காலையில் எழுந்தபோது முந்தையநாள் ஒருசெக்கச்சிவந்த புன்னகைக்குள் தூங்கி எழுந்ததுபோல உணர்ந்தேன். விளக்கமுடியாத கனவுகள் வழியாகச் சென்ற தூக்கம். கூரைக்கூடாரத்துணி மேல் பொழிந்துகொண்டே இருந்த மணல் கனவுகளுக்குள் புகுந்தது. முன் தினம் மணலில் அலைந்தது முழுக்க இப்போது கனவுகளுடன் கலந்து நிகழ்ந்ததா என்றறிய முடியாதபடி ஆகிவிட்டிருந்தது.
காலையில் மீண்டும் புல்வெளியைப்பார்த்தபடி மிதந்து வந்தோம். காலைப்பனியை மேய்ந்து கொண்டிருந்த மான்கள் எம்பி காற்றில் மிதந்திறங்கின. சில நெருப்புக்கோழிகள் ஆச்சரியமே இல்லாமல் திரும்பிப்பார்த்தன. நெருப்புக்கோழியின் தகவமைவு ஆச்சரியப்படுத்துவது. அது பாலைவனத்தின் உயரமில்லாத புதர்மரம் மாதிரியே இருக்கும். சிலநிமிடங்களுக்குப்பின்னர்தான் அதை அடையாளம் காணவே முடியும்
வழியில் நமீபியாவின் ஒரு சுவாரசியமான புதிர்நிலத்தைக் கண்டோம். இவை ஃபெயரி சர்க்கிள்கள் என்று அழைக்கப்படுகின்றன. விரிந்த புல்வெளியில் கனகச்சிதமான வட்டங்கள் உருவாகின்றன, மறைகின்றன. இந்த வட்டங்களுக்குள் எந்தத் தாவரமும் முளைப்பதில்லை. இது ஏன் என்று ஆராய்ந்துள்ளார்கள். இந்தவட்டங்கள் விண்வெளி மர்மங்களுடன் தொடர்புள்ளவை என்ற ஊகங்கள் நிறைய உள்ளன.
இந்தவட்டங்களைப் பற்றி ஆராயும் அறிவியலாளர்களின் நிரந்தரக் கட்டிடங்கள் அப்பகுதியில் உள்ளன. வட்டங்களுக்கு உள்ளே உள்ள மண்ணுக்கும் வெளியே உள்ள மண்ணுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. வட்டத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரேசெடியை நட்டு ஒரே நீர் ஊற்றினால் உள்ளே உள்ள செடி பட்டுப்போகிறது
இந்தப்புல்வெளியின் ஏதோ சூழியல் தகவமைவு இது என்ற அளவில்தான் இன்றும் விளக்கம் உள்ளது. இறங்கி அந்த வட்டங்களைப் பார்த்தோம் காலால் தொட்டுப்பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. உண்மையிலேயே ஏதாவது விண்வெளி மர்மம் இருந்து நான் காலத்துளை வழியாக மறுபக்கம் போய்விட்டால் என்னசெய்வது? அருண்மொழி இந்தப்பக்கம் இருப்பாளே.
அந்தவட்டங்கள் எந்தத் தனித்தன்மையும் இல்லாதவை. செயற்கையாக உருவாக்கப்பட்ட பாத்திகள் போலத்தான் தோன்றின. மான்கள் அந்த வட்டத்தைத் தாண்டிச்செல்லாது என்றார் டேவிட். வரலாற்றுக்காலத்துக்கு முன்னரே பழங்குடிகள் அதைக் கண்டறிந்து அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.
வழியில் சாலைத்தொழிலாளர் சிலர் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். டேவிட் வண்டியை நிறுத்தி அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வேகம் எடுத்தார். ஓர் இடத்தில் சாலையோரமாக ஓர் உடும்பைப் பார்த்தோம். பல்லியா முதலையா உடும்பா என்று தெரியாத பிராணி. நான்கடி நீளமிருக்கும். நாங்கள் இறங்கி அருகே சென்றதும் மண்ணெண்ணைக்காற்று ஸ்டவ் போல ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஹ்ஹ்ஹ் என்று சீறியது. வாலால் அடித்தது. அது கடிக்காது, ஆனால் வாலால் அடித்தால் காயம் வரும். காயம் சீக்கிரம் ஆறாது என்றார் டேவிட்.
