தியடோர் பாஸ்கரனை நான் 1992ல் பெங்களூரில் பார்க்கும்போது மீசை இல்லாமலிருந்தார். பேச்சிலும் புழக்கத்திலும் உயரதிகாரிகளுக்கு உரிய மென்மை உண்டென்றாலும் ஒரு ராணுவ அதிகாரியின் மிடுக்கும் தன்னம்பிக்கை நிறைந்த கனத்த குரலும் கொண்டவர். மிகச்சிறந்த உரையாடல்காரர் என்று அவரை சுந்தர ராமசாமி சொல்வதுண்டு. அவரது கட்டுரைகளைப்போலவே சுவாரசியமான தகவல்களும் அனுபவங்களும் இயல்பான முறையில் கோர்த்துக்கொண்டு வரும் பேச்சு அவருடையது.
நான் மீண்டும் அவரைப்பார்த்தபோது அகமதாபாதில் பணியாற்றி மீண்டிருந்தார். அவரில் எது குறைந்தது என அப்போது அறிந்தேன், கம்பீரமான மீசை. வெண்ணிறமான கூரிய மீசையை முறுக்கி விட்டிருந்தார். ”ராஜஸ்தானிலே பாத்தேன் ஜெயமோகன், என்ன ஒரு கம்பீரமான மீசைங்க…ஆம்பிளைக்கு மீசை அழகுன்னு அப்பதான் தெரிஞ்சுது…”
ராஜஸ்தானியர்களுக்கு மீசை எத்தனை முக்கியம் என்று கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’[தாய் கர்] என்ற நாவலை வாசித்தால் அறியலாம். அதன் நாயகனாகிய ரகுவர் ராய் பெரிய ஜமீன்தார். ஒரு கட்டத்தில் அவர் நொடித்துப்போகும்போது பெரும் தொகைக்கு அவர் அடமானம் வைப்பது அவரது மீசையை!
பாரதி மீசை வைத்துக்கொண்டது அன்று அவரது சமூகத்தில் பெரிய கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. மீசை ஆண்மையின் அடையாளம் மட்டுமல்ல, சத்ரிய சின்னமும் கூட. பாரதியில் மிகுந்திருந்த சத்ரிய பாவனையை அந்த மீசை அக்கால பிராமணர்களுக்குக் காட்டியிருந்தது போலும். திருவிதாங்கூரில் முன்பு மீசைக்கு வரி இருந்தது. வரிகொடுத்து மீசை வைத்தார்கள் என்றால் அதற்குக் காரணம் அது சத்ரிய அடையாளம் என்பதே.
எழுத்தாளர்களில் பெரிய முறுக்குமீசை பொதுவாக காணப்படுவதில்லை, விதிவிலக்கு ஜெயகாந்தன். மீசையை முறுக்குவது ஜெயகாந்தனின் ஒரு முக்கியமான தோரணை. கவனிக்கும்போது அவரது கண்கள் நம் மீது படியும், மீசையை முறுக்குவார். கண்கள் சற்றே சரிய மீசையை முறுக்கினால் அவர் நம் பேச்சை சுத்தமாகக் கவனிக்கவில்லை, வேறெங்கோ இருக்கிறார் என்று பொருள். தனுஷ்கோடி ராமசாமி கொஞ்சநாள் பெரிய மீசை வைத்திருந்தார், ஜெயகாந்தனின் பாதிப்பில்.
மலையாள எழுத்தாளர்களில் சி.வி.ராமன்பிள்ளையின் மீசை மிகவும் பிரபலம். ஒருமீசையை போட்டு மேலே ஒரு வளைவான கோட்டைப்போட்டால் சிவியின் முகம் வந்துவிடும். காஞ்சனசீதை [ அரவிந்தனால் படமாக எடுக்கப்பட்டது] சாகேதம் போன்ற நாடகங்களின் ஆசிரியரான சி.என்.ஸ்ரீகண்டன்நாயர் பெரிய மீசை வைத்திருந்தார்.
