தத்துவக்கல்வியின் தொடக்கத்தில்…

1

அன்புள்ள ஜெ,

எழுத்தாளர் சுஜாதாவும் அவருடைய சகோதரர் ராஜகோபாலன் அவர்களும் இணைந்து எழுதிய “பிரம்ம சூத்திரம் ஓர் எளிய அறிமுகம்” எனும் நூலை வாசித்த பின்னரே எனக்கு இந்து தத்துவ தரிசனங்களைத் தெரிந்து கொள்ள ஒரு ஆவல் உண்டானது. மேலும் அதன் பின்னர் தங்களின் “விஷ்ணுபுரம்” கதை நூலானது வேதகால வரலாறுகளையும் அக்கால நூல்களை வாசிக்கும் ஆர்வத்தையும் வளர்த்தது.

அவற்றைத் தொடாந்து வாசிக்கும் போது அந்நூல்களில் சொல்லப்படுவனவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது என்கின்ற முறையை, எனக்கென வகுத்து அவ்வாறே பின்பற்றி வாசிக்கிறேன்.

அவை:

1. முதலாவதாக அதை வாசிக்கும் முன் அவற்றின் மீது சுமத்தப்படும் புனிதத் தன்மையை விலக்கி சாதாரண நூல் ஒன்றாகவே வாசித்தல.

2. இக்காலகட்டத்தோடு பொருத்திப்பார்க்காமல் அந்நூல் எழுதப்பட்டதாக குறிக்கப்படும் காலகட்டத்தைப் புரிந்து கொள்ளுதல்.

3. அவற்றில் சொல்லப்படும் வழிபாட்டு முறைகள் நம்பிக்கைகள் ஆகியவற்றை நம் நம்பிக்கைகளோடு ஒப்பிட்டு குழம்பாதிருத்தல்.

4. அவற்றை உள்ளது உள்ளவாறே நம் கற்பனைகளை நுழைக்காமல் இகழ்ந்தோ வியந்தோ அல்லாமல் நேராகப் புரிந்து கொள்ளதல்.

5. பின்னர், அவற்றைப் பற்றித் தெளிவாகச் சிந்தித்து சரியான முடிவை அடைதல்.

தயவு செய்து நான் குறிப்பிட்ட வாசித்தல் மற்றும் புரிந்து கொள்ளும் முறையில் தவறுகள் இருப்பின் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

தங்களின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” புரிந்து கொள்ளுவதற்கு மிக எளிமையானதாகவும் விரிவானதாகவும் உள்ளது.

நன்றி,

அன்புடன்
துவாரகநாத்

(Sollaadal-bagu.blogspot.in)

அன்புள்ள துவாரகநாத்

இன்னும்கூட நீங்கள் பாமினியில் எழுதுவது ஆச்சரியம். அதுவும் பிரம்மசூத்திரமும் கிட்டத்தட்ட சமகாலத்தைச் சேர்ந்தவை என்ற மனப்பிரமை எழுகிறது.

ஆம் நீங்கள் சரியாகத்தான் வாசிக்கிறீர்கள். சொந்த வாசிப்பில் அந்தத் தெளிவை நீங்கள் அடைந்திருப்பதை வியக்கிறேன். வாழ்த்துக்கள். உண்மையைத் தேடுபவனுக்கு இந்திய ஞானமரபு ஒரு பெரிய வைரக்களஞ்சியம்.

நீங்கள் சொல்லும் வரிகளை நான் இவ்வாறு மேலும் விளக்குவேன். அதே வரிசையில்

1 தத்துவத்தை மதநம்பிக்கையில் இருந்து பிரித்தல். பிரம்மசூத்திரத்தையோ கீதையையோ நேற்றுவரை நம் முன்னோர் மதநூலாக வாசித்திருக்கலாம். இன்று அப்படி வாசிக்கவேண்டும் என்பதில்லை. தத்துவம் அறிவார்ந்த தர்க்கம் கொண்டது. அறிவார்ந்தமுறையிலேயே அதை அணுகலாம். நம்பிக்கைகளை, தொன்மங்களை அவற்றின்மேல் ஏற்றவேண்டியதில்லை.

2. வரலாற்றுப்பின்னணியில் வைத்துப்பார்த்தல். எந்த ஒரு ஞானநூலையும் அது உருவான, விவாதிக்கப்பட்ட வரலாற்றுப்பின்னணியில் வைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக பிரம்மசூத்திரம் வேதகாலத்துக்குப் பின்னர் வேதவேள்விகள் விரிவாக நிகழ்ந்த ஒரு சூழலில் உருவானது. வேதச்சடங்குகளுக்கு நீட்சியாகவும் அவற்றுக்கான அறிவார்ந்த எதிர்வினையாகவும் எழுந்த ஞானவிவாதங்களில் மைய இடம் கொண்டது. கங்கைசமவெளியில் ஆரியவர்த்தம் என்றழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிறிய அரசுகள் உருவாகி ஒன்றுடன் ஒன்று போரிட்டும் இணைந்தும் ஒரு பண்பாட்டுப்படலம் உருவான பின்னணியைக் கொண்டது

3. மதவேறுபாடுகளுக்கு அப்பால் , கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று வாசித்தல். இந்திய மெய்ஞானநூல்களை ஒட்டுமொத்தமாக ஒரு ஞானமரபாக வாசிக்கலாம். இந்துஞானநூல்களும் சமணஞானநூல்களும் பௌத்தஞானநூல்களும் எல்லாம் ஒரே ஞானப்பரப்பின் பகுதிகளே என்ற பார்வை மிகவும் தெளிவைத்தருவதாகும். எதன்மேலும் நாம் அவநம்பிக்கையோ மனவிலக்கமோ கொள்ளாமல் வாசிக்கமுடிந்தால் அது ஒரு பேறு.

4. முன்முடிவுகள் இல்லாமலிருந்த்தல். நம்முடைய இன்றைய சமகால அரசியல் அல்லது அழகியல் கோட்பாடுகளைக் கொண்டு அந்த ஞானமரபைப்பற்றிய முன்முடிவுகளை உருவாக்கிக்கொண்டால் இழப்பு நமக்கே.

5. தத்துவமரபு என்பது ஞானத்தின் தர்க்க வடிவம் மட்டுமே என்ற தெளிவுடன் இருத்தல். தத்துவம் எதற்கும் முழுமையான விடையை அளிக்காது. மெய்ஞானம் என்பது தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் அடையப்பெறும் ஒரு தரிசனம். அதை அழகியலுடன் வெளிப்படுத்துகையில் இலக்கியமாகிறது. தர்க்கபூர்வமாக வெளிப்படுத்துகையில் தத்துவமாகிறது. தத்துவமும் அழகியலும் தங்களுக்கான ஒரு முறைமையைக் கொண்டவை. அம்முறைமைக்குள் நின்றபடி நாம் அவற்றைப் பயில்கிறோம். ஆனால் தூய உள்ளுணர்வால் அவற்றின் வழியாகவே அவற்றை மீறிச்சென்றே நாம் மெய்ஞ்ஞானத்தை அறியமுடியும்

ஜெ

தத்துவத்தைக் கண்காணித்தல்

இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பதுபற்றி

அறிதல் அறிதலுக்கு அப்பால்


பயனுறு சொல்


இருபுரிச்சாலை

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 24, 2012 @ 0:01

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 58
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 59