று பார்த்தார். அந்தப் பிடிவாதமான சுயபரிசோதனைதான் காந்தியை உருவாக்கியது.
நிறவெறிக்கு எதிரான திட்டவட்டமான போராட்டங்கள் வழியாக காந்திய சிந்தனை காந்திக்குள் கரு வடிவம் கொண்டது. இயற்கையுடன் இணைந்த மேலான வாழ்க்கை பற்றிய இலட்சியம் வழியாக காந்தியம் ஒரு தரிசனமாக ஆகியது. உண்மையை பலப்பல பக்கங்கள் கொண்டதாக மட்டுமே அணுகவேண்டும் என்ற பிரக்ஞை வழியாக காந்தியம் நம் காலகட்டத்தின் மிகப்பெரிய தத்துவநிலைப்பாடாக மாறியது. எந்நிலையிலும் அகிம்சையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற உறுதி வழியாக காந்தியம் மானுடம் இதுவரை உருவாக்கிக் கொண்ட மிகச்சிறந்த அரசியல் நடைமுறையாகத் திரண்டுவந்தது.
அந்த காந்தியத்தின் கண்ணில்தெரியும் வடிவம் காந்திதான். காந்தியை அன்று கோடிக்கணக்கான மக்கள் காந்தி என்ற உடல் வழியாகத்தான் புரிந்துகொண்டார்கள். ஆச்சரியமான விஷயம் இது. இந்தியாவின் வரலாற்றில் காந்தியின் காலகட்டம் போல மகத்தான இலட்சியவாதம் பொங்கிப்பெருகிய ஒரு சூழல் என்றும் இருந்ததில்லை. காந்தி ஏன் மகாத்மா என்றால் அவர் சென்ற இடமெல்லாம் பிறரை மகாத்மாக்கள் ஆக்கினார் என்பதனால்தான். அவரிடம் பேசியவர்கள் எல்லாரும் மகாத்மாக்கள் ஆக மாறினார்கள் என்பதனால்தான் காந்தி ஒரு மகாத்மா.
யோசித்துப்பாருங்கள். நம்முடைய ஒவ்வொரு ஊரிலும் காந்திமீது பற்று கொண்டு தன் உடைமைகளைத் துறந்து உறவுகளைத் துறந்து உயிரையும் இழக்கத்துணிந்து தேசவிடுதலைக்காகக் கிளம்பிச்சென்ற ஒரு காந்தியவாதி இருப்பார். தன்னலம் சிறிதும் இல்லாமல் அவர் பொதுநலனுக்காக வாழ்ந்திருப்பார். நாம் கனவிலும் நினைக்கமுடியாத செயல்களை சர்வசாதாரணமாகச் செய்திருப்பார். காந்தியால் ஆன்மா தட்டி எழுப்பப்பட்டு தாங்களும் காந்திக்கு நிகரானவர்களாக ஆன ஒரு இருநூறுபேரையாவது நாம் உலக வரலாற்றில் பட்டியல் போடமுடியும். மார்ட்டின் லூதர் கிங் முதல் நெல்சன் மண்டேலா வரை. ஆச்சாரிய வினோபா பாவே முதல் ஆங் சான் சூகி வரை.
அன்றைய அந்த காந்திய இலட்சியவாத அலையை இன்று கவனிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் நேரில் சந்தித்து உரையாடிய மாபெரும் காந்திய இலட்சியவாதிகள் சிலர் உண்டு. மலையாள காந்தியவாதிகளான பேராசிரியர் ஜி.குமாரபிள்ளை மற்றும் எம்.பி.மன்மதன். கேரளத்தின் சுதந்திரப்போராளியான மொய்து மௌல்வி. கேரள இலக்கியமேதை வைக்கம் முகமது பஷீர். கன்னட இலக்கியமேதை சிவராம காரந்த். திண்டுக்கல் காந்தி கிராம நிறுவனரான டாக்டர் ராமச்சந்திரன்.
இவர்கள் ஒவ்வொருவரும் ஓர் இதிகாச நாயகர்கள். இவர்களை நான் சந்தித்திருக்கிறேன் என்பதே என்னை சிலிர்க்கச் செய்கிறது. எவ்வளவு மகத்தான வாழ்க்கைகள்.. எவ்வளவு பிரம்மாண்டமான சாதனைகள். தியாகமும் துணிச்சலும் அர்ப்பணிப்பும் மனித உருவம் கொண்டுவந்தவர்கள் அவர்கள். ஆம், அவர்கள் ஒவ்வொருவரும் காந்திகள். காந்தி ஒரு தீ. அவரை நெருங்கிய அனைவருமே அவரால் ஒளியேற்றப்பட்டு தாங்களும் தீபங்களானார்கள்.
