மதிப்புமிக்க ஜெயமோகன்,
வணக்கம். சமீபத்தில் வந்த பத்திரிக்கை செய்தியின்படி, தமிழக அரசு, அறநிலையத்துறை துணைகொண்டு கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருப்புக் கட்டிடங்கள் கட்ட யோசித்து வருகிறது. சென்னையின் சுற்றுப்புறத்தில், சில கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மொத்தம் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதில் உள்ள பொதுப்பயன்கள், கோவிலுக்கு வருமானம், மற்றும் ஊழலுக்கான வாய்ப்பு என்பவைகளைத் தாண்டி இதில் யோசிக்கவேண்டியது ஏதும் உள்ளதா ? இச்செயல் நிலங்களை மீட்கவே முடியாத ஒரு நிலைக்குத் தள்ளும் என்றே தெரிகிறது. பண்டைய காலங்களில் கோவில்களுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டதற்கு , விளைச்சலையும் தாண்டி வேறு ஏதாவது விசாலமான தொலைநோக்குப் பார்வை இருந்திருக்க வாய்பிருக்கிறதா.. அந்தக் காரணங்கள் இப்பொழுது காலாவதி ஆகிவிட்டனவா ? ஒரு பக்கம் தண்ணீர்ப் பற்றாக்குறையும், மழைக்காலத்தில் தேங்கும் நீருக்கு வடிகாலும் இல்லாமல் தவிக்கும் சென்னை நகரில், இவைகளை மேலும் குளங்கள், ஊரணிகள் கட்டப் பயன்படுத்தலாமே? முற்றுப்புள்ளியே இல்லாமல் நகரில் பெருகிவரும் ஜனத்தொகைக்கு இந்நிலங்களை காவுகொடுத்தல் சரிதானா ? என் கேள்விக்கு “யாரோ பொதுச்சொத்தை அழித்து காசு பண்ணுகிறார்கள்” என்ற கோபம் காரணம் அல்ல. பசுமைப்புரட்சியின் கதை என்ற நூலுக்கு நீங்கள் எழுதிய முன்னுரையில், மரபான வேளாண்மை விதிகள் மறக்கப்பட்டதால், சர்பக்காவுகள் அழிக்கப்பட்டு, சிமெண்ட் கட்டிடங்கள் உருவானதின் பலன்களை சொல்லி இருந்தீர்கள் . இந்தக் கோவில்நிலங்களில் கட்டிடமயமாக்கலின் பின் அப்படி ஒரு ஞானமழிவு இருக்குமோ என்ற சந்தேகமே காரணம்.உங்கள் கருத்து என்ன சொல்லமுடியுமா ?
நன்றி
கோகுல்
அன்புள்ள கோகுல்,
இன்று மாலை நாகர்கோயில் வழியாக நடந்துகொண்டிருந்தபோது நினைத்துக்கொண்டேன். நாகர்கோயில் நகரில் இருந்த கணிசமான பொது அமைப்புகளின் நிலங்களில் கட்டிடங்கள் எழுந்துவிட்டன. குறிப்பாக சி.எஸ்.ஐ கிறித்தவ அமைப்புகள் வைத்திருந்த ஏராளமான நிலங்களில் புது பிஷப்புகள் வந்ததும் கட்டிடங்கள் கட்டுகிறார்கள். கடைகள்தான் அதிகம். அவற்றின்மூலம் பெரும் வருமானம் வருகிறது.
ஆனால் அதன்விளைவாக நகரம் மூச்சுவிடமுடியாதபடி நெரிசலாகிறது. கோயில்கள் ,சர்ச்சுகள், அரசு அமைப்புகளுக்கே ஒரு நகர் நடுவே பெரிய நிலங்கள் இருக்க முடியும். அந்த நிலங்களைக் கட்டிடங்களாக ஆக்கிவிட்டால் மெல்லமெல்ல நம் நகரங்கள் எல்லாமே அடைசலான இடங்களாக ஆகிவிடும். நகரத்தில் திறந்தவெளிக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. நம் நகரங்களில் இருந்து மேலைநாட்டு நகரங்களுக்குச் செல்லும்போதுதான் அதை உணரமுடிகிறது. சென்னையின் ஒரே திறந்த வெளி மெரினாதான். அங்கே கூடக் கட்டிடங்களாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே நகரில் உள்ள எந்தப் பொது நிலத்திலும் இனிமேல் கூடுமானவரை கட்டிடங்கள் கட்டாமலிருக்கலாம் என்பதே என் எண்ணம். கட்டிடங்கள் தேவை என்றால் நகரை விரிவாக்கலாம்
இது ஒரு எண்ணம். ஆனால் ஆலயநிலங்களைக் கட்டிடங்களாக ஆக்குவதென்பது ஓர் அப்பட்டமான கொள்ளை. நம் ஆலயங்கள் அரைநூற்றாண்டாக ஒட்டச்சுரண்டப்படுகின்றன. அவற்றுக்குச் சொந்தமான சொத்துக்கள் முழுக்க தனியார் கையில் உள்ளன. உண்டியல்பணம் கஜானாவுக்குச் செல்கிறது. பராமரிப்பில்லாமல் பேராலயங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன.
இப்போது எஞ்சும் நிலங்களில் கட்டிடங்கள் கட்டுவதென்பது அவற்றை ‘சாப்பிடுவதற்கான’ முயற்சி மட்டுமே.அதன் மூலம் ஆலயவருமானம் அதிகரிக்கும் என்பதெல்லாம் அபத்தம். 1950 வாக்கில் நெல்லையப்பர் கோயில் முகப்பில் ஒரு திருவிழாவுக்காக சில கடைகளுக்கு இடம் வாடகைக்கு விடப்பட்டது. இன்று வரை அந்த இடம் காலிசெய்யப்படவில்லை. வாடகையும் அளிக்கப்படவில்லை. மதுரை புதுமண்டபம் ஒரு திருவிழாவுக்கு சிலநாட்களுக்குக் கடைகளாக வாடகைக்கு விடப்பட்டது. இன்று அது ஒரு சந்தை. காலிசெய்ய முடியவில்லை, வாடகையும் வரவில்லை.அப்படி தமிழகத்தில் பல்லாயிரம் கட்டிடங்கள் தனியாரால் அனுபவிக்கப்படுகின்றன.
அதுதான் இந்தக் கட்டிடங்களுக்கும் நடக்கும். கட்டிடங்களை கட்டி ‘வாடகைக்கு’ விடுவார்கள். வாடகையும் வராது, இடமும் பறிபோகும். பத்மநாபசாமியின் செல்வம் பற்றிய தகவல்கள் வெளிவந்ததும் நம்மூர் அரசியல்வாதிகள் நாவூற மக்கள்பணிக்கு அச்செல்வம் கிடைக்கவேண்டும் என்றார்களே, அந்த மக்கள்பணி இதுதான்.
ஆனால் ஆலயச்சொத்துக்கள் அழிவதைப்பற்றி பொதுவாக இந்துக்கள் கவலையேபடுவதில்லை. பக்தர்கள்கூட சுயலாபத்துக்காகக் கும்பிடுகிறார்களோ ஒழிய ஆலயப்பாதுகாப்பு பற்றி அக்கறை கொள்வதில்லை. கலைச்செல்வங்களாக தமிழக ஆலயங்கள் இன்னும் நூறு வருடங்களுக்கு இருக்குமா என்பதே ஐயம்தான்.
ஏனென்றால் அவை தகுதியற்ற அற்பர்களிடம் மூதாதையர் தந்துசென்ற பொக்கிஷங்கள்
ஜெ