‘நல்ல இறைச்சி. ஆனால் இப்போது இதை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது’ என்றார். நமீபியாவில் ஆரிக்ஸ், நெருப்புக்கோழி, கோல்டன்பக் மூன்றையும் வேட்டையாட அனுமதி உண்டு. வேட்டையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும். அதற்கான காரணம் இங்கே அவற்றைக் கொன்று தின்னும் ஊனுண்ணிகள் அருகிவிட்டன என்பதே. இங்கே உள்ள முக்கியமான ஊனுண்ணியான சிவிங்கிப்புலி நீர் உள்ள மலை மடிப்புகளில் மட்டும் வாழும். புல்வெளிக்கு மிகப்பெரும்பாலும் வருவதில்லை.
வழியில் ஒரு பெண்ணும் ஆணும் வண்டிக்காகக் கை காட்டினார்கள். ‘டேவிட் நீங்கள் விரும்பினால் ஏற்றிக்கொள்ளலாம்’ என்றார். கண்டிப்பாக என்றோம். அவர் முதலில் கைகாட்டிய பெண்ணை ஏற்றிக்கொண்டார். 25 வயதான லூசி ஒரு மருத்துவப்பணியாளர். எட்டுமாதம் பயிற்சிபெற்றபின் காசநோய், தொழுநோய், எய்ட்ஸ் ஆகியவற்றுக்கான அடிப்படைச் சிகிழ்ச்சைகளை ஊர் ஊராகச் சென்று செய்பவள். அவள்சென்ற கிராமம் அச்சாலையில் இருந்து இருபது கிமீ தூரத்தில் இருக்கிறது. அவள் ரெஹபோத் நகருக்குத் திரும்பிச்செல்லவேண்டும்.
‘பேருந்து வசதி உண்டா?’ என்றோம். நமீபியாவில் பொதுப் பேருந்துகள் இல்லை. பாலைவனத்தில் வணிக அடிப்படையில் அது சாத்தியமும் இல்லை. அதிகபட்சம் ஓரிரு பயணிகள்தான். அப்படியென்றால் எப்படி போக்குவரத்து நிகழ்கிறது? சாலையோரத்திற்கு வந்து நின்று ‘லிஃப்ட்’ கேட்பதுதான் ஒரே வழி. ஆனால் பெரும்பாலும் எவராவது ஏற்றிக்கொள்வார்கள். சரக்குவண்டிகள், சுற்றுலா வண்டிகள் சென்றுகொண்டுதான் இருக்கும். சிலர் பணம் வாங்குவார்கள். பெரும்பாலும் இலவசம். அப்படி ஏற்றிக்கொண்டாகவேண்டும் என்பது ஒரு எழுதப்படா விதி.
’வண்டி கிடைக்காவிட்டால்?’ என்றேன். ‘திரும்பச் செல்லவேண்டியதுதான்.சிலசமயம் அப்படி ஆகும்’ என்றாள் அவள். இரவுவரை பார்த்துவிட்டு அந்தக் கிராமத்துக்கே செல்வாள். நடந்தா? நடக்கலாம், சிலசமயம் கழுதைவண்டிகள் வரும். தனியாக அப்படி பாலைநிலத்தில் நிற்பது பயமாக இருக்காதா? ’என்ன பயம்? இங்கே நம்மைத்தாக்கும் விலங்குகள் இல்லை’ என்றாள். எப்படி மேலே சொல்வதென்று தெரியவில்லை.
‘திருமணமாயிற்றா?’ என்றேன். ஆப்பிரிக்காவில் அதெல்லாம் தாரளமாகக் கேட்கலாம் என்றார் டேவிட். தனிப்பட்ட விசாரிப்புகளை அங்கே கௌரவமாகவே கருதுவார்கள், வெள்ளையர்களைப் போல அத்துமீறலாக நினைக்க மாட்டார்கள். ‘இல்லை’ என்றாள். ‘ஏன்?’ என்றேன். ‘ஆண்கள் பொய்யர்கள்’ நான் புன்னகை செய்தேன்.டேவிட் ‘உனக்கு எத்தனை குழந்தைகள்?’ என்றார். ‘ஒன்றுதான். அம்மாவுடன் இருக்கிறது. நான் திரும்பிச்செல்ல அதுதான் காரணம்’ என்றாள்.
