” அதை எங்கே பதிவுசெய்தார்கள்? என்றேன்
“அங்கேதான்…ஆனால் அது பதிவாக நான்குமாதமாகியது. படம் வெளிவருவதற்குள்ளேயே பாட்டு பிளேட்டாக வந்து ஆயிரக்கணக்கில் விற்றுவிட்டது. காலையில் அந்தப்பாட்டின் படப்பிடிப்புக்காக சைக்கிளில் போகும்போது சாலை முழுக்க அந்தப்பாட்டுதான் கேட்டுக்கொண்டிருக்கும். அந்தப்பாட்டு வழியாக நான் எங்கெங்கோ போய்விட்டேன். ஆகவே அந்தப்பாட்டின் உக்கிரத்தைக் காட்சிகள் தொடவே முடியாது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் எடிட்டிங் டேபிளுக்குப் படத்தின் நெகட்டிவ் வந்தபோது எனக்குப் பெரிய ஆச்சரியம். அந்தப்பாட்டு அப்படியே காட்சியாக இருந்தது…நீ,இன்றும்கூடக் கொஞ்சம் தேடினால் அந்தப்பாட்டைப் பார்க்கமுடியும். அதைப்போல அவ்வளவு அற்புதமாக அதற்குப்பிறகு எத்தனை பாட்டுகள் படமாக்கப்பட்டிருக்கின்றன என்று தேடிப்பார்…
”அப்படியா?” என்றேன்
“நீ நம்பவில்லை. தெரிகிறது. ஒன்று தெரிந்துகொள். அன்றைக்கு காமிரா அதிகம் நகராது. ஒவ்வொரு ஷாட்டுக்கும் மிகவிரிவாக லைட் போடவேண்டும். ஆகவே சும்மா ஒரு சிறிய இடத்துக்குள் பாட்டை முடித்துவிடுவார்கள். அதனால்தான் அன்றைக்குப் பாட்டுகளைக் கெடுக்காமல் எடுக்க முடிந்தது. எப்போது பாட்டை இயக்குநர் காட்சிகளாக விளக்க ஆரம்பித்தாரோ அன்றே சினிமாவில் பாட்டு செத்துவிட்டது…ஒரு பாட்டைக்கேட்கும்போது நமக்கு என்னென்னவோ தோன்றும். ஆயிரக்கணக்கில் பிம்பங்கள் மனதில் ஓடும். அந்த இயக்குநர் அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதைக் காட்டினாரென்றால் என்னுடைய கற்பனைக்கு என்ன இடம்? ஒரு ஆலாபனையைக் கேட்கும்போது எனக்கு வானில் பறக்கும் புள் தோன்றுகிறது. இயக்குநர் ஒரு ஓடையைக் காட்டினால் எரிச்சல்தானே வரும்? அன்றைக்கு அப்படி இல்லை. ராமராஜ்யாவில் பார். ஊர்மிளாதேவி வீணையைக் கொண்டுவந்து அமர்ந்து அதைநோக்கிப் பாட ஆரம்பிப்பாள். வீணையை வாசித்தபடி மனமுருகிப் பாடிப்பாடி உடைந்துபோய் நிறுத்திக்கொள்வாள். சீதை ஒரு மஞ்சத்தில் கண்ணீருடன் படுத்து மெல்ல ஆடிக்கொண்டிருப்பாள். பக்கத்து அறைகளில் ராமன் அந்தப்பாடலைத் தாளமுடியாத துக்கத்துடன் கேட்டுக்கொண்டிருப்பார். அவ்வளவுதான். நான் அந்தப்பாட்டை ஆயிரம்முறைகூட சலிக்காமல் பார்ப்பேன். உண்மையில் எடிட்டிங் டேபிளில் நான் ஐநூறுமுறையாவது பார்த்திருப்பேன். ஒரு கணம்கூட சலிக்கவில்லை”
