நினைவுகூர்தல்

சிலநாட்களுக்கு முன் மிகச்சங்கடமான ஒரு நிகழ்ச்சி. நான் கடையில் ஏதோ வாங்கிக்கொண்டிருக்கையில் ஒருவரைக் கண்டேன். புன்னகைசெய்து ‘நல்லா இருக்கியளா?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘இப்ப சோலியிலே இல்லல்லா?’ என்றார். ‘இல்லை’ என்றேன். என் கண்களைச் சந்தித்ததும் அவருக்குப் புரிந்தது. ‘சாருக்கு என்னை ஞாபகமிருக்கா?’ வேறு வழியில்லை .’இல்லை…மன்னிச்சிருங்க..நீங்க?’ என்றேன். அவர் முகம் சுருங்கியது. ‘செரிசார்…போட்டு..இப்ப நினைச்சு என்னத்துக்கு?’ என்று சொல்லிவிட்டார். கூடவே அவரது நண்பரும் இருந்தார். அவர் மேலே பேசாமல் ‘வரட்டா’ என்று போய்விட்டார்.

மூளையின் சகல குப்பைகளையும் அள்ளி வெளியே இழுத்துப்போட்டேன். முகமே நினைவுக்கு வரவில்லை. பின்பு வீட்டுக்கு வந்தபின் சட்டென்று நினைவுக்கு வந்தது. நான் பத்மநாபபுரத்தில் இருக்கையில் தெருவில் இருந்த ஒரு சைக்கிள்கடைக்காரர்! அடடா சொல்லியிருக்கலாமே என நினைத்துக்கொண்டேன். அருண்மொழியிடம் சொன்னேன். அவள் ‘அய்யே அவரில்ல. அவர் செத்துப்போயிட்டார்’ என்றாள். தூக்கிவாரிப்போட்டது.

’அப்பா உனக்கு அல்ஷைமர்ஸ்… ஐ ஜாலி… அப்பா நான் எந்த கிளாஸ் படிக்கிறேன் சொல்லு பாப்பம்’ என்றாள் சைதன்யா? ‘நீ யாருடீ கொழந்தே?’ என்று கேட்டேன். மோகன்லால் தன்மாத்ரா படத்தில் அல்ஷைமர் வியாதி வந்ததும் அலுவலகத்துக்கு வந்து சட்டையைக் கழட்டியபடி ‘இத்திரி மோரும்வெள்ளம் எடுத்தோ’ என்பார். அதை நடித்துக்காட்டினேன். எனக்கு அல்ஷைமர் வந்தால் என்ன ஆகும் என்று சைதன்யா விவரித்தாள். [விஷ்ணுபுரம் என்ற ஒரு நாவலை எழுத ஆரம்பித்துவிடுவேன்] சிரிப்பு அடங்கி மேலே சென்றதும் சட்டென்று ஒரு பீதி. உண்மையிலேயே அதுதானா?

நேற்று நினைவுக்கு வந்தது. அவர் யார் என்று. நான் என் அலுவலகம் போய் நான் ஒன்றரை வருடம் வேலைசெய்த கட்டிடத்தைப்பார்த்தபோது. அந்தக் கட்டிடத்தில் நான் வேலைசெய்தபோது என்னருகே இருந்து வேலைசெய்தவர் அவர். ஒன்றரை வருடம் அனேகமாக தினமும் அவர் முகத்தைப்பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். ஆனால் அப்படியே சுத்தமாக நினைவில் இருந்து அந்தமுகம் மறைந்திருக்கிறது. பிற ஊழியர் முகங்களை நினைவுக்குக் கொண்டுவரப்பார்த்தேன். ஒருமுகம்கூட நினைவில் இல்லை.

