வணக்கம் ஐயா,
ஃபோர்டு பவுண்டேஷன் பற்றிய மேலும் ஒரு தகவலை உங்களுக்கு பகிர்கிறேன்.
http://www.outlookindia.com/article.aspx?278264
அன்புடன்
நாஞ்சில் சுரேஷ்
அன்புள்ள நாஞ்சில் சுரேஷ்
ஃபோர்டு ஃபவுண்டேஷன் நிதி பெற்ற பல நிறுவனங்களை மத்திய அரசு தடைசெய்துவிட்டதாக அறிகிறேன். அந்நிறுவனங்களில் இருந்து நிதி பெற்றவர்களையும் அரசு கண்காணிப்புக்குள் கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் பல பதிப்பகங்கள், கல்லூரிகள், நாட்டாரியல் நிறுவனங்கள், கிறித்தவஇறையியல் அமைப்புகள், சில சிற்றிதழ்கள் பாதிப்புக்குள்ளாகும் என்றார்கள்.
ஃபோர்டு ஃபவுண்டேஷன் நிதி மீது மத்திய அரசு கைவத்ததுமே பல அமைப்புகள் ஆட்டம்கண்டுள்ளன. சென்ற திங்கள்கிழமை நெல்லையில் கூடிய ஒரு கூட்டத்தில் அவ்வமைப்புகள் கூடி விவாதித்து கிறித்தவப் பேராயர்கள் வழியாக சோனியா காந்திக்கு முறையீட்டை கொண்டுசெல்ல முடிவெடுத்ததாக அறிந்தேன்
அரசாணையில் இந்த அமைப்புகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பட்டியலைப் பெற்று அப்பட்டியலில் உள்ள அமைப்புகளுடன் தொடர்புகொண்டிருந்த ‘அறிவுஜீவி’களின் பெயர்களை எவராவது வெளிப்படுத்தவேண்டும். கொஞ்சம் நீடித்த உழைப்பு தேவைப்படும் செயல். ஆனால் இன்று மிக அவசியமானது
ஜெ
வணக்கம் திரு.எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே,
உங்கள் இணையத்தில் எங்களது மியன்மா (பர்மா) தமிழ்க் கல்வி பற்றிய செய்தி கண்டேன்,மகிழ்ச்சி.
தொடர்ந்து தொடர்பில் இருப்பேன்.
வளர்க நம் அன்பும் நட்பும்.
தமிழன்புடன்,
சோலை.தியாகராஜன்
அன்புள்ள சோலை தியாகராசன்
நன்றி.
பர்மிய தமிழர் அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளைப்பற்றி தொடர்ச்சியான எல்லா தகவல்களையும் பிரசுரிக்கும் ஓர் இணையதளத்தை நீங்கள் ஆரம்பிக்கலாமென நினைக்கிறேன். அதிகம் செலவில்லாமல் செய்யலாம். உலகம் முழுக்க மியான்மார்வாழ் தமிழ்மக்களின் வாழ்க்கைச்செய்திகள் சென்று சேரும்
1. மியான்மாரின் உள்ள கல்வி அமைப்புகள், கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றை முழுக்க ஆவணப்படுத்தலாம்
2. மியான்மாரில் உள்ள எழுத்துக்களை வெளியிடலாம்
3. மியான்மார் தமிழர்களின் பொதுவான கலாச்சார விழாக்கள், ஆலயவிழாக்கள் பற்றிய செய்திகளை வெளியிடலாம்
4.மியான்மார் தமிழர்களின் தனிப்பட்ட திருமணம் போன்ற எல்லா விழாச்செய்திகளையும் வெளியிடலாம்
கவனிக்கவேண்டியதாக எனக்குப்படுவது இச்செயல்பாடுகளில் தீவிரத்தமிழ்ப்பற்று என்ற பேரில் இனவாதமும் சாதிவெறியும் பிரிவினைவெறியும் ஊட்டும் எவரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாதென்பதே. முழுக்கமுழுக்க சமரச நோக்கமுள்ள பண்பாட்டு அமைப்பாக இதுசெயல்படலாம்
ஜெ