ஜொகன்னஸ்பர்க் காந்தியின் வரலாற்றுடன் இணைந்து அடிக்கடி காதில் விழுந்த பெயர். அங்கே காலையில் சென்றிறங்கும்போது காந்தி நினைவுகளாகவே வந்துகொண்டிருந்தன. காந்தி ஒரு இளம் வழக்கறிஞராகத் தயக்கத்துடன் வந்து இறங்கும் காட்சியை நினைத்துக்கொண்டே இருந்தேன். மகத்தான பிடிவாதமும் எதையும் அப்பட்டமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும் ஒருவரில் இணையும் என்றால் அவர் எந்தத் தளத்திலும் ஒரு மாமனிதராகவே ஆவார் என்று நினைத்துக்கொண்டேன்.
எளிமையும் நேரடித்தன்மையும் இருந்தால் உண்மை பிடிபட்டுவிடுகிறது, பிடிவாதம் அதில் அவரை நிலைக்கச் செய்கிறது. சிந்தனைத்திறன் ஒருவனை உண்மையில் இருந்து விலக்கமுடியும். கோழைத்தனமும் இணைந்துகொண்டால் அறிவுஜீவி அயோக்கியர்கள் உருவாகிறார்கள். அவர்கள் காந்தி என்ற சொல்லையே வெறுப்பார்கள் – கண்நோய்வந்தவன் விளக்கை வெறுப்பதுபோல.
ஜொகன்னஸ்பர்க் ஒரு வழக்கமான விமானநிலையம். அதை பெர்லின் என்றோ ஹாங்காங் என்றோ சொன்னால் நம்பலாம். அதே போன்ற கட்டிடம். அதே போன்ற ஊடுபாதை. நீண்ட பயணங்களில் காலக்கணக்கு அழிந்து விமானத்தில் கண்டபடி தூங்கி ஒருமாதிரி ’இடகாலபேதமிலி’ நிலை கைகூடும். டிரான்ஸிட் விமானநிலையங்களில் எல்லாருமே அப்படி நிலவில் வெளிவந்த கோழி மாதிரித்தான் இருப்பார்கள்.
எங்கள் அடுத்தவிமானம் இரண்டு மணிநேர இடைவெளியில். ஓடி ஓடி விசாரித்து தென்னாப்பிரிக்க விசா பரிசோதனை வரிசைகளில் நின்றோம். கரிய குண்டான பெண்மணி என்னை வரவேற்று பாஸ்போர்ட்டை உற்றுப் பார்த்து ‘யூ ஆர் வெல்கம்’ என்று சொல்லி அனுமதித்தாள். விமானநிலையம் விட்டு வெளிவரவே இல்லை. அதற்கு ஏன் டிரான்ஸிட் விசா என்று தெரியவில்லை.
நேராக நமீபிய விசாவுக்கான வரிசை. பாதுகாப்புச்சோதனை. இத்தனை பாதுகாப்புச்சோதனைகள் வழியாகச் செல்லும்போது மெல்லமெல்ல நமக்கே நாம் எவ்வளவு நல்லவர்கள் என்று தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.
நமீபிய விமானம் சிறியது. நான்கு இருக்கைகள் கொண்ட வரிசை. எனக்கு சன்னலோரம் இடம் கிடைத்தது. விமானத்தில் அதிகமும் வெள்ளைச் சுற்றுலாப்பயணிகள். விமானம் மேலெழுந்ததும் சிற்றுண்டி. அதன்பின் கீழே பார்க்க ஆரம்பித்தேன். சற்றுநேரத்திலேயே நமீபியா வந்துவிட்டது. கீழே நிலம் தமிழக நிலத்தை நினைவூட்டியது.
