கருநிலம் – 5 [நமீபியப் பயணம்]

செம்மணல்மலைகள் ஒவ்வொன்றுக்கும் எண்ணிடப்பட்டுள்ளது என்றார் டேவிட். நாற்பத்தைந்தாவது மணல்மலை உயரமானது, சாலையருகே இருப்பது. அதை வரும்போது பார்ப்போம். இப்போது சௌஸஸ்வெலி போவோம் என்றார். மணல்மலைகளின் ஊடாகச் சென்று ஒரு மையத்தை அடைந்தோம். அங்கேதான் நாம் சென்ற வாகனங்களை நிறுத்திவிட்டுப் பாலைவன வண்டிகளில் ஏறவேண்டும். அகலமான சக்கரங்களும் நான்குசக்கரங்களிலும் இயந்திர இணைப்பும் கொண்ட பெரிய வண்டிகள் அவை. நிஸான் வண்டிகளே அதிகமும் நமீபியாவில் தென்பட்டன.

வண்டிநிறுத்துமிடமும் சூழலும் எல்லாமே நம்பமுடியாத அளவுக்குச் சுத்தமானவை. இந்தியாவில் எந்த ஒரு சுற்றுலாமையத்திலும் அப்படி ஒரு சுத்தத்தை நினைத்துப்பார்க்கமுடியாது. எந்த ஒரு சிறு குப்பையையும் குப்பைத்தொட்டியில் மட்டுமே போடவேண்டும் என்பதில் அங்கே கவனமாக இருக்கிறார்கள். ‘பாலைவனம் எங்களுடைய தேசிய சொத்து..’ என்றார் டேவிட். ‘எங்கள் பிழைப்பே இதுதான்’ ஆம், ஆனால் கன்னியாகுமரியில் அந்தக் கடற்கரையை வைத்துத்தான் ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. அந்த ஆயிரம் குடும்பங்களும் அந்தக்கடற்கரையில்தான் அத்தனை குப்பைகளையும் கொட்டி மலம் கழிக்கிறார்கள்.

வண்டிகளில் மணல்வெளிக்குள் நுழைந்தோம். பெரிய வெப்பம் இல்லை. மணல் தீபோல எரியும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நீங்கள் மேலே செல்லலாம் என்று சொன்னபோது நான் தயங்கியபடி இறங்கினேன். ஆனால் மணல் ஜில்லென்றிருந்தது. அங்கே மணல் சற்று அழுத்ததுடன் இருந்தது. ‘இன்னொருவர் ஏறிச்சென்றதன் மேல் ஏறினால் எளிதில் செல்லலாம். இல்லையேல் ஆற்றல் வீணாகும்’ என்றார் டேவிட்

மணல்மேல் ஏற ஆரம்பித்தேன். பனிமேல் ஏறும் அதே அனுபவம். நுரையீரல் எவ்வளவு முக்கியமான உறுப்பு என்று தெரியவரும். மொத்த உடலும் நுரையீரல் மேல் ஏறி கனக்கும். வாயால் மூக்கால் கண்ணால் காதால் எல்லாம் மூச்சுவிட்டபடி ஏறினேன். என்னைவிட வெள்ளைக்காரப்பெண்கள் வேகமாக ஏறினார்கள். தொடர்ந்த உடற்பயிற்சி செய்பவர்கள்.

மணல்வெளியின் ஒவ்வொரு குன்றும் ஒவ்வொரு நிறம். ஒரேநிறம்தான், தூரம் அவற்றை நிறம் மாற்றுகிறது என்றார் டேவிட். பொடிமணல். கையில் அள்ளினால் விரலிடுக்கு வழியாக மொத்த மணலும் உதிர்ந்து செல்லும். மணல்மேட்டின் விளிம்பு கத்தி போலக் கூரியது. ஆனால் அருகே சென்றபோது தெரிந்தது அந்த விளிம்புகூட அலையலையாகத்தான் இருந்தது. கதிர் அரிவாள்கருக்கு போல. காற்றின் செதுக்கல் அது. மணல்மேட்டின் நுனி புடவைத்தலைப்பு போலப் பறந்துகொண்டிருந்தது. கனல்மேல் புகைபோல மென்மணல் வீசியது.