அத்தனை பேரிடமும் நான் ஒரு வினாவை தவறாமல் கேட்டிருக்கிறேன். எப்படி காந்தி மேல் ஈடுபாடு வந்தது? எப்படி காந்திய சிந்தனைகளைப் புரிந்துகொண்டீர்கள்? எப்படி நீங்கள் காந்திய சிந்தனைகளை விவாதித்தீர்கள்? அதற்காக வேறு என்னென்ன வாசித்தீர்கள்?
அவர்கள் அனைவருமே சொல்லிய பதில் அனேகமாக ஒன்றுதான். அவர்கள் காந்தியை அறிந்தது மிகமிகச் சிறிய வயதில். பள்ளிநாளில் அல்லது கல்லூரியில் படிக்கும்போது. அப்போது பெரிதாக ஏதும் வாசித்திருக்கவில்லை. சிந்தனைப் பழக்கம் இல்லை. காந்தி அவர்களுக்கு அச்சூழலில் இருந்து இயல்பாகக் கிடைத்த ஓர் அடையாளம், அவ்வளவுதான்.
மேலும் காந்தியின் சிந்தனைகள் அப்போது முழுமையாகத் தொகுக்கப்பட்டு கிடைக்கவும் இல்லை. அன்றைய அரசியலுக்கு காந்தி அளித்த எதிர்வினைகள்தான் வாசிக்கக் கிடைக்கும். காந்தியை அறிய நூல்கள் என ஏதும் அன்றில்லை.
காந்தி இறந்தபின்னர் காந்தி எழுதியவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து விஷயவாரியாகப் பகுத்து நூல்களாக்கிய பின்னர்தான் நாம் காந்தியம் என்று இன்று நினைக்கும் சிந்தனைத்தரப்பு வலுவாக உருவாகியது. காந்தி பல தளங்களில் பேசிய அனைத்துக்கும் நடுவே உள்ள ஒத்திசைவு கண்டறியப்பட்டது. காந்தியின் தரிசனங்களின் உலகளாவிய தன்மையும் வரலாற்றுப்பின்னணியும் வெளிப்பட்டது,
மேலும் கால்நூற்றாண்டு கழிந்து நவீன ஐரோப்பிய சிந்தனையாளர்களான இ.எஃப்.ஷுமாக்கர், இவான் இலியிச் போன்றவர்கள் காந்தியை இன்றைய சூழலுக்கு ஏற்ப விரிவாக விளக்கிய பின்னர்தான் காந்தியம் என்று நாம் இன்று சொல்லக்கூடிய ஒரு திட்டவட்டமான சிந்தனை உருவாகியது. அதன்பின் சென்ற இருபதாண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய சிந்தனையாளர்கள் காந்திய இலட்சியங்களை இன்றைய நவீன உலகுக்காக மீண்டும் விளக்கியபோதுதான் காந்தியம் என நாம் இன்று நினைக்கும் சிந்தனை கூர்மையாகத் திரண்டு வந்தது.
காந்தி வாழ்ந்த காலகட்டத்தில் அப்படி காந்தியை எவரும் முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கவில்லை. சி.எஃப்.ஆண்ட்ரூஸ், ஜெ.சி.குமரப்பா போன்ற சிலர் மட்டுமே காந்தியை ஆழமாகப் புரிந்து கொண்டவர்கள். மற்றவர்கள் காந்தியின் ஏதேனும் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கமுடிந்தது. தங்கள் விருப்பப்படி காந்தியை அவர்கள் விளக்கிக் கொண்டார்கள்.
அப்படியென்றால் இந்த காந்தியவாதிகள் எப்படி இளம் வயதில் காந்தியைப் புரிந்துகொண்டார்கள்? எப்படி தங்கள் மொத்த வாழ்க்கையையே காந்தியத்துக்காக அர்ப்பணித்தார்கள்? அவர்கள் சொன்ன பதில் இதுதான். நாங்கள் காந்தியை காந்தி சொன்னவை எழுதியவை வழியாகப் புரிந்துகொள்ளவில்லை. காந்தியைப் பார்ப்பதன் மூலமே புரிந்துகொண்டோம்.
ஆம், பெரும்பாலானவர்கள் எங்காவது ஓர் இடத்தில் காந்தியை நேரில் பார்த்தார்கள். அதுவும் நூறு இருநூறடி தூரத்தில் நின்று. காந்தி பேசிய குரல் கூட அவர்கள் காதுகளில் விழவில்லை. ஆனால் காந்தியின் தோற்றமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அக்கணமே அவர்கள் அவரது சீடர்களாக ஆனார்கள். அவரது பாதையைப் பின்பற்ற உறுதி பூண்டார்கள். அவருக்காக அனைத்தையும் இழக்க சித்தமானார்கள்.