பின்பு அதன் விசித்திரங்களை கவனிக்க ஆரம்பித்தேன். சிவந்த பொட்டல்நிலம். அதில் சீராகத் தூவப்பட்டது போல நெருக்கமில்லாமல் காய்ந்த பசுமையுடன் புதர்மரங்கள். அந்த நிலம் மீது ஒரு பெரும் சிலந்தி வலையை விரித்தது போலிருந்தது. செந்நிறமான வலை. நேரான நீண்ட கோடுகள் பெரும் மண்சாலைகள் என்று தெரிந்தது. அச்சாலைகளில் இருந்து சிறிய சாலைகள் பிரிந்தன. அவற்றில் இருந்து மேலும் சிறிய சாலைகள். உள்ளங்கை ரேகை போல.
சாலைவலைக்கு ஒரு மையமுடிச்சு இருக்கும். அது மின்னும் ஒரு தகரக்கூரை. ஒரு உலோகச்சிலந்தி போல அது அமர்ந்திருக்கும். மீண்டும் நெடுந்தூரம் சாலைவலை. அடுத்த சிலந்தி. மற்றபடி ஊர்களோ நகரங்களோ கண்ணில் படவில்லை. அந்த அரைப்பாலைநிலத்தில் உள்ள மனிதவாசமே அந்தத் தகரக்கொட்டகைகளில் மட்டும்தான். அவை பண்ணைவீடுகளாக இருக்கலாம்.
விண்ட்ஹோக் விமானநிலையம் கிட்டத்தட்ட திருவனந்தபுரம் அளவுக்கு இருந்தது. டவுன்பஸ் போல விமானத்தில் இருந்து நேராக இறக்கி விட்டார்கள். விமானங்கள் வழியாக நடந்து நிலையத்துக்குச் செல்லவேண்டும். கூட்டமே இல்லை. சரசரவென்று பரிசோதனை முடிந்து அனுமதித்தார்கள். எல்லா அதிகாரிகளுமே பெண்கள். ஒரு அம்மணி என்னிடம் நான் வைத்திருந்த மின்செருகிகள் எதற்காக என்று கேட்டாள். செல்லும் இடத்தில் உள்ள மின்சார அமைப்பு பற்றி தெரியாதல்லவா என்று சொன்னேன். ’சார், இந்த ஊர் மக்களையே உங்களுக்குத் தெரியாதே’ என்று சொல்லிச் சிரித்தாள்.
எங்களை வரவேற்க டேவிட் கெம்பித்தா வந்திருந்தார். என் பெயரைப் பார்த்ததும் நான் ‘ஹாய்’ என்றேன். டேவிட் பெரிய உதடுகளில் புன்னகையுடன் ‘ஹாய்…நான் தேவித் கெம்பித்தா . உங்கள் வழிகாட்டி’ என்று சொல்லி ஆடி ஆடி வந்து கை குலுக்கினார். சடைக்கற்றைகளாக முடி. உளுந்து போல மின்னும் நிறம். டேவிட்டின் அழகு அவரது கண்கள். அஜந்தா ஓவியங்களில் உள்ள யட்சனின் கண்கள் அவை. எங்களை உற்சாகமாக வரவேற்றுக் காரில் ஏற்றினார்.
‘என்ன ஒரு அழகன் இல்லையா?’ என்றேன். ‘நான் நினைத்தேன். இவன் நம் படத்தில் நடிக்கிறான்’ என்றார் மாதவன் குட்டி. ’ஒரு குளோஸப் வைத்தால் இந்தக் கண் எப்படி இருக்கும் தெரியுமா?’ நான் டேவிட்டிடம் பேச ஆரம்பித்தேன். ஆப்ரிக்கா பற்றி இருந்த ஐயங்கள் சஞ்சலங்கள் எல்லாமே அவரைக் கண்டதுமே விலகிவிட்டன. எதற்கெடுத்தாலும் டேவிட் உற்சாகமாக நகைத்தார்.
