அண்ணன் இருக்கேன்ல?

அர்ஜுன், எதுக்குப் பயப்படுறே?
தைரியமா போ
நல்லா பாலுகுடிக்காத,
ஃபஸ்ட்ராங்க் வேணாம்னு சொல்ற,
போங்குப் பசங்களுக்கு மட்டும் வர்ர
இந்த மனக்கொழப்பம்
உனக்குப்போய் எப்டி வந்திச்சு?

அதனால,
நீ பயப்பட மாட்டியாம்.
நீ பயங்கர ஆளுதானே?
கெட்டவங்களக் கடிக்கிறவன்தானே
தைரியமா
அப்டியே புடிச்சு ஏறுவியாம்

எதுக்கு அழுவக்கூடாதோ
அதுக்காக அழுவுறே.
எல்லாம் தெரிஞ்ச அண்ணன் நான் சொல்றதை
கேக்க மாட்டேங்கிறே.
இங்கபாரு, வீட்டிலே இருக்கிற அம்மாவையோ
இல்லாத அப்பாவையோ
நெனைச்சு நல்ல கொழந்தைங்க
பயப்படுறதில்ல தெரியுமா?

நான் எப்பவும் தோ இங்கதான் இருப்பேன்
நீ அந்தால போனாலும்
உன்னோட பாலுக்குப்பி
இங்கதானே இருக்கும்?
இந்த வீட்லே உள்ள எல்லாருமே
இங்கதான் இருப்பாங்க?

நீ சின்ன பப்பூஸா இருந்தே
இப்ப பெரூசாயிட்டே
இனிமே எலிக்கேஜில்லாம் போவே
அதமாதிரித்தான்
இந்தப்பக்கம் இருக்கிறதும்
அந்தப்பக்கம் போறதும் எல்லாம்.
அதனால
துணிஞ்சவனுக்கு துக்கமில்ல.

அம்மாக்குட்டி
உனக்கு காலு கையி இருக்கறதனாலத்தானே
கைய வச்சா சுடுது?
இல்லேன்னா குளிருது?
அதெல்லாம் உனக்கு ஒண்ணும் பெரிசு கெடையாது

நீதானே இங்க ஃபஸ்டு
இந்தமாதிரி சின்னவிஷயங்கள்லாம்
யாருக்கு ஒண்ணுமே ஆறதில்லியோ
அவனத்தான் எலிக்கேஜியிலே சேப்பாங்களாம்

இருக்கிறத நீ ஒடைச்சாலும்
அது இல்லாம ஆவுறதில்ல
இல்லாம இருக்கிறதுக்காக
நீ எவ்ளவு அழுதாலும் குடுக்கமாட்டாங்க
என்னைய மாதிரி பெரிய அண்ணனுக்கு
இதெல்லாம் தெரியும்.

இதெல்லாம் ஒடையாத பொருளிலே
செஞ்சிருக்கு தெரியுமா?
நீ டமால்னு போட்டாக்கூட
ஒடையாது

அது என்னதுண்ணு
அம்மாக்கு கூட தெரியாது
ஆனா ஒடையாது
அதனால நீ தைரியமா போவியாம்.

நீ எதுக்கு தேவையில்லாம பயப்படுறே?
அண்ணன் இந்தப்பக்கம்தானே இருக்கேன்
உனக்கு வலிச்சாக்கூட வலிக்கலேன்னு நினைச்சுக்கோ
வலியை எல்லாம் அண்ணனுக்கு குடுத்திரு
நான் பாத்துக்கறேன்.

போறது மட்டும்தான் ஒன்னோடவேலையாம்
என்ன ஆவும்னு நெனைக்கவே கூடாது தெரியுமா?
அங்க என்ன இருக்குன்னு நெனைச்சுட்டு போவக்கூடாது
அண்ணன் சொன்னதனால போறே அவ்ளவுதான்.

அதனால அர்ஜுன்
நீ ஜாலியா போய்ட்டே இருப்பியாம்.

முந்தைய கட்டுரைகிழவனும் கடலும்
அடுத்த கட்டுரைமேற்குச்சாளரம்