அதுதான் காந்தி. காந்தி என்ற மனிதரின் உடல் காந்தியமாகவே இருந்தது. காந்தி நடந்து வந்தபோது வந்தது காந்தியம் என்ற ஞானம்தான். அதைத்தான் கோட்ஸே அவனுடைய துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினான். அந்த உடல் சரிந்தது. காந்தியம் என்ற ஞானத்தின் பருவடிவ அடையாளங்களில் ஒன்று இல்லாமலாகியது.
ஆனால் அதில் பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த அடையாளத்தை துப்பாக்கிக் குண்டு ஒன்றும் செய்யாது. காந்தியின் புகைப்படங்களே அந்த அடையாளமாக அமைய முடியும். காந்தி என நாம் காணும் எந்தப்பொருளும் அந்த பாதிப்பை நிகழ்த்தமுடியும்.
நான் 1988-இல் ராஜ்காட் சென்று காந்தி சாப்பிட்ட பாத்திரத்தையும் காந்தி உடல்தேய்த்துக் குளித்த வெள்ளைக்கல்லையும் பார்த்தேன். என் அகத்தில் ஒரு பெரும் புரளல். நான் காந்தியம் பற்றி வாசித்து, கேட்டு, சிந்தித்து நான் அடைந்த எல்லாக் கேள்விகளுக்கும் அங்கே பதில் கிடைத்தது. காந்தி யார் என்று எனக்குத் தெரிந்தது. காந்தி மீது அதன்பிறகு எனக்கு ஐயங்களே இல்லை. என் கண்கள் நிறைந்து வழிய கைகளைக் கூப்பியபடி அங்கே நின்றுகொண்டிருந்தேன். எப்படி கோழிக்கோடு ரயில்நிலையத்தில் பஷீர் காந்தியைத் தொட்டாரோ, எப்படி சாந்தி நிகேதனில் எம்.பி.மன்மதன் எம்பி எம்பிக் குதித்து காந்தியின் தலையை மட்டும் கண்டாரோ அதே போல. அது ஒரு தரினத்தின் தருணம். ஒர் ஆசியின் கணம். அது போதும்.
காந்தி என்பவர் காந்தியத்தின் குறியீடு. அந்தக்குறியீட்டை மேலும் வலுவாக நிறுவிக்காட்டினான் கோட்ஸே. காந்தி சுடப்பட்டு இறந்த அக்கணத்தில் அந்தக் குறியீடு பிரம்மாண்டமான வல்லமை உடையதாக ஆகியது. அதைப் பார்க்கும் எந்த ஒரு மனசாட்சியும் அதனால் தீண்டப்படாமலிருக்க முடியாதென்ற நிலை வந்தது. காந்தியை இன்று வசைபாடுபவர்கள் கூட காந்தியால் தங்கள் மனசாட்சி சீண்டப்படுவதனால்தான் அப்படி வசைபாடுகிறார்கள். அதன் வழியாக தன் மனசாட்சி அளிக்கும் நெருக்கடிகளைத் தாண்டிவிடலாமென நினைக்கிறார்கள். காந்தியை நிராகரிப்பதன் வழியாக தன்னுடைய மனசாட்சி சுட்டிக்காட்டும் வழிகளை நிராகரிக்கலாமென நம்புகிறார்கள்.
எம் கோவிந்தன் சொன்னது அதைத்தான். காந்தியை கோட்சே கொல்ல முடியாது.. கொல்லவில்லை. ஆனால் நேருவும் பட்டேலும் காந்தியைக் கொன்றார்கள். காந்தியை அவர்கள் இந்திய அரசின் முகப்படையாளமாக ஆக்கினார்கள். எந்த ஒரு அரசுக்கும் அடித்தளமாக இருப்பது ராணுவமே. ராணுவவண்டியில் காந்தியை ஏற்றி ராணுவமரியாதை அளிப்பதென்பது இந்த தேசம் அவருக்கு மரியாதை அளிப்பதுதான். அவருக்காக பீரங்கிக் குண்டுகள் முழங்கியது இந்த தேசம் அளித்த வணக்கம்தான்.
