கோதை-கடிதங்கள்

அன்பின் ஜெ..

கன்னடத்தின் துங்கை, பத்ராவதி நதிகள் உற்பத்தியாகி ஓடும் இடங்கள் பாரதத்தின் மிக அழகிய பகுதிகளில் ஒன்று.

ஷிமோகாவில் ஒரு நண்பர் சர்க்கரை ஆலை நடத்துவதாகச் சொன்னீர்கள் – ரவி.. அந்தச் சர்க்கரை ஆலையில் சிலகாலம், நானும் விஜியும் ஒரு ப்ராஜக்டுக்காகத் தங்கியிருந்தோம்.

அப்போது, சிருங்கேரி சங்கராச்சாரியார், அங்கே வந்து தங்கியிருந்தார். என்னையும் விஜியையும் ஆசீர்வதித்தார்.. குண்டு சாமியார் அன்றிலிருந்து எங்கள் குருவாகிப் போனார். இப்போது சென்னையில் சதுர்மாஸ்ய விரதம் கொண்டு தங்கியிருக்கிறார்.. இந்தப் பக்கம் வந்தீங்கன்னா, போய்ப் பாக்கலாம். அதன் பின் எங்களுக்கு மதுரா பிறந்தாள்.. எனவே, அவள் எங்களுக்கு சாரதாம்பிகை என்னும் கல்விக்கடலின் பிரசாதம் என்று ஒரு குடும்ப புராணம் உருவாக்கி, அவளை நம்ப வைத்திருக்கிறோம்..

துங்காவின் கால்வாய் – எனக்குப் பகீரென்று ஒரு பழம் நினைவைக் கொண்டு வந்தது. அப்போது நான் ஹோஸ்பேட் என்னும் ஊரில் இருந்த ஒரு ஆலையில், NDDB க்கான ஒரு ஆலையில், பாமாயில் பேக் செய்யும் ஒரு வேலைக்குச் சென்றிருந்தேன். அதன் சப்ளையராக, ஐ.டி.சியில் இரூந்து ஒரு மேலாளரும், ஒரு ஆங்கிலோ இந்திய மெக்கானிக்கும் வந்திருந்தார்கள்.. ஆலை, துங்கபத்திராவின் ஹை லெவல் கால்வாயை ஒட்டி இருந்தது.. ஏதோ ஒரு காரணத்துக்காக வேலை தடைப்பட்டு நின்றிருந்தது.. மதிய வெக்கை எல்லோரையும் துன்புறுத்திக் கொண்டிருந்தது..

இந்த ஆங்கிலோ இந்தியப் பையன் சலித்து, இதோ வருகிறேன் என்று, சட்டையைக் கழற்றி விட்டு, கால்வாயில் குதித்தான்.. சிறிது நேரம் கழித்து ஏதோ சத்தம்.. துங்கபத்திரா கால்வாய் மிக ஆழமானது.. வேகமும் அதிகம் அவ்விடத்தில்.. இதோ வருகிறேன் என்று சொன்னவன் போய்ச் சேந்துட்டான்.. கண் முன்னே, ஒரு மிக இளம், அழகான வாலிபன் காணாமல் போனது இன்று வரை துயரப் படுத்தும் விஷயம். உயிர் எவ்வளவு பாதுகாப்பற்றதாக இருக்கிறது??

ஜி.எஸ்.பிக்கள் மஹாராஷ்ட்ராவில் கோப்ரா (kobra) என்றழைக்கப் படுகிறார்கள்.. கொங்கன் ப்ராமணர்கள் என்பதன் மரூ உ. அங்கும் ப்ராமணர்கள் மீதான வெறுப்பு அதிகம்.. அதனால கோப்ரா..

சிருங்கேரியும் ஒரு அற்புதமான இடம்.. துங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு அழகான கோவில்.. அதேபோல், அன்னபூரணி கோவில், மூகாம்பிகை, தர்மஸ்தலா என்று கோவில்கள் அமைந்திருக்கும் இடங்களெல்லாம் அழகு.. குடும்பத்துடன் சிருங்கேரி சென்று, அப்போது சிறுவனாக இருந்த அரவிந்தை (நம்புங்கள்.. அப்போது அவன் சிறுவனாக இருந்தான்), முட்டளவு ஆழம் இருந்த துங்கையில் அமுக்கியது நினைவுக்கு வருகிறது. இன்று ஒரு கிரேன் தேவைப்படலாம்..

அரசியல், மடாதிபதியின் இடமல்ல என்று ஒதுங்கியிருக்கும் அந்த குண்டு சாமியார் ஒரு நல்ல குரு.. சென்னை வெங்கட் நாராயணா சாலையில் இருக்கும் சிருங்கேரி சாரதாம்பிகையின் கோவில், சென்னையின் மிக அமைதியான, சுத்தமான, அழகான கோவில்.

எப்போ வர்றீங்க?

அன்புடன்

பாலா

அன்புள்ள ஜெ,

அருமை! 7-8 வருடம் முன்பு ஆகும்பே போயிருக்கிறேன்.. அற்புதமான இடம்.. அட்டைகள் கால்களில் ஏற ஏற அதை உணர்ந்து கொண்டே மலை உச்சி வரை ஓடியதெல்லாம் ஞாபகம் வருகிறது. பக்கத்தில் உள்ள தீர்த்தஹள்ளி, குந்தாத்ரி, சிருங்கேரி, காடூர் எல்லா இடங்களையும் பார்த்தோம்.

பயண மாறுதல் பற்றித் தகவல் தெரிந்திருந்தால், நானும் ஓடி வந்து கலந்து கொண்டிருக்கலாம்.. ம்ஹூம்.. ஒரு நல்ல பயணவாய்ப்பை இழந்து விட்டிருக்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு

இந்தக் குழுமத்தின் முந்தைய சில கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தாலும், பயணம் புது அனுபவமாக இருந்தது. கோதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கடைசி நேரத்தில் ஷிமோகாவுக்கு மாறி, பின்னர் ஆகும்பேவுக்கு மாறிய இந்தப் பயணத்தின் எதிர்பாராத்தன்மை நாங்கள் மீண்டும் சரியான நேரத்துக்கு பேருந்து நிலையத்துக்கு வர முடியுமா என்ற பரபரப்புவரை தொடர்ந்தது. இந்த எதிர்பாராத்தன்மை இந்தப் பயணத்தின் சுவாரஸ்யங்களில் ஒன்று.

மழை, வனம் மற்றும் இரவு ஆகியவற்றை இந்தப் பயணத்தின் highlights என்று சொன்னால், சனி இரவு கொட்டும் மழையில், வெளிச்சமே இல்லாத ஒரு வனப் பாதையில் ரெயின் கோட் கூட இல்லாமல் மழையிலும் இலக்கியத்திலும் நனைந்து கொண்டே சென்ற நடைதான் இந்த பயணத்தின் தீம். நேயர் விருப்பமாக அந்த இருட்டில் ஜெயமோகன் சார் சொன்ன யட்சிக்கதைகள் அந்த சூழ்நிலையை இன்னும் தீவிரமாக ஆக்கியது.

சுரேஷ்பாபு

முந்தைய கட்டுரைரப்பர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉதிரபானம்