Funny Junk என்ற இணையதளத்தில் இந்த படத்தைப்பார்த்தேன். அதன்மேலிருந்த குறிப்பு வயிற்றைப் பகீரிடச்செய்தது.
அள்ளி அணைத்துக்கொஞ்சவேண்டும் போல ஒரு குழந்தை. அந்த உற்சாகத் துருதுருப்பு எல்லாப் பிள்ளைகளுக்கும் வருவதில்லை. தெருவிலே பார்க்கலாம், பத்தில் நூறில் ஒரு பயல்தான் அப்படி எந்நேரமும் கொப்பளித்துக்கொண்டிருப்பான். அவன் கண்களில் அந்த மின்னல் எப்போதுமிருக்கும்.அஜிக்குட்டி அப்படி இருந்தான்.
அது இயற்கையிலேயே அமையும் ஓர் அக ஆற்றல்.அறிவுத்திறனோ, கற்பனையாற்றலோ, மன உறுதியோ எல்லாமே அந்த ஆற்றலின் வெவ்வேறு முகங்கள்தான். அந்த ஆற்றலே கலையாக, இலக்கியமாக, சிந்தனையாக செயலாக விரிகிறது. அந்த ஆளுமையுடன் எப்போதும் அது இருக்கும்.
அந்த படத்தின் மீது அப்படி ஒரு குறிப்பை எழுதிய கைகளை நினைத்துக்கொள்கிறேன். அவனுக்கு ஆப்ரிக்காவைப்பற்றியும் கறுப்பு மக்களைப்பற்றியும் ஒன்றுமே தெரியாது.அவனுக்கு ஆப்ரிக்காவைப்பற்றி ஒரு சித்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. முந்நூறாண்டுக்காலம் முன்பு அங்கே சென்ற ஆக்ரமிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. அந்நாட்டை அடக்கி ஆண்ட இனவாதிகளால் நிறுவப்பட்டது
ஃபாண்டம் ,டார்ஜான் போன்ற கதைகள் வழியாக ,நூற்றுக்கணக்கான ஹாலிவுட் படங்கள் வழியாக அது இளம் மனதில் வளர்க்கப்பட்டது. அறிவற்ற, மெல்லுணர்வுகள் அற்ற, அறமோ ஒழுக்கமோ அற்ற, மிருகங்களுக்கிணையான, மக்கள் திரள். கொடூர உருவங்களை வழிபடும் மதம் கொண்டவர்கள். நரமாமிசம் தின்பவர்கள்.
பண்பாடும் வரலாறும் அற்றவர்கள்.உணவை உருவாக்கவும் உயிருடன் இருக்கவும் தெரியாதவர்கள். பஞ்சத்தில் கூட்டம் கூட்டமாகச் சாவதற்கு இயற்கையால் விதிக்கப்பட்டவர்கள். ஆகவே பரிதாபத்துக்குரியவர்கள். மேலைநாட்டினரின் கருணையால் வாழவேண்டியவர்கள்….
அந்தக் கைகளைக் குறை சொல்லமாட்டேன்.அப்படித்தான் அவர்கள் ஆப்ரிக்காவை அறியமுடியும். அங்கே சென்று ஐம்பதாண்டுக்காலம் வாழ்ந்தாலும் அதற்கப்பால் அவர்கள் அறியமுடியாது. அந்தக் கைகளுக்குரியவனிடம் சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் அவனுடைய சொந்தச் சமூகத்தால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது, வடிவமைக்கப்படுகிறது, பரப்பப்படுகிறது. அதை எழுதித்தர கறுப்புக்கரங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
ஆடு குழந்தை.நீ கழுவேற்றப்படுவதற்கு நீயே காரணம் என்று உன் மீது முத்திரையடிக்கும் கைகளைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. ஆகவே ஆடு.