ஆம், கோட்சேயின் குண்டு ஒரு குறியீடு அல்ல. அது வெறும் பொருள். ஆனால் பீரங்கிவண்டி ஒரு குறியீடு. தேசங்களைக் கட்டமைக்கும் ராணுவ வல்லமையின் சின்னம் அது. அந்தக் குறியீடு காந்தி என்ற குறியீட்டை அழிக்கமுடியும். காந்தியத்தின் மீது செலுத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் அந்த தேசியமரியாதைதான். காந்தி இந்திய தேசியத்தின் அடையாளமாக ஆனதன் வழியாக அவர் தோற்கடிக்கப்பட்டார். காந்தி உண்மையில் இறந்தது அப்போதுதான் என்று கோவிந்தன் சொன்னது சரிதான்.
இந்தியாவுக்கும் காந்திக்கும் என்ன உறவு? இன்றைய இந்தியா காந்தியை ஓர் அடையாளமாக மட்டுமே கொண்டிருக்கிறது. அக்டோபர் இரண்டில் மட்டுமே நினைக்கிறது. ஆனால் காந்தியை அது எங்கும் தன் அடையாளமாகப் பரப்பி வைக்கிறது. தன்னுடைய இயலாமையை அடக்குமுறையை வன்முறையை காந்தியைக் கொண்டு மறைக்கிறது. அதற்காக காந்தியை அது மழுங்கடிக்கிறது. அந்த காந்தியையே நாம் இளமையில் அடைகிறோம்.
ஒரு உவமை மூலம் சொல்கிறேனே. வாக்ஸின் என்றால் என்ன? ஒரு நோயின் கிருமியை வலுவிழக்கச் செய்து அந்நோய்க்கு முறிமருந்தாக ஆக்குவது அது. அம்மைநோய்க் கிருமியை மந்தமாக ஆக்கி மனித உடலுக்குள் செலுத்தினால் அது வலுவான அம்மைநோய்க்கிருமி உள்ளே நுழையாமல் தடுக்கும். அதுதான் காந்திக்கும் நிகழ்ந்தது. இந்திய அரசின் அடையாளமாக ஆன காந்தி வலுவிழக்கச் செய்யப்பட்ட காந்தி. நம்முடைய ரூபாய் நோட்டுகளில் தெரியும் காந்தி. நம் பாடநூல்களில் சம்பிரதாயமாக நாம் படிக்கும் காந்தி. அவர் வலுவிழந்த காந்தி. நாம் இளமையிலேயே அந்த காந்திவாக்ஸின் செலுத்தப்பட்டவர்கள்.
அந்த எதிர்ப்புசக்தி நம் உடலுக்குள் ஊறிவிடுகிறது. நாம் காந்தி படத்தில் மீசை வரைந்து வளர்கிறோம். நம் அயோக்கிய அரசியல்வாதிகள் அவர்களுடைய எல்லாத் தவறுகளுக்கும் காந்தியே காரணம் என்று பேசுகிறார்கள். நம் சொந்த பலவீனங்கள் சொந்த அயோக்கியத்தனங்கள் எல்லாவற்றுக்கும் காந்தியைப் பழிபோட நாம் கற்றுக்கொள்கிறோம். காந்தியை வழிபடுகிறோம். அல்லது வசைபாடுகிறோம். இதன் மூலம் நாம் உண்மையான காந்தியை நெருங்கமுடியாதவர்களாக ஆகிவிடுகிறோம். உண்மையான காந்தியம் நம்முள் நுழையாமல் நம்முள் இருக்கும் போலி காந்திய வாக்ஸின் தடுக்கிறது.
காந்தியம் அதன் உண்மை வடிவில் கொதிக்கும் அமிலம் போன்றது. சமரசமில்லாமல் நீதிக்கும் உண்மைக்கும் விசுவாசமாக இருப்பது என்ற சவாலை அது நமக்கு அளிக்கிறது. இயற்கைச் சூழலைக் காக்க, மானுட சமத்துவத்துக்காக , அதிகார மையப்படுத்தலுக்கு எதிராக முழுமூச்சான போராட்டங்களைச்செய்ய அது நம்மிடம் அறைகூவுகிறது. அந்தப்போராட்டம் முழுமையாகவே அறப்போராட்டமாக இருந்தாகவேண்டும் என நம் ஆன்ம வல்லமைக்கு ஆணையிடுகிறது.
எளிய சவால் அல்ல இது. இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட உண்மையான காந்தியர்கள் நம்மிடையே இன்றும் வாழ்கிறார்கள். அவர்கள் அனைத்து நுகர்வு வெறியில் இருந்தும் ஆடம்பரங்களில் இருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டவர்கள். மகத்தான இலக்குகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். பாபா ஆம்தே வழ்ந்தார். சுந்தர்லால் பகுகுணா நம்மிடையே வாழ்கிறார். கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் வாழ்கிறார்கள். அண்ணா ஹசாரே வாழ்கிறார். அவர்கள் நிரந்தரமான களப்போராளிகள். காந்தியம் என்பது உபதேசம் அல்ல. ஓர் அழியாத அறைகூவல் அது.
