”சகோதரா, சின்ன விஷயங்களில் என்னதான் கிடைத்தாலும் பெரிய விஷயங்களுக்குப் பக்கத்திலே இருந்துகொண்டிரு. அதுதான் வாழ்க்கை” லட்சுமண் ரானே சொன்னார். காசியில் அவரும்தான் தாடி மீசையுடன் பிச்சை எடுத்து கஞ்சா இழுத்து படிக்கட்டில் தூங்கி வாழ்ந்தார். ஆனால் அவர் சுவாமி மகராஜ் கிடையாது. ஏனென்றால் அவருக்குக் காவி இல்லை. பிடிவாதமாக அதைக் கட்ட மறுத்துவிட்டார். கும்பிடுகள் விழுவதுடன் சில்லறையும் அதிகம் கிடைக்கும். அவ்வப்போது சகசாமியார்களிடமே கையேந்தவேண்டியிருக்காது. ஆனால் லட்சுமண் ரானே தன்னை எப்போதும் ” என் பெயர் லட்சுமன் ரானே ’ என்றுதான் அறிமுகம் செய்வார்.
சட்டென்று அவர் பொன்மொழியைச் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. காசியில் அலைபவர்கள் எல்லாருமே வாழ்க்கையில் இருக்கும் கண்காணாக் கோடு ஒன்றுக்கு இப்பால் வந்துவிட்டவர்கள். வாழ்க்கை அவர்களுக்கு வெகுவாகத் தள்ளி எங்கோ இருந்தது. மண்ணில் புதைந்தோ வானில் பறந்து விலகியோ. ஆகவே அதை ரத்தினச்சுருக்கமாக தொகுத்துச் சொல்ல பழகியிருப்பார்கள். கொஞ்சநாள் மண்ணைத்தின்போம் பிறகு மண் நம்மைத்தின்னும் என்ற புகழ்பெற்ற வரியாக தன் அறுபது வயது வாழ்க்கையைச் சொல்லும் பாபா கோவிந்த தாஸ் பக்கத்தில் கஞ்சாபோதையில் எச்சில் கடைவாயில் வழிந்து கல்படியில் சொட்ட தூங்கிக்கொண்டிருந்தார். கட்ச் பகுதியின் பூகம்பத்தில் எட்டுபிள்ளைகள் மனைவி வீடு மாடு கன்று எல்லாவற்றையும் இழந்தவர் என்று சொல்வார்கள்.
நான் லட்சுமண் ரானேவை இமை அசையாமல் பார்த்தேன். ‘அதாவது சகோதரா, சின்ன விஷயங்களில்தான் நமக்கு உடனடி வெற்றிகள் கிடைக்கும். சின்ன விஷயங்களில் உள்ள சின்னச்சின்ன சந்தோஷங்கள் நமக்கு மட்டுமே உரியவை. அவைதான் நமக்கு அன்றாடம் ருசிக்கத்தக்கவையாக இருக்கும். பெரிய விஷயங்கள் மலைகளைப்போல பக்கத்தில் இருந்தாலும் நாம் நெருங்கநெருங்க விலகிவிலகிச் செல்லக்கூடியவை. அவற்றை நெருங்கியதும் நாம் மிகமிகச் சிறியவர்களாக ஆகி மறைந்துவிடுவோம். பெரியவிஷயங்களில் உள்ள துன்பமும் ஏமாற்றமும் பிரம்மாண்டமானவை. அவற்றில் உள்ள வெற்றியும் மகிழ்ச்சியும் பல்லாயிரம்பேரால் பகிர்ந்துகொள்ளப்படும். நம்முடைய விரல்நுனியில் கொஞ்சம் ஈரம்மட்டுமே எஞ்சும், நக்குவதற்கு…”
லட்சுமண் ரானேயின் கண்கள் கங்கைக் கரையில் உள்ள சிறிய நத்தைகள் போன்றவை. அவற்றில் மெல்லிய ஈரம் இருந்துகொண்டிருக்கும், கஞ்சா இழுத்தால் எல்லாக் கண்களிலுமே கொஞ்சம் சோகம் காணப்படும்.
”…ஆனாலும் பெரியவிஷயங்களை நோக்கிச் செல் என்றே நான் சொல்வேன். பெரியவிஷயங்களைச் செய். அல்லது பெரிய விஷயங்களுக்குப் பக்கத்திலே இரு. ஏனென்றால் அவைதான் சரித்திரம்…சரித்திரத்திலே பங்கெடுக்காத வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. அப்படி வாழ்ந்து சாகிறவர்கள்தான் கோடிக்கணக்கானவர்கள். அவர்களெல்லாம் இதோ இந்த கங்கையில் வெடித்து அழியும் குமிழிகள்… நாமெல்லாம் போய் மறைவோம். சரித்திரம் மட்டும் எஞ்சும். ஆகவே..”
