கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்திருப்பதை நமீபியாவிலிருந்து ஊர் வந்துசேர்ந்ததுமே அறிந்தேன். செய்திகளில் அது மக்கள்போராட்டம் வன்முறை நோக்கித் திரும்பியது என்ற கோணத்திலேயே அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தினமலர் போன்ற நாளிதழ்களில். ஆனால் இங்கே வந்து சேர்ந்தபின் நான் அறிந்தது அது முழுக்கமுழுக்க ஓர் அரசுவன்முறை மட்டுமே என்றுதான். நாளிதழ்ச்செய்திகள் அனேகமாக பொய் என்றே சொல்லவேண்டும.
ஏனென்றால் நாளிதழ்களின் பொதுமனநிலை ஒன்று உண்டு. ஒரு கிளர்ச்சியை அல்லது போராட்டத்தை ஆரம்பத்தில் அதன் செய்தி மதிப்புக்காக அங்கீகரித்துக் கொண்டாடும் இதழ்கள் ஒரு கட்டத்தில் அதன் மீதான பெரும்பான்மையினரின், அமைப்புமனிதர்களின் மனநிலையைப் பிரதிபலிக்க ஆரம்பிக்கின்றன.
நமது பெரும்பான்மை மக்கள் ஆழமான ஆன்மீகச் சோம்பலில் மூழ்கியவர்கள். ஊழல், ஒழுங்கின்மை ஆகியவற்றை ஆளுமையாகவே வளர்த்துக்கொண்டவர்கள். இன்றைய எல்லா சீரழிவுகளிலும் சேற்றில் பன்றி போல வாழ்பவர்கள். அன்றாட வாழ்க்கைத் தேடல், சாயங்கால மது, அரசியல் சினிமா அரட்டை ஆகியவற்றுக்கு அப்பால் ஏதேனும் ஆர்வங்கள் கொண்டவர்கள் என எத்தனைபேரை உங்களுக்குத் தெரியும் என்று சிந்தித்தாலே போதும்.
அந்த மக்களையே தங்கள் புரவலர்களாக எண்ணும் ஊடகங்கள் ஆரம்பத்தில் அவர்களுக்குக் கிளர்ச்சியை ஊட்டுகின்றன. ஒரு தருணத்தில் அவர்கள் சலிப்படையும்போது அவர்களுக்கான செய்திகளை அளிக்க ஆரம்பித்துவிடுகின்றன. ஆகவேதான் சுதந்திர இந்தியாவில் நடந்த எல்லா மக்களியக்கங்களும் உச்ச கட்டத்தில் ஊடகங்களால் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டு நகைச்சுவையாக ஆக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. அண்ணா ஹசாரேயின் இயக்கம் வரை இதுவே நிலைமை. கூடங்குளத்திலும் நிகழ்வது இதுவே.
இந்தியா பலநூற்றாண்டுக்காலமாகவே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஆன்மா செத்த இச்சமூகத்தை நோக்கி அறிவார்ந்த அறைகூவலை விவேகானந்தர் விடுத்தார். அங்கே ஆரம்பித்த ஓர் இலட்சியவாத அசைவு காந்தியின் இயக்கத்துடன் முடிவுக்கு வந்தது. அதன்பின் இங்கே நிகழ்ந்தவை அதிகார இயக்கங்கள். சமூக பொருளியல் ஆதிக்கத்துக்கான பூசல்கள், போட்டிகள். உண்மையான இலட்சியவாதம் நாமறியாதது.
உண்மையான இலட்சியவாதம் என்பது பிறருக்காக, பொது நன்மைக்காகப் போராடுவது. நம் அரசியல் கிளர்ச்சிகள் எல்லாமே தனக்காக, தன் குழுவுக்காக போராடக்கூடியவை. தன் நலனை விட தான் நம்பும் இலட்சியங்களுக்கான போர் அரிதிலும் அரிதே. ஆகவே அப்படி ஒரு போராட்டம் இங்கே நடந்தால்கூட நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதை ஒரு சுயநலப்போராட்டமாகவே நாம் எண்ணுகிறோம். பிறர் தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் போராடும்போதுகூட அது நம்மை பாதிக்கவில்லை என்றால் நாம் எதிர்க்கிறோம்.
ஆகவேதான், நாம் செயலற்ற சமூகமாக மாறிவிட்டிருக்கிறோம். எந்தப்போராட்டமும் இறுதியில் பிசுபிசுக்கும் என அரசு நிறைவுடன் இருக்கிறது.