காந்தியுடன் எப்போதுமே ஏசு ஒப்பிடப்படுகிறார். வரலாற்று ஏசு ஒரு பெரும்புரட்சிக்காரர். ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் உலகளாவிய அடிமைமுறைக்கு எதிராகக் கிளர்ந்த குரல் அவருடையது. அவரை சிலுவையில் ஏற்றியது ரோமாபுரி. ஆனால் சிலுவை என்பது வெறும் மரச்சாமான். ஏசு என்பவர் ஒரு கருத்து, ஒரு ஞானம். ஏசுவைக் கொல்ல சிலுவையால் முடியாது. ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கதை இந்த உண்மையைச் சுட்டிக்காட்டுவதாகவே நான் நினைக்கிறேன்.
ஆனால் மேலும் இருநூறாண்டு கழித்து ஏசு கொல்லப்பட்டார். ரோமாபுரி சக்கரவர்த்தி யேசுவை தன் இறைவனாக ஏற்றுக்கொண்டு கிறித்தவத்தை தன் அதிகார மதமாக அறிவித்தபோது. அவரது ஆணைப்படி ஏசுவின் சொற்கள் வெட்டித் தொகுக்கப்பட்டு பைபிள் உருவாக்கப்பட்டபோது. ஏசு அப்போதுதான் இறந்தார். அடிமைகளின் மீட்பன் ஆண்டான்களின் ஆண்டவனாக ஆனார். சிலுவையை ஏந்தியவர் சாட்டையை ஏந்தியவர்களின் அடையாளமானார்.
அதன் பின் ஏசு ஓர் ஆதிக்கக் குறியீடாக ஆனார். உலகளாவிய ஆதிக்கத்துக்கு அவரைப் பயன்படுத்தினார்கள். உலகமெங்கும் சென்று கொள்ளையிட்டு வந்த செல்வத்தால் அவருக்காகப் பேராலயங்களை எழுப்பினார்கள். ஆலயத்தில் இருந்து சுங்கக்காரர்களையும் பரிசேயர்களையும் சாட்டையாலடித்துத் துரத்திய தேவமைந்தனுக்கு அந்த சுங்கக்கரார்களும் பாவிகளும் பொற்கோபுரங்களைக் கட்டினார்கள்.
ஆனால் ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்தார் நண்பர்களே. அவரைக் கொல்ல ரோமாபுரியால் முடியவில்லை. அந்த அதிகார அடையாளங்களுக்குள் இருந்து ஆன்மஞானிகளால் ஏசு மீட்டு எடுக்கப்பட்டார். அவரது சொற்கள் வழியாக ஏசு மீண்டும் மீண்டும் உயிர்கொண்டு வந்தார். மார்ட்டின் லூதர் வழியாக. தல்ஸ்தோய் வழியாக. ஆல்ஃப்ரட் சுவைட்சர் வழியாக. நிகாஸ் கசந்த் சகீஸ் வழியாக. ஏசு பிறந்து வந்துகொண்டே இருக்கிறார். ரோமப்பேரரசின் கல்லடுக்குகளுக்குள் இருந்து ஏசு மீண்டு எழுந்தார்.
நண்பர்களே, இந்திய அரசின் அடையாளங்களில் இருந்து நாம் காந்தியை இன்னும் மீட்கவில்லை. நாம் அறியும் காந்தி ரூபாய் நோட்டில் சிரிக்கும் காந்தி. தேசப்பிதா. நாம் உண்மையில் அறியவேண்டிய காந்தி அணைக்கமுடியாத போர்நெருப்பாக எரியும் காந்தி. மனிதநீதிக்காக, சூழியல்காப்புக்காக, முழுமையான வாழ்க்கைக்காகப் போராடும் அர்ப்பணிப்புள்ள அகிம்சைப் போராளிகளை உருவாக்கிக்கொண்டே இருக்கும் காந்தி.
அந்த காந்தியை நாம் கண்டடைவோம். ஆதிக்கவாதிகளின் காந்தியை நம்முள் இருந்து உமிழ்வோம். அடிமைகளின், நோயுற்றவர்களின், கைவிடப்பட்டவர்களின் காந்தியை நம்முள் செலுத்திக்கொள்வோம். இந்த நாளில் அதற்காக உறுதிகொள்வோம்.
[2-10-2012 அன்று புதுக்கோட்டை காந்தி பேரவையில் ஆற்றிய உரை]