மீண்டும் பழைய வரி. ஆனால் கடைசியாக ஒரு புதுவரி சேர்த்துக்கொண்டார். “…சரித்திரம் உருவாகும் இடத்திலே ஒரு ஈ பறந்தால் கூட அதுவும் சரித்திரத்தின் அம்சம்தான்….’ நான் அவரிடமிருந்த கஞ்சாவை வாங்கி மெல்லிதாக ஓர் இழுப்பு இழுத்தேன். உள்ளே நிறைக்க பயம்.அப்படியே ஊதி வெளியேவிட்டேன்.
லட்சுமண் ரானே சிரித்தார் ” முட்டாள்…ஒரு மிடறு கஞ்சாவை வீணாக்கி விட்டாய். கஞ்சா நெஞ்சுக்குள் போய் ஆன்மாவைத் தொடவேண்டும்…ஆன்மா என்றால் ஒரு பெரிய தேனீக்கூடு. புகை பட்டதும் தேனீக்கள் கலைந்து பறக்க ஆரம்பிக்கும். பும்ம்ம்ம்…” கையைக் காட்டினார் ”சுற்றிச்சுற்றிவந்து பறக்கும். ரீஈஈஈஈஈ சில தேனீக்கள் கொட்டும். சதை துடிதுடிக்க வலிக்கும். ஆனால் தேனீக்கள் விலகியபிறகுதான் தேன்கூடு தெரியும். அப்படியே இனிமை சொட்டி வழியும் தேன்…சப் சப் சப்” நாக்கால் கரிய உதடுகளை நக்கி ஒலியெழுப்பினார். “நீ கோழை. உனக்கு அங்கே கரையில் வாழவும் பிடிக்கவில்லை. கங்கையில் நீந்தவும் தைரியமில்லை. கரையோரச் சேற்றில் இறங்கி நிற்கிறாய். நீ–”
அவரை திசை திருப்பவேண்டும் என்று உடனே கணக்கிட்டேன். எனக்கு அறிவுரைகள் ஏராளமாக சொல்லப்பட்டுவிட்டன. தொன்னையில் இட்டிலி விற்கும் சோட்டுப்பயல்கூட ” மலையாளிபாபா ஊருக்குப்போ,அதுதான் உனக்கு நல்லது” என்கிறான். நான் சிலும்பியைத் திரும்பிக்கொடுத்தபடி ” …அப்படியென்றால் நீங்கள் சரித்திரத்தின் மேலே ஈயாகப் பறந்தீர்களா? என்றேன்.
” அஹ்ஹஹ்ஹா! சரியாகச் சொன்னாய். சரித்திரத்தின் மீது ஈ….அருமையான கற்பனை. அருமை…” என ஆழ இழுத்தார்.
“நீங்கள் சொன்னதுதான் என்றேன்.
“அப்படியா? என்று தலையை ஆட்டினார். ” ஆமாம், சரித்திரத்தில் ஈ. அதனால் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆகவே எல்லாவற்றிலும் பறந்து பறந்து உட்காரும். ஆயிரம் கண்களால் உருட்டி உருட்டிப் பார்க்கும். எவ்வளவு துரத்தினாலும் போகாது. அடாடா, நீ கவிஞனப்பா…எவ்வளவு அருமையாகச் சொல்லிவிட்டாய்”
நான் புன்னகைசெய்தேன்
“காந்தி ஒரே ஒரு சினிமாதான் பார்த்திருக்கிறார், தெரியுமா?” என்றார் லட்சுமண் ரானே.
