சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருது பெற்ற தலைப்பாவுக்கப் பிறகு மதுபால் இயக்கிய படம் ஒழிமுறி. எழுத்தாளரும் திரைக்கதையாசிரியருமான ஜெயமோகன் எழுதிய தன்வரலாற்றுக்குறிப்புகளின் தொகுதியான உறவிடங்கள் இந்த சினிமாவுக்கு ஆதாரம்.
மொழியடிப்படையில் திருவிதாங்கூர் பிரிக்கப்பட்டு கேரளம்- தமிழ்நாடு என்று பிரிந்தபிறகு நிகழ்ந்த மாற்றங்கள் மண்ணில் நிகழ்ந்தது மட்டும் அல்ல. அந்த ஊர்களில் அவர்களின் மொழியில் , பண்பாட்டின் மாற்றங்களாக இருந்தன. சரித்திரபூர்வமான இந்த காலகட்டத்தில் நிகழும் ஒரு கதையை சொல்கிறார் இயக்குநர். சில மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள், அவர்களின் தனிப்பட்ட உறவில் , ஆன்மாவில் வரும் பிரிவும் உறவும் இங்கே பேசப்படுகிறது
நீதிமன்ற மொழியில் உள்ள ஒரு சொல். விவாகரத்துக்கான வார்த்தை [ புடமுறிக்கு எதிர்ச்சொல்] எழுபத்தைந்து வயதான தாணுப்பிள்ளையில் இருந்து ஒழிமுறி கேட்பவர் 55 வயதான மீனாட்சியம்மா. அவர் சமர்ப்பிக்கும் மனுவில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. ஃப்ளாஷ் பேக் வழியாக மூன்று தலைமுறைகளின், உறவுகளின் கதை சொல்லப்படுகிறது. மருமக்கள்தாய அமைப்பின் படிப்படியான வீழ்ச்சியும் அதனுடன் பெண்களின் ஆதிக்கமும் உரிமைகளும் இல்லாமலாவதும்தான் இப்படத்தின் முக்கியமான பேசுபொருள்
பழைய திருவிதாங்கூரின் நேர்ச்சித்திரத்தை அளிக்கிறது ஒழிமுறி. அந்தப்பகுதியின் வாய்மொழி சினிமா முழுக்க வந்துகொண்டிருக்கிறது. நகைச்சுவைக்காக மட்டுமே இப்போது மலையாள சினிமாவில் பிராந்திய உச்சரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அதனாலேயே இது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு முயற்சி. வழக்கமான சினிமா காட்சிகளில் இருந்து வேறுபட்டு மிக வித்தியாசமான ஒரு கதைக்கருவும் அதன் சரியான சித்தரிப்பும் இப்படத்தில் உள்ளதனால்தான் இது ஒரு முக்கியமான பார்வையனுபவமாக ஆகிறது.
தெற்குக் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள வண்ணங்கள் நிறைந்த நாட்டார்கலைகளைக் காட்டிச்செல்லும் முகப்புப்பாடலை ஜெயமோகனே எழுதியிருக்கிறார். சென்று மறைந்த ஒரு காலத்தை அதன் கறாரான தன்மையுடன் சொல்ல அழகப்பனின் காமிரா வெற்றிபெற்றிருக்கிறது.
மூன்று தலைமுறைகள் வழியாக ஆண் பெண் உறவின் தளங்களை திரைநீக்கம் செய்து காட்டுகிறது ஒழிமுறி. இந்தமாற்றங்கள் அந்தந்தக் காலகட்டத்தில் உருவான சமூக, பொருளியல், அரசியல் மாற்றங்களில் பிரதிபலிப்பும்கூட. அதிகாரமும் பணமும் உள்ளவளாக இருக்கிறாள் பெண். எல்லாம் அவள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு காலகட்டத்தில் கதகளியானாலும் மல்யுத்தமானாலும் அவள் முன்னால் அவளுடைய விருப்பங்களுக்கு ஏற்ப நிகழ்த்தப்பட்டன. விரும்பிய ஆணை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் அவளுக்கு உரிமை இருந்தது. எப்போதாவது வந்து நுழையும் மல்லனை ஒருநாள் விவாகரத்து செய்து திருப்பி அனுப்ப காளிப்பிள்ளை அவனுடைய வெற்றிலைச்செல்லத்தைத் தூக்கி திண்ணையில் வைக்கிறாள், அவ்வளவுதான். [மல்லனுடனான உறவு தனக்கு நிகழ்ந்த ஒரு சிறிய பிழை என்று அவள் பிறகொருமுறை சொல்லவும் செய்கிறாள்]
ஆனால் தன் தந்தையின் துயரத்தைக் கண்டு வளரும் மகன் மனதில் அது உருவாக்கும் சித்திரமே வேறு.அம்மா மீதான கோபமாக அது அவனில் ஊறியது. அவன் பெண்ணை வெல்ல முயல்பவனாக ஆகிறான். பெண்ணை அஞ்சுபவனாக அதனாலேயே பெண்ணை அடித்து ஒடுக்கநினைப்பவனாக அவன் ஆகிறான்.
லாலின் நடிப்பு வாழ்க்கையில் மிகச்சிறந்த கதாபாத்திரம் இந்தப்படத்தின் தாணுபிள்ளையும் அவர் தந்தை சிவன்பிள்ளைச் சட்டம்பியும் என்று சொல்லலாம். தலைப்பாவு படத்தில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற லால் இன்னொரு பெரிய விருதை நோக்கிச்செல்ல நான்கு வருடங்களுக்குப்பின் மதுபால் இயக்கிய இந்தப்படமே காரணமாக அமையக்கூடும்.
முதுமையில்கூட ஆண் துணை பெண்ணுக்கு வேண்டாம், அது சொந்த மகனாக இருந்தாலும் கூட என்று சொல்கிற காளிப்பிள்ளை. தலைதூக்கி மண்ணில் ஆழ மிதித்தே பெண் நடக்கவேண்டும் என்று சாகும்கணம் வரை நம்பியவள். எவர் முன்னாலும் தலைகுனிக்காமல் வாழ்ந்த காளிப்பிள்ளை கதாபாத்திரத்தை ஸ்வேதா மேனன் மறக்கமுடியாத கதாபாத்திரமாக ஆக்கினார். போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர் செல்லும் அந்த ஒரு காட்சியே போதும் காளிப்பிள்ளை யார் என்று புரிந்துகொள்ள. சில சமயங்களில் ஒப்பனை கொஞ்சம் மிகையாக இருக்கிறது என்பதைத் தவிர்த்தால் மலையாள சினிமாவின் மிகச்சிறந்த ஒரு பெண் கதாபாத்திரம் ஸ்வேதாவின் பேரில் என்றும் நினைவுக்கூரப்படும், இப்படம் வழியாக
மல்லிகா நடிக்கும் மீனாட்சி என்ற கதாபாத்திரம் காளிப்பிள்ளையின் கதாபாத்திரத்திலிருந்து மிகவும் வித்தியாசமான ஒன்று. மருமக்கள் தாய முறையின் வீழ்ச்சியுடன் இணைந்து உருவாகி வரும் ஆண்மேலாதிக்க அதிகாரத்தில் தன் இருப்பையும் குரலையும் இழந்த பெண். அடிப்பதற்கான ஒரு வீட்டுக்கருவி. எதற்கும் எதிர்வினையாற்றாதவள். பாவனா நடிக்கும் பாலா புதிய காலகட்டத்தின் பெண். கல்வி வழியாகச் சுதந்திரம் பெற்றவள். மூன்று