ஆமாம், நான் இருபதாண்டுக்காலம் பணியாற்றிய துறையில் ஒருசில முகங்கள், மிகச்சில நிகழ்ச்சிகள் தவிர எவையுமே நினைவில் இல்லை. இத்தனைக்கும் பலரிடம் நான் தொழிற்சங்கரீதியான நீண்டகால உறவு வைத்திருந்தேன். எப்படி அப்படி சுத்தமாக அழிந்தது? இன்னொரு விசித்திரம் முகங்கள் சந்தடி இல்லாமல் இடம்மாறியிருந்தன. எப்படி அந்த சக ஊழியரின் முகம் சைக்கிள்கடைக்காரர் முகமாக ஆகியது? அவை இரண்டுக்கும் பெரிய சம்பந்தமேதும் இல்லை. அவர்களை இணைக்கக்கூடிய பொது அம்சம் எதையாவது என் ஆழ்மனம் கண்டுகொண்டிருந்ததா என்ன? அந்த சகஊழியர் வாழ்க்கையில் மிக மோசமான ஓர் அனுபவத்தை அளித்துவிட்டேன். உன்னை நினைவுகூர முடியவில்லை என்று சொல்வது எனக்கு நீ முக்கியமே அல்ல என்று சொல்வதற்குச் சமம்தான். ஆனால் அதை இனிமேல் சரிசெய்யமுடியாது.

நான் மிக அபாரமான நினைவாற்றல் கொண்டவன் என்று புகழ்பெற்றிருந்தேன். சிறுவயதில் நூல்களை ஒப்பிப்பேன். நூற்றுக்கணக்கான நூல்களின் சாராம்சத்தைச் சொல்வேன். இன்றும் அந்த நினைவாற்றலுக்கு குறைவில்லை. படைப்புசக்தி என்பது பெரும்பாலும் துல்லியமான நினைவாற்றலே என்று ஒரு தரப்பு உண்டு. உண்மையாக இருக்கலாம். நான் நினைவுகூருமளவுக்குத் துல்லியமாக வாழ்க்கையை நினைவுகூர்பவர்கள் குறைவு.

அப்படியென்றால் இத்தனை மறதி எப்படி? எதை நினைவுகூர்கிறோம், எதை மறக்கிறோம்? சிறுவயதிலேயே நான் பெரும் மறதிக்காரனும்கூட. குடைகள், சாப்பாட்டுப்பாத்திரங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த புத்தகப்பையையே மறந்திருக்கிறேன். ஒன்பதாம் வகுப்புத் தேர்வையேகூட மறந்திருக்கிறேன். சைக்கிளில் உட்காரச்செய்து அப்பு அண்ணா கூட்டிச்சென்று பாதியில் அமரச் செய்தார்.

இன்றும் மறதி வாழ்க்கையின் ஒரு பகுதி. செல்பேசிகளை , கைப்பையை, அடையாள அட்டைகளை மறந்து செல்வேன். நான் எழுந்து செல்லும்போது ஒவ்வொரு முறையும் நமுட்டுச்சிரிப்புடன் மணிரத்னம் நான் மறந்துவிட்ட ஏதாவது ஒரு பொருளை எடுத்துக்கொடுப்பார். ஒருமுறை வசந்தபாலன் அலுவலகத்தில் செருப்பை மறந்துவிட்டுவிட்டு காரில் ஏறி ஓட்டலுக்கு வந்திருக்கிறேன். சமீபத்தில் பீர்மேட்டில் ஒரு கார் எங்களருகே பிரேக் போட்டு நின்றது. உள்ளே இருந்தவர் என்னிடம் பாண்ட் ஜிப்பைப் போடும்படி சொன்னார்.

