தேவதேவனும் நானும்

ஜெ,


தேவதேவன் தளத்தில்
ஓர் அருமையான புகைப்படத்தைப்பார்த்தேன். உங்களுடைய மிகச்சிறந்த படம் அதுதான். அது ஒரு வரலாற்றுச்சிறப்புள்ள படம் என்று நினைக்கிறேன். தேவதேவன் உங்களுக்குப்பிடித்தமான கவிஞர் என்று தெரியும். ஆனால் இவ்வளவு நெருக்கமான நண்பர் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. கவிஞர் முகத்தில் உள்ள நெருக்கமும் உங்களிடம் உள்ள சொந்தமும் ஆச்சரியமானவை.

செந்தில் ஆர்

அன்புள்ள செந்தில்

தேவதேவனுடனான என் உறவு ஆரம்பிப்பது 1985ல் நான் அவரது கவிதையை சுந்தர ராமசாமி வீட்டில் கிடந்த லயம் இதழில் வாசித்ததில் இருந்து. அக்கணம் முதல் அவர் என் கவிஞர். 1986ல் நான் அவரைக் குற்றாலம் கவிதைப்பட்டறையில் சந்தித்தேன். அவர் என்னைக் குளிப்பதற்காக அழைத்துச்சென்றார். அன்று இரவெல்லாம் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்

ஆச்சரியம் என்னவென்றால் நானும் அவரும் எப்போதுமே அதிகம் பேசிக்கொண்டதில்லை என்பதுதான். நாங்கள் பேசிக்கொண்டதெல்லாம் அவரது கவிதை வழியாகவே. அவரது கவிதையின் ஆழ்ந்த தனிமையை நான் பங்கிட்டுக்கொண்டிருக்கிறேன். அதை அவர் நன்கறிவார். அவரது நோயில் மகிழ்ச்சியில் எல்லாம் ஒரு மெல்லிய கைதொடுகையிலேயே அவரிடம் நான் சொல்லவேண்டிய எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்

ஜெ

தேவதேவனின் இணையதளம்

முந்தைய கட்டுரைவன்முறையும் அகிம்சையும்
அடுத்த கட்டுரைஅனல் காற்று, பின்தொடரும் நிழலின்குரல்- கடிதங்கள்