கூடங்குளம்-கடிதங்கள்

அன்பின் ஜெமோ,

http://www.jeyamohan.in/?p=30383

மேற்கண்ட சுட்டியில் இருக்கும் பதிவை ரீடர் வழி படித்தேன். உண்மையில் மிகுந்த நெருக்கமாக உணர்கிறேன்.

உங்கள் வழியாகவும் இப்போராட்டத்தின் தேவை பலரையும் சென்றடையும். சமயம் கிடைக்கும்போதெல்லாம் இது பற்றி எழுதுங்கள் என்பது என் வேண்டுகோள்.

கிட்டத்தட்ட 400 நாடுகளை நெருக்கும் அகிம்சைப் போராட்டத்தினைக் கண்டுகொள்ளாத ஊடகங்கள், போராட்டத்தின் ஒரு வடிவமான ஊர்வலத்தில் புகுந்து கலகம் செய்து, பின் கலவரம் என்றும் வன்முறை என்றும் கதை கட்டுகிற அரசபயங்கரவாதத்தின் பக்கம் நிற்பது கண்கூடு.

தொடர்ச்சியாக அம்மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அவரவர் எண்ணப்படி விதவிதமான முகமூடி போட்டு இப்போராட்டத்தினைப் பார்ப்பதுதான் வருத்தம்.

//வரும்காலங்களில் இந்தியக் கனிவளங்களுக்காக, நீருக்காக நாம் அவர்களுடன் மேலும் தொடர் போராட்டங்களை நிகழ்த்தவேண்டியிருக்கும் . இது ஒரு முன்னோட்டம்.//

சத்தியமான வரிகள்.

நன்றி

தோழன்
பாலா

அன்புள்ள பாலபாரதி

நன்றி.

கூடங்குளம் பற்றிய விவாதங்களில் பங்கெடுக்கக் கூடாதென்ற முடிவில் இருந்தேன். மிகையான விவாதங்கள் போல அர்த்தமற்ற செயல் ஏதும் இல்லை. ஆனால் இப்போது இது இயல்பான எதிர்வினை

ஜெ

வணக்கம் ஜெயமோகன்,

நலமா? நமீபியப் பயணம் எப்படி இருந்தது?

நேற்று இங்கு சில மலையாள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீர்
என்று நீங்கள் இங்கு சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டீர்கள் :) மலையாள ஊடகங்கள்
உங்களை முன்னிறுத்தும் விதம் சந்தோஷமாக இருக்கிறது. மலையாள
திரைத்துறையில் கதாசிரியன், இயக்குனருக்கு நிகரான ஒரு ஆளுமை என்று
நீங்கள் சொன்னபோது புரியவில்லை. இப்போது புரிகிறது…

இப்போது குவைத் வந்திருந்தால் சில மலையாள நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு
செய்திருக்கலாம்.

இன்று காலை கூடங்குளம் குறித்த உங்களின் பதிவு பார்த்தேன். நன்றி… வேறு
என்ன சொல்வதென்று தெரியவில்லை. அணு உலைக்கு எதிர்ப்பு, ஆனால் சர்ச்
முன்னெடுக்கும் போராட்டத்தில் ஈடுபடமாட்டோம் என்பது சிலரின் நிலைப்பாடாக
இருந்தது. இப்போது கெஜ்ரிவாலும் வந்துவிட்டதால் இன்னும் சிலர் விலக
ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒரு பொதுப்பிரச்சனைக்கென்று வேற்றுமைகளை
விலக்கிவிட்டு நம்மால் சேர்ந்து நிற்க முடியாதா?

போலந்தை நாசி படைகள் கைப்பற்றிய பொழுது அங்கு பல குழுக்கள் undergroundஇல்
நின்று நாசிகளுக்கு எதிராகப் போராடினார்கள். ஆனால் அந்நிலையிலும் கூட
போலிஷ் போராளிகளும் கம்யூனிசப் போராளிகளும் யூதப் போராளிகளும் தனித்தனியாகவே
போராடினார்களாம்… எதிரியில் பலமே அது தான் போல….

சித்தார்த்.

அன்புள்ள சித்தார்த்

நம்பீயப்பயணம் மிகச்சிறப்பான அனுபவம்

ஒழிமுறி மிகப்பெரிய விமர்சக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அது வணிகப்படம் அல்ல என்றாலும் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது.