பொதுவாக பெரிய மீசை வைத்திருப்பவர்கள் நகைச்சுவை உணர்வும் பெருந்தன்மையும் கொண்ட எளிய மனிதர்களாக இருப்பார்கள் என்று நான் அவதானித்திருக்கிறேன். விதிவிலக்குகள் இருக்கும்தான். மீசை இல்லாவிட்டால் ஒரு உயர்மட்ட தோற்றம் வந்துவிடுகிறது. இப்போதெல்லாம் மீசை இல்லாவிட்டால் உடனே சா·ப்ட்வேர் ஆசாமியா என்ற எண்ணம் ஏற்பௌவிடுகிறது. மீசை இருந்தால் ஹார்ட்வேர் ஆசாமியா என்பார்களா?
நான் மீசை இல்லாமல் இருந்ததே இல்லை. தாடியுடன் இருந்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு புகைப்படநிபுணர் சொன்ன்னார், ”சார் மீசைல டை அடிச்சுக்குங்க” எனக்கு அது பிடிக்காது. கல்பற்றா நாராயணன் சொன்னதுபோல என் முகத்தில் நானே ஏன் கரிபூசிக்கொள்ள வேண்டும்? ” இல்லசார், மீசை டபுள் கலர்லே இருக்கு. போட்டோவில மீசை திட்டுதிட்டா தெரியுது” ”டை அடிக்க புடிக்கலீங்க” ”அப்ப மீசைய எடுத்துடுங்க சார்…நல்லா நரைச்சதுக்குப் பிறகு வச்சுகிடுங்க”
என்ன செய்வது? லோகித் தாஸ் தினமும் மீசை தாடிக்கு டை அடிப்பார். ”பாம்பே நகரமே டை அடிக்குது – பாம்பே டையிங்- அப்றமென்ன? நாம சின்னமனுஷங்கதானே?” என்பார். தாடி வைத்து மோவாய் மடிப்பை மறைத்து டை அடித்தால் வயது மறைந்துவிடும். ”டை அடிச்சால் மனசிலே இளமை வரும்.” என்பார் லோகி. ஆனால் முடி வளர்ந்து தோலுக்கும் மீசைக்கும் நடுவே ஓரு வெள்ளை வரி தெரிவது அசிங்கம். அதற்குத்தான் தினமும் கரி. துங்கக் கரிமுகத்து தூமணிகளைத்தான் இப்போது தெருவெங்கும் பார்க்கிறோம். லோகி ”காலைல எந்திரிச்சதும் முதல்வேலை கண்ணாடியைப்பாத்து லோகித் தாஸை வரைஞ்சு எடுக்கிறதுதான்” என்பார் .
மனக்குழப்பம். சட்டென்று முடிவுசெய்தேன். ரேசரை எடுத்தேன். மனித இருப்பின் ஆகபெரிய பிரச்சினை முடிவெடுப்பதுதான் என்றார் சார்த்ர். இல்லை முடியெடுப்பதா? சரிதான், எதைப்பற்றித்தான் சிந்திப்பதென ஒரு வரைமுறையே இல்லையா? ஒரே இழுப்பு. மீசை இல்லை. ஓட்டல் ராஜ் பார்க்கில் தங்கியிருந்தேன் அப்போது. கண்ணாடியில் பார்த்தபோது யாரோ எவரோ போல் இருந்தது. ஆசாமி கொஞ்சம் முறைப்பாக இருப்பது போல, கொஞ்சம் சின்ன வயசும்கூட. படிப்புக்களை வேறு.
அது நானா? நான் இனி எப்படி அவனாக ஆவது? கஷ்டம் போல இருக்கிறதே. அடாடா தப்புசெய்து விட்டோமோ என்ற குழப்பம். மீண்டும் மீசையை வைக்க முடியாது. முடியாது என்ன, சினிமாவில் மேக்கப்மேனுக்கா பஞ்சம்? ஆனால் எழுத்தாளர்கள் ஒட்டுமீசை வைத்ததற்கு முன்னுதாரணம் உண்டா? ஜெயமோகனின் முகத்திரையை கிழிப்பதைப்பற்றி இணையத்தில் எழுதுபவர்கள் மீசையைப் பிய்ப்பதுபற்றி பேச ஆரம்பிப்பார்களா?