ஆனால் இந்த ஒட்டுமொத்த மறதி, இது பெரிய ஆச்சரியம். அப்படி வேறென்ன இருக்கிறது? முக்கியமாக நான் படித்த படிப்பு. கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படித்தேன். பாடங்களில் ஒருவரி கூட நினைவில்லை. சமீபத்தில் எதையோ விளக்கிய ஆடிட்டர் ‘இதெல்லாம் பிகாமிலே படிச்சிருப்பியளே’ என்றார். எதுவுமே நினைவுக்கு வரவில்லை. பள்ளியிறுதி வகுப்பு, அதற்கு முன் படித்த பாடங்களில் ஒன்றுமே மீளவில்லை. கல்லூரி நண்பர்களில் எவருமே நினைவில் இல்லை. ஒருவர் அவரே அறிமுகம்செய்துகொண்டால்கூடப் பலநாட்களுக்கு அவரது முகம் கற்பனையில் வரமாட்டேன் என்கிறது. பள்ளிநண்பர்களில் ஒரு சிறு நண்பர்குழாம் தவிர ஒட்டுமொத்த முகங்களும் மறைந்துவிட்டன.

இதற்கான காரணம் என்ன என்று யோசிக்கிறேன். நான் உள்ளூர பள்ளியை பொருட்படுத்தியதே இல்லை என்பதுதான். அந்த இளமையில் என் மனம் முழுக்க கிராமியக்கலைகள், நாட்டார் கதைகள், புத்தகங்கள், காடுசுற்றல்தான் இருந்தது. அவையெல்லாமே துல்லியமான நினைவுகளாகப் பதிந்திருக்கின்றன. நமக்கு உண்மையிலேயே எவை முக்கியமோ அவற்றை மட்டுமே நாம் நினைவில் நிறுத்துகிறோம். பிறவற்றை விலக்கிவிடுகிறோம். நான் என் கல்விநாட்களைப்பற்றி அனேகமாக ஏதும் எழுதியதில்லை.

ஆனால் உண்மையிலேயே முக்கியமான சிலவற்றையும் மறக்கிறோம். மறக்க முயல்கிறோம். நான் என் இளமைப்பருவ வீடு, அம்மா, அப்பா எல்லாவற்றையும் மறக்க முயல்பவன். நினைவில் அம்மா முகம் வந்தாலே தீயால் சுட்ட அதிர்ச்சி வரும். ஆகவே மறக்க முயன்றுமுயன்று இன்று பெரும்பகுதியை நினைவிலிருந்து நீக்கிவிட்டேன். அப்படி நீக்குவதன் வழியாகவே அந்த அனுபவங்கள் அளித்த வதையில் இருந்து மீண்டுவந்தேன். அம்மா அப்பாவின் ஒரு படம்கூட என்னிடம் இல்லை. அவர்களை நினைவூட்டும் எதுவுமே என்னிடம் இல்லை. சென்றமாதம் ஒருமுறை அம்மாவை நினைவுகூர முயன்றேன். முகம் நினைவில் வரவே இல்லை. நீரில் பிம்பம் அலையடிப்பது போல இருந்தது. அது நிம்மதியாகவும் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. நான் என் பெற்றோர் பற்றியும் பெரிதாக எழுதியதில்லை.

இன்னொருவகையான மறதியை கவனித்திருக்கிறேன். மறதி என்பதை விட நினைவைக் கற்பனை இடமாற்றம் செய்வது என்று சொல்லலாம். நான் எப்போதுமே அகத்தை அளைந்துகொண்டிருப்பவன். நான் வாழ்வது முக்காலும் என்னுடைய கற்பனைகளில்தான். என் கற்பனைகளுக்குத் தேவையான கச்சாப்பொருளை அளிப்பதற்குத்தான் எனக்குப் புறவுலகம் தேவைப்படுகிறது என்று நினைத்துக்கொள்வேன். அந்தப் புறவுலக தகவல்களை என் இஷ்டப்படி கலைத்துக் கற்பனையைக் கட்டிக்கொண்டே இருக்கிறேன்.