“ஏன் தெரியுமா? என்றார் லட்சுமன் ரானே “ அந்தப்பாட்டு அதில் நடித்தவர்களை அப்படியே சுருட்டி உள்ளே இழுத்துக்கொண்டது. அதைபோட்டுப்போட்டுப் பாட்டைப் படம்பிடித்துக்கொண்டே இருந்தார்கள். ஒருகட்டத்தில் அந்தப்பாட்டைப் போட்டதுமே அனைவரும் கண்ணீர்விட ஆரம்பித்தார்கள். யாரும் நடிக்கவில்லை. எல்லாரும் அந்தப்பாட்டுக்குள் இருந்த மானுட துக்கத்தில் திளைத்தார்கள்…அப்படித்தான் மகத்தான பாட்டுகள் அமைகின்றன”
“பார்க்கவேண்டும்” என்றேன்
“ஆனால் அந்தப்பாட்டில் ஒரு தவறு நிகழ்ந்தது” என்றார் லட்சுமன் ரானே . “மொத்தப்பாட்டையும் ஏறத்தாழ சரிசெய்தபிறகுதான் விஜய் பட்டிடம் உதவியாளர் சொன்னார், கடைசியாக ராமனின் எதிர்வினை இல்லை என்று. தாளமுடியாத அந்த வேதனையை ராமனும் உணரவேண்டும், அது காட்டப்படவில்லை. விஜய்பட் அது தேவை என்று முடிவுசெய்தார். திருப்பி எடுக்க மீண்டும் பிரேம் அதிப்பைக் கூப்பிட்டார். அவர் அதற்குள் விக்ரமாதித்தனாக நடிக்க ஒரு நாடகத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தேரியிலேயே ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அவர் எல்லாரும் அவரை ராமனாகவே நினைப்பதில் சலிப்படைந்திருந்தார். விக்ரமாதித்தனாக நடித்து அந்த பிம்பத்தை மாற்றலாம் என்று நினைத்தார். ராமனின் நிதானமும் சோகமும் இல்லாத கதாபாத்திரம் விக்ரமாதித்தன். துடுக்கான பெண்பித்தரான அரசர் அவர். பிரேம் அதிப் திரும்பி வந்து நடித்தபோது அந்தப் பழைய உணர்ச்சிகள் அவரிடம் உருவாகவே இல்லை”
” ஒருவாரம் விஜய் பட் பிரேம் அதிப்பை வைத்து விதவிதமாக எடுத்துப்பார்த்தார். ஊர்மிளையின் விரகவேதனையைக் கேட்டு ராமன் தாளமுடியாதவனாகத் தவிக்கும் ஒரே ஒரு ஷாட் போதும். எதுவுமே அமையவில்லை. கடைசியில் இருப்பதில் பரவாயில்லை என்று தோன்றிய ஒரு ஷாட்டைப் பாட்டின் கடைசியில் விஜய் பட் சேர்த்தார். ஊர்மிளா வீணை யுடன் கதறுகிறாள். துயரத்தில் தீப்பட்டவள்போல சீதை மஞ்சத்தில் புரள்கிறாள். ராமனும் தவிக்கவேண்டும். ஆனால் ராமன் வரும் அந்த ஷாட்டில் அவர் வேண்டாம் வேண்டாம் என்பது போலவோ மாட்டேன் மாட்டேன் என்பதுபோலவோ தலையை அசைப்பதுபோலத் தோன்றியது. அவர் நடிப்பது போலவே இருந்தது. உண்மையான வேதனை அவர் முகத்தில் இல்லை”
“அதை அப்போதே உணர்ந்தீர்களா?”
