சே,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

ஒருவருடமாக உங்கள் தளத்தை தொடர்ச்சியாக படித்துவருகிறேன். உங்கள் கருத்துக்களுடன் எப்போதும் ஒத்துப்போக என்னால் முடியவில்லை என்றாலும் சுவாரசியமான இதழ் என்று நினைக்கிறேன்.

ஒரு விஷயம், நீங்கள் ஒரு மனிதரை அல்லது நூலைச் சொல்லும்போது அப்பெயரின் ஆங்கில வடிவத்தையும் கொடுத்தால் அவரைப்பற்றி மேலே தெரிந்துகொள்ள உதவியாக இருக்குமே.

உதாரணமாக சே குவேரா. அப்பெயரை அப்படி நான் கேள்விப்பட்டதில்லை. இன்னொரு பதிலில் அண்டோனியோ கிராம்ஷி என்கிறீர்கள். அவரையும் நான் கேள்விப்பட்டதில்லை. இருவரையும் பற்றி மேலே தெரிந்துகொள்ள கூகிளில் தேடினேன். தப்பான எழுத்துக்களை போடிருப்பேன், கிடைக்கவில்லை

தொடர்ந்து எழுதுவதற்கு, பல வாசல்களை திறந்து தருவதற்கு நன்றி

பாலா & பாரதி
 
அன்புள்ள பாலா

பொதுவாக எனக்கு பிறமொழி உச்சரிப்புகள் அதிகம் தெரியாது. நான் நம்பும் பிறர் உபயோகப்படுத்துவதுபோல எழுதுகிறேன். சே குவேரா என்பதே சரியான உச்சரிப்பு.

பெரும்பாலும் ஆங்கில வடிவத்தைக் கொடுக்கிறேன். அண்டோனியோ கிராம்ஷி என்ற பெயர் 20 வருடங்களாக சிற்றிதழ்ச் சூழலில் பேசப்படுவது. ஆகவே அதை நான் ஆங்கிலத்தில் எழுதவில்லை. கிராம்ஷி ஒரு இத்தாலிய மார்க்ஸியர். மார்க்ஸியத்தை லெனினியத்தில் இருந்து மேலே எடுத்துச்சென்ற ஐரோப்பிய மார்க்ஸியர்களுக்கு அவரெ தொடக்கப்புள்ளி. சமூகத்தில் கருத்துக்கள் அதிகாரம் செலுத்தும் விதம், கருத்துக்கள் அரசாங்கத்தை உருவாக்கும் விதம், கருத்துக்கள் ஊடகங்கள் வழியாக உருத்திரண்டு வருவது போன்றவற்றைப்பற்றி விரிவாக எழுதியவர்

இணைப்புகளை காண்க

http://en.wikipedia.org/wiki/Antonio_Gramsci
http://en.wikipedia.org/wiki/Antonio_Gramsci
http://en.wikipedia.org/wiki/Che_Guevara
http://www.cheguevara.com/
அன்புடன்

ஜெ

 

அன்புள்ள ஜெ

சே குறித்த உங்கள் கருத்துக்களுடன் எனக்கு ஏற்பு இல்லை. ஒரு காலகடத்தில் வாழ்பவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே உண்மையான மனிதாபிமானமும் அறச்சீற்றமும் ஏற்படுகிறது. அவர்கள் மட்டுமே சமூக அநீதிகளுக்கு எதிராக தங்கள் உடலையும் உயிரையும் அர்ப்பணம்செய்கிறார்கள். அவர்களால்தான் நீதி நிலைநாட்டப்படுகிறது. அறம் வாழ்கிறது. அவர்களையே நாம் தியாகிகள் என்றும் ஞானிகள் என்றும் சொல்கிறோம்.

தென்னாப்ரிக்காவிலே எத்தனையோபேர் நிறவெறிக்கு ஆளாக்யிருக்கலாம். ஒரு காந்திக்குத்தான் இனி மிஞ்சிய வாழ்க்கையை முழுக்க அதற்காக ஒப்படைக்கவேண்டும் என்று தோன்றியது. அப்படி பிரரிடம் இல்லாத ஒரு அறவேகம் எவருக்கு வருகிறதோ அவர்கள்தான் போராளிகள் ஆகிறார்கள். தாங்கள் பெரியவர்கள் என்றும் தலைவர்கள் என்றும் எண்ணிக்கொண்டு அந்த வேகத்தை அவர்கள் அடையவில்லை என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது அகங்காரம் இல்லை. அதை நீங்கள் அப்படிச் சொல்வதுச் அரியல்ல. சேகுவேரா ஆயுதம் எடுத்தது நீதிக்கான அர்ப்பணிப்பால்தான். அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்வதற்காக அல்ல. அவரை ராணுவப்புரட்சியாளராக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள் என்ற எண்ணம் எனக்கு வந்தது இது தவறானது.