கடந்த சில ஆண்டுகளாக நமீபிய அரசு பொதுச்சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. டாக்டர்களுக்குப் பதிலாக ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவியாளர்களை உருவாக்கி உள்கிராமங்களுக்கு அனுப்பி சிகிழ்ச்சை அளிக்கிறார்கள். மருந்துகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. அங்கே காசநோய் வலுவாகத் திரும்பவந்துள்ளது. எய்ட்ஸ் பரவலாக உள்ளது.
ரெஹபோத் நகரில் அவளை இறக்கி விட்டோம். அங்கே மாதவன்குட்டிஅமெரிக்க டாலரை நமீபியடாலராக மாற்ற ஒரு வங்கிக்குப் போனார். பாதுகாப்பு ஏற்பாடு இல்லாத வங்கியில் இரண்டே கவுண்டர்கள். நாலைந்து வாடிக்கையாளர்கள். பிரம்மாண்டமான ஒரு பெண் கையில்லாத டிஷர்ட் -ஷார்ட்ஸ் அணிந்து வந்து என்னருகே நின்றாள். அந்த அளவுகளில் ஒரு பெண்ணை நான் கண்டதே இல்லை. மாநிறம். என்னிடம் ‘; ஹாய்…ஐ யம் எ செக்ஷுவல் வர்க்கர்…ஆர் யூ இண்ட்ரெஸ்டட்? ஐ ஹேவ் எ நைஸ் பிளேஸ்’ என்றாள். ‘நான் சாரி மேடம்…ஐ அம் பிஸி ’ என்றேன். ‘நைஸ்…ஹேவ் எ பிளெசெண்ட் ஜெர்னி’ என்றாள்
மாதவன்குட்டி வந்து அங்கே அன்னியச்செலவாணி வாங்குவதில்லை, பக்கத்து வங்கிக்குச் செல்லவேண்டும் என்றார். நான் அந்தப்பெண்ணிடம் அந்த வங்கியைக் கேட்டேன். அவளே வந்து சுட்டிக்காட்டி விரிவாக நடைமுறையையும் விளக்கினாள். வங்கியில் ஒருத்தியைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவளுடைய தோரணையும் பேச்சும் அவள் அன்னிய வாடிக்கையாளர்களை நம்பியிருப்பவள் என்று காட்டியது. அதற்குச் சரியான இடம் வங்கிதான்
நாங்கள் மீண்டும் விண்ட்ஹோக் வந்து சேர மதியமாகிவிட்டது. அதே ஓட்டல். அதே அறை. ‘பாலைவனம் பிடித்திருந்ததா?’ என்றார் காவலர். ‘ஆமாம்…அற்புதம்’ என்றேன். ‘நீங்கள் மலேசியா தானே? உங்கள் நாடு பசுமையாக இருக்கும் இல்லையா?’ என்று ஆர்வத்துடன் கேட்டார். நான் சிரித்தேன்.
மதியம் சாப்பிட்டேன். நமீபியாவின் ஸ்டீக்குக்கு நான் அடிமையாகிவந்தேன். அது நெருப்புக்கோழி ஸ்டீக். கோழிமாதிரித்தான் இருந்தது. மதியம் தாண்டியதும் டேவிட் வந்தார். எங்களை விண்ட்ஹோக் நகரைப் பார்க்கக் கூட்டிசென்றார். நகரின் அதிகம் பிரபலமல்லாத இடங்களைப் பார்க்கவேண்டும் என்றோம்.
டேவிட் எங்களை நகரின் சேரிப்பகுதிக்குக் கொண்டுசென்றார். வீடுகள் எல்லாமே தகரத்தாலான கூரையும் சுவர்களும் கொண்டவை. வறுமை நிறைந்த சேரிதான். ஆனால் மும்பை அல்லது சென்னை போலப் பரிதாபகரமான சேரி இல்லை. இங்குள்ளதுபோல கொடூரமான வாழ்க்கை நிலை இருப்பதாகவும் தெரியவில்லை. முக்கியமான விஷயம் சேரி சுத்தமாக இருந்தது என்பதே. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு கரிய பாலிதீன் பையில் குப்பை போட்டார்கள்.
‘அரசு இதை சுத்தம்செய்யுமா?’ என்றேன். ‘இல்லை. இவர்களே இதை குப்பை எரிக்கும் இடத்துக்கு மொத்தமாகக் கொண்டு சென்று கொடுப்பார்கள். ஆளுக்கு ஐந்து நமீபியன் டாலர் இதற்கு செலவாகும். தாங்கள் வாழுமிடம் குப்பையாக இருப்பதை இவர்கள் விரும்பமாட்டார்கள்’ என்றார் டேவிட். குப்பையை எரித்து மின்சாரம் எடுக்கும் ஆலை ஒன்று நகருக்கு வெளியே இருந்தது.