” அப்படியா? என்றேன்
”ஆமாம்.1943இல் வெளிவந்த படம். ஸ்ரீராமராஜ்யம். அற்புதமான படம்…”
“ஓகோ என்றேன்
“1944 ல் காந்தி மும்பையில் ஜூஹூ கடற்கரையில் தங்கியிருந்தார். சரியாகச் சொல்லப்போனால் ஜூன் இரண்டாம் தேதி. படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான விஜய் பட் காந்தியைப் படம் பார்க்க வைப்பதற்காக ஒருமாதம் முயற்சிசெய்தார். கடைசியாக பியாரிலால் வழியாக காந்தியிடம் தகவலைக் கொண்டுபோனார். காந்தி தனக்கு சினிமா பார்க்குமளவுக்குப் பொறுமை இல்லை என்று தெரிவித்தார். விஜய்பட் ஒரு உத்தி செய்தார். படத்தின் பாடல்களை ஒரு உள்ளூர்ப் பாடகியைக்கொண்டு காந்தியின் முன் பாடவைத்தார். காந்தி பாடல்களைக்கேட்டுக் கைகளைக்கூப்பியபடி கண்ணீர்மல்க அமர்ந்திருந்தார். மறுநாளே படம்பார்க்க வருவதாக ஒத்துக்கொண்டார்…அவருக்காக சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. அவருடன் பட்டேலும் படம் பார்த்தார். காந்தி விஜய் பட்டை அழைத்து நல்ல படம் என்று சுருக்கமாகச் சொல்லி அவரே நூற்ற ஒரு கதர்நூல்சுருளைப் பரிசாக அளித்தார். அது நீண்டநாள் விஜய்பட் குடும்பத்தில் இருந்தது…இப்போதுகூட அவரது வாரிசுகளிடம் இருக்கலாம்
சிலும்பியை ஆழ இழுத்துப் புகைவிட்டபடி லட்சுமண் ரானே சொன்னார் “சகோதரா, அந்தப்படத்தில் நான் பணியாற்றினேன். காந்தி படம்பார்க்கும்போது விஜய் பட்டின் தோல்பையை வைத்துக்கொண்டு நான் சுவரோரமாக நின்றேன். திரையின் ஒளியில் தெரிந்த காந்தியின் முகத்தில் உணர்ச்சிகள் மாறிக்கொண்டே இருப்பதை இரண்டரை மணிநேரம் கண்களை அசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்…’
நான் பிரமிப்புடன் அவரையே பார்த்தேன்
“எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கையில் ஒருமுறை கடவுள் காட்சியளிப்பார். அது எந்தவடிவில் எப்படி என்று எவராலும் சொல்லமுடியாது. ஒரு தருணம் அது. அதை அடையாளம் காண்பதற்குரிய விவேகம் நமக்கிருந்தால் நாம் கடவுளைக் காண்போம். இல்லாவிட்டால் அது அப்படியே கங்கையில் அலைபோல வந்த தடமில்லாமல் சென்றுவிடும்… லட்சுமண் ரானே சொன்னார் ” எனக்குக் கடவுள் காட்சியளித்த தருணம் அது. அதை மேலும் முப்பது வருடம் கழித்துத்தான் புரிந்துகொண்டேன்’
” காந்தி அழுதாரா? ‘என்றேன்
” இல்லை. ஆனால் காந்தி ஏன் மகாத்மாவாக ஆனார் என்று அப்போது தெரிந்தது. அவருக்கு எழுபது வயது தாண்டியிருக்கும். சட்டைபோடாத ஒட்டி உலர்ந்த கரிய உடம்பு. முன்வாயில் பல் இல்லாததனால் உதடு விசித்திரமாக நெளியும். எந்த ஒரு குஜராத்திக் கிழட்டு விவசாயியையும்போலத்தான் அவரும் இருந்தார். ஆனால் அவரது கண்கள். அவை எழுபது வருடம் சரித்திரத்தின் சுழிமையத்தில் வாழ்ந்த மனிதனின் கண்கள் இல்லை. எத்தனையோ உணர்ச்சிகளை, நம்பிக்கைகளை, ஏமாற்றங்களை, பிரியங்களை, துரோகங்களை ,துதிகளை ,வசைகளைக் கண்ட ஒருவரின் கண்கள் அல்ல அவை. அப்போதுதான் குஜராத்தின் உள்கிராமம் ஒன்றில் இருந்து கூட்டிவரப்பட்டு திரைமுன் அமரச்செய்யப்பட்ட ஏழுவயதுப்பையனின் கண்கள்…முதலில் அப்படி ஒரு ஆச்சரியம், பிரமிப்பு. அதன்பின் கதைக்குள் போய்விட்டார். கண்கள் ஈரமாக மின்னிக்கொண்டே இருந்தன. ராமன் திரையில் வரும்போது இரு கைகளும் மார்பில் இணைந்து கும்பிட்டபடி இருந்தன…”
” பெரிய வாய்ப்புதான்” என்றேன்
