குரு நிலை என்பது கை விளக்கோடு கூடிய ஒருவனின் பயணமே. சீடன் கைவிளக்கற்று, குருவின் கால் தடம் பற்றித் தொடர்கிறான். பேரன்புடன் குரு தன் கைவிளக்கின் ஒளியால் பாதையினை அவனுக்கும் காட்டியபடியே தொடர்கிறார். ஞானத்தின் பாதையில் குருவும் சக பயணிதானோ?
கை விளக்கின் ஒளி எல்லை, சிறிது தொலைவை மட்டுமே புலனாக்குவது. எல்லை எது வரை என்பதைக் கைவிளக்கு காட்டுவதில்லை. இந்திர பதவியின் முயற்சிக்கு இடையே ஊர்வசி, மேனகை, ரம்பை உண்டெனில் ஞானத்தின் பாதையில் குரு பீடம். கை விளக்கின் ஒளி எல்லையை , அறிதலின் எல்லையாக்கி பீடம் ஏறி நிற்கும் குருட்டு குருமார்கள்.
தழலாய் மாறத் துடித்து நிற்கும் கற்பூரக் கட்டி போன்ற சிறுவனை , அவனது அறிவின் வீச்சினைக் கண்டு அசூயை கொள்ளும் குரு பீடம். அவனது தகுதியை , படிப்பினை, அறிவினை, வயதினை நிந்தித்துப் பேசும் ஜம்பம். தேடலின் தாகம் கொண்டு நிற்போரைக் கானல் நீர் காட்டி விரட்டி விடும் குரூரம். தன் அகந்தையைத் தடவி நிற்பவனைத் தழுவி ஏற்று அவனையும் குருடனாக்கப் போகும் நிர்மூடம். அறிந்ததாய் எண்ணி, அடைந்ததாய்க் காட்டி மரணத்தின் முன் கெஞ்சிக் கதறப் போகும் அவல நிலையில் நிற்கும் விஸ்வகரும் குருவாகவே அறியப்படுகிறார். அவரால் குரு பீடத்தை மட்டுமே உருவாக்க இயலும். குரு, சிஷ்ய உறவு அவருக்கு சாத்தியமே இல்லை.
விளக்கின் ஒளியில் பாதை காண மறந்து, திரியின் ஒளியில் பார்வையை லயிக்க விட்டு வெளிச்சக் குருடுகளாய் திரியும் குரு பீடங்கள் முமுட்சுவாய் நிற்பவனுக்கு நிழல் தருமா என்ன? திரும்பி நடந்து போகும் சிறுவன் சுடுகாட்டுச் சித்தனால் ஆட்கொள்ளப்படுகிறான். சீடனின் தகுதி குருவினை இட்டு வருமோ ? சீடன் சரியாய் இருக்கையில் குருவும் தகுதியானவராகவே வந்து அமைவது தற்செயலா என்ன?
சித்தன் தன் சீடனை ஆட்கொள்ளும் இடம் மிக நுட்பமானது. மண்ணுள் புதைத்து வைத்த தனது முட்டைகளுக்குள்ளிருக்கும் குட்டிகள், தாம் வெளிப்பட வேண்டி எழுப்பும் சிறு ஒலியின் மீதே மொத்தப் பிரக்ஞையையும் குவித்து வைத்து, தள்ளி எங்கோ காத்திருக்கும் தாய் முதலை , ஒலி உணர்ந்த நொடி கரை நோக்கிப் பாயும் வேகத்தில் குரு தன் சீடனைப் பற்றுகிறார். சீடன் சென்று கேட்கவில்லை.குரு வந்து சீடனைக் கேட்கிறார். சித்தனின் முதல் பேச்சுக்கு சிறுவனின் முதல் பதில் கோபமாகத்தான் வருகிறது. பிறகு நடக்கும் உரையாடல் பொருள் பொதிந்தது. மானுட சாத்தியத்தின் மொத்த ஞானத்தையும் அள்ளிப் பருகி விடத் துடிக்கும் சீரிளமையின் துடிப்பு. சித்தன் சிறுவனை “என் இளம் நண்பனே !” என்றுதான் விளிக்கிறான். எங்குமே சிறுவனை அவன் ஆசிர்வதிக்கவில்லை. மாறாக, ஞான சபை விவாதத்தில் தனது மடியில் சிறுவனை எடுத்து இருத்திக் கொள்கிறான். சித்தனின் தாடி காசியபனைக் குறுகுறுக்க வைக்கும் கணத்தில் சிறுவன் காசியபன் ஆசிர்வதிக்கப்பட்டவனாகிறான்.
சிறுவனிடம் சித்தன் கேட்கிறான்-”உனக்கு ஞானம் வேண்டுமா? அவற்றை உருவாக்கும் நியதியை அறிய வேண்டுமா?” அடுத்த நொடி சிறுவன் கேட்கிறான் -”நான் உங்களிடம் சீடனாக வருகிறேன்” . “வா” என்ற சொல்லை குருவும் சொல்லவில்லை. சீடனாக வரட்டுமா என்ற அனுமதியும் சீடனால் கேட்கப்படவில்லை. முன்பே எடுக்கப்பட்ட முடிவாய் இருவரின் உரையாடலிலும் தொடர்கிறது அது. குரு, சீட உறவு உருவாகும் கணம் விண்ணில் எங்கோ வகுக்கப்பட்டு , மண்ணில் நிகழ்வது போலும்!