டேவிட் ஒரு மாணவர். சுற்றுலாத்துறையில் முதுகலை படிக்கிறார். இது பகுதிநேர வேலை. வரும்போது வழிகாட்டியிடம் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என்று சொல்லிக்கொண்டு வந்த நாங்கள் டேவிட்டிடம் எங்கள் நோக்கம், திட்டம் எல்லாவற்றைப் பற்றியும் பேச ஆரம்பித்தோம். ’நமீபியா சினிமாவுக்கான ஊர். நிறைய ஹாலிவுட் படங்கள் இங்கே எடுக்கிறார்கள். நான் உங்களுக்குச் சிலரை அறிமுகம் செய்து வைக்கிறேன். கண்டிப்பாக நாம் சினிமா எடுக்கிறோம்’ என்றார் டேவிட்.
விமானநிலையத்தில் இருந்து விண்ட்ஹோக் நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. நூறு கிலோமீட்டர் என்பது இங்கே சின்ன தூரம். சாலைகள் எல்லாமே சென்ற இருபது முப்பது வருடங்களுக்குள் போடப்பட்டவை. நூல் பிடித்தது போல நேராகச் செல்லும் இரட்டைச்சாலைகள் துல்லியமானவை. அவற்றில் கார்கள் துப்பாக்கிக் குண்டுகள் போல சீறிச்சென்றன.
இருபக்கமும் கருகிய புதர்கள். அவை கருகியவை அல்ல என்றார் டேவிட். அவற்றின் இயல்பே அப்படித்தான். அதை பென்சில் புஷ் [ Arthraerua leubnitziae] என்கிறார்கள். குறைந்த தண்ணீரில் வாழக்கூடியவை. அவையன்றி மரங்களோ செடிகளோ இல்லை. குட்டையான குன்றுகள். மேகமே இல்லாத நீலவானம். வெயில் எரிந்து நின்றுகொண்டிருந்தது.
விண்ட்ஹோக் நகரத்துக்கு வந்ததும் சிறிய அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு பின்தங்கிய ஆப்ரிக்க நாட்டின் தலைநகரத்தை ஒருவாறாகக் கற்பனைசெய்து வைத்திருந்தோம். வின்ட்ஹோக் சிறிய நகரம். ஆனால் மிகத் திட்டமிட்டு அழகாகக் கட்டப்பட்டது. சீரான பழுதற்ற சாலைகளில் ஒளிவிட்டுச் செல்லும் கார்வரிசைகள். கண்ணாடிச்சன்னல்கள் மின்னும் அழகான கட்டிடங்கள். மேம்பாலங்கள். விளம்பரப்பலகைகள்.
முதலில் கவனத்தைக் கவர்ந்தது நகர் நெரிசலே அற்றிருப்பதுதான். கார்கள் கூட அதிகமில்லை. சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகமிகக் குறைவு. நகரின் மொத்த மக்கள்தொகையே மூன்று லட்சம்தான்.கடைகளுக்குள் சிலர் தென்பட்டார்கள். நகரில் திறந்த சாக்கடைகள் இல்லை. குப்பைமேடுகள் இல்லை. இடிந்த அல்லது பழுதடைந்த கட்டிடங்களோ சாலைப்பகுதிகளோ பாலங்களோ இல்லை. தெருவில் எங்கும் குப்பைகளே இல்லை. அதி சுத்தமான நகரம். ஐரோப்பிய நகரங்களைப்போல .
விண்ட்ஹோக் என்ற சொல்லுக்கு ஜெர்மன் மொழியில் காற்றின் குழி என்று பொருள் என்றார் டேவிட். பழையமேய்ச்சல் மையமான இந்த இடம் 1840-இல் ஊர்லாம் மக்களின் தலைவரான ஜோங்கர் ஆஃப்ரிக்கானரால் ஒரு சிறிய ஊராக அமைக்கப்பட்டது. அங்கே அவர் ஒரு கல்தேவாலயத்தை அமைத்தார். பின்னர் 1890-இல் ஜெர்மானிய ஆதிக்கப்படைத்தளபதியான கர்ட் வான் ஃப்ராங்வா நகரைப் புதியதாகக் கட்டி எழுப்பினார்.
நமீபியா 1990 வரை ஐநா மேற்பார்வையில் தென்னாப்பிரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான ஜனநாயக அரசு விண்ட்ஹோக் நகரத்தைத் திட்டமிட்டு விரிவாக்கம் செய்து வருகிறது. சாலைகளும் பாலங்களும் கட்டப்பட்டு வருவதை கவனித்தோம். தடையில்லாத மின்சாரமும் தண்ணீரும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கே நைஜீரியாவில் இருந்து டீசலை இறக்குமதி செய்து மின்சாரம் எடுக்கிறார்கள்.
நமீபியாவில் டீசல் விலை நாணயமதிப்பு அடிப்படையில் இந்தியாவுக்குச் சமம். ஆனால் நமீபியப் பொருளியல் இந்தியாவை விட வலுவானது. ஆறு இந்திய ரூபாய்க்கு ஒரு நமீபியன் டாலர் கிடைக்கும். நமீபியா சீராக வளர்ச்சி அடைந்து வரும் தேசம். அதற்கான காரணங்கள் பல. ஒன்று, மிகக்குறைவான மக்கள்தொகை. இந்த விரிந்த நாட்டின் மக்கள் ஒருகோடிக்குள்தான்.
நமீபியாவில் இஸ்லாமியர் அனேகமாக இல்லை. அங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் கிறித்தவர்கள். சீர்திருத்தக் கிறித்தவச் சபைகள்தான் அதிகம். ஆங்கிலிகன் சர்ச்சும் மெதடிஸ்ட் சர்ச்சும் வலுவானவை. லுத்தரன் மிஷன் அடுத்தபடியாக. கத்தோலிக்கர்கள் அதிகமில்லாவிட்டாலும் பெரிய தேவாலயங்கள் எல்லாமே அவர்களுக்குரியவை. பழங்குடிவழிபாடு கொண்ட மக்கள் ஓரளவு இருக்கிறார்கள். அவர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே மோதல்கள் இல்லை. சீரிதிருத்த கிறித்தவ சபைகளைச் சேர்ந்தவர்கள்கூட பழங்குடி மதச்சடங்குகளையும் செய்வதுண்டு.
இஸ்லாமியர்கள் உள்ள நாடுகளில் எல்லாம் தீராப்பிரச்சினையாக இருக்கும் இஸ்லாமியத் தேசியப்பிரச்சினை நமீபியாவில் இல்லை என்பதே அதை நைஜீரியா போன்ற பிறநாடுகளில் உள்ள தீராத உள்நாட்டுப்போர்கள் நிகழாமல் பாதுகாத்திருக்கிறது. இஸ்லாமியர் எந்த தேசிய அமைப்புக்குள்ளும் அடங்காமல் இஸ்லாமிய தேசியத்துக்கான போராட்டத்தை வன்முறை வழியாக முன்னெடுப்பவர்கள். அவர்களின் மதம் அவர்களுக்கு இடும் கட்டளையே அதுதான்.
அந்த இஸ்லாமிய சர்வதேசியக் கனவு இன்றைய நவீன தேசியங்கள் அனைத்துக்குமே மிகப்பெரிய சவால். இஸ்லாமியர் தங்கள் ஆன்மீகத்தைத் தங்கள் தேசியக் கனவில் இருந்து பிரித்துக்கொள்ளாதவரை உலகுக்கு அமைதி இருக்கப்போவதில்லை என நினைத்தேன். இஸ்லாமுக்கு உள்ளிருந்தே அத்தகைய ஆன்மீகவாதிகளின் குரல்கள் எழவேண்டும், அவை இன்று மேலோங்கியிருக்கும் மதவாதிகளின் குரல்களை வெல்லவேண்டும், பிற மதங்களில் நிகழ்ந்தது போல.
தீவிரவாத அச்சங்கள் இல்லாத காரணத்தால் எங்கும் பாதுகாப்புச் சோதனை என்பதே இல்லை. விமானநிலையத்தில்கூட ஒப்புக்கு ஒரு பார்வையோடு சரி. சோதனைகள் மிதமாக இருப்பதே ஒரு நட்பார்ந்த சூழலை உருவாக்கிவிடுகிறது.