“1934இல் எனக்கு அந்தப்படத்தில் பணியாற்ற வாய்ப்புகிடைத்தது. நான் உண்மையில் கிழக்குஅந்தேரியில் இருந்த விஜய்பட்டின் அலுவலகத்தைச் சுத்தம்செய்யும் வேலைக்காகத்தான் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது பன்னிரண்டு.சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை. அலுவலகத்திலேயே இரவு தங்குவேன்.மாதம்தோறும் ஊருக்குப் பணமும் அனுப்பமுடியும். அந்த சில நாணயங்களைக்கொண்டு பூனே அருகில் என் சொந்த கிராமமானான கொண்டேகாவ்னில் எட்டுபேர் பட்டினி இல்லாமல் வாழமுடிந்தது. நான் மிக உற்சாகமானவனாக வாழ்க்கையில் நீந்தித்திளைத்த நாட்கள். கிழக்குஅந்தேரியில் விஜய்பட் பிரகாஷ் ஸ்டுடியோவைக் கட்டிக்கொண்டிருந்தார். அவர் ஒரு குஜராத்தி பிராமணர். குஜராத்தில் பலிதானா என்று ஒரு பெரிய சமணத்தலம் உண்டு. அங்கே பிறந்தவர்’
” ஆமாம்…மலைமேல் ஆயிரம் கோயில் இருக்கும் என்பார்களே
” அதே இடம்தான்… என்றார் லட்சுமண் ரானே “விஜய் பட் ஒரு ரயில்வே ஊழியரின் மகன். இங்கே மும்பையில்தான் படித்தார். படிக்கும்காலகட்டத்திலேயே நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். அதில் பணம் சம்பாதித்து அதைக்கொண்டு மும்பையில் ஒரு சிறிய ஸ்டுடியோவை அமைத்து சிறிய ஊமைப்படங்களை எடுத்தார். அன்றெல்லாம் எல்லாப் படங்களுமே லாபம்தான். அவர் அதுவரை ராயல் தியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தார். அதில் இருந்து விலகி பிரகாஷ் ஸ்டுடியோஸைக் கட்டினார். அந்தக்காலத்தில் மும்பையில் அது ஒரு பெரிய ஸ்டுடியோ. எட்டு ஃப்ளோர். ரெக்கார்டிங் ஸ்டுடியோ, லேப் எல்லாம் உண்டு. அலுவலகங்கள்,தொழிலாளர் குடியிருப்புகள் எல்லாமாகச் சேர்ந்து அது ஒரு குட்டிநகரம் போல… பிரகாஷ் ஸ்டுடியோவில் பம்பாய் கி மோஹினி என்று ஒரு படம் எடுத்தார்கள். விஜய்பட்டே அதை இயக்கினார். பன்னா ராணிதான் பம்பாய்மோஹினியாக நடித்தார். நான் விஜய்பட்டின் வீட்டில் இருந்து அவருக்குத் தேவையான சிகரெட், ஃபைல்கள் எல்லாவற்றுடன் தினமும் காரில் ஸ்டுடியோவுக்குப் போவேன். அங்கே ஒரு பெரிய சந்தையோ திருவிழாவோ நடந்துகொண்டிருப்பதுபோல தோன்றும். அந்தவயதில் நான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டேன். சினிமா என்பது ஒரு முடிவே இல்லாத திருவிழா… எப்படி அதிலிருந்து விடுபடமுடியும்…? கொஞ்சம் கொஞ்சமாக நானும் சினிமாவுக்குள் விழுந்தேன்…’
நான் ஆர்வத்துடன் ” சினிமாவில் என்னவாக இருந்தீர்கள்?’ என்றேன்
” சொன்னேனே…ஈயாக என்றார் லட்சுமண் ரானே அவரது காவிநிறப்பற்களைக் காட்டிச் சிரித்தபடி. ” அன்றெல்லாம் சினிமாவை எளிதாகக் கற்றுக்கொள்ளமுடியாது. பிரகாஷ் ஸ்டுடியோவில் கதை இலாகா இருந்தது. அதில் மகாராஷ்டிரத்திலும் குஜராத்திலும் உள்ள பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் வந்து அமர்ந்திருப்பார்கள். ஒளிப்பதிவு பகுதி ஈரானிகளின் உலகம். எனக்கு பிடித்திருந்தது எடிட்டிங்தான். தினமும் காலையில் விஜய் பட் வந்து அன்று ப்ரிண்ட் ஆகிவந்த நெகட்டிவ்களைப் பார்ப்பார். நான் ஆர்வமாக இருப்பதைக் கண்டு என்னிடம் நெகட்டிவ் எண்களைக் குறித்துவைக்கச் சொன்னார். அன்றுமுதல் நான் எடிட்டிங்கில் வேலைசெய்ய ஆரம்பித்தேன்….நாற்பது வருடம்’
” சினிமா எடிட்டிங் செய்திருக்கிறீர்களா?
