அன்புள்ள ஜெமோ அவர்களே.
ஒலி மற்றும் மவுனம் தொடர்பான நீங்களும் ராமும் பரிமாறிகொண்ட கடிதத்தை படித்தேன். உங்கள் கருத்துகள் நான் கொண்ட பல சாலரங்களைத் திறந்துவிட்டது.
எனக்கு காட்சிகளே எப்போதும் ஒலிகளாய் பதிந்துவிடும்.ஏனென்றால் எந்தக் காட்சியையும் என்னால் நிசப்தத்தில் பார்த்ததாக நினைவில் இல்லை.எல்லாக் காட்சியுமே சத்தத்துடன் தான் ஞாபகத்தில் வருகிறது.இதனாலேயே நான் பல வருடங்களுக்கு முன்னால் எழுதிய/படித்த வார்த்தைகள் காட்சியமைப்பாகவும்,சத்தத்தோடுமே எனக்கு பதிந்துவிடும். அந்த வார்த்தைகளை இப்போது படிக்கும்போது அதே காட்சியமைப்போ,ஒலியோ தோன்றவில்லையென்றால்,அந்த வார்த்தைகளோ/படமோ என்னைப் பொருத்தவரை தோற்ற கலையே. என்னுடைய,மற்றவர்களின் அனுபவத்தை இந்த தராசை வைத்தே எடை போடுகிறேன்.
முன்னமே உங்களிடம் சொன்னதுபோல விஷ்ணுபுரம் எனக்கு ஒரு ஆரஞ்சு நிற ஆறு ஓடும் பிம்பத்தையே காட்டுகிறது. ஒவ்வொருமுறை அந்த புத்தகத்தை பற்றி படிக்க/கேட்கும் போதும் இந்த நதியும்,அந்த கரையில் இருக்கும் விஷ்ணு கோயிலுமே தோன்றுகிறது.கூடவே ஞான சபையின் மணிஒலியும், பறவை பறந்து வரும் சத்தமும் என் காதில் கேட்கும்.அதே போல் யானை பிளிரும் சத்தமும் கேட்கும்.இப்படி தொடர்ச்சியான ஒலிகளினால் இந்த புத்தகம் என் ஞாபகத்தில் உறைந்துவிட்டது.
இது ஒன்றும் புதிதாக வந்ததாக எனக்குத் தோன்றவில்லை. எழுத்து உருவான காலத்திலேயே ஒலி தன் சக்தியை இழந்துவிட்டது.நாம் இன்று படிக்கும்,கேட்கும் செவ்வியல் புராணங்கள், கிரேக்க நாடகங்கள், நம் பக்தி இலக்கியத்தை தொகுத்தவர்கள் , வேத சத்தம்/சந்தங்கள் – இவற்றை தொகுத்தவர்கள் ஒலியின் மேல் கொண்டிருந்த நம்பிக்கை வியக்கவைக்கிறது. எந்த மொழியிலும் எழுத்து உருவானவுடன் ஒலியின் சக்தி பின்னடந்துவிட்டது; இதையே நாம் இசையிலும் பார்க்கமுடியும்.குறிப்பாக கிராமஃபோன் தென்னாட்டில் வந்தபோது நடந்த கூத்துக்கள் குறைவேயில்லை.மைசூர் மஹாராஜா தன் அரண்மனையில் நடக்கும் இசை நிகழ்சிகளை அரண்மனைக்கு வெளியே உள்ள மக்களுக்கும் ஒலிபரப்பியது, தென்னக வித்வான்களை , முக்கியமாக வேலுப்பிள்ளை அவர்களை இங்கிலாந்திலிருந்து புதிதாக வந்த ஒலிப்பதிவு கருவிகள்,கிராமஃபோன் கொண்டு பயமுறுத்தியது – இவை ஒலியினால் உலகம் மாறிய வெகு சில உதாரணங்கள்.ஒலியை நம் ஆதார உணர்வுகளிலிருந்து , வாசனையை போல நிராகரித்துவிட்டோம். ஒலியின் குறைபாடால் அல்ல,இதற்கான தேவை குறைவு என்பதால்.
