நாகர்கோயிலில் 1-3-08 அன்று மாலை ஐந்தரை மணிக்கு நீலபத்மநாபனுக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்தமைக்காக பாராட்டுவிழா நடைபெற்றது.
அறிமுக உரை நிகழ்த்திய பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் பெர்னாட் சந்திரா நீலபத்மநாபனின் இலக்கிய வாழ்க்கையை சுருக்கமாக விவரித்தார். பொறியியலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற நீலபத்மநாபனுக்கு இப்போது எழுபதுவயது. ஐம்பது வருடங்களாக அவர் எழுதிவருகிறார். அவரது தலைமுறைகள் தமிழில் வட்டாரவழக்கை ஓர் இலக்கிய உத்தியாக முன்வைத்த முன்னோடியான ஆக்கம். அதை அடையாளம்கண்டுகொண்டு பிரசுரிக்க பேராசிரியர் ஜேசுதாசன் காரணமாக அமைந்தாரென்றால் அதை இலக்கிய உலகில் முன்னிறுத்தியவர் விமரிசகரான க.நா.சுப்ரமணியம். அப்படைப்பின் அலங்காரங்களும் மிகையும் இல்லாத யதார்த்தமும் சின்னஞ்சிறிய கலாச்சாரத் தகவல்களும்தான் தன்னை மிகவும் கவர்ந்தன என்று க.நா.சு சொல்கிறார். அதன்பின் வந்த பள்ளிகோண்டபுரம், உறவுகள் ஆகிய நாவல்களும் நீலபத்மநாபனின் தனித்த அழகியலை மேலெடுத்துச் சென்றவை.
நீல பத்மநாபனின் எழுத்து தனக்குள் பேசிப் பேசி தன்னைக் கண்டடையும் தன்மை கொண்டது. பைபிளில் இலக்கிய நுட்பம் கொண்ட ஒருபகுதி வயோதிக யோபுவின் புலம்பல்கள். அந்தப்பகுதியின் அழகுடன் திகழ்பவை அவரது நாவல்கள் என்றார் பெர்னாட் சந்திரா.
தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் பொன்னீலன் நீலபத்மநாபன் தனக்கெல்லாம் மூத்த தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளி என்றார். அவரது இளமையிலேயே அவரது பெரிய நாவல்கள் வெளிவந்துவிட்டாலும்கூட மிகவும் பிந்தியே அவருக்கு இப்போது சாகித்ய அகாதமி விருது அளிக்கப்படுகிறது. ஆனால் இலக்கிய உலகில் அவரது இடம் நெடுங்காலம் முன்னரே உறுதிப்பட்டுவிட்ட ஒன்றாகும். நீல பத்மநாபனின் எழுத்து முழுக்க முழுக்க அவரது மண்ணில் வேர்கொண்டது. ஆகவே உண்மையானது. நேர்மையே அதன் வலிமை என்றார்
தொடர்ந்துபேசிய விமரிசகர் ராஜமார்த்தாண்டன் நீலபத்மநாபன் எழுதியகாலத்திலேயே அப்படைப்புகளை தன் பேராசிரியரான ஜேசுதாசன் அறிமுகம் செய்துவைத்தார் என்று சொன்னார். நீலபத்மநாபனின் எழுத்துகள் எந்தவிதமான உத்தி நடை உணர்ச்சிகரம் ஆகியவற்றின் உதவி இல்லாமல் தன் நேர்மை மூலமே நம்மைக் கவர்பவை என்றார்.வேதசகாய குமார் நீலபத்மநாபன் அவரது மையக் கதாபாத்திரங்களின் பலவீனங்களையும் விரிவாகச் சொல்லி நமக்கு மனிதமனத்தின் விபரீதங்களையும் சிக்கல்களையும் புரியச்செய்த படைப்பாளி என்றார்
ஏற்புரை வழங்கிய நீலபத்மநாபன் சிறுவயதில் தான் ஒரு இலட்சியவாதியாக இருந்ததாகவும் மனிதமனத்தின் உன்னதங்களைப்பற்றிய ஒரு கனவு தன்னை இயக்கியதாகவும் சொன்னார். ஆனால் அன்றாடவாழ்க்கையில் கண்ட அறவீழ்ச்சிகளும் கள்ளங்களும் தன்னை கொதிக்கச்செய்தன. தன் இலக்கிய ஆக்கத்தின் பின்னாலுள்ள மனஎழுச்சி எப்போதும் இதுவாகவே இருந்துள்ளது. மனிதர்களின் சிறுமை, போலித்தனம் ஆகியவற்றையே அதிகமும் எழுதிவந்தேன் என்றார் நீலபத்மநாபன்
ஆனால் வயதாக ஆக மனிதவாழ்க்கை அப்படித்தான் என்ற தெளிவு உருவாகியது. மனிதவாழ்க்கை என்பது வாழ்வதற்கான போராட்டம் மட்டுமே. ஆகவே மனிதர்களை அப்படி உன்னத மதிப்பீடுகளை மட்டும் வைத்து எடைபோடக் கூடாது. இந்த உணர்ச்சி வந்தபின்னர் மெல்லமெல்ல கோபம் குறைந்துவிட்டது. ஆகவே எழுத்தும் குறைந்துவிட்டது என்றார் நீலபத்மநாபன்.
அ.கா.பெருமாள் நன்றி சொன்னார். நீல பத்மநாபன் குமரி மண்ணின் மைந்தர், அவர் பிறந்துவளர்ந்தது திருவனந்தபுரத்தில் என்றாலும் அவரது பூர்வீக ஊர் தக்கலைக்கு அருகேயுள்ள நெய்யூர். ஆகவே அவரைக் கவுரவிக்க இக்கூட்டத்தை கூட்டியது மிகவும் சிறப்பான ஒன்று. கூட்டத்தை ஏற்பாடு செய்த ஜெயமோகனுக்கும் நெய்தல் அமைப்புக்கும் நன்றி என்று சொல்லி முடித்தார்.
ஒன்றரைமணி நேரத்தில் கூட்டம் முடிந்தமையால் மேலும் ஒருமணிநேரம் வெளியே கூடிநின்று அரட்டை அடிகக் வருகையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.