நமீபியாவின் பொருளியல் முதன்மையாக சுற்றுலாவைச் சார்ந்தது. சீராக அன்னியச்செலாவணி ஈட்டித்தருகிறது அது. மேய்ச்சல், விவசாயம் ஆகியவை அடுத்தபடியாக பெருந்தொழில்கள். நமீபியாவின் பிரம்மாண்டமான மேய்ச்சல்பண்ணைகள் ஐரோப்பாவுக்குச் செல்லும் மாட்டிறைச்சியில் கணிசமான ஒரு பகுதியை உற்பத்தி செய்கின்றன.
எங்களுக்குத் தங்குவதற்காக ஒரு விடுதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்று நட்சத்திர விடுதி. நமீபியாவின் சுற்றுலாத்துறை மிகவும் தொழில்முறையானது. விடுதி ஊழியர்கள் முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். விடுதிப்பராமரிப்பு, சேவை, உணவு எல்லாமே அரசால் நேரடியாகக் கண்காணிக்கப்படுகின்றன. ஆகவே ஒவ்வொன்றிலும் துல்லியம் இருந்தது. புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் என்றார்கள். சுற்றுலாத்தொழிலுக்கான அனுமதி ரத்து என்பது நமீபியாவில் பெரிய தண்டனை.
இந்திய விடுதிகளில் ஊழியர்களுக்கு விருந்தினருடன் பழகத்தெரியாது. ஒன்று மிதமிஞ்சிய செயற்கை மரியாதை. அல்லது அக்கறையின்மை. பெரும்பாலும் இரண்டும் கலந்த தன்மை. ஆனால் நமீபியாவின் சுற்றுலா ஊழியர்கள் அனைவரிடமும் ஒரு நட்பார்ந்த சேவைமனநிலையைக் காணமுடிந்தது. புன்னகையுடன் வரவேற்பது, முகமன் சொல்வது போன்றவை அமெரிக்காவிலும் கனடாவிலும் உண்டு என்றாலும் அவை ஒரு பயின்ற பாவனைகளாகவே இருக்கும் – அல்லது கறுப்பர்களாகிய நம்மிடம் அப்படி நடந்துகொள்கிறார்கள். நமீபிய விடுதியில் வரவேற்புப்பெண்ணிடம் கண்ட அந்த நட்பு நிறைந்த திறந்த மனப்பான்மை கொண்ட பழக்கத்தை நமீபியாவிலிருந்து கிளம்பும் கணம் வரை கண்ட அனைவரிடமும் கண்டேன்.
எந்த தேசத்திலும் நான் இத்தனை மனிதர்களிடம் அந்தரங்கமாக உரையாடியதில்லை. சர்வசாதாரணமாகத் தன் நண்பர்களையும் உறவினர்களையும் நம்மிடம் அறிமுகம் செய்கிறார்கள். டேவிட் மிக ஏழையான உறவினர்களைக்கூட அறிமுகம் செய்தார். அவர் வாழ்ந்த பின் தங்கிய சூழலை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் சுட்டிக்காட்டினார். ரகசியங்களோ தயக்கங்களோ இல்லாதவர்களைப்போல பழகினார்கள்..
பாலைவன விடுதியில் ஸ்டீக் சமைத்துத் தந்த சமையற்கார மாமி செல்பேசியில் அவரது மூன்று பெண்களை எனக்குக் காட்டினார். மூன்றாம் பெண் பேரழகி. அதைச் சொன்னேன். பரவசமானார். என் செல்பேசியின் முகப்புப் படமாக இருந்த சைதன்யாவைக் காட்டினேன். தலையில் கைவைத்து நெட்டிமுறிப்பது போல ஏதோ செய்தார். என்ன செய்கிறீர்கள் என்றேன். ஆசீர்வாதம் என்று சொன்னார். எந்த தேசத்திலும் அதன் மக்கள் மீது மனம் இத்தனை பிரியத்துடன் கவிந்ததில்லை. சொல்லப்போனால் இனி ஆப்ரிக்கா அன்றி எந்த தேசத்திற்கும் பெருவிருப்புடன் செல்லப்போவதில்லை.
