புதிய வாசிப்பறை

மலையாளம் பாஷாபோஷினி இதழில் எம்.டி.வாசுதேவன்நாயர் தன் சினிமா அனுபவங்களை கட்டுரையாக எழுதி வருகிறார். எதை எழுதினாலும் வாசிக்கும்படி எழுதுவது எம்டியின் வழக்கம். இக்கட்டுரைத்தொடரும் மிகச் சுவாரசியமானது. முகங்கள் முகங்களாக காலம் கடந்துசெல்வதை அதில் காணமுடிகிறது.

ஜூன் மாத இதழில் எம்டி விடுதி அறைகளைப் பற்றி எழுதியிருக்கிறார். அவர் சிறு வயதில் தன் பழைய வீட்டின் மரத்தாலான திண்ணையில் குப்புறப்படுத்துக்கொண்டு எழுதுவாராம். ஒரு வாசிப்புமேஜை வேண்டும் என்ற கனவு நெடுங்காலமாகவே இருந்திருக்கிறது. பின்னர் கோழிக்கோட்டுக்குப் படிக்கச் சென்றபோது பலருடன் பகிர்ந்துகொள்ளும் அறை. அதன்பின் வேலைக்குச்சென்ற பின்னரே ஒரு மேஜை சாத்தியமாகியது.

சினிமாவுக்குச் சென்றபின் மெல்லமெல்ல வசதியான அறைக்கான தேவை மானசீகமாக உருவானதைச் சொல்கிறார். நல்ல விடுதியறை தேவை என்று எப்போது மனதில் தோன்றியதென சொல்ல முடிவதில்லை. தான் தங்கிய பல்வேறு அறைகளைப்பற்றிச் சொல்லிக்கொண்டே செல்கிறார். சென்னையின் கடலோர விடுதிகள் மேல் அவருக்கு ஒரு பெரும் பிரியம் இருந்திருக்கிறது. குறிப்பாக கூட்டமில்லாத பழைய ஓட்டல் அறைகள்.

ஏறத்தாழ என் அனுபவம் அது. எனக்கு சிறுவயதில் தனி இடமே இருந்ததில்லை. அப்பாவுக்குத் தெரியாமல் எங்காவது ஒளிந்துகொண்டு படிப்பேன். கோயிலுக்குள் நுழைந்து பிராகாரத்தில் அமர்ந்து எழுதுவேன். தோட்டத்தில் ஒரு பலாமரம் மீது ஒர் இடமிருந்தது.  எனக்கான பல ‘பொந்துகளை’ கண்டுபிடித்து வைத்திருந்தேன். பின்னர் நான் வேலைக்குச் சென்றபோது உடனே செய்துகொண்ட வசதி ஒரு எழுத்து மேஜை. அப்போதுதான் அந்த வசதி எனக்கு தேவையாக இருப்பதை உணர்ந்தேன். ஒரு மேஜைமுன் அமர்ந்து எழுதுவது பற்றி நான் குதூகலித்தது நினைவிருக்கிறது.

சென்ற பல வருடங்களாக நான் வீட்டில் படுக்கை அறையில் இரு கட்டில்களுக்கு ஓரமாக கணிப்பொறி வைத்து அதில் அமர்ந்துதான் எழுதிவந்தேன். வீட்டுக்குள் குழந்தைகள் கும்மாளமிடும். நாய் உள்ளேயே ஓடி குரைக்கும். சமையலறையை ‘ஒரு கண்’ பார்த்துக்கொள்ள அருண்மொழி சொல்வாள். சிலசமயம் வாஷிங் மெஷினை ‘அரைக்கண்’ பார்த்துக்கொள்ள வேண்டும். என் கம்யூட்டரைச் சுற்றி புத்தகக் குவியல். நடுவே யாராவது வந்தால் கட்டிலில் அமர்ந்துகொள்ள வேண்டும்.

சினிமாவுக்குச் சென்றதுமே நான் வசதியான அறையை விரும்ப ஆரம்பித்தேன். எப்போது எப்படி அந்த விருப்பம் உருவாகிறது என்பது விந்தைதான். ஒரு நல்ல அறை நம் மனதை உள்ளூர மகிழ்விக்கிறது. அங்கே நாம் நல்ல ஒரு விஷயத்தை எழுதிவிட்டோமென்றால் அந்த இடமும் அந்த விஷயமும் இணைந்துகொள்கின்றன. அந்த அறை, அதே போன்ற அறை, மனதுக்கு பிடித்தமானதாக ஆகிறது. அதே போன்ற அறையை நாம் உள்ளூர விழைகிறோம்.

‘கஸ்தூரிமான்’ எழுதும்போது சென்னை விஜய்பார்க் ஓட்டலில் தங்கிய அறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாலாவது மாடியின் அழகான நேர்த்தியான அறை. ஒரு பக்கம் பெரிய கண்ணாடிச்சன்னல். அதன் வழியாக வானம். பொதுவாக பெரிய கண்ணாடிச் ஜன்னல் கொண்ட அறைகளே எனக்குப் பிடித்தமானவை. அவை அறைக்குள் வெளியைக் கொண்டு வருகின்றன. அறையின் தனிமையும் வானத்தில் விடுதலையும் ஒருங்கே சாத்தியமாகிறது.