” ஆமாம், ஆனால் சொல்லிக்கொள்ளும்படி எதையும் செய்யவில்லை. சரி, அது எதற்கு? நான் என்ன சொல்லவந்தேன்? அப்போதுதான் பிரகாஷ் ஸ்டுடியோவில் ராமராஜ்யா எடுக்க ஆரம்பித்தார்கள். பிரகாஷ் ஸ்டுடியோவின் பூக்காலம் என்றால் அதுதான். ராமராஜா…அது என்ன ஒரு படம்….சினிமாவின் பொற்காலமே அதுதான்’
” அப்போதுதானே சினிமாவே ஆரம்பமாகியது?’ என்றேன்
” ஆமாம்… ஆனால் எந்த ஒரு கலைக்கும் அது ஆரம்பிக்கும் காலம்தான் பொற்காலம். மனிதனின் தேடல் அந்தக் கலையில் உள்ள புதியபுதிய வழிகளை எல்லாம் ஆவேசத்துடன் கண்டுபிடிக்கிறது. அந்த ஒவ்வொரு கண்டுபிடிப்பும் பெரிய பரவசம். அதன்பின் அந்த கலைக்கு ஒரு பொதுப்போக்கு உருவாகிவிடுகிறது. அந்தபோக்கில் ஏதாவது கொஞ்சம் புதியதாகச் செய்யலாம். அல்லது அந்தப்போக்குக்கு நேர்எதிராக எதையாவது சோதனைசெய்து பார்க்கலாம். அந்த ஆரம்பகட்டப் பாய்ச்சல் சாத்தியமே இல்லை’
நான் விவாதிக்க விரும்பாமல் தலையசைத்தேன்
” ராமராஜ்யாவில் பிரேம் அதிப் ராமராக நடித்தார். அவர் அதற்கு முன்னால் குஜராத்தி மேடைகளில் ராமனாக நடித்துப் புகழ்பெற்றவர். ராமன் என்றதும் நம் மனதில் வரக்கூடிய கம்பீரமும் அமைதியும் சோகமும் கொண்ட ஒரு முகம் அவருடையது. அவர் அதற்கு முன்னாலேயே இரண்டுபடங்களில் ராமனாக நடித்திருந்தார். மக்கள் அவரை ராமனாகவே நினைத்தார்கள். அவரை நேரில் பார்த்தார் வயதானவர்கள் கூட அப்படியே காலில் விழுந்து வணங்குவார்கள். அவர் படப்பிடிப்பரங்குக்கு வரும்போது ஏராளமானவர்கள் வரிசையாக நின்று காலில் விழுவதை நானே கண்டிருக்கிறேன். அவர் கூப்பிய கைகளுடன் கண்களை மூடிக்கொண்டு ராம்சரண் ராம்சரண் என்று சொல்லிக்கொண்டே போய்விடுவார். அவர்களின் வணக்கம் தனக்கு வரக்கூடாது ராமனுக்குச் செல்லவேண்டும் என்பதற்காக. அப்படிப்பட்ட மனிதர் அவர்…’
லட்சுமண் ரானே தொடர்ந்தா ‘சீதையாக நடித்தவர் சோபனா சமர்த். கேள்விப்பட்டிருக்க மாட்டாய். பெரிய குடும்பத்தைச்சேர்ந்த பெண். மகாராணி மாதிரி இருப்பார் பார்ப்பதற்கு. அவரது பெண்களை உனக்குத் தெரிந்திருக்கும். பின்னாளில் பெரிய நடிகைகள், நூதனும் தனுஜாவும்’
“தெரியாது’ என்றேன்
லட்சுமண் ரானே ‘ ஓ ‘ என்றார் சிலும்பியைத் தட்டி சாம்பலை உதிர்த்துவிட்டு அதன் கருகிய உட்பக்கத்தை ஒரு சிறு கம்பியால் குத்தி சுத்தம்செய்ய ஆரம்பித்தார்
“படம் எவ்வளவுநாளில் எடுத்தார்கள்’ என்றேன்
“அன்றெல்லாம் படங்களை வருடக்கணக்கில் எடுப்பார்கள். ராம்ராஜ்யா எடுத்துமுடிக்க ஒன்றரை வருடம் ஆகியது. அப்போதுள்ள ஃபிலிமுக்கு நிறைய வெளிச்சம் தேவை. ஸ்டுடியோக்களில் மேல் கூரை இருக்காது. மதியவெயில் நேரடியாக உள்ளே அடிக்கும்படி கட்டியிருப்பார்கள். அந்த வெயிலில் நடிகர்களை வைத்து எடுப்பார்கள். நடிகர்களின் முகம் இருட்டாகத் தெரியக்கூடாது என்பதற்காக பெரிய ரிஃப்ளெக்டர்களால் வெயிலை அடிப்பார்கள். அதற்குமேல் பேபிலைட்களைக்கொண்டு வெளிச்சம் போடுவதும் உண்டு…வெயில் எப்போது மங்கும் என்று சொல்லமுடியாது. பிரகாஷ் ஸ்டுடியோவில்தான் முழுக்கமுழுக்க லைட் போட்டுப் படங்களை எடுத்தோம். ஒவ்வொரு லைட்டும் ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கும்… உடம்புக்கு மினிலைட். முகத்துக்கு பேபிலைட் .இரண்டையும் சரியாக வாங்கி நடிக்கவேண்டும். முகத்தில்வெளிச்சமிருந்தால் உடம்பு இருட்டாக இருக்கும். இவை இரண்டும் சரியாக இருந்தால் நிழல் பெரிதாக பின்னால் நிற்கும்… அல்லது கையின் நிழல் மார்பில் விழும்…ஒருநாளில் நாலைந்து ஷாட் கூட தேறாது. வாராவாரம் கழுவி பிரிண்ட் போட்டுப் பார்ப்போம்.சிலசமயம் ஒரு வாரம் முழுக்க எடுத்த காட்சிகளில் ஒரு ஃப்ரேம்கூடப் பயன்படாது. திருப்பித்திருப்பி எடுப்போம்…” லட்சுமண் ரானே சொன்னார் ”சொன்னேனே, அன்றெல்லாம் சினிமா என்றால் ஒரு பெரிய கொண்டாட்டம்”
”ராமராஜ்யா ஹிட்டா? ”என்றேன்.