ஒரு அநீதியைக் கண்டால் ஒருவன் முதலில்  குரல் எழுப்புகிறான். அதன்பிறகு அவனைப்பார்த்துத்தான் மற்றவர்கள் குரல் எழுப்புகிறார்கள். அப்படித்தான் அநீதிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுகிறார்கள். போராளிகள் என்பவர்கள அந்த முதல்குரல்கள் என்று சொல்லலாம். அவர்களை பொதுமக்களை விட மேலானவர்களாகவே நினைக்க வேண்டும். மதிக்க வேண்டும். அவர்கள் கிளர்ந்து எழாவிட்டால் அந்தச் சமூகத்திலே நீதியுணர்ச்சியே இருக்காது என்பதுதான் உண்மை

சிவலிங்கம்[தமிழாக்கம்]

அன்புள்ள சிவலிங்கம்

நான் எங்குமே சேயின் தார்மீக அடிபப்டையை அல்லது மனிதாபிமானத்தை குறைசொல்லவில்லை. வரலாறு என்பது கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் இச்சைகள் வாழ்நிலைகள் ஆகியவற்றைச் சார்ந்தது என்று அவர் புரிந்துகொள்ளவில்லை என்பதே என் கருத்து. ஆகவே தன் கை ஆயுதத்தை மட்டுமே நம்பி போராட்டங்களை நிகழ்த்தினார், அழிவுகளுக்குக் காரணமாக அமைந்தார். எந்த மக்களுக்காக சே போராடினாரோ அம்மக்களே பொலிவியாவில் அவரைப் பிடித்துக்கொடுத்தனர். அந்த யதார்த்தத்தில் இருந்து மேலே சிந்தனைசெய்தால் அதை புரிந்துகொள்ள முடியும்

ஜெ

 

 

அன்புள்ள ஜெ

சே குறித்த உங்கள் பார்வை அப்பட்டமான பூர்ஷுவா அறிவுஜீவிப்பார்வை. மாற்றங்களை வெறுக்கும் பார்வை. மாற்றங்களை குட்டி பூர்ஷுவாக்கள் அஞ்சுவார்கள் என்பது மார்க்ஸிய அடிபப்டை வாய்ப்பாடு. நீங்கல் வசதியாக அமர்ந்திருக்கும் ஒரு இடம் பறிபோகும் என்ற அச்சம் மட்டுமே அதற்குக் காரணம். அந்த பயத்தில் இருந்துதான் இந்த மாதிரி சாத்வீக ஆராய்ச்சிகள் எல்லாமே வருகின்றன

கண்ணன்

அன்புள்ள கண்ணன்

நான் அமர்ந்திருக்கும் இந்தக் குறைந்த பட்ச இடம் என்பதேகூட என் முன்னோர் எத்தனையோ வருடம் மண்ணில் உழன்று அடைந்தது, நீங்கள் போராட்டத்தைப்பற்றிப் பேசும்போது இதற்குமேல் எனக்கு ஏதாவது கிடைக்கும்படி யோசியுங்கள், உங்கள் முதிர்ச்சி இல்லாத கற்பனாவாதத்தால் இதையும் இல்லாமல் ஆக்கிவிடாதீர்கள் –  அதைத்தான் உலகில் எல்லா நாடுகளிலும் செய்தீர்கள் என வரலாறு நிரூபித்தும் விட்டது– இப்படி கேட்க எனக்கு உரிமை இல்லையா என்ன?

ஜெ

 

சே குவேராவும் காந்தியும்

  • காந்தியின் பிழைகள்
  • காந்தி:கடிதங்கள் பதில்கள்
  • ஹிட்லரும் காந்தியும்
  • கடிதங்கள்
  • காந்தியின் துரோகம்
  • வெறுப்புடன் உரையாடுதல்
  • முந்தைய கட்டுரைமீட்சி
    அடுத்த கட்டுரைபண்பாட்டை பேசுதல்…