கூடங்குளம் திட்டம் முற்றிலும் தேவையற்றது, ஊழலுக்காக மட்டுமே உருவாக்கப்படுவது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அதில் ‘கொள்முதல்’ செய்பவர்களும் செய்தவர்களும் எளிதில் அதை விட்டுவிட மாட்டார்கள். அது ஒரு பிரம்மாண்டமான நிதிச்சதிப்பின்னல். அதை கூடங்குளம் மக்கள் எதிர்ப்பது யானையை முயல் எதிர்ப்பதுதான்.
கூடங்குளம் மின்சாரத்துக்குத் தேவை என நான் நினைக்கவில்லை. நம்முடைய பெரும்பான்மையான நீர்மின்சாரத்திட்டங்கள் இன்று பாதிப்பங்கு கூடச் செயல்படுவதில்லை- பேச்சிப்பாறை உட்பட. காரணம், நிதிப் பற்றாக்குறை. ஆனால் அவற்றை விட பல்லாயிரம் மடங்குச் செலவில் நாம் இரண்டாம் விலைக்கு வாங்கிய அணு உலைகளை அமைத்துக்கொண்டிருக்கிறோம். இதைச்சுட்டிக்காட்ட அறிவியல்மேதையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. மயிர்பிளக்கும் விவாதங்களும் தேவை இல்லை.
கூடங்குளத்தில் மக்கள் அரசலுவலகங்களை முற்றுகையிட்டதை மாபெரும் வன்முறை என்று சொல்கிறது அரசு. மணல் என்ற கொடூர ஆயுதத்தை வீசினார்கள் என்கிறார் காவல் உயர் அதிகாரி. முற்றுகை மறியல் எல்லாமே ஜனநாயகப் போராட்டங்களின் வடிவங்கள்தான். கூடங்குளம் போராட்டத்தை வன்முறைப்போராட்டமாக ஆக்குவது அரசுக்கு லாபம். குணமாகாத ரணத்தை வெட்டி வீசி மேலும் பெரிய ரணமாக ஆக்கி அந்த ரணத்தை எளிதில் குணப்படுத்தலாம் என்ற அலோபதி வழிமுறை அது. அதைத்தான் அரசு செய்ய முயன்றது. மக்கள் வன்முறை நோக்கி வராதபோது அரசே வன்முறையை உருவாக்கியிருக்கிறது.
கூடங்குளம் மக்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறேன். அவர்கள் போராட்டத்தை ஆதரிக்கிறேன். சுதந்திர இந்தியாவில் இது வரை நடந்த எல்லாக் கிளர்ச்சிகளும் கவைக்குதவாத ராணுவ-தொழில்மயப் பெருந்திட்டங்களால் குரூரமாக வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களாகவே இருந்துள்ளன. பலியபால் முதல் நர்மதா வரை. எங்கும் ஒருவருக்கும் இழப்பீடு அளிக்கப்பட்டதில்லை. அம்மக்கள் போராடியபோது இந்திய நடுத்தர வர்க்கம் அவர்களை எள்ளி நகையாடி, அரசியல் பேசி, விவாதம் செய்து தோற்கடித்தது. அவர்கள் எதையும் பெறாமல் சிதறி அழிந்தனர். அது கூடங்குளத்திலும் நிகழக்கூடாது.
இந்தப்போராட்டத்தில் நிகழ்ந்த அடக்குமுறையையும் அகிம்சைப்போரின் ஒரு பகுதியாகவே நினைக்கிறேன். தாங்கள் நம்புவதற்காக துயரங்களின் எந்த எல்லை வரை தங்களால் செல்லமுடியும் என்று எதிர்த்தரப்புக்குக் காட்டுவதும் போராட்டத்தின் பகுதிதான்.
இந்தப் போராட்டம் பற்றிய செய்தியை மும்பை நாளிதழ்களில் பார்த்தபோது இதில் அரவிந்த் கேஜ்ரிவால் ஈடுபட்டது எந்த அளவுக்கு தேசியத் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்று தெரிகிறது. கேஜ்ரிவால் சொன்னதுபோல உதயகுமார் தொடர்ந்து போராடவேண்டும் என்றே நினைக்கிறேன். குறைந்தது நம்மால் போராட முடியும் என்றாவது சர்வதேசக் கூட்டுக்கொள்ளையர் தெரிந்துகொள்ளட்டும்.
வரும்காலங்களில் இந்தியக் கனிவளங்களுக்காக, நீருக்காக நாம் அவர்களுடன் மேலும் தொடர் போராட்டங்களை நிகழ்த்தவேண்டியிருக்கும் . இது ஒரு முன்னோட்டம்.