“ஆமாம்…எனக்கு வைரங்கள் நடுவே ஒரு கூழாங்கல்போல இருந்தது அது. ஆனால் அதைச் சொல்லக்கூடிய இடத்தில் நான் இருக்கவில்லை. எடுபிடிப்பையனுக்கு அன்று குரலே இல்லை. அந்த ஷாட் வரும்போதெல்லாம் கண்களை மூடிக்கொள்வேன்…ஆனால் அந்த சிறிய பிழையை என்னால் மறக்கவேமுடியவில்லை. அந்த விஷயம் என் மனதில் எப்படியெல்லாம் மாறியது என்று நினைத்துப்பார்த்தால் ஆச்சரியம். முதலில் அந்தப் பிசிறு எனக்குப் பெரிய சிக்கலாக இருந்தது. அந்த ஷாட்டைப் பார்க்கவே முடியாது. ஆனால் பார்க்காவிட்டாலும் அது என் கண்ணுக்குள் துல்லியமாக ஓடும். பிறகு அந்தப்பாட்டைக் கேட்டாலே அந்த ஷாட் மட்டும்தான் நினைவுக்கு வர ஆரம்பித்தது.கொஞ்சநாளில் அந்த ஷாட்டை நான் விரும்ப ஆரம்பித்தேன். அழகான பெண்ணின் கன்னத்தில் ஒரு மரு இருந்தால் நமக்கு அவள் அழகு கூடுகிறது என்று தோன்றுமே அதுபோல”
நான் சிரித்தேன்
“மனதின் நாடகங்கள் மிகவிசித்திரமானவை” என்றார் லட்சுமன் ரானே. ” நான் அதன்பிறகு எங்கே எந்த தியேட்டரில் ராமராஜ்யா ஓடினாலும் போய்ப்பார்ப்பேன். அதில் அந்தப்பாட்டுவரும்போதே என் கைகால்கள் அதிர ஆரம்பிக்கும். அந்தத் தப்பான ஷாட் வந்ததும் ஒரு வகை உச்சம். பிறகு ஒரு மெல்லிய நிம்மதி. இருபது வருடங்கள் படம் தியேட்டரில் இருந்தது. நான் நூற்றுக்கணக்கான முறை பார்த்திருப்பேன்”
“ஆமாம்,ஒரு மனச்சிக்கல்தான்” என்றேன்
“இல்லை…இது என் பிரச்சினை இல்லை. ஏன் தெரியுமா? நாற்பத்திமூன்றுக்குப்பிறகு அந்தப்பாட்டு இல்லாத ராம்லீலா நாடகங்களே இல்லை. எந்த மேடையிலும் அந்தப்பாட்டுக்கு ராமனாக நடிப்பவர் அந்த வரி வரும்போது அச்சு அசலாக அதே மாதிரி தலையை ஆட்டுவார். மற்ற எல்லா நடிப்புகளும் கொஞ்சம் முன்பின்னாக மாறித்தான் இருக்கும். இந்தத் தப்பான ஷாட் மட்டும் எப்படி மொத்த இந்தியாவிலும் ஒரேபோல அத்தனைபேர் மனதிலும் பதிந்தது?” என்றார் லட்சுமன் ரானே “ நான் எப்படியும் ஐம்பது மேடைகளில் இந்தப்பாட்டைப் பார்த்திருப்பேன். அதே தலையசைப்பு…”
“ஆச்சரியம்” என்றேன். எனக்கு அதை நம்பமுடியவில்லை என்பதுதான் உண்மை
“அதன்பின் அதே ராமராஜ்யத்தை விஜய் பட்டே மீண்டும் சினிமாவாக எடுத்தார்.” என்றார் லட்சுமன் ரானே ” இருபத்தைந்து வருடம் கழித்து….1967இல் வெளிவந்தபடம். பீனாராய் சீதாவாக நடித்திருந்தார். பத்ரி பிரசாத் ராமன்.