அடுத்த ஒருவாரமும் ஆப்ரிக்கப் பழக்கவழக்கங்களையே கவனித்துக்கொண்டிருந்தேன். நான் மிகையாகக் கற்பனை செய்துகொள்கிறேனா என்று ஐயப்பட்டபடியே. ஒவ்வொருவரும் இன்னொருவரைக் கண்டதும் ஆனந்தக்கூச்சல் எழுப்புகிறார்கள். கைகளைத் தட்டிக்கொள்கிறார்கள். உணவைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சிரித்துக்கூவிப் பேசிக்கொள்கிறார்கள். ‘நீங்கள் அடிக்கடி சந்திப்பதில்லையா?’ என்று டேவிட் ஒருவரைக் கட்டித்தழுவிக்கொண்டபோது கேட்டேன். ’’இல்லையே நேற்றுகூடப் பார்த்தேனே’’ என்றார்.
செல்லுமிடமெல்லாம் டேவிட் இவர் என் மச்சான், இவர் என் ஒண்ணுவிட்ட மாமா என்று அறிமுகம் செய்துகொண்டே இருந்தார். ’உங்களுக்கு இவ்வளவு உறவினர்களா?’ என்று கேட்டேன். ’நாங்கள் எல்லாருமே உறவினர்கள்தான் ’என்றார். உறவு என இனக்குழுவைச் சொல்கிறாரா என்று மெல்ல விசாரித்துப்பார்த்தேன். அங்கே இனக்குழு அடையாளங்கள் பெயரளவுக்கே. திருமணம் உட்பட எந்த உறவுக்கும் அவை தடை அல்ல என்றார்.
சரி அப்படியென்றால் திருச்சபை வேறுபாடு இருக்குமா என்று கேட்டேன். அதுவும் இல்லை. டேவிட்டின் வருங்கால மனைவி தாதி வேலைக்குப் படிக்கிறார். அவர் ஒரு கத்தோலிக்கப்பெண். டேவிட் ஆங்கிலிகன் சர்ச்சைச் சேர்ந்தவர். அவள் படத்தைக் காட்டி ‘அழகானவள்’ என்றார். வெள்ளைக்காரப்பெண். ‘இல்லை. அவள் நமீபியப்பெண்தான். இங்கே எங்களுக்கு நிறைய இனக்கலப்பு உண்டு. அதனால் வெள்ளைத்தோலுள்ளவர்களும் நிறையபேர் இருக்கிறார்கள்’ என்றார் டேவிட்.
நமீபிய மக்களின் அடிப்படை இயல்பில் கிறித்தவம் ஆக்கபூர்வமான பல விஷயங்களைச் சேர்த்திருக்கிறது என்ற எண்ணம் எனக்கு உருவானது. அங்கே செல்வதற்கு முன் அதற்கு நேர்மாறான எண்ணமே என்னிடமிருந்தது, ஐரோப்பியக் கிறித்தவம் அவர்களின் ஆப்ரிக்க மரபை அழித்திருக்கும் என்று நினைத்திருந்தேன். மாறாக அவர்களின் இனக்குழுவேறுபாடுகளையும் காலங்காலமாக நடந்துவந்த இனப்பூசல்களையும் இல்லாமலாக்க கிறித்தவத்தால் முடிந்திருக்கிறது என்று தோன்றியது.
அதேசமயம் அவர்களின் தொன்மையான நட்புநிறைந்த பண்பாடும் நீடிக்கிறது. அது ஐரோப்பியக் கிறித்தவ விழுமியங்களுடன் கலந்துவிட்டது. பாலைவனம், மக்கள் நட்புடன் பகிர்ந்துண்டு வாழ்ந்தாகவேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது என்று தோன்றியது. குறைந்த வளங்களுக்காகப் போராடியபடி நெருக்கியடித்துக்கொண்டு மக்கள் வாழும்போதுதான் ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டு வசைபாடிக்கொண்டு வாழும் மனநிலையை வளர்த்துக்கொள்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.
நமீபியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இன்னொரு முக்கியமான அம்சம் ஆங்கிலம். அங்கே எழுத்துமொழி என்பது அனேகமாக ஆங்கிலம் மட்டுமே. ஆப்ரிக்க மொழிகளுக்குக் கூட எழுத்துவடிவம் ஆங்கிலமே. நமீபிய மக்கள் சாதாரணமாகவே நாலைந்து மொழி பேசக்கூடியவர்கள் .டேவிட் பதினோரு மொழி தெரிந்தவர். ஆனால் அச்சுமொழி ஆங்கிலம். விளம்பரங்கள் அறிவிப்புகள் எல்லாமே ஆங்கிலம். நடுப்பாலைநிலத்தில் மாடுமேய்ப்பவரிடம் கூட ஆங்கிலத்தில் ஓரளவு பேச முடியும். ஆச்சரியமளித்தபடியே இருக்கும் விஷயம் இது.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொதுவாக ஆங்கில எழுத்துக்களை வைக்கலாமே என்றொரு யோசனை முன்வைக்கப்பட்டது. அது மொழிவாதிகளால் கடுமையாக முறியடிக்கப்பட்டது. ஒருவேளை அப்படி நிகழ்ந்திருந்தால் இந்தியாவில் இன்றிருக்கும் இந்த மொழிப்பிரிவினைகள் இந்த அளவுக்கு இருந்திருக்காதோ என்று நினைத்தேன். இன்று ஓர் இந்தியன் நாநூறு மைலுக்குள் மொழியால் சிறையிடப்பட்டிருக்கிறான். ஆங்கிலம் கூட இந்தியாவில் உண்மையான புழங்குமொழியாக இல்லை.
அன்று நமீபியாவின் திரைப்பட வளர்ச்சிக்குழுமத்தின் தலைவியை சந்தித்தோம். 28 வயதான ஷெல்லி பெரும்பாலான நமீபியப்பெண்களைப் போல விக் வைத்திருந்தார். அவர்களுடைய முடி மிகவும் சுருண்டது. அதைப் பராமரிப்பதைவிட மொட்டைபோட்டு விக் வைத்துக்கொள்வது சிக்கனமானது என்றார் டேவிட். சற்றே வெட்கத்துடன் தலையை ஆட்டி ஆட்டி அவர் பேசியது அழகாக இருந்தது. நமீபிய அரசு படப்பிடிப்புகளை ஊக்குவிக்கிறது, ஆனால் இயற்கைச் சூழல் மாசுபடுவதில் மட்டும் மிகக் கவனமாக இருக்கிறது. அதற்கான நிபந்தனைகள்தான் அதிகமும்.
அன்று மாலை நகரம் வழியாகச் சுற்றி வந்தோம். நகரில் இரவு பத்து மணிவரைக்கும்கூட ஆணும்பெண்ணும் சுற்றிவருகிறார்கள். அங்கே மாலையில்தான் மக்கள் நடமாட்டமே ஆரம்பிக்கிறது. இரவில் கல்லூரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக சிரித்துக் கூச்சலிட்டுப் பேசிக்கொண்டு சென்றார்கள். ஒரு பெண்ணிடம் ‘ஏன் இரவில் செல்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ’கல்லூரி ஆரம்பிப்பதே சாயங்காலம் ஆறுமணிக்குத்தான்’ என்றாள். ‘அப்படியென்றால் நீ வேலை பார்க்கிறாயா?’ என்றேன். ’’ஆமாம், நான் தையல் வேலை செய்கிறேன்’’ என்றவள் எங்களைப்பற்றிக் கேட்டாள். பெண்கள் கூட்டமாக எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள்.
