ஆற்றுமணல் பாயிலே..

ஜோஷி இயக்கி மோகன்லால் நடித்து வெளிவந்துள்ள ரன் பேபி ரன் சமீபகால வெற்றிப்படங்களில் ஒன்று.இந்தியாவின் முதிர்ந்த இயக்குநர்களில் ஒருவரான ஜோஷி புத்தம் புதியவராக இப்படம் மூலம் நான்காம் முறையாக பிறவி எடுத்திருக்கிறார்

இந்தப்படத்தில் மோகன்லால் பாடிய இந்தப்பாடல் சமீபத்தில் நான் மீண்டும் மீண்டும் கேட்பது. நல்ல மெட்டா என்று கேட்டால் சொல்லத்தெரியவில்லை என்றே சொல்வேன். நல்ல குரலா, சரியாக பாடியிருக்கிறாரா என்று கேட்டாலும் அதேதான் பதில்

ஆனால் மோகன்லால் அவரது குரலால் அந்த வரிகளில் அபாரமான ஓர் உணர்ச்சி அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறார். இனிய, கனமான, குளிர்ந்த ஒரு கடந்தகால ஏக்கம். பொன்னூல் போல காற்றில் நெளியும் ஓர் இழப்புணர்ச்சி.

வேறெந்தப் பாடகரும் இந்த உணர்ச்சியை அளித்திருக்கமுடியாதா என்று கேட்டால் முடியாதென்றே சொல்வேன். சினிமாப்பாடகர்கள் பாடகர்கள் மட்டும் அல்ல, அவர்கள் குரல்நடிகர்கள். ஜேசுதாஸ் நல்ல குரல்நடிகர். அவரை விட ஜெயச்சந்திரன் சிறந்த நடிகர். அவர்கள் இந்தப்பாடலுக்கு உணர்வூட்டியிருக்க முடியும்.

ஆனால் அவர்கள் எவரும் மோகன்லாலுக்கு நிகரான நடிகர்கள் அல்ல. லால் சந்தேகமே இல்லாமல் ஒரு மேதை. மிகமிகக் குறைவாக நடிப்பை வெளிப்படுத்தி உச்சகட்ட உத்வேகத்தை உருவாக்க வல்லவர். நடிப்பில் நம்பகத்தன்மையை லால் அளவுக்கு உருவாக்கியவர்கள் இந்தியத் திரையிலகில் குறைவு.

தன் பாணியிலேயே சற்றும் மிகை இல்லாமல், அணுவளவும் செயற்கைத்தன்மை சேராமல் இதை பாடியிருக்கிறார் லால். அந்த நம்பகத்தன்மை காரணமாகவே பாடல் நெஞ்சை அறுத்துச்செல்கிறது– சோப்பை அறுக்கும் பட்டுநூல் போல.

அதிகம் பாடாமல் குடிகாரராகி இறந்த மலையாளப்பாடகர் பிரம்மானந்தன் மலையாளப்பாடல்களில் சரியான உனர்வெழுச்சியை நடித்துக்காட்டியவர் என்று நினைக்கிறேன். லால் பிரம்மானந்தனை நினைவுறுத்துகிறார், தாண்டியும் செல்கிறார்.

ஆற்றுமணல் பாயயில் அந்திவெயில் சாய்ஞ்ஞநாள்
குஞ்ஞிளம் கைவீசி நீ தோணி ஏறி போயில்லே?

வீழாதே கண்ணில் அந்நு மின்னிய நீர்மணி
நீறாதே நீறுந்நூ ஓர் ஓர்ம தன் நெய்த்திரி
என்னெ விட்டிட்டு எந்தே போயி மஞ்சாடிக்குருவி?
நின்னே காத்திட்டு ஈ தீரத்து என்றே மோகம் வேரோடி.

முன்வழியில் பின்வழியில் காலசக்ரம் ஓடவே
புந்நிலங்ஙள் பூமரங்கள் எத்ரயோ மாறிப்போய்
காணே நூல்புழ எங்ஙோ மாஞ்ஞுபோய்
நீரொழிஞ்ஞ வெண்மணலின் தோணிபோல ஆயி ஞான்

கால்தளகள் கைவளகள் மாற்றி நீ எத்ரயோ
அந்நு தந்ந குஞ்ஞு இலஞ்ஞி மால நீ ஓர்க்குமோ
வேலயும் பூரமும் எங்ஙோ தீர்ந்து
ஆளொழிஞ்ஞ கோயிலிலே கல்விளக்காய் நிந்நுஞான்

ஆற்றுமணல் பாயயில் அந்திவெயில் சாய்ஞ்ஞநாள்
குஞ்ஞிளம் கைவீசி நீ தோணி ஏறி போயில்லே?

http://www.youtube.com/watch?v=VTRGQWs3fRk

தமிழில்

ஆற்றுமணல் பாயிலே அந்தி வெயில் சாய்ந்த நாளில்
சின்னஞ்சிறு கை வீசி நீ தோணி ஏறி போனாய்

உதிராமல் கண்ணில் அன்று மின்னிய நீர்மணி
எரியாமல் எரிந்தது ஒரு நினைவின் தீபச்சுடாராக
என்னை விட்டு எங்கே சென்றாய் செம்மணிக்க்குருவி?
உன்னை காத்து இந்த கரையில் என் மோகம் வேர்விட்டு நிற்கின்றது

முன்வழியில் பின்வழியில் காலசக்கரம் ஓட
புதிய நிலங்கள் பூமரங்கள் எவ்வளவோ மாறிப்போய்விட்டன
பார்த்திருக்கவே நூலிழை நதி எங்கோ மறைந்துபோனது
நீரற்ற வெண்மணலின் தோணியாய் நான் ஆனேன்

கால்தளைகள் கைவளைகள் எவ்வளவோ மாற்றிக்கொண்டாய்
அன்று நான் தந்த இலஞ்சிப்பூ மாலையை நினைவுகூர்வாயா?
பண்டிகைகளும் திருவிழாக்களும் என்றோ முடிந்துவிட்டன
யாரும் வராத கோயிலின் கல்விளக்காக நிற்கிறேன்

[இசை ரதீஷ் வேகா. வரிகள் ரஃபீக் அஹமது ]

முந்தைய கட்டுரைவணிக எழுத்து தேவையா?
அடுத்த கட்டுரைநாம் என்னவகை மக்கள்?