வசந்த் தேசாய் இசையமைத்திருந்தார். கிட்டத்தட்ட பழைய படத்தை அப்படியே வண்ணத்தில் திருப்பி எடுத்திருந்தார்கள். பழையபடத்தில் இருந்த உணர்ச்சிவேகத்தில் கால்வாசிக்கூட இல்லாத படம். அந்தப்படத்தில் அதே காட்சிக்கு வசந்த் தேசாய் அதே பீம்பளாசியில் ஒரு பாட்டு போட்டிருந்தார். ரெய்ன் ஃபாய் சோஜாரே பஞ்சி என்று ஒருபாட்டு. நல்ல ராகம். லதா மங்கேஷ்கர் நன்றாகவே பாடியிருந்தார். ஆனால் அந்தப்பாட்டை பீனா மதுர் மதுர் கச்சுபோலுடன் ஒப்பிட்டால் சேடிப்பெண்ணை சக்கரவர்த்தினி பக்கத்தில் நிறுத்தியது போல இருந்தது…”
“லதா நல்ல பாட்டுகளைப் பாடியிருக்கிறாரே” என்றேன்
லட்சுமன் ரானே அதைப் பொருட்படுத்தவில்லை ”அந்த இரண்டாவது படம் வரும்போது நான் சினிமாவில் இல்லை. என் மனைவி இறந்துபோய் எதிலும் ஈடுபாடில்லாமல் அலைந்துகொண்டிருந்தேன். பெர்ஹாம்பூரில் ஒரு பழைய தியேட்டரில் நான் அந்தப்படத்தைப் பார்த்தேன். அந்தப்படத்தைப் பார்க்கக்கூடாதென்றே நினைத்தேன். ஆனால் பார்க்காமலும் இருக்கமுடியவில்லை. அந்தப்பாட்டுக்காக என்னுடைய நரம்புகள் எல்லாம் இறுகி உடம்பே முறுக்கப்பட்ட வில் போல இருந்தது. பாட்டு வந்ததும் என்னால் கவனிக்கவே முடியவில்லை. நான் அந்தத் தலையசைவுக்காகக் காத்திருந்தேன். அது வரவில்லை.விஜய்பட் அந்த பிழையை அவரும் கவனித்திருந்தார். அதை மிகச்சிறப்பாகச் சரிசெய்துவிட்டிருந்தார்…. இம்முறை ராமன் கண்ணீர் வழியும் கண்களுடன் பாட்டைக் கேட்டபின் மயங்கிச் சரிகிறான். ஏமாற்றம் தாளாமல் நாண் அறுந்த வில் போல நான் தளர்ந்தேன். அப்படியே சீட்டில் மல்லாந்து கிடந்தேன். சற்று நேரம் கழித்துப்பார்த்தால் நான் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். அப்படியே எழுந்து வெளியே கொட்டுகிற மழையில் இறங்கி நடந்தேன். உடனே செத்துவிடவேண்டும் என்றுதான் என் மனம் ஆசைப்பட்டது. நான் வாழ்ந்த உலகம் அப்படியே காணாமலாகிவிட்டது என்று தோன்றிவிட்டது. அசட்டுத்தனமான அர்த்தமற்ற ஓர் உலகம் என்னைச்சூழ்ந்து இயங்கிக்கொண்டிருந்தது”
“மறுநாளே கிளம்பி பிகார் சென்றேன். சின்னச்சின்ன ஊர்களாகத் தேடி அலைந்தேன். எங்காவது பழைய ராமராஜ்யா ஓடுகிறதா என்று பார்த்தேன். சூரஜ்பூர் என்ற ஊரில் ஒரு தகரக்கொட்டகையில் ஓடிக்கொண்டிருந்தது. பஸ்ஸில் போகும்போது அந்த போஸ்டரைப் பார்த்தேன். நிறுத்து வண்டியை நிறுத்து என்று கூவினேன். வண்டி நிற்பதற்குள் இறங்கி ஓடினேன். படம் போட மேலும் இரண்டு மணிநேரம் இருந்தது. நான் அந்தக் கொட்டகைவாசலிலேயே கொளுத்தும் வெயிலில் அமர்ந்திருந்தேன். என்னைக் கிறுக்கனாகவே எல்லாரும் நினைத்திருப்பார்கள். இருக்கட்டும், கிறுக்கன்தானே என்று நினைத்துக்கொண்டேன்”