வாசித்த அறிந்த எதையும் அப்படியே வைத்துக்கொள்வதில்லை. அவற்றைப்பற்றி சிந்திப்பேன். ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொள்வேன். கற்பனையில் அனுபவங்களைப் பலமடங்கு வளர்த்தெடுப்பேன். திருவனந்தபுரத்தில் ஒரு தெருவில் நடக்கும்போது நான் போகவே போகாத லாகூரிலோ டாக்காவிலோ நடப்பதாகக் கற்பனைசெய்துகொள்வேன். நான் வாசித்த நாவல்களில் நான் வெகுதூரம் சென்றிருக்கிறேன். ஆரோக்கியநிகேதனம் எனக்கு நானூறு பக்க நாவல் அல்ல. அது பல மாதகாலம் நான் வாழ்ந்த ஒரு பெரிய வாழ்க்கை. போரும் அமைதியும் கிட்டத்தட்ட என் பூர்வஜென்மம்.

பல கதைகளை நான் பல கோணங்களில் திரும்பத்திரும்பக் கற்பனையில் வளர்த்திருக்கிறேன். பல படைப்புகளைக் கலந்திருக்கிறேன். தாகூரின் கோராவை விபூதிபூஷனின் அப்பு சந்திப்பான். ரஸ்கால்நிகாஃப் அன்னா கரீனினாவைக் காதலிப்பான். பயணங்களில் அப்படி மணிக்கணக்கில் கற்பனையை ஓட்டியபடி இருப்பது என் வழக்கம். கதாபாத்திரங்களை உண்மையான மனிதர்களாகக் கற்பனையில் ஆக்கிக்கொள்கிறேன். அவர்கள் அழியாமல் இருந்துகொண்டிருக்கிறார்கள்.

நான் சுயமாகவும் பிரம்மண்டமான நாவல்களைத் தொடர்ச்சியாகக் கற்பனைசெய்துகொள்வேன். சென்றமாதம் பலநாட்களாக ஒரு அபாரமான மாயாஜாலக்கதையைக் கற்பனையிலேயே முடித்தேன். நான் கற்பனைசெய்த நாவல்களில் பத்துசதவீதத்தைக்கூட எழுதியதில்லை. முழுக்கக் கற்பனைசெய்தால் அப்போதே அந்நாவல் மேல் சுவாரசியத்தை இழந்துவிடுவேன் நண்பர்களுக்கு உடனடியாகச் சொல்லி ‘அசத்திய’ பல கதைகளை என்னால் பிறகு எழுதவே முடிந்ததில்லை.

இந்த பிரம்மாண்டமான அக உலகில் எது என் கற்பனை எது புறவய உண்மை என பிரிக்கும் கோடு மிக மென்மையானது. அந்தப்பிரக்ஞை எப்போதும் துல்லியமாக இருக்கிறது என்பதே ஆச்சரியமான விஷயம். மதுரை வரை நான்கு பஸ் மாறி ஏறி செல்லும்போதும் டீ குடிக்கும்போதும் எல்லாம் மனதுக்குள் ஒரு பெரியநாவல் ஓடிக்கொண்டே இருக்க அதையும் புறத்தையும் கச்சிதமாக பிரித்துச் சமநிலை செய்துகொண்டே போகிறது பிரக்ஞை. எப்போதாவது இந்த எல்லைக்கோடு அழிந்தால் பிறகு மீட்சி இல்லை.

ஆனால் மிக அபூர்வமாக எல்லைக்கோடு சற்றே மயங்கிவிடும். வாசித்த நூலில் இல்லாத தகவல் அல்லது விவரணை அல்லது மேலதிகக் கதை என் நினைவில் இருக்கும். அப்படி இருப்பது எப்போதுமே வெறும் திரிபாக இல்லாமல் மிகவும் படைப்பூக்கத்துடன் கூடிய ஒரு மாற்று வடிவமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். அப்படி எந்தக்கதை என் நினைவில் இடம்மாறியிருக்கிறது என்பதைக் கவனிப்பது பெரிய அனுபவமாக இருக்கிறது.

