ஒருங்கிணைதல் கடிதங்கள்

எழுத்தாளரே,

உங்கள் வெப் சைட்டிலே நீங்கள் புலிகளை ஆதரித்து பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் எழுதியதை எல்லாமெடுத்து கொடுக்கிறீர்கள். ரொம்ப நல்ல விசயம்.புலி செத்தபிறகும் நீங்கள் அதுக்கு வால்பிடிப்பது உங்கள் வசதிப்படி. ஆனால் இதே பிரிட்டிஷ் நியாயவான்கள் ஈராக்கிலே முஸ்லீம்கள் மேல் குண்டு போட்ட அமெரிக்காவைப்பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்க மாட்டீர்கள். ஈராக்கு மேல் சதாம் படை எடுத்தால் ஒன்றுமே தெரியாத ஈராக் ஜனங்கள் என்ன தப்பு செய்தார்கள்?  இலங்கையிலே செத்த தமிழ் மக்களைக்காட்டிலும் பத்து மடங்கு சனங்கள் அன்கே செத்தார்களே. அப்போது நம்முடைய பத்திரிகை நியாயவான்கள் என்ன சொன்னார்கள்? ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் குண்டுபோடு சனங்களைக் கொன்றுகொண்டிருக்கிற அமெரிக்காவிடமும் பிரிட்டிஸ் அரசாங்கத்திடமும் நம்முடைய தமிழர்களும் தமிழ் தலைவர்களும் இலங்கை மீது படை எடுத்து தமிழ் சனங்களை காப்பாற்றுங்கள் என்று கூப்பாடு போட்டார்களே. அப்படி என்றால் அந்த கொலைவெறிக்கும்பல்செய்ததை எல்லாம் இவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று தானே அர்த்தம்? எங்க போராட்டத்தை ஆதரிச்சால் நாங்கள் முஸ்லீம்களை கொல்லுவதற்கு ஆதரவளிக்கிறோம் என்றுதானே அர்த்தம்? பிளாஸ்டிக் சஞ்சியை இன்னும் முஸ்லீம்கள் மறந்துவிடவில்லை.

நிசார்
கொழும்பு

அன்புள்ள நிசார்,
நல்லது, வரலாற்றில் இருந்து மீண்டும் வெறுப்பைத் தோண்டி எடுக்க முடியுமா என்று பார்க்கிறீர்கள். மார்க்கேஸின் நூறு வருடத்தனிமையில் புதைந்த செல்வங்களை காந்தம் வைத்து இழுத்து எடுக்க ஜோஸ் ஆர்க்கேடியோ புவாண்டியோ முயல்வார். வருவது பழைய எலும்புக்கூடுகளாகவே இருக்கும். அவை தோண்டுபவர்களுக்கே முதலில் நோயை பரப்பும்.

ஜெ 

அன்புள்ள ஜெ,

ஒருங்கிணைவு பற்றி நீங்கள் எழுதியிருந்ததை படித்து சிரித்தேன். உங்களை மாதிரி எழுத்தாளர்கள் நகம்கூட கிழியாமல் உகார்ந்து ஒற்றுமையைப்பற்றியெல்லாம் பேசலாம். கேட்க நன்றாக இருக்கும். உங்களுக்கு புனிதபிம்பமும் கிடைக்கும். துப்பாக்கியை சந்தித்திருந்தால் இம்மாதிரி எழுதமாட்டீர்கள். ஒற்றுமைக்கெல்லாம் இனிமேல் வேலை எதுவும் இல்லை. ஒரு கதை முடிந்துவிட்டது, ‘அம்புட்டுதான்’ [உங்க நாகர்கோயில் பாசையிலே]

ஞானன்

அன்புள்ள ஞானன்

எங்கள் ஊர் பாசையில் அப்படி இல்லை. ‘அம்பிடுதேன்’. ஆனால் கொஞ்சம் மக்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். மேலும் உயிருடன் இருக்க விரும்புகிறார்கள். ஆகவே அம்புடுதேன் என்பதே இல்லை. அதற்கான வழியே நான் சொன்னது

ஜெ

 

ஜெயமோகன் அவர்களே,
Let’s play a game of racial stereotypes. :-)

கிறிஸ்டோபரின் மகனின் ஆசிரியை ஒரு வெள்ளக்கார பெண்ணென்று நினைக்கிறேன். அமெரிக்காவில் அடிக்கடி இந்த மாதிரி நிறைய-இதயம்-குறைந்த-மூளை உள்ள சில கேரக்டர்களை சந்திக்கலாம். எல்லாமே இவர்களுக்கு கருப்பு வெள்ளை. நடுவில் இருக்கும் பிம்பங்களே தெரியாது. கடைவீதியில் எங்கு பார்த்தாலும் எல்லாவற்றிலும் சாய்ஸ் கொடுத்து ஒரு தனிமனிதத்துவ மாயையை உருவாக்கி விடுகிறார்கள். (ஒரு காபி குடிக்க போனால் காபி, சக்கரை, பால், நுரை, கப் என்று ஒவ்வொன்றிலும் ஆயிரத்தெட்டு சாய்ஸ்.) ஊடகங்கள் இதற்க்கு ஒரு படி மேல் (கீழ்?). இரண்டே இரண்டு கட்சி, முதலாளித்துவம்-சோசலிசம், வரிகள், கருகலைப்பு, வானிலை மாற்றம், வெளிநாட்டவர் குடியேற்றம் என்று பல விஷயங்களில் மக்களை யோசிக்க விடாமல் கும்பல் கும்பலாக பிரித்து விடுகிறார்கள். இந்த கான்டெக்ஸ்டில், அந்த ஆசிரியையின் உணர்ச்சி வெளிப்பாடு ஆச்சரியமளிக்கவில்லை.