”படம்போட்டதும் உள்ளே போய்க் கைகூப்பியபடி அமர்ந்துகொண்டேன். ராமா வா, வந்து என்னை ஆட்கொள் என்று வேண்டிக்கொண்டேன். ராம்சரண் ராம்சரண் என்று என் உதடுகள் சொல்லிக்கொண்டே இருந்தன. அந்தப்பாடல் வந்தது. அது யானை தும்பிக்கையால் தூக்குவதுபோல என்னை வளைத்து அள்ளிக்கொண்டது. காட்டருவி போலக் கொண்டுசென்றது. அந்தக் கணத்தை நோக்கி. ராமன் தலையை ஆட்டினான். நான் ராமா என்று கதறியபடி மூர்ச்சையானேன்”
மீண்டும் கஞ்சாவை நிறைக்கும் லட்சுமன் ரானேவை நான் உற்றுப்பார்த்திருந்தேன். அவர் என்ன சொல்கிறார் என்றே எனக்குப்புரியவில்லை.விசித்திரமான ஒரு கிறுக்குத்தனம். கங்கைக்கரைக்கு வந்துசேர்பவர்கள் எல்லாருமே ஒருவகை கிறுக்கர்கள்தான். நானும்.
லட்சுமன் ரானே என்னை நிமிர்ந்துபார்த்து “அதன்பிறகு நான் சினிமாவே பார்க்கவில்லை. காசிக்குவந்துவிட்டேன்” என்றார்
“சரி, என்னதான் சொல்லவருகிறீர்கள்? என்றேன்
“நீ சரித்திரம் உருவாகும் இடத்தில் இருக்கவேண்டும் என்றுதான்…சரஸ்வதி ரானே, விஜய்பட, வியாஸ்,பிரேம் அதிப் பிறகு காந்தி…எவ்வளவு பெரிய ஒரு வரலாற்றுத்தருணம்…”
“நீங்கள் வேறென்னவோ சொன்னீர்கள்…சம்பந்தமில்லாமல்” என்றேன். ஏன் அவர் சொன்னது என்னை நிலைகுலையச்செய்கிறது என்று புரியவில்லை
“ நான் சொல்லவந்தது என்னவென்றால் அதாவது–” என்றார் லட்சுமன் ரானே “ என்னால் சரியாகச் சொல்லமுடியவில்லை. தோராயமாக இப்படிச் சொல்கிறேன். மனிதர்களை வைத்து கடவுள் அவரது கலையை உருவாக்குகிறார் இல்லையா? அல்லது இப்படிச் சொல்கிறேன். இலக்கியநயமாக இருக்கும். மனிதர்களின் ஞானத்தையும் அஞ்ஞானத்தையும் பின்னி கடவுள் அவரது கலையை உருவாக்குகிறார்.சரியாக இல்லையோ?”
“நீங்கள் சொன்னதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? “ என்றேன்
“சரி விடு” என்றார் லட்சுமன் ரானே ”ஏதோ சொல்லத்தோன்றியது சொன்னேன்” அவர் பாலிதீன் பொட்டலத்தில் இருந்து ஒரு லட்டு எடுத்துப் பிய்த்து பாதியை எனக்குத் தந்தார். மிச்சத்தை ருசித்து சாப்பிட ஆரம்பித்தார். கஞ்சாவுக்குப்பின் இனிப்புசாப்பிடுவதை அனேகமாக எல்லாருமே விரும்புவதைக் காசியில் கண்டிருந்தேன். சிலகணங்கள் அவரைப்பார்த்தபின் நான் லட்டுவை அந்த மெட்டை முனகியபடி சாப்பிட ஆரம்பித்தேன்
ரெய்ன் ஃபாய் சோஜாரே பஞ்சி
http://www.youtube.com/watch?v=mHwjiyRJX6E
தெலுங்குவடிவம்
மலையாள வடிவம்
[ காலம் இலக்கிய இதழில் [2012 டிசம்பர் ] வெளிவந்த சிறுகதை]