பின்னர் கிரீன் பார்க். கொஞ்சம் ஆடம்பரம் கொண்ட அறை. அங்கே பாருக்கு வரும் கும்பல் உண்டு. ஆனால் நாலாவது மாடிக்குமேல் அறைகளில் வானம் வரும். கோடம்பாக்கம் ‘பிரதாப் பிளாஸா’ எனக்கு பிடிக்காத அறைகள் கொண்டது. ஆனால் எப்படியோ அங்கே தங்குகிறேன். பழகிவிட்டது. நண்பர்கள் வந்துபோக வசதியானது என்பதற்கு அப்பால் அதைப்பற்றி சாதகமாகச் சொல்ல ஒன்றுமே இல்லை.

சமீபத்தில் தங்கிய ராஜ் பார்க் அறை என்னை மிகவும் கவர்ந்தது. கிட்டத்தட்ட இருபதுநாள் அங்கே இருந்தேன். ஒருபக்கச்சுவர் முழுக்க பெரிய கண்ணாடி. வெளியே இருந்து உள்ளே தெரியாது. அகலமான வானம். கீழே கஸ்தூரி ரங்கன் என்கிளெவின் பசுமை. காற்றிலாடும் மரங்களின் அலைகள். இரவில்  ஒளி பெருக்கெடுக்கும் சாலை. வாலில் கண்சிமிட்டியபடி அமைதியாக நீந்தி மீனம்பாக்கம் சென்று இறங்கும் விமானங்கள்…

ஓங்கிய மலைக்குகைகளில் உள்ள சமணப்படுகைகளைக் காணும்போது அவற்றின் வாசலில் அமர்ந்து தியானம் செய்யும் சமண முனிவரைப் பற்றி எண்ணிக்கொள்வேன். அவர்களின் கண்முன் பெருகி விரிந்திருக்கும் நிலவெளி. குகைவாசலில் அமர்ந்திருக்கும் சமண முனிவரைப்போல் ராஜ் பார்க் அறையில் என்னை உணர்ந்தேன். குறிப்பாக நகரத்தைப் பார்த்தபடியே தூங்குவதற்காகப் படுக்கும்போது. தனிமை. ஆனால் நகர் நடுவே. காட்சிகளின் வெள்ளம், ஆனால் புகையும் இரைச்சலும் இல்லாமல்.

நல்ல அறை ஒன்றுக்கான தேவையை உணர்ந்தபின் அதைநோக்கியே மனம் தாவுகிறது. இப்போது மாடியில் என்  அறையைக் கட்டிவிட்டேன். ஒரு படுக்கையறை. வாசிப்பறை. கீழிறங்கிச்செல்லவும் மொட்டைமாடிக்குச் செல்லவும் வழிகள் கொண்ட ஒர் அறை. கீழே வீட்டில் இருந்து ஒருவகையில் என்னை விலக்கிக் கொண்டு விட்டேன். இது வசதியான நேர்த்தியான அழகான அறை.

சுவரில் இரு புத்தக அலமாரிகள். அவற்றை கண்ணாடி போட்டு வேலைமுடித்த மறுகணமே புத்தகங்களை கீழே புத்தக அலமாரியில் இருந்து கொண்டுவந்து அடுக்கி விட்டேன். புத்தகம் இல்லா புத்தக அடுக்கை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பின்பக்கம் அழகிய தேக்குமரவண்ன சட்டமிட்ட கண்ணாடிக்கதவுடன் இரு புத்தக அலமாரிகள் இருக்கின்றன என்ற எண்ணமே இனிய மனநிலையை உருவாக்குகிறது. இந்த புத்தக அலமாரிகளை நான் ரசித்த அளவுக்கு குறைவான கலைப்படைப்புகளையே ரசித்திருக்கிறேன்.

இந்த அறையின் இருபக்கமும் சன்னல்கள். பகலிலும் குளிர்காற்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஏஸி செய்யலாமென எண்ணம் முதலில் இருந்தது. ஆனால் சன்னலுக்கு அப்பால் தெரியும் மரங்களை இழக்க மனமில்லை. மேலும் இங்கே சத்தம் என்பதே இல்லை. நாயின் குரைப்பு, காகங்களின் ஒலி, அணில்பேச்சு தவிர எப்போதாவதுதான் மனித சத்தம். பொதுவாக அமைதியாகவே இருக்கும் கேரள மனநிலை நீடிக்கும் இடம் எங்கள் மாவட்டம்– நாகர்கோயிலுக்குள் வேறு பண்பாடு.