பெல் அடித்தது. பேரர் வெளியே எட்டிப்பார்த்தார். அறை எண்ணைப் பார்க்கிறார். ”நான்தான்… டூத்பேஸ்ட் சொன்னேன்” என்றேன். ”எஸ் சார்” என்றான். நான் மீசையில்லா மோவாயை வருடினேன். என்ன ஒரு மென்மை. மற்ற இடங்களில் அந்த மென்மை இல்லை. மீசை இல்லாவிடால் நல்லவன் போல ஒரு தோற்றம் வந்துவிடுகிறதே? ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்’. திருக்குறள் வந்து கைகொடுக்காத வாழ்க்கைச் சந்தர்ப்பம் உண்டா என்ன?
லி·ப்டில் நுழைந்தபோது உள்ளே ஒரு பெரியமனிதர். அது நான்தான். அவரை பார்க்காமல் திரும்பிக்கொண்டேன். அவர் என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். வெயிட்டர்கள் கொஞ்சம் அதிக மரியாதை காட்டுகிறார்களோ?சே பிரமை. யாராவது என்னிடம் ச·ப்ட்வேர் சம்பந்தமான ஏதாவது சந்தேகம் கேட்டுவிடுவார்களோ? ஆகா, பர்கரை ஒட்டுமொத்தமாகக் கடிக்க மீசை இல்லாமல் இருப்பது என்ன ஒரு வசதி! சீஸ் ஒட்டுவதில்லை. சாப்ட்வேரர்கள் இதற்காகத்தான் மீசையை எடுக்கிறார்களா?
வசந்தபாலன் வந்தார் ”சார்!” என்று அலறினார். ”ஏன்?” என்றேன் .”கம்பீரமே போச்சே சார்” ”யூத்தா இருக்கதா தோணுதே” ”யூத்தா ஆயிரம்பேர் இருக்காங்க சார்…” ஆனால் ஷாஜிக்கு பிடித்திருந்தது ”சுள்ளன் ஆயல்லோ” என்றார்.
மீசை இல்லாத என் முகத்தைப்பார்த்த நண்பர் வசந்த் சின்ஹா உற்சாகம் அடைந்தார். நான் அவரிடம் சினிமா பற்றி பேச அவர் ஆர்வமாகக் குறிப்பெடுத்துக்கொனிருந்தது ஒரு கார்ட்டூனை என்று அவர் நீடியபோதுதான் தெரிந்தது. மீசை இல்லாமல் கார்ட்டூனில் எனக்கு ஒரு ராஜதந்திர சாயலும் கைகூடியிருந்தது
நாலைந்து நாளில் நான் மீசை இல்லாத உடலுக்குள் வாழ ஆரம்பித்து விட்டேன். வீட்டுக்கு வந்தபோது அருணா வாசலைத்திறந்து ”வாங்க” என்றபின் ”அய்யோ ஜெயன் நீயா? இது என்ன கோலம்?” என்றாள். ”எடுத்துட்டேன்” அஜிதன் ஓடிவந்து ”அப்பா அக்கவுண்டெண்ட் அனந்தாச்சாரி மாதிரி இருக்கே” என்றான். ”எப்டி இருக்கு?” என்றேன். ”டிரெஸ்டு சிக்கன் மாதிரி இருக்கு” என்றான் அஜி. ”நீ வாயைமுடு…அருணா நீ சொல்லு” ”நான் என்னத்த சொல்றது? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்…”
நொந்துபோய் தூங்கிக் கொண்டிருந்த சைதன்யாவை எழுப்பினேன். ”பாப்பா, அப்பா எப்டி இருக்கேன்? மனசாட்சியை தொட்டு சொல்லணும்” அவள் என்னை ஏற இறங்கப் பார்த்து ”சூப்பரா இருக்கே அப்பா…” என்றாள். போதும். இனி உலகம் என்ன சொன்னால் என்ன? இனிமேல் இதுதான் முகம்.
[முதல்பிரசுரம் 2011/ டிசம்பர்/ மறுபிரசுரம்]
கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’