நூல்களைப்பொறுத்தவரை அவற்றின் அட்டை மற்றும் கட்டமைப்பைக்கூட நான் கற்பனையில் வேறுவகையாக வைத்திருக்கிறேன். உதாரணமாக தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்ற அழகியநூல் எண்பதுகளில்வெளிவந்தது. கிரௌனுக்கும் சின்ன அளவு. குண்டான வெள்ளையான நூல். தல்ஸ்தோயின் அன்னா கரீனினாவும் அப்படிப்பட்ட வடிவில் தமிழில் வந்திருப்பதாகக் கற்பனையில் வைத்திருந்தேன். உண்மையில் அப்படி இல்லை என அறிந்தது வருத்தமாக இருந்தது.

நூலகத்தில் நூல்தேடும்போது இது நடக்கிறது. திருவிகவின் சுயசரிதையை நாட்கணக்காகத் தேடினேன். கடைசியில் பார்த்தால் கண்முன்னால் இருக்கிறது. நான் அது கிரௌன் அளவுள்ள பேப்பர்பேக் நூல் என நினைத்திருந்தேன். அது கெட்டி அட்டை, டெமி அளவு. அதைப்போலவே படங்கள். பாதேர் பாஞ்சாலி எனக்கு வண்ணப்படமாகவே நினைவில் நிற்கிறது. லாரன்ஸ் ஆஃப் அரேபியா கறுப்புவெள்ளைப்படமாக.

எப்படி இந்த பிம்பம் மனதில் பதிகிறது, நீடிக்கிறது? இதெல்லாம் கூடிக்கலந்து பிரிக்கமுடியாதபடி ஆகும் என்றால் என் அகம் நினைவுகூரவே முடியாத பிரம்மாண்டமான ஒர் அராஜவெளியாக மாறிவிடுமா என்ன?

ஆனால் துல்லியமான புறத்தகவல்களை, வாசித்த தகவல்களை சேமித்து வைத்திருக்கும் மூளைகளால் ஒருபோதும் புனைவை எழுதமுடியாதென்று தோன்றுகிறது. புனைவு என்பது ஒரு கட்டற்ற சுதந்திரம். தகவல்கள் நம்மால் எதுவும் செய்யமுடியாதவை, கல்லாலும் இரும்பாலும் ஆனவை. புனைவில் எதுவும் சாத்தியம். அது பறப்பது போல. தகவல்கள் விமானத்தின் ஓடுபாதை மட்டுமே. எழுந்ததும் அவை மிகமிகக் கீழே சென்றுவிடுகின்றன.

நல்ல புனைவெழுத்தாளன் என்றால் அவன் ரயில்வேஃபாரத்தை நிரப்பினால்கூடக் கொஞ்சம் புனைவு கலந்திருக்கும் என்று சுஜாதா ஒருமுறை பேச்சில் சொன்னார். உண்மைதான். உலகமெங்குமுள்ள மேதைகளின் புனைகதைகள் பலமுறை தகவல்கள் பிழைபார்க்கப்பட்ட பின்னரும் பிழைகளுடன் இருக்கின்றன. அவர்களின் சுயசரிதைகள் கூட புனைவுமிக்கவையாக இருக்கின்றன.

புனைவில் மட்டும் அப்படி அல்ல என்று அஜிதன் சொன்னான். எல்லா சிந்தனையிலும் ஒரு புனைவம்சம் உண்டு என்றான். தகவல்களை அப்படியே நினைவுகூர்வது ஒரு இயந்திரவித்தை. தகவல்களை முடிவில்லாமல் இணைத்து இணைத்துப் புதியபுதிய சாத்தியங்களை கண்டடைந்துகொண்டே இருப்பதுதான் சிந்தனை என்பது. அந்த சுதந்திரம் கற்பனையின் விளைவுதான்.