அனைத்துக்கும் மேலாக காற்றில் தென்னை ஓலையின் மெல்லிய சிறகடிப்பொலி  போல் எனக்கு அந்தரங்கமான ஒலி பிறிதொன்றில்லை. இருத்தலின் பேரின்பத்தை எனக்கு நினைவுறுத்தும் ஒலி அது. சன்னல் வழியாக கண்தூக்கிப் பார்க்கையில் கொல்லைப்பக்கத் தென்னை நெடுநாள் காதலிபோல நின்று கொண்டிருக்கிறது. தென்னையும் வாழையும்தான் குமரிமாவட்ட மரங்கள். இரண்டுமே ஈரத்துக்குரியவை. நீர் நிறைந்தவை.

குறிப்பாக இரவு நேரத்தில் தென்னை மிக நெருங்கி வந்துவிடுகிறது. கை நீட்டி ஜன்னலைத் தொடுகிறது. நள்ளிரவில் கதவைத்திறந்து மொட்டைமாடிக்குச் சென்றால் அக்கணமே டாபர்மான் டெட்டி பாய்ந்து வந்து விடுவான். காவலுணர்வுடன் கூடவே எச்சரிக்கையாக நின்று கொண்டிருப்பான். வேளி மலையில் இருந்து வரும் உடல் சிலிர்க்கச்செய்யும் குளிர் காற்றின் பெருக்கு. வானில் உதிரி விண்மீன்கள். நிலவு நாளில் என்றால் ஒளிகொண்ட மேகங்கள்  ஆரல்வாய்மொழி திசை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்.

கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ஆகியிருக்கிறது இந்த அறைக்கு. சினிமாவுக்குச் செல்லவில்லை என்றால் இதைக் கட்டியிருக்கவே மாட்டேன். சினிமா எனக்கு நான் விரும்பிய பலவற்றை அளித்திருக்கிறது. என்றுமே நான் விரும்புவது இரவை. விடிய விடிய விழித்திருப்பதை. ‘முட்டாள்கள்தான் இரவில் தூங்குவார்கள்’ கரிச்சான்குஞ்சுவின் பொன்மொழி. இரவில் எழுதிவிட்டு பிற்பகலில் தூங்குவதென்பது என் விருப்பமான வாழ்க்கை. ஆனால் அதை நான் நெடுநாள் கனவுதான் காணமுடிந்தது. காலையில் அலுவலகம் போகவேண்டுமென்ற கட்டாயம் இரவின் மீது பாறாங்கல் போல கனத்து இருக்கும் அப்போதெல்லாம்.

இரவின் குளிரில் அமைதியில் சொற்கள் தனியான அழகு கொள்கின்றன. மானுட வாழ்க்கைக்கு மேலே ஒரு மலை உச்சியில்  நின்றுகொண்டு அனைத்தையும் பார்க்கமுடிவது போல் இருக்கிறது. மனிதர்களின் துக்கத்தை, இன்பத்தை, துரோகத்தை, அன்பை. உலகமே தூங்கியபின் நான் மட்டும் விழித்திருந்து அவர்களை ஆதுரத்துடன் கவனித்துக்கொண்டிருப்பதுபோல. இரவில் விழித்திருப்பவன் வேறொரு பிரபஞ்சத்தை அறிகிறான். நோயாளியும், பித்தனும், ஞானியும், கலைஞனும் இரவில் தூங்குவதில்லை.

இன்று நான் வழக்கமாக விடிகாலை மூன்று மணிக்குத்தான் தூங்கச் செல்கிறேன். சிலசமயம் நான்கு மணிக்கு. நேற்று ஐந்து மணி ஆகியது. காலை ஏழுமணிக்கு எழுவேன். பிற்பகலில் ஒருமணிக்குச் சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து மணிவரை தூக்கம். புதிதாக இன்னொரு நாள்! ஒரே நாளில் இரண்டு விடியல்கள்! ஆம், இப்போது பல மாதங்களாக நான் அலுவலகம் செல்வதில்லை. மருத்துவ விடுப்பு. வேலையையே கிட்டத்தட்ட மறந்துவிட்டேன். இப்படியே வேலையை விடுவது திட்டம்.

நான் நேசித்த எதையுமே என்னால் இலக்கியம் மூலம் அடைய முடியவில்லை. இத்தனை வருடங்களில் இத்தனை எழுதியும். அதில் ஒரு சிறுபகுதியைக் கிள்ளி சினிமாவுக்குக் கொடுத்து இவற்றையெல்லாம் அடைந்திருக்கிறேன். நான் சினிமாக்காரன் அல்ல. சினிமா எனக்கு முக்கியமும் அல்ல. ஆனால் இன்று தமிழ் வணிக சினிமாவுக்கு நன்றியுடன் இருக்கிறேன். அது வாழ்க!

என்.எச்.47- தக்கலை

ஒவ்வொரு நாளும்:கடிதங்கள்

என்.எச்.47 என் பாதை

டைரி

டைரி கடிதங்கள்

படிப்பறைப் படங்கள்

முந்தைய கட்டுரைநாஞ்சில், வாழ்த்துக்கள்
அடுத்த கட்டுரைசாருவின் வசைகள்