மலையாளத்தில் ஐந்து படங்களுக்கு எழுதவிருக்கிறேன். அவை வணிகப்படங்கள்தான். ஆனால் தொடக்கம் ஒரு கலைப்படம் வழியாகத்தான் நிகழவேண்டும் என்றிருந்தேன். இல்லையேல் வணிகத்தளத்திலும் கௌரவம் இருக்காது

கூடங்குளம் போராட்டத்தின் நிலை பதற்றத்தை அளிக்கிறது. ஆனால் சொல்லில் எரிச்சல் வந்துவிடக்கூடாது என்று என்னை நானே கட்டுப்படுத்திக்கொள்கிறேன்

ஜெ

குறைந்தது நம்மால் போராட முடியும் என்றாவது சர்வதேசக் கூட்டுக்கொள்ளையர் தெரிந்துகொள்ளட்டும்

வரும்காலங்களில் இந்தியக் கனிவளங்களுக்காக, நீருக்காக நாம் அவர்களுடன் மேலும் தொடர் போராட்டங்களை நிகழ்த்தவேண்டியிருக்கும் . இது ஒரு முன்னோட்டம்.
//

மிக மிக ஆழமான வரிகள்

ஜெமோ விற்கு சல்யூட் !

புரூனோ

அன்புள்ள புரூனோ,

இந்தியாவைப்போலவே ஆப்ரிக்க நாடுகளை சீனா விழுங்க ஆரம்பித்திருக்கிறது. கனிவளங்களுக்காக. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் போர் என்பது தொழில்நுட்ப ஆதிக்கம், கனிவளம் சுரண்டப்படுதல் ஆகியவற்றுக்கு எதிரானதாகவே இருக்கும் என நினைக்கிறேன்

ஜெ

இனிய ஜே எம் , கூடங்குளம் பதிவு கண்டேன் .நம் தினசரிகள் அரசுவிளம்பரங்கள் என்ற கவர்ச்சியை நம்பி குப்பை கொட்டுபவை, .அவைகளுக்கு முதலாளி கும்பி நிறைந்தால் போதும் .அறிவுஜீவிகளுக்கோ சூழலியல் பற்றி ஒருமண்ணும் அக்கறை கிடையாது .உதயகுமார் யோக்யதை மட்டுமே அவர்களின் ஒரே சிக்கல் .கசாப்புகடையில் ,கழுத்தறுபட்டு துள்ளிக்கொண்டிருக்கும் ஆட்டுக்குப்பின் சொரணை அற்று தழை மேய்ந்துகொண்டிருக்கும் சக ஆடுபோல நம் மத்தியவர்க்கம் ,இத்தனையும் கடந்து நம்புகிறேன் , சத்ய மேவ ஜெயதே . கடலூர் சீனு .

அன்புள்ள சீனு

இன்றைய மாலைமலரின் செய்திஉ ‘வெடிகுண்டு கிராமத்தில் உதயகுமார் பதுங்கல்?’

ஒரு தீவிரவாதியை உருவாக்கி போட்டுத்தள்ள என்ன ஒரு ஆவேசம்?

இந்திய இதழியல் இன்றைய சமூகத்தின் மாபெரும் அசிங்கங்களில் ஒன்று

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
கூடங்குளம் விவகாரத்தில் அரசின் அணுகுமுறையைவிட தினமலரின் வார்த்தைகள் கொடூரமானவையாக இருந்தன. ஊழல்வாதிகள் உலாவித்திரியும் இந்நாட்டில் எளிய மனிதனின் அறப்போராட்டம் தேசதுரோகமாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நீங்களே சொல்லியது போல் வம்பு பேசும் கிளர்ச்சி மனநிலை கொண்டவர்களுக்கான செய்திகளையே அது வழங்கி வருகிறது. கூடங்குளம் அணு உலையின் பின்னணியிலுள்ள பேரங்களையும் பெருநிறுவனங்களின் நாசகரங்களையும் அவர்கள் நிச்சயம் உணர்ந்தே இருப்பார்கள்.இணையவிவாதங்களிலும் கூடங்குளம் ஒரு பொழுதுபோக்கு மனநிலையிலேயே விவாதிக்கப்படுகிறது. ஏதோ 20-20 கிரிக்கெட் பார்க்கும் மனநிலையில் பலரும் இந்தப் பிரச்சனையைப் பார்க்கிறார்கள்.இந்த அறப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பறிபோகும் இயற்கை வளங்களையும் பாழாகும் நீரையும் ஞாபகப்படுத்தி எச்சரிக்கை செய்தமைக்கு நன்றிகள் பல.நமது மாவட்டத்தில் பெருங்குன்றுகள் பல காணாமல் போகிவிட்டன. எதைஎதையோ இழந்து கொண்டிருக்கிறோம் ஆனால் எதையுமே பெறவில்லை இதுவரை.
பாலா

முந்தைய கட்டுரைஒழிமுறி-விமர்சனங்கள்
அடுத்த கட்டுரைகனி