அங்கே உள்ள பிரச்சினைகளில் முக்கியமானது குடிநீர்தான். அதை விலைகொடுத்து வாங்கியாகவேண்டும். குடிநீர் அரசுக் குழாய்களில் கிடைக்கும் . தானியங்கி முறை. நாணயத்தைப்போட்டால் ஐந்து நிமிடம் நீர் கொட்டும். அதைக் குடங்களில் பிடித்துச்செல்கிறார்கள். மிகச்சிக்கனமாகவே நீரை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நீர் எப்போதும் கிடைக்கும்.
சாலைகளில் குழந்தைகள் குதியாட்டம் போட்டன. அவை மாதவன்குட்டியின் மீசையை மிக விரும்பின. ‘மேன் யூ ஹேவ் ஃபன்னி திங் தேர்’ என்றது ஒரு குண்டுக் குழந்தை. மற்ற குழந்தைகள் வாய்பொத்திச் சிரித்தன. ‘நாட் மேன்…அங்கிள் அங்கிள்’ என்றார் மாதவன்குட்டி. அவர்கள் மீசையைப் பார்த்ததில்லை. அங்கே உள்ளவர்களுக்கு மீசை முளைப்பதில்லை. முடி நுரைபோலத்தான் இருக்கும்.
சேரியில் பதினைந்து வயதான ஒரு பெண்ணின் இடுப்பில் குழந்தையைப் பார்த்தோம். ‘தம்பியா?’ என்றேன். சிரித்தாள். டேவிட் அது அவளுடைய குழந்தை என்றார். அது அங்கே சாதாரணம். சிறுவர்கள் மதுக்கடையில் நுழைந்து குடிப்பதைக் கண்டோம். அதுவும் அங்கே சாதாரணம். ‘மது இங்கே பெருகி விட்டது. பெண்கள் நிறையக் குடிக்கிறார்கள். அதுதான் எங்கள் சமூகப்பிரச்சினை’ என்றார் டேவிட்
டேவிட் வேலை கிடைக்கும்வரை அங்கேதான் வாழ்ந்தாராம். கோடைகாலத்தில் கடுமையாக சுடும் என்றார். அவரது அத்தை வீடு அங்கே இருந்தது. அத்தையும் தோழிகளும் வாசலில் அமர்ந்து ‘பாடுபேசி’க்கொண்டிருந்தார்கள். டேவிட்டைக் கண்டதும் உற்சாகமான ஆரவார உபசரிப்பு. அத்தைபெண்ணை டேவிட் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டார். அவருக்கு அவள் சகோதரி முறை. டேவிட்டின் நிறைய உறவினர் அங்கே இருந்தனர். பெரும்பாலானவர்கள் செக்யூரிட்டி வேலைபார்ப்பவர்கள். உடல் உழைப்பாளிகள்.
குழந்தைகள் அழகிய கண்களுடன் கருமுத்துக்கள் போலிருந்தன. அவற்றைத் தொட்டுத் தூக்கலாமா என்று கேட்டேன். தாரளமாக என்றார். நான் ஒரு குண்டுப்பையனைத் தூக்கிக் கொஞ்சினேன். அவன் அக்கா வெட்கம் தாளாமல் ஓடிவிட்டாள். பையனுக்குப் பரிசாக நான் பத்துடாலர் கொடுத்தேன். டேவிட் அவன் அம்மாவிடம் நான் குழந்தையை ஆசீர்வாதம்செய்கிறேன் என்று சொன்னார். அந்த அம்மையார் முகம் மலர்ந்து ‘அவன் நல்ல பையன்…நாங்கள் கத்தோலிக்கர்கள்’ என்று சொன்னார். பையன் பெயர் சேவியர்.
உலகின் எந்த நாட்டிலும் நான் குழந்தைகளைத் தொட்டதில்லை. பொதுவாக எங்கும் குழந்தைகளைக் கொஞ்ச நான் விரும்புவேன். ஆனால் வெள்ளையர் அதை விரும்புவதில்லை என்று தெரியும். நான் ஒரு வெள்ளைக்காரக் குழந்தையைத் தொட்டதே கிடையாது. புன்னகை மட்டும் செய்வேன். கொஞ்சம் அதிகமாகப் பேசினால்கூட அதன் பெற்றோர் ஜாக்கிரதையாக ஆகிவிடுவதைக் கண்டிருக்கிறேன். அக்குழந்தைகளும் அன்னியர் பற்றிய பயம் கொண்டவை.