மணலின் செங்குத்தான சரிவைக்கண்டால் குலை பதறும். ஆனால் விழவே மாட்டீர்கள் என்று டேவிட் சொல்லி குதித்துக்காட்டினார். மணல் வாங்கிப் புதைத்துக்கொண்டது. எங்கே எப்படிக் குதித்தாலும் விழமாட்டோம். ஆனால் நான்குபனை உயரத்தில் நின்றுகொண்டிருக்கவும்செய்வோம். மணல் உச்சிவிளிம்பில் அமர்ந்துகொண்டேன். என் மேல் மென் தூறலாக செம்மணல் கொட்டிக்கொண்டிருந்தது

சிலர் மணலில் சறுக்க ஆரம்பித்தனர். ‘நீங்கள் தாராளமாகச் சறுக்கலாம்…’ என்றார் டேவிட். காற்றால் அள்ளிக் குவிக்கப்பட்ட மணலில் கல்லோ முள்ளோ எதுவும் இருக்காது. இந்திய யூத்துக்கள் அதிகம் வராத காரணத்தால் புட்டிகள் உடைந்து கிடக்க வாய்ப்பில்லை. நான் மணலில் பாய்ந்து குப்புறச்சரிந்தேன். என்னை மணல் கீழே கொண்டு சென்றது. திரும்பிப்பார்த்தால் பிரம்மாண்டமான ஒரு நாக்கில் அமர்ந்து நான் இறங்குவதாகத் தோன்றியது.

மணலில் சிறிய துளைகளில் வசிக்கும் வண்டுகள் எழுந்து பறக்க துளைகளுக்குள் மணல் புகுந்து கடல் அலை பின்வாங்கிய மணல்போல கொப்பளிப்புகள் எழுந்தன. மணல்சரிவு ஒரு பெரும் செந்தாமரை இதழ் போலத் தேங்கியது. நான் கீழே வந்த சில நிமிடங்களில் காற்று என் தடத்தை அழித்தது.

தலையணைமெத்தைகளில் கும்மாளமிடும் குழந்தைகள் போல மணலில் அளைந்தோம். திளைத்தோம். உருண்டு கீழே வந்தோம். மீண்டும் மேலே சென்றோம். திரவமாக மாற எண்ணிப் பாதியில் தயங்கிவிட்ட மண் போல இருந்தது அது. மணலின் கடல். மணலில் அலைகள். மணலின் நுரை. மணலின் சுழிகள். மணல் ஒரு மகத்தான ரகசியம். கோபோ ஆப்ன் நாவலான வுமன் ஆன் டியூன்ஸின் தொடக்கத்தில் மணலைப்பற்றிய ஒரு வர்ணனை வரும். மணல் சமமான அளவுள்ள துகள்களால் ஆனது. அந்த கனகச்சிதமே அதன் எல்லா இயல்புகளையும் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு மணலும் தன்னந்தனியாகவே இருக்கிறது. தனியாகவே நகர்கிறது. மணல் ஒருபோதும் நிலைகொள்வதில்லை.

கீழே இருந்த களிமண் பரப்பு மேலிருந்து பார்க்க சிறிதாக இருந்தது, ஆனால் அது ஒரு பெரிய ஏரியின் அடித்தளம். அங்கே பட்டு நின்ற மரங்கள் நான்காயிரம் வருடப் பழைமை கொண்டவை. மொத்தத் தமிழ்ப்பண்பாட்டையும் விடத்  தொன்மையானவை. பலநூறடி ஆழத்தில் வேரோடியமையால் அவை விழவே முடியாது. அவை வைரம் மட்டுமேயான மரங்கள். இன்னும் பல்லாயிரம் வருடம் அவை அப்படியே நின்றிருக்கக் கூடும். அவற்றைத் தொட்டபோது மரம்போலவே இல்லை. உலோகத்தாலானவை போலிருந்தன.

அந்தக் களிமண்பாறைநிலத்தில் ஒளி கண்ணைக்கூசச்செய்தது. சுற்றிலும் இருந்த செம்மைக்கு மாறாக ஒரு வெளிறல். கைவிடப்பட்ட ஒரு கைக்குட்டை போல. களிமண் என்று கண்ணுக்கும் பாறை என்று காலுக்கும் சொல்லி மாயம்காட்டியது நிலம்.

மதியம் சாப்பிட சாண்ட்விச்சும் குளிர்பானமும் கொண்டுவந்திருந்தோம். பீஃப் சாண்ட்விச் இப்பகுதியின் சுவையான உணவு. அவற்றைச் சாப்பிட்டபோதுதான் எவ்வளவு பசிக்கிறது என்ற உணர்வே எழுந்தது. நல்ல வெயில். மரநிழலில் நின்றாலும் சூடு தகித்தது. ஆனால் வியர்வை எழவில்லை. காற்றில் ஈரப்பதம் என்பது அனேகமாக முற்றிலும் கிடையாது. மணலில் நின்றபோது மணலில் உள்ள குளிர் வெப்பத்தை மறைத்தது என்று தெரிந்தது. ஒரு அடிக்கு மேல் ஆழத்தில் மணல் ஜில்லிட்டுக் கிடந்தது. பல அடி ஆழத்தில் கை பொறுக்காத குளிர் இருக்கும் என்றார்கள். வெயில் எரியும் அந்த செம்மணல் மலைகள் உண்மையில் குளிர்ந்து இறுகிய மௌனங்கள். நூற்றாண்டுகளின் யுகங்களின் குளிர் அது.