ஒவ்வொரு சிந்தனையாளருக்கும் அதற்கான கற்பனை சார்ந்த வழிமுறை உண்டு. கணிசமானவர்கள் சிந்தனைகளை அந்தரங்கமான படிமங்களாகவே அடைகிறார்கள், கையாள்கிறார்கள். அவற்றை முன்வைக்கையில் மட்டுமே கறாரான தகவல்சரிபார்ப்பு தேவையாகிறது. அதை மேலும் விளக்க அஜிதன் கொடுத்துப்போன வி. எஸ். ராமச்சந்திரன் எழுதிய நூல்களை நான் இன்னும் வாசிக்கவில்லை.

ஆம். இளமையில் வாசித்து வாசித்து நிரப்பிக்கொண்டே இருந்த மனம் இன்றில்லை. இன்று நானே சிந்திப்பவை மட்டுமே எனக்கு முக்கியமாகத் தெரிகின்றன. நான் சிந்திக்கும்தோறும் வெளியே இருந்து வந்தவை முக்கியமற்றுச் செல்கின்றன.

அப்படியென்றால் என்னென்ன நினைவில் நீடிக்கின்றன? துல்லியமாக நீடிப்பவை நிலக்காட்சிகள். நான் சென்ற இடங்கள் பலவும் அவற்றின் ஒளிநிழல் துல்லியத்துடன் மீண்டு வருகின்றன. ஆச்சரியமாக, மணங்கள் நினைவில் நிற்கின்றன. ஒரு வாசனை ஒரு காட்சியை அணுவணுவாக இழுத்துக்கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. சமீபகால நிகழ்ச்சிகளை விட இளமைப்பருவ நிகழ்ச்சிகள் துல்லியமானவை. ஒரு காட்சியின் சித்திரம் துல்லியமாக இருக்கையில் அது மதுரையா இல்லை சென்னையா என்பது குழம்பிவிடுகிறது. குரல்கள் தெளிவாகவே நினைவில் மீண்டு வருகின்றன.

எந்த நினைவு தன்னிச்சையாக மீண்டு வருகிறதோ அது துல்லியமாக இருக்கிறது. கனவுபோல. மொழியை மீட்டிக்கொண்டே இருந்தால் என்னை மீறி விழிப்புநிலைக்கனவுபோல நினைவுகூர்தல் நிகழ்ந்துவிடுகிறது. ஆனால் எதை மீட்க முயல்கிறேனோ அது நாடாப்புழு போல உடைந்து கைக்குச்சிக்கித் துடிக்கிறது. மிச்ச உடல் வேறெங்கோ துடிக்கிறது. எந்த அனுபவத்திலும் சாராம்சமான ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டிருக்கிறேன். அது நினைவில் இருக்கிறது, அதனுடன் தொடர்புள்ளவை நினைவிருக்கின்றன. புறவயமான தகவல்கள் மறைந்துவிட்டிருக்கின்றன. ஆகவேதான் புனைவு கலக்காமல் உண்மையை எழுதமுடியாதவனாக ஆகிக்கொண்டிருக்கிறேன்.

கடைசியாக ஒன்று. கடந்த பலவருடங்களாக என் அகப்பயணம் மூலம் நான் சென்றுகொண்டிருக்கும் இடம் என்பது மேலும் மேலும் உள்நோக்கியது. புறத்துடனான உறவை மிகமிக வலுக்கட்டாயமாகத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை. சொல்லப்போனால் ஒரு பிடிமானமாகவே வைத்துக்கொண்டிருக்கிறேன். அந்தப்பயணத்தில் கற்றுச்சேர்த்து வைத்த எல்லாமே கரைந்து அழிகின்றன. ஒட்டுமொத்தமாக எல்லா நினைவுகளும் அழிந்தால் என்னிடம் என்ன மிஞ்சும்? அதுவே உண்மையான நானாக இருக்கும்

மறுபிரசுரம்.முதற்பிரசுரம் Aug 9, 2012

வேராழம்

முந்தைய கட்டுரைதேவதச்சன் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜெல்லி மீனே… ஜெல்லி மீனே…