ஒரு சாக்கடை சந்தில், பெருச்சாளிக் கூட்டங்களுக்கு மத்தியில் , கரிய நீர் குமிழியிட்டு வெடிக்கும் ஒரு இடத்தில்தான் சிறுவன் காசியபனாக சித்தனால் ஞானதீட்சை தரப் பெறுகிறான். ஞான தீட்சை தரப்பட வேண்டிய இடமா அது ? ஆனால் சித்தன் மலையேறிச் சென்று, சிகரமீதினில் நின்று அனைத்தையும் ஒற்றைப் பார்வையால் பார்ப்பவன். விஷ்ணுபுரத்தின் ஞான சபையிலே வைத்து தீட்சை தந்தாலும், அந்த இடமும் தேங்கிக் குட்டையான, குமிழியிடும் ஞான சாக்கடைதான். தம்முள் ரகசிய மொழியில் பேசும் பெருச்சாளிப் பண்டிதர்கள் நில்லாது, நிறைந்தோடும் வழிதான். நகரெங்கும் மணமாகப் பரவி , பின் குமட்டலை ஏற்படுத்தும் அப்பத்தின் சாக்கடை வீச்சம்தான். உபதேசம் வெறும் மூன்று வாக்கியங்கள்தான்.
அதன் பின் எல்லாமே ஆட்டம்தான். ஆடுவதன் பிரக்ஞை புலன்களால் கட்டுப்படுத்தப்படாமல், ஆடுவதே ஆட்டம் என்றான புள்ளியில் குருவும், சீடனும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள்.
வயது, பிறப்பு, படிப்பு எதுவும் தடையாக இல்லாத நட்பு வழி குரு,சிஷ்ய உறவு சித்தனுக்கும், சிறுவனுக்கும் முகிழ்த்தது எனில் சகல விதமான கணக்குகளோடும், உள்நோக்கங்களோடும் உருவாகி வரும் குரு, சிஷ்ய உறவு அஜிதனுக்கும், சந்திர கீர்த்திக்கும்.
விஷ்ணுபுரத்தின் எட்டாவது சர்வக்ஞ பரீட்சையின் முதல் நாளிரவுதான் சந்திர கீர்த்தி அஜிதனை சென்று சந்திக்கிறார். தனது சஞ்சலத்தைக் கூறும் சந்திரகீர்த்தி அதைத் தனது தேடலாகக் கொள்ளவில்லை. மாறாக அதற்கு செய்ய வேண்டியது என்ன என்பதைத் தெரிந்து வைத்துதான் இருக்கிறார். தனக்கான சரியான சந்தர்ப்பத்திற்கு அவர் காத்திருப்பது அவரது ஒவ்வொரு காரியத்திலும் வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த நுட்பத்தை உணராதவனல்லன் அஜிதன்.
இரவு பிட்சையை சமைக்கும்போது “உத்தமரே ” என சந்திர கீர்த்தியை விளித்துப் பேசும் அஜிதன் இரவின் முடிவில் “நீர் என்னுடன் இரும். உம்மிடம் பேச வேண்டும்” என்கிறான். அந்த இடத்தில் தொடங்கும் கணக்கு, வழக்குகள் அஜித மகாபாதர் தண்ணீருக்குத் தவித்து இறக்கும் வரையில் தொடர்கின்றன. தன்னுடன் கடைசி வரை இருந்த சந்திர கீர்த்தியுடன் கொஞ்சமும் பேச இயலாமலேயே அஜிதன் மறைகிறான்.
அஜிதனின் பெயரால் பெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டியாளும் திறம் கொண்டவராக உருவெடுக்கிறார் சந்திர கீர்த்தி. இருவரும் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் எதிலும் ஞானத்தின் தேடலோ, மகத்தான மானுட அறிவின் சிறு வெளிச்சக் கீற்றோ, ஞானத்தின் பாதைக்கு வாழ்வை ஒப்படைத்திட்ட அனுபவத்தின் துளிகளோ சிறிதும் இல்லை. மொத்தமாய் இருவரும் பேசிக் கொள்வது பெரும்பங்கும் லெளகீக விஷயங்களையே.
ஞானத்தின் தேடுதலால் அல்லாது வெறும் எண்ணங்களின் பாற்பட்ட கேள்விக்கு தன்னை அர்ப்பணித்ததாய் வரும் சந்திர கீர்த்தி அதற்கான விடையை, செயலாக்கும் யுக்தியையும் அறிந்தேதான் வருகிறார். ஞானத் தேடலின் அனைத்து சாத்தியங்களையும் நூல் முகமாய் அறிந்த அஜிதன் வாதில் வெல்வதொன்றே நோக்கமாய் வருகிறான். செயலின் மூலம் பிறப்பது அதிகாரம். அதனை அறுத்துத் தாண்டி செயல் மட்டுமே தானாக நிற்கும் பக்குவம் இருவரிடமும் இல்லை. செயலால் பிறந்த அதிகாரம் சந்திர கீர்த்தியைக் கட்டியது என்றால் வெல்வதற்கு சபைகள் இன்றி நின்ற அஜிதனை செயலின் முடிவான வெறுமை இரக்கமின்றிக் கட்டியது.
உணவின்றி இறக்கும் பல்லி போல மஞ்சத்தின் மீது வெளிறிக் கிடந்து தண்ணீருக்குத் தவித்து இறக்கும் அஜித மகா பாதர். சொல்லப்பட்ட அஜிதனின் முடிவே இவ்வாறெனில் சொல்லப்படாத சந்திர கீர்த்தியின் முடிவும் இதை விட மேலானதா என்ன?
… தொடரும்
விஷ்ணுபுரம் இணையதளம்