அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-2

[தொடர்ச்சி]

அசோகமித்திரனின் எக்கதாபாத்திரமும் அர்த்தமின்மையின் எல்லைக்குச் செல்வதில்லை. ‘இன்னும் சில நாட்களி ‘ன் சாம்பசிவமாக இருப்பினும் கூட, செயலின் அந்த தளத்தின் உள்ளீடற்ற தன்மை ஒரு ஓசையுடன் வெடித்துத் திறப்பது மட்டுமே அவர் கதைகலில் தெரிகிறது. அவை காட்டும் உருவம் நிதரிசனங்களில் மட்டுமே நம்பிக்கை உள்ள யதார்த்தவாதியினுடையது. இது ஒரு குறைபாடோ பிழையோ அல்ல, ஒரு தன்மை மட்டுமே ஆகும். இப்பார்வைக்கு எல்லைகள் நிறைய. பிரவாகத்தை அசோகமித்திரன் பார்ப்பதில்லை, துளிகளைத்தான் என்று கூறுவது இதனால்தான். அவருடைய கதைகளை எந்த பிரமாண்டத்திலும் கச்சிதமாக பொருத்தலாம். ஆனால் அவை பிரம்மாண்டத்தின் சிறு மாதிரிகள் அல்ல. அவை வாழ்வை தனித்த துண்டுகளாக எடுத்து அவற்றில், அவற்றின் அசைவில், வாழ்வின் முழுஓட்டத்தையும் பார்ப்பதுபோல. இதனால் தான் அவர் சிறுகதையில் வெற்றிகரமாக செயல்படமுடிகிறது.அவருடைய குறிப்பிடத்தக்க சில கதைகளை உலகத்தளத்துக்கு இணையானவையாக நிச்சயம் கூறமுடியும்.

துளிக்குள் சலனமாக பிரவாகத்தை பார்க்கும் முயற்சியினால் அசோகமித்திரன் தரும் வாழ்க்கைச்சித்திரம் ‘ஓட்டம் ‘ அல்ல. ‘சுழலும் ‘ அல்ல. அதற்கு திசையே இல்லை. அது மிக நெருங்கி அமர்ந்து, நதியின் நீரோட்டத்தை பார்க்கும் புழுஒன்றின் பார்வைபோல. அதிக பட்சம் பார்க்க முடிந்த ஒரு துளியில் அது காணும் நதி என்பது நீரின் அசைவு மட்டுமேயாகும். எனவேதான் அசோகமித்திரனின் கதைகளின் பொதுவான சித்திரம் ‘மாறுதல் ‘ என்பது மட்டுமாக உள்ளது.

அவருடைய முக்கியமான அத்தனை கதைகளிலும் நுணுக்கமான – மிக நுணுக்கமான – ஒரு மாறுதலின் கணம் மட்டுமே பிடிக்கப்பட்டுள்ளது. எல்லையா கார் கற்றுக் கொளவது ஓர் உதாரணம். போலீஸ்காரர் கையை உயர்த்த எப்படியோ எல்லையாவிற்கு கிளட்சின் சூட்சுமம் தெரிந்துவிடுகிற ஒரு கணமே அக்கதை. அதற்கு முன் எல்லையா வாரங்கலில் மாடு மேய்ப்பவன். அதற்குப் பிறகு பெருநகரில் உழலும் ஒரு தொழிலாளி. இம்மாறுதலின் முன்னும் பின்னும் எவ்வளவோ உள்ளன. நமது சமகால இந்தியாவின் மாபெரும் சமூக மாற்றத்தையே நாம் இதன் பிண்னணியாக நிறுத்திக்கொண்டு இதை பார்க்க முடியும்.

இம்மாற்றத்தை ஒரு பெரிய நாவலின் கருவாகக்கூட மாற்ற முடியும். அசோகமித்திரனின் உலகில் அது ஒரு கணம்தான். அதுவும் இக்கணத்தை எப்போதுமே மிக மெளனமாகவும் கண்ணுக்குத் தெரியாததாகவுமே அமைக்கிறார் அசோகமித்திரன். ‘விமோசனத்தி ‘ல் அடிக்கக் கையோங்கிய கணவனின் கரம் அந்தரத்தில் நின்றிவிடும் கணம். சந்திரசேகரனின் முன் அகதிப்பெண் நிர்வாணம் காட்டும் கணம் – இப்படியே கூறியபடிச் செல்லலாம். இக்கணங்களில் அவரது மொழி தேய்ந்து மவுனத்திற்குப் போவதும், கண்ணுக்குத் தெரியாத் அவருடைய தொழில்நுட்பத்திறமை அதி சூட்சுமமாகச் செயல்படுவதும், மொழியும் உத்தியும் கூடி முயங்கி உச்சமெய்துவதுமே அவருடைய படைப்புலகின் முக்கியமான தருணங்கல். எம்மொழியிலும் அவை போன்ற தருணங்கள் அபூர்வமானவையாகவே மதிக்கப்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