நகரின் புகழ்பெற்ற மதுக்கடைப்பகுதிக்குச் சென்றோம். வின்ட்ஹோக் நகரின் இன்னொரு முகம் இது. தெரு முழுக்க மதுக்கடைகள். அங்கே அந்த பின்மதியத்திலும் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் குடித்துக்கொண்டிருந்தார்கள். சாலைகளில் பாடலுக்கு நடனமாடினார்கள். எங்கும் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ‘இன்றைக்கு விடுமுறையா?’ என்றேன்.’ விடுமுறை என்றால் நாம் இப்படி காரில்செல்லவே முடியாது’ என்றார் டேவிட்
அருகே இருந்த ஒரு சந்தைக்குச் சென்றோம். வடசேரி கனகமூலம் சந்தை போலவே இருந்தது. ஆனால் குப்பைகளும் சாக்கடையும் இல்லாமல் சுத்தமாக இருந்தது. மக்காச்சோள மாவுதான் அவர்களின் முக்கியமான தானியம். பலவகையான கருவாடுகள். உலர்ந்த இறைச்சி, உலரவைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் உலர்ந்த பழங்கள். பெண்கள் சாவகாசமாக சாமான்களை வாங்கிக்கொண்டிருந்தார்கள்.
அங்கேயே கையேந்திபவன்கள். மக்காச்சோளக் களிக்கு மாட்டிறைச்சிக் கறி. களியை உருட்டிக் கறியில் போட்டு எடுத்து சாப்பிடவேண்டியதுதான். பெங்களூரில் கேப்பைக்களி சாப்பிடுவார்கள் அதைப்போல. ஓர் இடத்தில் மாட்டிறைச்சியைத் தீயில் சுட்டு விற்றார்கள். சாம்பிள் கேட்டால் சும்மா ஒரு துண்டு கொடுத்தார்கள். நான் ஒரு துண்டு சாப்பிட்டேன். காரம் தூக்கியடித்தது.
மீண்டும் அந்த சாராயச்சாலைக்கு வந்தபோது இருட்டாக ஆரம்பித்திருந்தது. சாலைகளில் விதவிதமான கார்கள் நின்றன. கார்களில் இருந்து பாடல்கள் ஒலித்தன. குட்டை ஆடை அணிந்த பெண்கள் நடமாடினார்கள். ’இரவெல்லாம் குடிப்பார்கள். நேராகப் போய்ப் படுத்துத் தூங்கி எழுந்து மீண்டும் குடிப்பார்கள். கடைசிப்பைசாவையும் குடிப்பது வரை நிம்மதியே இருக்காது’ என்றார் டேவிட்
நமீபியாவில் இருசக்கர வாகனங்கள் அனேகமாக இல்லை. கார்கள்தான் அதிகம். நகரத்தில் பேருந்து உண்டு. ரயில் தொலைதூர நகரங்களுக்கு. ரயில் இங்கே மிகமிக மலிவு என்றார் டேவிட். இருசக்கர வாகனங்கள் ஏன் இல்லை என்று யோசிக்கவேண்டும். அது அங்குள்ள காலநிலைக்குப் பொருந்துவதில்லை என்று தோன்றவில்லை. நம்மூர் வெயில்தான் அங்கும். யாரும் வாங்க ஆரம்பிக்கவில்லை, அவ்வளவுதான் என்று தோன்றியது. அங்கு காரே அதிக விலையில்லை. சாலையில் ஓடும் பெரும்பாலான கார்கள் ஐரோப்பாவில் இருந்து பழையவிலைக்குப் பெறப்பட்டவை.
இரவு குளிர ஆரம்பித்ததும் டேவிட் எங்களைத் திரும்ப எங்கள் விடுதிக்குக் கொண்டுவந்து சேர்த்தார். காவலர் சிரித்தபடி ‘எங்கே சென்றிருந்தீர்கள்?’ என்றார். மதுக்கடைச்சாலைக்கு என்றேன். ‘ஓ நோ…’ என்று சிரித்துத் தலையாட்டினார். ‘ஏன் ?’ என்றேன். ‘உங்கள் கண்ணைப்பார்த்தாலே தெரியும் நீங்கள் குடிப்பதில்லை. நீங்கள் ஒரு புத்திஸ்ட்’ என்றார்
[மேலும்]