கையும் தொழிலும்

அன்புள்ள ஜெயமோகன் ,

இன்று மீண்டும்  யாப்பு கட்டுரை வாசித்தேன். மரத்தினை செதுக்கி செதுக்கி உருவம் கொண்டு வருவது போல் கட்டுரை இருந்தது. கடைசியில் காடு அய்யர் போல தமிழாசிரியர் வந்து என் மனதில் நின்று விட்டார் .இது போன்ற மனிதர்களை எனக்கு மிகப் பிடிக்கும் .இவர்கள் எந்த அபத்தங்களிலும் அதிலுள்ள அற்புதங்களை மட்டுமே காண்பவர்கள்.இந்த மனது கிடைத்தால் போதும் ,எந்த இடத்திலும் எந்த நிலையிலும் சந்தோசமாக வாழ்ந்திடலாம்

உப்பு புளி அகப்பை என்றால் என்னவென்று தெரியவில்லை.என் பெரியம்மா ஒரு வீட்டிற்குக் கல்லுக்கொத்த சென்றதை என் சிறுவயதில் கண்டிருக்கிறேன்..என் பெரியப்பா கொடுவாளுக்கும் கதிர் அருவாளிற்கும் பிடி மரத்தில் செய்வதையும் கண்டிருக்கிறேன். வெண்பாவையும் ஆசிரியப்பாவையும் பற்றி எழுதியிருந்தை இதை வைத்தே புரிந்து கொண்டேன் .

என் அம்மாவின் மாமா வெத்திலைபாக்கு வைக்க ஒரு சிறிய மரப்பெட்டி வைத்திருந்தார். அது மிக அழகாக இருக்கும் அது போல ஒன்றை என் அப்பாவுடன் போகும் போது தகரத்தில் செய்து பார்ப்பேன் .ஆசை ஆசையாய்ச் செய்து பார்ப்பேன் கடைசியில் நான் உருவாவக்க முனைந்ததற்கும் வந்த வடிவிற்கும் வெகுதூரம் இருக்கும் அதை அப்படியே போட்டு விடுவேன் . நான் பிறகு எந்திரவியல் படிக்கும் போது அதில் வரும் வரை படங்கள் எல்லாம் என் மனதில் பொருட்களாகவே வரும். மற்றவர்களை விட மிக விரைவில் வரைபடங்களை வரைந்து விடுவேன்.எந்த சந்தேகமும் இருக்காது ,அப்போது திறமைசாலி நான் என நினைப்பேன் .ஆனால் இப்போது நான் கருவான்(இரும்பு ஆசாரி) அதுதான் வேறொன்றுமில்லை என்று புரிகிறது.

நான் படிப்பு முடித்ததும் பணிக்குச் சென்ற போது என் மனம் அதில் ஒப்பவே இல்லை.வேறு ஒருவரின் யோசனையை அல்லது வரைபடத்தை நான் உருவாக்க வேண்டி இருந்தது.,வேறு ஒருவரின் மூளை மனம் செயல் பட நான் ஒரு கருவி,அது என்னால் முடியவில்லை.எந்திரவியல் சார்ந்து எல்லா நிறுவனங்களிலும் இதே நிலைதான்.ஒரு முறை நீங்கள் கோயில்களில் இருக்கும் சிற்பங்களை உருவாக்கும் சிற்பிகளுக்கு முழுமையான சுதந்திரம் இருந்தது என்றீர்கள்(சீனர்களையும் பிராமணர்களையும் கேலி செய்யும் சிலைகளை பற்றிப் பேசும்பொழுது).அது ஒரு பொற்காலம் போன்று எனக்குத் தோன்றுகிறது ,இன்று பெரும்பாலான வேளைகளில் வேலை செய்பவனுக்கும் உற்பத்தி பொருளுக்குமான ஆத்மார்த்த உறவே இல்லை. இன்று மீதமிருப்பது கலைப் பொருட்கள் உற்பத்தியில் மட்டும்தான்,கலை ரசனை மக்களிடத்தில் உருவாகும் போது ஆசாரிகள் தச்சர்களாக மாற முடியும் ,உங்கள் ஒரு கதையில் வரும் ஆதிவாசிகள் உருவாக்கிய மர பொம்மைகளை போன்று.

