அன்புள்ள ஜெ
நாஞ்சிலார் விருது பெற்றது மகிழ்ச்சி. நாஞ்சிலார் எனக்குப்பிடித்த எழுத்தாளர். அலட்டிக்கொள்ளாமல் நகைச்சுவை எழுதியவர் கொஞ்சநாளாக விகடனிலே கோபம் கக்கி பிரபலமாக இருக்கிறார்.பழந்தமிழ் இலக்கியம், நாஞ்சில்நாடு வெள்ளாமை, சமையல் எல்லாவற்றையும் கலக்கி அவர் செய்கிற காக்டெயில் ருசிக்கு நான் அடிமை. நல்ல
எழுத்தாளர்கள் காலம் கடந்து கௌரவிக்கப்படுவதுதானே தமிழில் வழக்கம்? நாஞ்சிலாருக்கு இனிமேலேதான் நல்ல விருதுகள் எல்லாம் தேடிவரும். வாழ்த்துக்கள்
சுப்பு
சென்னை
நடுவே நிற்பவர் ஓவியர் ஜீவா
அன்புள்ள ஜெ
நாஞ்சில்நாடனுக்கு விருது கிடைத்ததை வாசித்து மனம் மகிழ்ந்தேன். அற்புதமான ஆற்றலுடைய எழுத்தாளர் அவர். எனக்கு தமிழிலே அழகிரிசாமியும் நாஞ்சில்நாடனும்தான் பிடித்த எழுத்தாளர்கள்– நீங்கள் அல்ல. மன்னிக்கவும். நாஞ்சிநாடனின் நகைச்சுவையும் அவரது எளிமையான கதாபாத்திரங்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எனக்கு இருபது வருஷமாக வண்ணதாசனை பிடித்திருந்தது. ஆனால் அவர்களெல்லாம் தேங்கிப்போனார்கள். நாஞ்சில் இன்னமும் புதிசாக எழுதிக்கொண்டிருக்கிறார். ஆகவே அவரை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அவருக்கு நல்ல ஆயுளும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்.
செல்வ கனகராஜ்
அன்புள்ள ஜெ
நாஞ்சில்நாடனை வாழ்த்துவதென்றால் மின்னஞ்சல் தொடர்பு உண்டா?
கவின்
அன்புள்ள கவின்
நாஞ்சிலுக்கு மின்னஞ்சல் உண்டு, அவர் அதைப்பார்ப்பதே இல்லை
ஜெ
ஜெ..
கல்யாணம் பண்றதுக்கு பல பொருத்தம் பாக்கற மாதிரி, இந்த விருதுக்கும் நாஞ்சிலுக்கும் பல பொருத்தம் இருக்குதுங்கோ..
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.. ஏன் ஏன் ஏன் ??
பல எண்ணத்தில் நீந்துகிறேன் ஏன்ன்ன்ன்ன்ன்ன்???
ஓட்காவோடு ஆரஞ்சுப் பழரஸம் கலந்து, மிளகில் வறுத்த ஆட்டிறைச்சியைக் கடித்துக் கொண்டே கொண்டாடப் போகிறேன். (இன்னிக்குத் தண்ணியடிக்கறதுக்கு ஒரு excuse கிடைச்சிருச்சிங்கோ)
அன்புடன்
பாலா
அன்புள்ள ஜெ,
நாஞ்சில்நாடனைப்பற்றி நீங்கள் கொடுத்திருந்த இணைப்புகளை எல்லாம் படித்தேன். அவரைப்பற்றிய மிகச்சிறப்பான ஓர் அறிமுகம் கிடைத்தது. தாடகை மலை அடிவாரத்திலே ஒருவர் படித்து வயிறு வலிக்க சிரித்தேன். நாஞ்சில்நாடனுடன் பல ஆண்டுகள் நெருக்கமாக பழகியவனைப்போல உணர்ந்தேன்.அவரது நகைச்சுவை உணர்ச்சி, நுட்பமாக வாழ்க்கையை கவனிப்பது எல்லாமே நன்றாகத் தெரியவந்தது இப்போது வந்துகொண்டிருக்கும் அண்ணாச்சி கட்டுரையுடன் அதையும் இணைத்து வாசித்தேன். இலக்கியவாதிகளை அறிந்துகொண்டதுபோல இருந்தது.
குமார் ஆறுமுகம்
அன்புள்ள குமார்
நாஞ்சில்நாடனைப்பற்றி நான் எழுதிய ‘கமண்டல நதி’ என்ற நூல் தமிழினி வெளியாகியிருக்கிறது. பாருங்கள்
ஜெ