நான்கு வேடங்கள்-கடிதங்கள்

அன்பு திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

நன்றிகள் பல!

என்னுடைய மிகக் குழப்பமான ஒரு காலகட்டத்தில் உங்களுடைய ‘நான்கு வேடங்கள்’ பதிவைப் படிக்க நேர்ந்திருக்கிறது. எனக்குள் இருந்த ‘சமநிலைக் குலைவு’ பற்றி யாரிடமும் பேசுவதற்குக் கூட அச்சமாக இருந்தது. சேனல் மாற்றுவது போல மனநிலைகளை மாற்றிக் கொள்வதென்பது மிகக் கடினமானவொன்றாய் இருந்தது. உங்களது பதில் என்னைத் தீவிர ‘சுய பரிசோதனை’க்கு உட்படுத்தியிருக்கிறது.சொல்லப் போனால் ஒரு வித ‘அகங்காரம்’ தான் உண்மையிலிருந்து தள்ளி வைத்திருந்தது என நினைக்கிறேன்.

ஒரு நம்பிக்கையும், தெளிவும் வந்திருக்கிறது. எழுத்தாளர்களுடன் அவர்களின் எழுத்துகளின் வாயிலாக மட்டுமே உரையாடுவதெனத் தீவிரமாய் நம்புகிறவன் நான். ஆனால், இங்கு என்னுடைய நன்றிகளை சொல்வது மிக மிக அவசியமெனத் தோன்றுகிறது. இந்தப் பதிவு எனக்கு எவ்வளவு முக்கியமானதென்று உணர்த்துவதற்கு என்னிடம் சொற்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியுமென நம்புகிறேன்.

அன்புடன்,
மணியன்

அன்புள்ள மணியன்

அனைவருமே ஒரு காலகட்டத்தில் அந்தச் சமநிலையை தக்கவைத்துக்கொள்ளப் போராடியிருப்பார்கள். அந்தப்போராட்டம் மிக இயல்பானது. வாழ்க்கையின் ஒரு பகுதி அது. அங்கே நாம் நம்மை ஆழ்ந்து கவனிக்கிறோம். நம் இயல்பென்ன, நம் வாழ்க்கையின் இயல்பென்ன என புரிந்துகொள்கிறோம். நம்மை அதற்கேற்ப அமைத்துக்கொள்கிறோம். கட்டுமரத்தில் ஏறினால் ஒருநாள் முழுக்கத் தலைசுற்றும், வாந்தி வரும். ஒருகட்டத்தில் புரியும், நம் காலுக்கும் கட்டுமரத்துக்கும் இடையே ஓர் புரிதல் நிகழ்ந்திருப்பதை. சமநிலை கைகூடியிருப்பதை

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள்‘நான்கு வேடங்கள்’  குறித்து.
இன்று என் போன்று பலருக்கு இருக்கும் பிரச்சனையே பொருள் வாழ்கை மற்றும் அகவிடுதலையை சமநிலையில் வைக்கும் ஒரு வேலைச் சூழல் இல்லாததே. இன்று தொழில் நுட்பம் மட்டும் இல்லாமல் எல்லாத் துறைகளிலும் உள சக்தியை முழுவதும் உறிஞ்சி விடும் ஒரு வேலைஅமைப்பே உள்ளது. இதில் வெற்றி பெற அல்ல, நிலைத்து நிற்பதற்கே ஒரு நாளில் பெரும்பான்மையான நேரத்தையும், சக்தியையும் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் நிறைவு தரும் கலை இலக்கிய செயல்பாடுகளில் ஒருவர் போதிய அளவிற்கு ஈடுபட முடிவதில்லை.

நீங்கள் நான்கு வேடங்களையும் சமநிலைப்படுத்துவது குறித்து சொல்வது புரிகிறது. ஆனால் பிழைப்பிற்காகப் பெரும் பகுதியை எடுத்து கொள்ளும் வேலை இலக்கியத்திற்கான மனநிலையை இல்லாமல் செய்து விடுகிறது.நீங்கள் முன்பு ஒரு பதிலில் சொன்னது போல் நாளெல்லாம் வேறு செயல்களில் ஈடுபட்டு விட்டு அதன் பின் கிடைக்கும் மூன்று மணி நேரம் நேரமே இல்லை. இது குறித்து உங்கள் கருத்துக்களை அறிய ஆவல். இத்தகைய கடுமையான வேலைச் சூழலிலும் ஒருவர் கலை இலக்கியங்களில் நிறைவாக ஈடுபட முடியுமா? அப்படி ஈடுபட்டாலும் அவரது வெற்றியை இதில் அவர் தேட முடியுமா?

அன்புடன்,
பிரபு

அன்புள்ள பிரபு,

ஆம், நீங்கள் சொல்வது உண்மையே. இன்றைய வாழ்க்கை மிகப்பெரும்பாலானவர்களுக்கு கடைசித்துளி ஆற்றலையும் உண்ணும் உழைப்பை நிபந்தனையாக்குகிறது. இன்றைய முதலாளித்துவம் ஒருவனுக்கு ‘வேலை கொடுப்பதில்லை’ அவனை ‘வேலைக்கு எடுக்கிறது’ அவனுடைய ஆற்றலில் ஆன்மாவில் கடைசித்துளி வரை அது உறிஞ்சி விடுகிறது.