குறியீடுகளையும்,அனுபவங்களையும் சேர்த்து சேர்த்து கலையை ரசிக்கும் ஒரு தராசை செய்கிறோம் – என்ற உங்கள் வாதத்துடன் முழுவதும் ஒத்துப்போகிறேன். இந்த இரண்டில் இன்று குறைந்தாலும், அகவயமான விமர்சனங்களே வந்து விழும்.இது சம்பந்தமாக நான் எழுதிய பதிவு –
“குழப்பமான பல மழை காலங்களுக்கு முன்னே எழுதிய இந்த வரிகள் இன்றைக்கு எந்தவிதமான சித்திரங்களையும் உருவாக்கவில்லை.மின்னல் போல மறையும் கவிதை கணங்களை உறைய வைக்க சரியான ஊடகம் எது? இசையால் மட்டுமே இக்கணங்களுக்கு சரியான representation உருவாக்க இயலுமென தோன்றுகிறது?“ கவிதை வரிகள் முக்கியமில்லை
.இதைப்போல பல கணங்களின் தொகுப்பே கலை – ஆனால் கலைக்கு representation நூறு சதவிகிதம் நம்மால் கொடுக்க இயலுமா? அது justifiedஆக இருக்குமா என்பதே கேள்வி.ஷுபர்ட்டின் (Schubert) 9வது ஒத்திசைவு (Symphony) தான் பின்நவீனத்துவம் ஆரம்பித்ததின் முதல் அறிவிப்பு என லியனார்ட் பெர்ன்ஸ்டீன் (Leanard Benstein) கூறுவது எந்த அளவிற்கு பின்நவீனத்துவ வெளிப்பாட்டோடு ஒத்துப்போகிறது?
– http://beyondwords.typepad.com (ஒருவிதத்தில் இந்த கட்டுரைக்கு சம்பந்தமான இணையத்தளம்தான்
அன்புள்ள கிரி
இந்தவகையான விஷயங்களை பெரும்பாலும் தனி அனுபவம் சார்ந்தே நாம் விவாதிக்கிறோம். நான் இதை இவ்வாறு புரிந்துகொள்கிறேன். நவீன உளவியல் மனிதர்களை காட்சிசார்ந்த நுண்ணுணர்வு கொண்டவர்கள் என்றும் கேள்வி சார்ந்த நுண்ணுணர்வு கொண்டவர்கள் என்றும் பிரிக்க்கும். நீங்கள் கேள்வி சார்ந்த நுண்ணுணர்வு கொண்டவர் எனலாம். அதில் உங்கள் அகம் படிகிறது
நம் மரபில் வைசேஷிகம் போன்ற தரப்புகள் என்ன சொல்கிறதென்றால் புலன்கள் உண்மையில் எட்டு. கண்,காது,மூக்கு,வாய்,தோல் தவிர மனம், புத்தி, அகங்காரம். ஆம் அவையும் புலன்களே. அவை அகப்புலன்கள். முதல் ஐந்தும் புறப்புலன்கள். புறப்புலன்களை அகப்புலன்கள் சந்தித்தால் மட்டுமே புறவுலகம் அர்த்தப்படுத்தப்படுகிறது. அதாவது அறிதல் நிகழ்கிறது. அறிதலையே நாம் அனுபவம் என்கிறோம்
முதல் ஐந்தையும் செயற்புலன்கள் [கர்ம இந்திரியங்கள்] என்றும் பிற மூன்றையும் அறிவுப்புலன்கள் [ஞான இந்திரியங்கள்] என்றும் சொல்கிறார்கள். செயற்புலன்கள் உலகை அறிவுப்புலன்களுக்கு அளிக்கின்றன. அறிவுப்புலன்களே அவற்றை அறிகின்றன. இவ்வாறுதான் நாம் புறத்தே இருந்து பெற்றுக்கொள்ளும் ஒன்று நம்முடைய சொந்த ஞானமாக ஆகிறது. அவ்வாறு நாம் பெற்று நமக்குள்ளே வைத்திருக்கும் ஒரு ஞானம் பின்னர் புற உலகத் தொடர்பு இல்லாமலேயே நமக்குள் இருக்கும்
ஆகவே நாம் புலன்கள் வழியாக அறிபவை என்பவை அனுபவங்கள் மட்டும் அல்ல. அவை நம் உணர்வின் அலகுகள். அறிவின் அலகுகள். நம் சுய உணர்ச்சியின் அலகுகள்.