ஈழத்தமிழர்களின் கண்ணீர் கதையை கேட்டவுடன், அந்த சிங்கள தந்தையின் மரணம் அர்த்தமற்றதாகிவிடுமா என்ன? தமிழ்நாட்டிலிருந்து ராணுவ வீரர்கள் கஷ்மிரிலும் வடகிழக்கிலும் சண்டை போடும் அதே மனநிலையில்தான் அவர் புலிகளுக்கு எதிராக சண்டை போட்டிருப்பார். புலிகள் அடித்து துரத்திய முஸ்லிம்களின் கதையை கேட்டால் அப்பெண் இன்னுமொருமுறை “கட்சி” மாறியிருப்பார்.

அந்த பெண்ணின் நடத்தைக்கு இன்னுமொரு பரிணாமம் இருக்கிறது (இது ஒரு விளையாட்டு – மறக்காதீர்). அதுதான் White man’s burden என்பது (இந்த கதையை சொல்லிக்கொண்டுதான் பிரிடிஷ்காரர்கள் 200வருஷம் பாதி உலகத்தை ஆண்டார்கள்). இது சில சமயம் அவர்கள் பணக்கார நாட்டில் வாழ்கிறார்கள் என்கிற குற்ற உணர்ச்சியாகவும் வெளிப்படும். உலகத்தில் எந்த சமூகத்தில் கெட்டது நடந்தாலும் அதுக்கு அவர்களாலான எதோ ஒரு உதவி செய்தால்தான் மனம் சந்தியடையும். சிலர் வாழ்வில் விளக்கேற்றி வைத்துவிட்டதாக ஒரு ஆனந்தம். நல்ல ஆத்மாக்கள்.

மேற்கூறிய கருத்துக்கள் இன்னொரு குழாய் சண்டையை ஆரம்பிக்கும் என்று நினைக்கிறேன். பார்த்து பதிவு செய்யுங்கள். :-)


நவீன் சிவானந்தம்

 

அன்புள்ள நவீன்,

பொதுவே நாம் வெள்ளைக்காரன் நம்மை காப்பாற்றுவான் என முந்நூறாண்டுகளாக எண்ணி வந்த சமூகம். ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவர்களுக்குள்ளேயே தென்னாப்ரிக்காவின் மன்டேலா போன்ற சமரசவாதிகள் உருவாகி உட்கார்ந்து பேச ஆரம்பித்தபோதுதான் சமாதானமே உருவானது என்பது வரலாறு
ஜெ
 

அன்புள்ள ஜெயமோகன்,
இலங்கை தமிழர் விசயத்தில் ஆயுதப்போருக்கு இணையாக பிரசாரப்போரும் நிகழ்வது தாங்கள் அறியாதது அல்ல. ஆயுதப்போரில் மனிதர்கள் அழிந்தால் பிரசாரப்போரில் உண்மை அழிகிறது. எது மிக கொடியது என்பது விவாதத்திற்குரியது. நிற்க. “ஒருங்கிணைதல்:ஒரு கடிதம்” இடுகையில் கொடுத்திருந்த இணைப்பை சொடுக்கி வாசிக்க ஆரம்பித்த உடனே, அது பிரித்தானிய பத்திரிக்கையின் இணைய தளமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அது உண்மைதான் என்று தெரிந்த பின் அவர்கள் என்ன எழுதியிருப்பார்கள் என சந்தேகம் இல்லை.   
சுருக்கமாக சொல்வது என்றால், பிரித்தானிய ஊடகங்கள் இந்திய எதிர்ப்பு மனப்பான்மை கொண்டவை. உதாரணமாக, இந்தியாவில் பி பி சி தொலைகாட்சி சேவையை ஆரம்பித்த செய்தியை, தில்லி சாலைகளில் திரியும் எருமை மாடுகளை காண்பித்துத் சொன்னதிலிருந்து, நமது சந்திரயான் வின்கலம் நிலவில் தடம் பதித்ததை, அது நிலவில் மோதி சிதறியதாக அறிவித்தது (அதன் ஆராய்ச்சி நோக்கமே, நிலவில் மோதுவதுதான்) வரை சொல்லலாம்.
நான் சொல்ல வருவது, அவர்கள் எழுதுவதில் சில உண்மையாக இருக்கலாம், ஆணால் எழுதும் முறை நடுநிலையாக இருக்காது என்பதே.
இல்லாத பேரழிவு ஆயுதங்களை தேடி இவர்கள் ஈராக்கில் குண்டு போட்ட போது இந்த உண்மை விளம்பிகள் எங்கே போனார்கள்?
உங்கள் கருத்து என்ன?
கணேசன்.

அன்புள்ள கணேசன்

எந்த தேசத்தின் அரசும் மனிதாபிமான- அற அடிபப்டைகளை முதன்மையாகக் கொள்வதில்லை. அவை  எப்போதுமே வணிக ராஜ தந்திர நிலைபாடுகளையே எடுக்கின்றன. ஐரோப்பாவும் பிரிட்டனும் அமெரிக்காவும் எல்லாமே அப்படித்தான். இந்நாடுகள் தங்கள் ஆயுத உற்பத்தியை கட்டுக்குள் கொண்டுவந்து, ஆயுத ஆராய்ச்சிக்கு செலவழிக்கும் தொகையை மிதமாக்கி, அவற்றை சட்டபூர்வமல்லாத முறையில் விற்பதை கட்டுப்படுத்திக்கொண்டாலே போதுமானது, உலகம் தப்பிக்கும்
ஜெ

 

 

ஒருங்கிணைதல்:ஒரு கடிதம்

ஒருங்கிணைதலின் வழி

முந்தைய கட்டுரைராஜமார்த்தாண்டன் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅண்ணாச்சி:கடிதங்கள்