மீண்டும் செம்மணல் விளையாட்டு. விளையாடும்போது மட்டுமே மனிதன் இயற்கையாக இருக்கிறான் என்று எமர்சன் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சிக்காக மட்டுமே செய்யப்படும் ஒன்றிலேயே மானுடமுழுமை நிகழமுடியும். ஆம், லீலை என்று நாம் அதைச் சொல்கிறோம். இந்த மணல்மேடுகள் பிரம்மலீலைகள். அது விளையாடியவை. நமக்கு விளையாட அளித்தவை

மாலையில் திரும்பி வந்தோம். சௌஸஸ்விலி அருகிலேயே ஒரு புதியவிடுதி. செஷ்ரீம் விடுதி. புல்கூரை போட்ட மதுபானவிடுதி. கூடாரக்கூரைபோட்ட அழகிய அறைகள். அங்கே பெட்டிகளைப் போட்டோம். முகம் துடைக்க குளிரவைக்கப்பட்ட துவாலைகள் தந்தனர். ‘அழுத்தித் துடைக்காதீர்கள். ஒற்றி எடுங்கள்’ என்றார் டேவிட். மணலை ஒற்றி எடுத்தோம். ஆச்சரியம் வெள்ளைத்துவாலையில் சற்றும் அழுக்கு இல்லை. கழுத்து தோள் எனப் பல இடங்களைத் துடைத்தோம். துவாலை வெண்ணிறமாகவே இருந்தது

‘பாலைவனத்தில் அழுக்கு கிடையாது. இங்கே குளிக்கவேண்டிய தேவையில்லை. மணலைத் தட்டிவிட்டுக்கொண்டால்போதும். உடைகளும் ஆறுமாதம் வரை அழுக்காகாமல் இருக்கும்’ என்றார் டேவிட் சிரித்தபடி. டெஸ்மண்ட் பேக்லியின் பாலைவன நாவல்கள் எனக்குப்பிடிக்கும். ஃப்ளை அவே என்ற நாவலில் ஒரு வெள்ளைக்காரர் சகாராவுக்கு வந்தவர் அங்கேயே தங்கிவிடுவார். அதற்கு அவர் சொல்லும் காரணம், பாலைவனத்தில் அழுக்கு இல்லை என்பதுதான். உடலில் படியும் அழுக்கு உள்ளேயும் படியக்கூடியது என்பார். அதை நினைத்துக்கொண்டேன்

மாலையில் மீண்டும் கிளம்பி மணல்குன்றுகளுக்குள் சென்றோம். இந்தமணல்குன்றுகள் சௌஸஸ்விலி தேசியப்பூங்கா என அறிவிக்கப்பட்டவை. அங்கே கறாரான பாதுகாப்பு விதிகள் உண்டு. நாற்பத்தைந்தாம் மணல்மலைக்குச் சென்று மேலே ஏறினேன். இப்போது ஏறுவதன் சூட்சுமம் பிடிகிடைத்தது. மணல்சரிவின் நுனிமீது நடக்கவேண்டும். கால்களை அரக்கி அரக்கி வைக்கக் கூடாது. செருப்பில்லாமல் வெறும்காலால் நடப்பது நல்லது

மணல்மேட்டின் உச்சியில் அமர்ந்துகொண்டேன். நெடுநாட்களுக்குப் பின் நான் அற்ற நிலை கைகூடியது. மணலும் வானமும் ஒளியும் காற்றும் மட்டுமே அங்கே இருந்தன. விழித்துக்கொண்டபோது இருத்தல் தித்தித்தது. அடைவதற்கோ வெல்வதற்கோ ஏதுமில்லாத இயல்புநிலைப் பேரின்பம் அது.

சூரியன் அணைந்துகொண்டிருந்தான். செம்மேடுகள் மேல் அந்தி. சிவந்து சிவந்து அணைந்தன வானும் மண்ணும். மாலையில் திரும்பும்போது இருளில் மெல்ல அமிழும் மணல்மலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன், சொல்லற்று. இரவில் அவற்றின் அடிப்பகுதி மூழ்கிவிட்டபோதிலும் விளிம்பு நுனியில் ஒளி சொட்டிக்கொண்டிருந்தது. வாள்நுனிக் குருதித்துளி போல.

அன்றிரவு நான் ஒரு சொல் பேசவில்லை. உணவும் உண்ணவில்லை. என் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டேன். செக்கச்சிவந்த ஒரு முழுமையில் அமிழ்ந்து மறைந்து போனேன்

[மேலும்]

படங்கள்

முந்தைய கட்டுரைலண்டனில் இருந்து…
அடுத்த கட்டுரையூத்து- இரு கடிதங்கள்