இசை கேட்பது என்றால் என்ன? மனம், புத்தி, அகங்காரத்தால் ஒலித்துளிகளை அர்த்தப்படுத்திக்கொள்ளுதல். இன்னொருவர் காட்சிகளை அபப்டி அர்த்தப்படுத்திக்கொள்கிறார். இன்னொருவர் நறுமணங்களை அர்த்தப்படுத்திக்கொள்கிறார்.
எல்லா அறிதல்களும் அகத்தே மனம்,புத்தி,அகங்காரம் சார்ந்த அலகுகளாக ஆகி தொகுக்கப்பட்டிருக்கின்றன. அந்த அலகுகளை ஒன்றில் இருந்து இன்னொன்றாக மாற்றிக்கொள்வதுதான் பலசமயம் புலன்களின் வழியாக பெறப்படும் புற உலகின் உதவி இல்லமல் ஒருவர் அடையும் அக அனுபவமாக இருக்கிறது.
இவ்வாறு ஒருவர் ஓர் இசைஆரோகணத்தை பறந்தெழும் சிறகாக அல்லது பொங்கும் அலையாக ஆக்கிக்கொள்ளலாம். ஆரோகணம் அவரது புத்தி மனம் அகங்காரத்தில் ஓர் அனுபவ அலகாக, அறிதல் அலகாக இருக்கிறது. அதைப்போலவே பறவைச்சிறகும் கடல் அலையும் கிட்டத்தட்ட அதே அலகாக இருக்கலாம். அவர் இரண்டையும் இடம் மாற்றம் செய்துகொள்கிறார். இது திருப்பியும் நிகழலாம்.
இது தியானத்தில் அடிகக்டி நிகழ்வது. தியான மரபில் இதை விரிவாக விளக்கியிருக்கிறார்கள். நீங்கள் சிறு வயதிலேயே ஒலிக்கு உங்கள் அகத்தை அளிக்கப் பழகி விட்டிருக்கிறீர்கள். உங்கள் அகப்புலன்கள் இசையில் இருந்தே தங்கள் அதிகமான அலகுகளைப் பெற்றிருக்கின்றன. ஆகவே கிடைக்கும் எல்லா புலனறிதல்களையும் நீங்கள் இசை சார்ந்த அறிதலாக உள்ளூர மாற்றிக் கொள்கிறீர்கள்
உங்கள் கேள்வியின் இரண்டாவது பகுதியை இதன் நீட்சியாகவே நான் காண்கிறேன். வெளியே இருக்கும் புறவுலகை புறப்புலன்கள் மூலம் நாம் தீண்டினாலும் அகப்புலன்களே அதை அறிகின்றன. புறப்புலன்கள் அறியாதபோதும் அகப்புலன் அறிந்துகொண்டே இருக்கிறது. கண்கள் மூடியிருந்தாலும் கனவுமூலம் காட்சிகள் நமக்கு தெரியத்தான் செய்கின்றன. வெளியே மௌனம் இருந்தாலும் புத்திமனமகங்காரம் ஒலியை அதில் கேட்க முடியும். அதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள். ‘மௌனம்கூட கேட்கத்தான் படுகிறது’.
வெளியே புறப்பிரபஞ்சம் இருக்கிறது. அதை நாம் அகப்புலன்களால் உணர்ந்துகொண்டே இருக்கிறோம். நாம் அதை உணராத போது மட்டுமே அது நமக்கு இலலமல் ஆகும். நாம் இல்லாத நிலையில் மட்டுமே அது சாத்தியமாகும். ஆக, காதை உள்ளிருந்து உணரும் புலன்கள் இருக்கும் வரை வெளியே காது கேட்டாலும் கேட்காவிட்டாலும் நமக்குள் ஒலி இருக்கும்.
ஒருவேளை பிறவிச்செவிடாக இருந்தால், அகப்புலன்கள் ஒருமுறைகூட ஒலியை உணரவில்லை என்றால், ஒலியின்மை சாத்தியமாகக் கூடும்.
இதுதான் ஒர் முதல்கட்ட விளக்கம். இதில் இருந்து மிகவிரிவான விளக்கங்களுக்கு நியாயவைசேஷிகர்கள் செல்லக்கூடும்
ஜெ