மாறுதல்களை சித்தரிப்பதுடன் நின்று விடுகிறார் அசோகமித்திரன். அவற்றை குறியீட்டுத்தன்மை நோக்கி நகர்த்தி விடுவது இல்லை. முன்பு குறிப்பிட்டதுபோல அவர் எந்த சித்தாந்த தளத்தையும் ஏற்காத ஒரு யதார்த்த வாதியென்பதே இதற்குக் காரணம். பவுதீக வாதத்தின் எல்லையில் அபத்ததையோ, லட்சியவாதத்தையோ அவர் அடைவது இல்லை. அவரால் கருத்து முதல்வாத அம்சத்தை ஏற்க முடியாது போனமையால்தான் மார்க்ஸீயத்தை ஏற்க முடியவில்லை. மார்க்ஸீயத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹெகலிய லட்சியவாதம் அவருக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றே அவர் படைப்புக்கள் காட்டுகின்றன.

எவ்வகை சித்தாந்த அடிப்படையுமற்று காரணமற்ற நிகழ்வுகளை பதிவுசெய்யும் கோணமானது உலர்ந்த கரிய ஹாஸ்யம் எதிர்மறைத்தன்மையும் உடையதாக உள்ளது. அவருடைய கதைகளின் விரக்தி மற்றும் நிராகரிப்பின் எதிர்வினையாகவே அவர் படைப்புலகுக்கு உள்ளேயே பிரகாசமான ஒரு தளம் அபோதமாக உருவாக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். உற்சாகம், கபடின்மை, சுதந்திரம் ஆகியவை நிரம்பிய அவரது பாலிய கால அனுபவங்களை கூறுவது போன்ற கதைகள் தாம் அவை. அவருடைய பொஅடைப்புலகின் இருளுக்கும் அழுத்தத்திற்கும் எதிரான சமன் தான் இது. எந்த பெரிய ப்டைப்பாளியிலும் இப்படி கறுப்பு – வெள்ளை என்று இருவிதமான பரஸ்பரம் சமன் செய்யும் இரு கூறுகளைக் காண முடியும். இரண்டுக்கும் மையம் ஒன்றுதான். ஒரு தளத்தில் நேரடியாகவும், மறுதளத்தில் தப்பித்து இளமைக்குத் திரும்பும் கனவாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எதிர்மறையான மனோபாவத்தை தற்போதைய இந்தியாவின் நகர்சார்ந்த சாமானியனின் பொதுவான கோணமாகவும் நாம் கருதிக்கொள்ளலாம்.

பொதுவாக அசோகமித்திரனை தமிழில் விரிவான பாதிப்புகளை ஏற்படுத்டிய எழுத்தாளர் என்று கூறலாம். இளம் கலைஞர்களின் நடையில் அசோகமித்திரனின் பாதிப்பு என்பது சகஜமாக காணப்படக்கூடிய ஒன்றாக உள்ளது. திலீப்குமார், விமலாதித்த மாமல்லன், கோபி கிருஷ்ணன் என அவருடைய பாதிப்புள்ள நடை உடைய படைப்பாளிகளின் நீண்ட பட்டியலையே போட முடியும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் பெரு நகரப் பிண்னணியுடைய வாசகர்களும் சரி, எழுத்தாளர்களும் சரி, அசோகமித்திரனை எளிதாக ஏற்று அதன் நேரடியான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதும்; பிற வாசகர், படைப்பாளிகளில் அவருடைய நடை மீதான மன எதிர்ப்பு ஆரம்பத்திலேயே உருவாகிவிடுகிறது என்பதும்தான்.