ஆனால் இன்றைய நம் சூழலில் வேறு வழி இல்லை. நமக்குரிய கடமைகளைச் செய்தாகவேண்டும். அதன்பின்னரே நம் ஆன்மாவுக்கான தேடலை நிறைவேற்ற்ற முடியும். அதற்கான வழி என்பது எதில் இருக்கிறோமே அதில் வெற்றிகரமாக ஆவதே. அந்த வெற்றி நமக்கான நேரத்தை, இடத்தை உருவாக்கித்தரும்.

கைகளை இறுக்கிக் கட்டினால் நம்மால் அசைக்கவே முடியாது. ஆனால் கொஞ்ச நேரத்தில் இயல்பாகவே கட்டின் இறுக்கம் தளர்வதை, இடைவெளி கிடைப்பதை உணர்வோம். நம் உடல்,கட்டுக்கு ஏற்ப நெகிழ்ந்துகொள்ளும்

ஆம், எந்தக் கடுமையான சூழலிலும் அதற்குரிய நெகிழ்வு இருக்கத்தான் செய்யும். சிறையில்கூடப் பெரிய ஆக்கங்களை எழுதியவர்கள் இருக்கிறார்கள் அல்லவா?

ஜெ

அன்புள்ள ஜெ

‘நான்கு வேடங்கள்’ வாசித்தேன்

நான் என்வாழ்க்கையில் பிரச்சினைகளைச் சந்திக்கும்போதெல்லாம் நினைப்பேன், எதற்காக சின்ன வயதில் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தோம் என்று. மற்ற நண்பர்களைப்போல இருந்திருந்தால் இந்த சிக்கலே இருந்திருக்காதே. மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கலாமே என்று. சமநிலையைப் பேணுவது வாசிப்பும் நுண்ணுணர்வும் கொண்டவர்களுக்குத்தானே பிரச்சினையாக இருக்கிறது?

அருண்.கெ

அருண்

ஆம், நம்மைப்போல அறிவுஜீவிகளுக்கே இந்த சமநிலையின்மைச் சிக்கல் உள்ளது என்று நாமனைவருமே எண்ணுகிறோம். ’சாமானிய’ மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கற்பனைசெய்கிறோம்.

உண்மையில் அப்படி இல்லை. நான் பார்த்தவரை அவர்கள் இன்னும் பெரிய சமநிலைக்குலைவுகளைச் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு மரபு வகுத்தளித்த பாதையில் அவர்கள் கேள்விகள் இல்லாமல் செல்வார்கள். படிப்பு வேலை குடும்பம் என்று போய்க்கொண்டே இருக்கையில் ஒரு வயதில் சமநிலையை உருவாக்கிக்கொள்ளமுடியாத நிலை வருகிறது. அதாவது அவர்கள் எதிர்பாராத விஷயங்கள் வாழ்க்கைக்குள் வருகின்றன. அப்போது அவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள்.

நாற்பது வயதில் பலர் வாழ்க்கையை அவர்களே மூர்க்கமாக சிதைத்துக்கொள்வதைக் காணலாம். குடி,கூடாநட்பு, பேராசைவெறி என திசைதிரும்புவார்கள். மிகக்கணிசமான ‘சாமானிய’ மக்களின் குடும்பவாழ்க்கை மிகமிக சீரழிந்துகிடக்கிறது என்று இன்று பல அனுபவங்கள் வழியாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். அவர்களால் தங்களைத்தாங்களே கவனிக்கமுடியாதென்பதனால் அவர்கள் மீள்வதும் அரிது. ஒரே மீட்பு, குடும்பக்கடமைகளின் கட்டாயம். அதனூடாகச் சென்றுசேரும் பக்தி மட்டுமே

நம்மைப்போன்றவர்கள் நம்மை நாமே பார்க்க வாய்ப்புள்ளவர்கள். சமநிலையை உருவாக்கிக்கொள்ளக்கூடியவர்கள்.நமக்கு வேண்டியதை நாமே தேடிக்கொள்ளக்கூடியவர்கள் நாம். ‘சாமானியர்’ அவர்களுக்கு எது கிடைக்குமோ, எது தட்டுப்படுமோ அதை மட்டுமே அடைபவர்கள். ஒருபோதும் நம்முடைய மகிழ்ச்சியை அவர்கள் அடைவதில்லை. அவர்களை நாம் கூர்ந்து பார்ப்பதில்லை. பார்த்தால் ஆழமான பரிதாபமும் குமட்டலும்தான் ஏற்படும்.

ஜெ

முந்தைய கட்டுரைகடி
அடுத்த கட்டுரைவரம்பெற்றாள்-கடிதங்கள்