“யாப்புண்ணாக்க ஒரு சுக்கும் இல்ல கேட்டுக்கோ. அஞ்சாம்கிளாஸ் கணக்கக் காட்டிலும் சுளுவாக்கும். அப்பம் எல்லாவனும் கவித எளுதீர முடியுமாலே? எல்லா ஆசாரியும் எல்லாம் செய்யுதான். நூற்றில ஒருத்தனாக்கும் உளிக்க ஒப்பம் மனசையும் ஆத்மாவையும் கொண்டு வாறவன்… அப்பிடிச் செய்த ஓரோஉருப்படியிலயும் செய்த ஆசாரிக்க ஆத்மாவு நிக்குதுலே… உருப்படியத்தொட்டா மண்ணடிஞ்ச அந்த ஆசாரியைத் தொட்டதுபோலயாக்கும்”

இதை நான் அனுபவித்து இருக்கிறேன், எழுத்தில் ,உங்களை, அ, முத்துலிங்கத்தை,நாஞ்சில் நாடனை வாசிக்கும் போது இவர்கள் பேசுவதை நான் அருகில் நின்று கேட்டு கொண்டிருக்கிறேன் என்று தோன்றும் .

இக்கட்டுரை பற்றி மேலும் உங்களுக்கு எழுதுவேன்

ராதாகிருஷ்ணன்

அன்புள்ள ராதாகிருஷ்ணன்

அந்தக்காலத்தில் ஆசாரிமார் கொட்டாங்கச்சியில் அகப்பை செய்வது போன்ற வேலைகளைச் செய்யமாட்டார்கள். கௌரவக்குறைவு.ஆசாரிகளின் மனைவிகளே அதைச் செய்வார்கள். அவர்களே விற்று அவர்களே செலவுசெய்வார்கள். என் அம்மாவின் தோழி ஒருத்தி மொத்தத்துக்கும் வளையலாகவே வாங்கிப் போட்டுக்கொண்டிருந்தாள். அம்மா ஆசையாக வாங்கிப்போட்டுவிட்டுத் திருப்பிக்கொடுப்பதை கண்டிருக்கிறேன்.

கலைக்கும் துல்லியமான தொழில்நுட்பத்துக்கும் இடையே சிறிய இடைவெளிதான் உள்ளது. கனகச்சிதமாக ஒரு கலப்பையை உருவாக்குபவன் தொழில்நிபுணன். ஆனால் அவன் அதில் புதியதாக ஏதும் செய்வதில்லை. மேலும் மேலும் அந்தத் திறனைத் துல்லியமாக்கியபடியே செல்கிறான், அவ்வளவுதான். மாறாக புதியதாக ஒரு கலப்பையை உருவாக்குபவன் கலைஞன்.

நம்முடைய பழைய மரபில் நிபுணர்கள் இருந்தார்கள். அபூர்வமாக கலைஞர்களும் இருந்தார்கள். ஆனால் மனநிறைவைப்பொறுத்தவரை ஒரு தொழில்நிபுணனுக்கும் கலைஞனுக்கும் இருப்பது ஒரே அளவுதான் என்றே நினைக்கிறேன்.

இன்றைய உற்பத்திமுறை தனித்திறன்களை அழிக்கிறது. ஆகவே உற்பத்திசெய்யும் தொழிலாளி இல்லாமலாகி வெறுமே உழைப்பை விற்கும் தொழிலாளி மட்டும்தான் எஞ்சியிருக்கிறான். தான் ஒன்றைப் படைப்பதாக எண்ணும்போது தொழிலாளி கொள்ளும் மனநிறைவு இன்றைய உழைப்பில் இல்லை. ஊதியம் அன்றி உழைப்பில் அவனுக்கு எந்த நன்மையும் இல்லை.

உழைப்பின் இன்பம் இல்லாமலானது உழைப்பாளியை உழைப்பில் இருந்து அன்னியப்படுத்துகிறது. இளம்வயதில் கார்ல் மார்க்ஸ் இதை விரிவாக எழுதியிருக்கிறார். இதில் இருந்து மேலே சென்று முதலாளித்துவத்தில் தொழிலாளி அன்னியப்பட்ட அடிமையாக ஆனதை அவர் விரிவாக ஆராய்கிறார்

காந்தி அவரது எழுத்துக்களில் மிகுந்த அக்கறையோடு இந்த விஷயத்தைப் பேசியிருக்கிறார். கையால் ஒன்றை உற்பத்தி செய்வதன் இன்பத்தை மறுக்கக்கூடிய தொழில்நுட்பம் உலகுக்குத் தேவையே இல்லை, அது வெறும் நுகர்வு வெறியை மட்டுமே உருவாக்கும், கடைசியில் இயற்கையை மிதமிஞ்சி சுரண்டி உலகை அழிக்கும் என்று காந்தி வாதிட்டார்

உங்கள் சொந்த அனுபவங்களில் இருந்து நீங்கள் மேலே சென்று நிறைய வாசித்தறியவும் யோசித்தறியவும் முடியும். அது உங்கள் உலகை இன்னும் துல்லியமாக ஆக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைகடம்மன்
அடுத்த கட்டுரைக.நா.சு.கடிதங்கள்