இவ்வெதிர்ப்பு பிற்பாடு பல விதங்களில் மாறுதல்கள் அடைந்து , அவர்களின் தனித்தன்மைகளின் சில அம்சங்களை தூண்டி, சில புது ஆளுமைகளை உண்டு பண்ணக் காரணமாக அமைகிறது. உதாரணமாக வண்ணதாசன். அவரது உலகம் அசோகமித்திரனுக்கும் பொதுவானதே. ஆனால் அவரது மொழியில் அசோகமித்திரனின் நேரடித்தன்மையும், இறுக்கமும், உள்ளார்ந்த அமைதியும் இல்லை. இத்தன்மையும் சரி, காட்சி மற்றும் கதாபாத்திரங்கள் மீது வண்ணதாசன் கொள்ளும் நெகிழ்ச்சியும் சரி, அசோகமித்திரன் மீதான எதிர்வினையாகும். வண்ணதாசனின் கதை கூறும் முறையில் உள்ள ‘வக்கணை ‘, மிகவும் அசலான ஒரு கிராமத்துப் பார்வை சார்ந்தது.

ஒரு விதமான சமையலறைத் திண்ணை சார்ந்த வக்கணை அது. காட்சிகளை அதீதமாக பிரகாசப்படுத்தும் போக்கு கூட இந்தப் பின் திண்ணையிலிருந்து வந்ததேயாகும். இதுவே வண்ணதாசன் கதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தை பெண்மை கனிவு போன்றவை அடங்கியதும், உத்வேகம் ஆழம் இவற்றை இவற்றை விடவும் அதி நுட்பங்களில் கவனம் செலுத்துவதுமான பரிணாமத்தை – உண்டு பண்ணி வண்ணதாசனின் தமிழிலக்கிய இடத்தை உறுதி செய்கிறது. இத்தகைய எதிர்வினையை வண்ணநிலவன், சுப்பிரபாரதி மணியன், அஸ்வகோஷ், பாவண்ணன் ஆகியோரிடம் பல நிலைகளில் காண முடிகிறது. கணிசமான அளவு பெருநகர் சார்ந்த படைப்பாளிகள் இத்தகைய எதிர்வினை அம்சம் இல்லாமல் அசோகமித்திரனின் குட்டி பிம்பங்களாகத் தெரியும் காட்சியை நாம் கணையாழி, விருட்சம் முதலிய சிற்றிதழ்களில் வரும் நிறைய கதைகளில் காண முடியும்.

இத்தகவல்களை முன்வைத்து ஆராயும் போது அசோகமித்திரனின் படைப்புலகின் வேறு சில தனித்தன்மைகள் தெரிய வருகின்றன. அது ப்ரும்பாலும் இந்திய பெரு நகர் மனோபாவம் சார்ந்தது. அசோகமித்திரனின் சாமானியன் திரளான ஒற்றை வடிவம் கொண்டவனும், கிராமங்களில் நிறைந்து வாழ்பவனுமாகிய அசல் இந்திய சாமானியனின் பிரதிநிதி அல்ல. அவன் நகரத்தில், உபரி மதிப்பின் பங்கு பெற்று அதிகார அமைப்பின் நேரடியான சுரண்டலுக்கும் பாதுகாப்பிற்கும் ஆட்பட்டு, வாழும் சாமானியன். அவனை இயக்கும் தார்மீக அடிப்படைகளுக்கு மேற்கத்திய ஜனநாயக முறைமைகளின் அடிப்படையான தனிநபர் தன்மை கொண்ட உலகப்பார்வையின் பாதிப்புபெருமளவில் உண்டு. பழங்குடித்தன்மை கொண்ட மரபுகளினால் கட்டுப்படுத்தப் படும் கிராமத்துத் தார்மீக அடிப்படைகளுக்கு இத்துடன் பெரிய வேறுபாடு உண்டு, இந்த சாமானியரில் ஒருவரால் தீட்டப்பட்ட சுய வர்க்கச் சித்திரமே அசோகமித்திரனின் படைப்புலகம்.அதன் தத்துவ அடிப்படைகளை நாம், இவ்வடிப்படைகளிலேயே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். அசோகமித்திரனின் படைப்புகளின் பெரும்பாலான வாசல்களை திறக்க உதவக்கூடிய பாதையே இதுவேயாகும்.

முந்தைய கட்டுரைஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-1
அடுத்த கட்டுரைதமிழ் கலைச்சொற்கள்