“ஹிட்டா? நல்ல கதை. அந்த படத்தின் லாபத்தைக் கணக்குப்போட்டுப் பார்த்தால் ஷோலே எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தியாவே வெறிபிடித்து அந்தப்படத்தைப் பார்த்தது. பணம் கொட்டிக்கொண்டே இருந்தது. பிரகாஷ் ஸ்டுடியோ கட்டிய எல்லாக் கடன்களையும் விஜய் பட் அடைத்தார். வீடுகள் வாங்கினார். சுதந்திரப்போராட்டத்துக்கு நன்கொடைகளை அள்ளிக்கொடுத்தார்….அதன்பிறகும் பணம் மிச்சம். என்னசெய்வதென்றே தெரியாமல் திணறினார். இப்போதுகூட வட இந்தியாவில் ஏதாவது உள்கிராமத்தில் அந்த ராமராஜ்யா ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்படி ஒரு படம்…’
மீண்டும் கஞ்சாவைப் பற்றவைத்தார் லட்சுமண் ரானே . ஆழ இழுத்தபடி ‘ராமராஜ்யா அந்த அளவுக்கு வெற்றிபெற்றதற்குக் காரணம் அதன் பாட்டுகள்தான். சங்கர்ராவ் வியாஸ் இசை. கேள்விப்பட்டிருக்க மாட்டாய்…அவர் இசையமைப்பாளர் நாராயண்ராவ் வியாஸின் அண்ணா.’ என் கண்களை கவனித்தபின் ‘….இருவரையுமே தெரியாதா? சரிதான்.குவாலியர் கரானாவைச் சேர்ந்தவர்கள். விஷ்ணு திகம்பர் பாலுஸ்கரின் மாணவர்கள். அவர் யாரென்று கேட்டால் நான் உன்னை உதைப்பேன்’
” இல்லை’’என்றேன்
” நீ என்ன கண்டாய்…காந்திக்குப் பிரியமான ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டுக்கு மெட்டு போட்டவர் அவர்தான்… சங்கர்ராவ் வியாஸ் அன்றைக்கு பெரிய பாடகர்… ராமராஜ்யாவுக்குப்பின்னர் அவர்தான் இந்தியாவின் முதல் நட்சத்திர இசையமைப்பாளர்…என்ன பாடல்கள்…ஆகா…இந்தியாவே அந்தப்பாடல்களில் மயங்கிக் கிடந்தது. இருபது வருடம்…ஆமாம்..இருபது வருடம் அந்தப்படத்தின் பிளேட்டுகள் விற்றுக்கொண்டே இருந்தன. அதில் ஒரு பாட்டு. பீனா மதுர் மதுர் கச்போல்..” லட்சுமண் ரானே அதைப்பாடினார்
“இதே மெட்டில் மலையாளத்தில்கூட ஒரு பாட்டு இருக்கிறது. வீணே பாடுக பிரியதரமாய்” என்றேன்
”எல்லா மொழிகளிலும் இந்த மெட்டைப் போட்டிருக்கிறார்கள்…’ என்றார் லட்சுமண் ரானே “பீம்பிளாஸி ராகம். உங்களூரில் ஆபேரி என்பீர்கள். உயிரை உருக்கும் ராகம் அது. இந்தப்பாட்டு பிரிவாற்றாமையைப்பற்றிய பாட்டு. அப்படியே கொதிக்கும்… உருகிய ஈயம் வந்து இதயத்தில் விழுந்ததுபோலிருக்கும்” அந்த மெட்டை சற்றுநேரம் முனகியபடி தனக்குள் ஆழ்ந்து லட்சுமண் ரானே கஞ்சாவை இழுத்தார். பின்பு சிவந்த கண்களுடன் என்னைப்பார்த்து “…அப்படி ஒரு பாட்டு. அதைப்பாடியவர் சரஸ்வதி ரானே..’