‘இந்தியா பற்றி என்ன தெரியும்?’ என்று கேட்டேன். ‘கேந்தி தெரியும்’’ என்றாள். காந்தி தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய ஓர் அரசியல்தலைவர், இந்தியாவில் இருந்து வந்தவர், அகிம்சையை போதித்தவர், நமீபிய அதிபராலும் நெல்சன் மண்டேலாவாலும் மேற்கோள் காட்டப்படுபவர், அவ்வளவுதான் தெரியும். அவர் இந்திய சுதந்திரப்போராட்டத்துக்குப் பாடுபட்டது தெரியாது. நான் சொன்னபோது இருபது குரல்கள் ‘’ஓ’’ என ஆச்சரியப்பட்டன.
நமீபியாவில் குற்றச்செயல்கள் அனேகமாகக் கிடையாது. வீடுகள் எல்லாமே பெரும்பாலும் திறந்தே கிடந்தன. சில செல்வந்த ஜெர்மானியர்களின் மாளிகைகளுக்கு மட்டுமே உயரமான சுவர்கள். பெரியவீடுகள் கூட ஓடுவேயப்பட்டவை. மிகக் குறைவாகவே போலீஸ் கண்ணுக்குப்பட்டார்கள். போக்குவரத்து விதிகள் நமீபியாவில் மிகமிகக் கறாராகவே கண்காணிக்கப்படுகின்றன. அங்கே சாலைப் போலீஸார் லஞ்சம் வாங்கும் வழக்கம் உண்டா என்று கேட்டேன். ‘வாங்க மாட்டார்கள். ஆனால் இரண்டுபேர் இருக்கிறார்கள். சனிக்கிழமை சாயங்காலமானால் பணம் கேட்பார்கள்’ என்றார் டேவிட். சிரித்துக்கொண்டேன்.
விண்ட்ஹோக்கின் தெருக்கள் எல்லாமே சுத்தமாக இருப்பதற்குக் காரணம் பாலைவனப்பண்பாடு காரணமாக அந்த மக்கள் குப்பைகளை வீசுவதில்லை என்பதுதான். சிகரெட் பிடித்தபின் எஞ்சிய நுனியைத் திரும்ப சிகரெட் பெட்டிக்குள்ளேயே போட்டுக்கொள்வதைப் பார்த்தேன். சூழல்தூய்மையை அரசும் கறாராகவே பேணுகிறது, அது சுற்றுலாவளர்ச்சிக்கு அவசியமானது என்பதனால்.
அன்றிரவு தூங்கும்போது மாதவன்குட்டி சொன்னார். ‘நான் ஊரில் இருந்து கிளம்பும்போது எல்லாரும் பயமுறுத்தினார்கள். கரியநிலம் கரிய மக்கள் என்று சொன்னார்கள். இங்கே வந்து ஒருநாள் தங்குவதற்குள் திருவனந்தபுரம் மனிதன் வாழவே லாயக்கில்லாத இடமாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. தம்பானூர் பஸ்நிலையத்தில் செப்டிக் டாங்க் உடைத்துக்கொண்டு ஒருவருடமாக ஓடிக்கொண்டிருக்கிறது…இரவு எட்டு மணிக்கு மேல் சங்குமுகம் கடற்கரையில் கௌரவமானவர்கள் நடமாட முடியாது… என்ன நாடு அது’
கொஞ்சம் பெருமூச்சுவிட்டு ‘ஆனால் சினிமாவுக்கு இழப்புதான். இந்த நகரத்தை எப்படிக் காட்டுவது? இது ஒரு ஐரோப்பிய நகரம் என்றுதான் தோன்றும்’ என்றார்.
நான் ‘இது மூன்றாம் உலகம்தான்’ என்றேன். “ஆனால் நாம் நான்காம் உலகத்தைச் சேர்ந்தவர்கள்.’’ மாதவன் குட்டி சிரித்துக்கொண்டு ‘’கேரளம் ஐந்தாம் உலகத்தில் இருக்கிறது” என்று சொல்லிக் கண்களை மூடிக்கொண்டார்.
[மேலும்]