உள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நான் பள்ளி மாணவனாக இருந்த போது ஒரு தேர்தலுக்கு ஓட்டுக் கேட்டு ஜெ.எச். அம்பலக்கடை ஏரியாக்களில் சக தோழர்களுடன் சென்று கொண்டிருந்தார். கடைக்குப்போன நான் வேடிக்கையாக அந்தக் கூட்டத்துடன் கொஞ்ச தூரம் பின்னால் சென்றேன். ஒரு பெட்டிக்கடையின் முன்னால் சென்று சகாவு சொன்னார் “ தெரியுமில்லா ஓட்டு நமக்கு இடணும் கேட்டா”. வழக்கமான அரசியல் வாதிகள் போல கூழைச்சிரிப்போ போலியான கும்பிடோ இல்லாமல் அவர் சொன்ன தொனியும் குரலும் இன்று இதைப் படித்ததும் ஞாபகம் வந்தது. சமீபத்தில் அருமனையிலிருந்து மாறப்பாடி வழியாகத் திருவரம்பு திரும்பி இந்த ரோட்டின் வழியாக நண்பனுடன் திற்பரப்பு சென்றேன். குண்டும் குழியுமாக கிடக்கும் இந்தத் தார் ரோட்டின் கீழடுக்கில் இப்படி ஒரு கதை கிடப்பது எனக்குத் தெரியாது

நன்றி

சந்தோஷ்

அன்புள்ள ஜெ,

உள்ளே இருப்பவர்கள் வாசித்தேன்.

விஷ்ணுபுரம் தரும் அதிர்வுகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. நண்பர்கள் விஷ்ணுபுரம் தந்த அனுபவங்களைத் தங்கள் தளத்தில் பகிர்ந்து கொள்வதை நோக்கியபடியே இருக்கின்றேன். விஷ்ணுபுரத்தை நான் ஒருமுறை வாசித்திருக்கிறேன். இரண்டாவது முறை வாசிக்காமல் அது பற்றி எதையும் விவாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். நாவலை இந்தியாவில் வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன். ஒவ்வொரு ஆண்டும் வாசிப்பதற்கென்று கொண்டு வருகிற புத்தகங்களின் எடை வாசித்த நூல்களைத் தொடர்ந்து வைத்திருப்பதைத் தவிர்த்து விடுகிறது.

முதல் வாசிப்பில் விஷ்ணுபுரம் கொடுத்த அனுபவம் வினோதமானதும் அலாதியானதும் ஆகும். எண்ணூற்றிச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் முதல் நூறு பக்கங்களை வாசித்து முடிக்க எனக்கு மூன்று மாதங்கள் ஆயின. (விட்டு விட்டு வாசித்ததால்) மீதி இருந்த எழுநூற்றி சொச்சம் பக்கங்களைப் பதினைந்து நாட்களில் வாசித்து முடித்து விட்டேன். எனக்கென்னவோ விஷ்ணுபுரம் என்ற நாவல் ஒரு சிறுகதையின் விரிந்த வடிவம் போலத்தான் தோன்றுகிறது. வாசிப்பு சுகத்திற்கும், ஸ்வாரஸ்யத்திற்கும் துளிக்கூட பஞ்சமில்லாத இந்த நாவலில், அறிந்த தத்துவ தரிசனங்களை முன் வைத்து புனைவின் ஊடாக அவற்றை விவாதப் பொருளாக்கியிருப்பது அற்புதம். மகாபாரதத்தில் பொதித்து வைக்கப்பட்டுள்ள பகவத் கீதையைப் போல, தீர்வு காண இயலாததும், முடிவற்று நீள்வதுமான ஒரு தத்துவ விவாதம் இந்த நாவலின் மத்தியில் பொதித்து வைக்கப்பட்டுள்ளது. விண்ணவர் லோகங்களிலும் நீண்டு கிடக்கும் கோபுரங்களைக் கொண்ட பெருமை வாய்ந்த விஷ்ணுபுரக் கோயிலின் அழிவிற்கு அந்தத் தத்துவ விவாதமே காரணமாகிறது என்பது வியப்புக்குரியது. வாசிக்க. வாசிக்க மூன்று பாகங்களையும் எந்த வரிசையில் வாசித்தாலுமே பொருத்தமாக இருக்குமே என்று தோன்றியது. (பாகங்களின் பெயர் நினைவில்லை. நாவல் கைவசம் இல்லாததால் சரிபார்க்கவும் முடியவில்லை). அந்தக் கருத்தை நாவலின் பாத்திரம் ஒன்று வெளிப்படுத்துகையில் ஆச்சரியமாக இருந்தது.

சமீபத்தில் கென் ஃபோலெட்டின் பில்லர்ஸ் ஆஃப் தி எர்த் வாசித்தேன். அவர் ஒரு த்ரில்லர் எழுத்தாளர். ஆனால் இந்நாவல் பதினோராம் நூற்றாண்டு இங்கிலாந்தில் எளிய பாதிரியார் ஒருவரால் கட்டப்பட்ட தேவாலயம் குறித்தது. ஆயிரத்து நூறு பக்கங்கள் கொண்ட இந்நாவல் விறுவிறுப்பைக் குறிவைத்து எழுதப்பட்டிருப்பினும், பதினொராம் நூற்றாண்டு ஆங்கிலேய வாழ்க்கையை அற்புதமாகச் சித்தரித்தது. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டபடி வளரும் அதன் தேவாலயம் எனக்கு ஏனோ விஷ்ணுபுரக் கோயிலை நினைவுபடுத்தி விட்டது. விஷ்ணுபுரத்தை இன்னுமொரு முறை வாசிக்க வேணும்.

ஜெகதீஷ் குமார்

முந்தைய கட்டுரையூத்து-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: ம.ரா.போ.குருசாமி