“உங்களுக்குச் சொந்தமா?’ என்றேன்
” செருப்பாலடிப்பேன்…சரஸ்வதி ரானேயைக்கூட கேள்விப்பட்டிருக்காவிட்டால் நீ என்ன மனிதன்?’
” எனக்கு இசை தெரியாது”
லட்சுமண் ரானே சற்று குளிர்ந்தார் “ சரஸ்வதி ரானே அன்றைக்கு மிகப்பெரிய பாடகி. ….இந்துஸ்தானி இசையின் சக்கரவர்த்தி உஸ்தாத் அப்துல் கரீம்கானின் மகள். பிறக்கும்போது சஹினா என்று பெயர். அவரது அம்மா உஸ்தாதைப் பிரிந்தபோது குழந்தைகளுடன் இந்துமதத்துக்குத் திரும்பி வந்தார். சாஹினாவை சரஸ்வதியாக மாற்றினார். ஏழுவயதிலேயே சரஸ்வதி பாட ஆரம்பித்துவிட்டார். அன்று ஒரு கச்சேரிக்கு இருநூறு ரூபாய் வாங்கினார். இருநூறு ரூபாயில் அன்று பம்பாயில் ஒரு வீடு வாங்கலாம்…எங்கள் படத்துக்கு அவர் பாடவரும்போது ஏற்கனவே பல பாட்டுகள் பிரபலமாக ஆகி பிளேட்டுகள் பரபரப்பாக விற்றுக்கொண்டிருந்தன”
“அந்தப் பாட்டு உருவான ஒவ்வொருநாளும் நான் கூடவே இருந்தேன்” என்று லட்சுமண் ரானே முகம் மலரச் சொன்னார். “ஒரு கருப்புநிறமான கார். ஒரு பெரிய காராமணிப் பயறு உருண்டு வருவதுபோல அது வந்தது. ஒரு ஆழமான தடாகம் போல நிழல்கள் ஆட வந்து எங்கள் அலுவலகம் முன்னால் நின்றது. அலுவலகம் முழுக்க ஒரே பரபரப்பு. ஒரு மெலிந்த பெண் இறங்கி உள்ளே போனார். பொற்சரிகை போட்ட வெள்ளைநிறமான பட்டுச்சேலை அணிந்திருந்தார். கழுத்திலும் காதிலும் வைரங்கள் மின்னின. நீளமான முகம் பளிங்கில் செதுக்கப்பட்டது போலிருந்தது. கூர்மையான நீளமூக்கு. சரஸ்வதிக்கு அப்போது பதினெட்டு வயது. அவர் நடிக்கப்போகிறார் என்றுதான் நான் நினைத்தேன். இல்லை, பாட்டுதான் பாடப்போகிறார் என்று சொன்னார்கள். நான் அதுவரை அவரது பாட்டைக் கேட்டதே இல்லை. அன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி அவர் கிளம்பிப்போனார்…அவரது மென்மையான கால்கள் மிதித்துச் சென்ற தரையில் கால்வைக்கவே நாங்களெல்லாம் கூசினோம். அலுவகம் முழுக்க இரண்டுநாட்கள் கூரையில் இருந்து தேன்சொட்டுவதுபோலிருந்தது. வழுக்கி வழுக்கி நாங்களெல்லாம் நடமாடினோம்”
“பாட்டு உருவான அறையில் நான் இருந்தேன்…எடுபிடிப்பையனாக” என்றார் லட்சுமண் ரானே “… ரெக்கார்டிங் ஸ்டுடியோ அருகே உள்ள பெரிய அறை. அதற்குள் மெத்தை விரிக்கப்பட்டு திண்டுகள் போடப்பட்டிருந்தன. ஏற்கனவே விஜய்பட் வந்து அமர்ந்திருந்தார். நான் அருகே அவரது பையுடன் நின்றேன். வியாஸ் வந்தார். அவருடைய தம்பி ஆர்மோனியத்துடன் பின்னால் வந்தார். பாடலாசிரியர் ரமேஷ் குப்தா இன்னொரு அறையில் இருந்தார். பாட்டை நாலைந்து பிரதிகள் எடுத்திருந்தார்கள். அதை வியாஸுக்கும் அவரது தம்பிக்கும் விஜய்பட்டுக்கும் கொடுத்தார். அவர்கள் பாட்டை முணுமுணுவென்று வாசித்தார்கள். அறையில் அவ்வப்போது வந்த கனைப்பு மூச்சு தவிர வேறுசத்தமே இல்லை. வியாஸ் ஆர்மோனியத்தில் கைவைத்தார். கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார். அவரது இமை அசைவதை மட்டும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு கண்களைத் திறந்து பையனிடம் பீடா கேட்டார். பீடாவை மென்றபடி ஆர்மோனியத்தை வருடிக்கொண்டே இருந்தார். சட்டென்று ஆர்மோனியம் எதிர்காலத்தில் இந்தியாவே அரற்றப்போகும் மெட்டைப் பாடியது. தானா தனன தன தனனா…கேட்டதுமே என் மனம் மலர்ந்தது. பீம்பளாஸ் எனக்கு எப்போதுமே பிடித்த ராகம்”
”சரஸ்வதி ரானே வந்தபோது மெட்டு கிட்டத்தட்ட முழுமையாக இருந்தது. அவர் சொந்த வீணையுடன் வந்தார். உண்மையில் சரஸ்வதி வீணைக்கலைஞராகவேண்டும் என்றுதான் நினைத்திருந்தார். எப்படியோ வாய்ப்பாட்டுக்கு வந்துவிட்டார். அவரது குரல் இனிமையானதே அல்ல. கனமான குரல். மயில் அகவுவதுபோன்ற குரல் அது. அதனால்தான் வீணையில் கவனம்செலுத்தினார். ஆனால் பாட ஆரம்பித்தபோது மக்கள் அந்தக் குரலுக்கு அடிமையானார்கள்…வீணையைக் கொஞ்சநாளில் மறக்கவேண்டியிருந்தது…ஏன் தெரியுமா? அவரது குரலில் அவரது ஆன்மா இருக்கும். அவர் எல்லாப் பாட்டுக்குள்ளும் தன்னுடைய உயிரையும் உணர்ச்சிகளையும் செலுத்திவிடுவார். அவர்பாடிய ஒரு பாட்டு வெறும்பாட்டாக இருக்காது. ஒரு வாழ்க்கைத்தருணமாக இருக்கும். அப்பட்டமான ஓர் உணர்ச்சியாக இருக்கும்… அதுதான் இசை. குரலிலும் வித்தையிலும் என்ன இருக்கிறது?’
“சரஸ்வதி வந்து அமர்ந்து வீணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டார். வியாஸ் மெட்டை அவரே பாடிக்காட்டினார். வீணைக்கான நோட்டுகளை வாயாலேயே முனகினார். சரஸ்வதி கண்களை மூடி சற்றுநேரம் அமர்ந்திருந்தபின் பாட்டுவரிகளை மீண்டும் வாங்கி நாலைந்துமுறை வாசித்தார். அப்போதெல்லாம் அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் வீணைமேல் கைவிரல்கள் ஓடிக்கொண்டே இருந்தன. உண்மையில் வீணைதான் மெட்டை முனகுகிறதா இல்லை நம் மனம் முனகுவது அப்படிக் கேட்கிறதா என்றே சந்தேகமாக இருந்தது…. நான் சொல்வதை மிகை என்றுதான் நினைப்பாய். அந்தப்பாட்டு எப்படி முடியும் தெரியுமா? விரகவேதனை பேருருவம்கொள்கிறதே என்று. அந்த அதி உக்கிரமான விரகவேதனையை நான் அவர் முகத்தில் கண்டேன். உலகத்திலுள்ள எல்லா துக்கங்களும் அந்தக் கண்களில் தெரிந்தன. ஆயிரம் ஜென்மங்கள் பெண்ணாகப்பிறந்து ஊர்மிளை அனுபவித்த பிரிவுத்துயரை அறிந்திருந்தால்மட்டுமே அப்படி ஒரு பாவம் கண்களில் வரமுடியும். வீணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டார். சுருதி பார்க்கவில்லை. நேராகவே பாட்டுக்குள் போய்விட்டார். பீனா மதுர் மதுர் கச்சுபோல்…’
லட்சுமண் ரானே கழுத்தில் மயிர்க்கால்கள் சிலிர்ப்பதைக் கண்டேன்
” எனக்கு இப்போதும் புல்லரிக்கிறது. மகாத்மா காந்தி குழந்தையாகப் பிறக்கும்போது அவரைப்பார்த்த ஒருத்திக்குப் பின்னாளில் அவரைப்பற்றி நினைத்தால் எப்படி இருக்கும், அதைப்போல் இருக்கிறது. என்ன ஒரு பாட்டு! மகத்தான பாட்டு..’
பின்பு கொஞ்சநேரம் அவர் தன் உணர்ச்சிகளுக்குள் மூழ்கி இருந்தார்
[மேலும்]