செ. இராசுவும் இஆபவும்

ஈரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து கொங்குவரலாற்றாய்வாளரும் கல்வெட்டியலாளருமான செ.இராசுவைப் பார்க்கச்சென்றோம். இராசு அவர்களின் பல நூல்களை நான் என் கட்டுரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறேன். கொங்குவரலாற்றின் ஆதாரபூர்வமான வரலாற்றை உருவாக்குவதில் சென்ற ஐம்பதாண்டுக்காலமாக செ.இராசு கடும் உழைப்பைச்செலுத்தி வருகிறார்.ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். இந்தவருடம் அவரது எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நான்கு நூல்கள் வெளியாகவுள்ளன.

நாங்கள்செல்லும்போது ஒரு மேஜையில் தன்னுடைய நூல்களின் மெய்ப்புப் பிரதியை வைத்து உருப்பெருக்கிக் கண்ணாடியால் உற்றுநோக்கிக்கொண்டிருந்தார். அவருடைய சிறுநீரகங்கள் பழுதுபட்டு மாற்றப்பட்டிருக்கின்றன. காது மிகக்குறைவாகவே கேட்கிறது. சத்தங்களின் தொந்தரவு குறைகிறதே என அவருக்கு நிறைவுதான். காதுப்பொறி பயன்படுத்துவதில்லை. அவரது முன்னோர் காளிங்கராயன் என்ற சிற்றரசர் வழிவந்தவர்கள். காளிங்கராயன் வாய்க்கால் கொங்குமண்டலத்தை வளம்பெறச்செய்த ஒன்று. அதைப்பற்றிய நூலைத் திருத்திக்கொண்டிருந்தார். கொங்கு குலங்களைப்பற்றிய இன்னொரு நூல் தயாராக இருந்தது.

நாங்கள்சென்றதில் அவருக்கு மகிழ்ச்சி. முன்னரே வருவதாகச் சொல்லியிருந்தோம். ஆனால் அவரது மகன் பெயரும் ஜெயமோகன்தான். ஆகவே அவர் தன் மகனை எதிர்பார்த்திருந்தார். எனக்கு ஒரு பொன்னாடை கொண்டுவந்து போர்த்தினார். தன்னுடைய ஆய்வுப்பணிகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். நாம் பேசுவது அனேகமாகப் போய்ச்சேராத நிலையில் அதைக் கேட்டுக்கொண்டிருப்பதே ஒரேவழி. ஆனால் பெரும்பாலான வரலாற்றாய்வாளர்களைப்போல அவரும் ஒரு உற்சாகமான உரையாடல்காரர். வேடிக்கைத்தகவல்களாக வந்தபடியே இருந்தன. நண்பர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்

ஒரு தமிழ்ப் புனைகதை எழுத்தாளர் அவரது நாவலில் பாண்டிய மன்னனின் மகள்பெயரை மதுராந்தகி என்று வைத்திருந்தாராம். மதுராந்தகன் என்பது சோழர்களின் பட்டப்பெயர்களில் ஒன்று. மதுரைக்கு அந்தகர் [எமன்] என்ற பொருளில் அந்தப்பெயரை சோழர்கள் சூட்டிக்கொள்வார்கள். மதுரா என்று வந்ததுமே நாவலாசிரியர் பாண்டிய இளவரசி என்று நினைத்துவிட்டார். யார்கண்டார்கள் ஒருவேளை அவள் புருஷன் மதுரையை வரதட்சிணையாகக் கேட்டே அழிப்பதுமாதிரி கதையோ என்னவோ.

செ .இராசு அவர்களின் பேச்சின் சிகரம் ‘சோழர் காலச் செப்பேடுகள் என்ற நூலைப்பற்றிய அவரது விமர்சனம். தமிழக அரசின் இந்திய ஆட்சிப்பணி [IAS]அலுவலர்களில் ஒருவரான டாக்டர். மு.இராசேந்திரன் எழுதிய நூல். அகநி வெளியீடு. இதற்கு மெய்யப்பன் பதிப்பகம் சென்ற வருடத்தைய மிகச்சிறந்த ஆய்வுநூலுக்கான விருது கொடுத்துள்ளது. ஏர்வாடி இராதாகிருஷ்ணனார் அவர்கள் ‘வழங்கும்’ கவிதைஉறவு அமைப்பு சென்ற மேமாதம் இலக்குவனார் விருதளித்துள்ளது. மேலும் விருதுகள் கிடைக்கவிருக்கின்றன. கிடைக்காதா பின்னே?

சோழர்காலச் செப்பேடுகள் மொத்தம் 19.இவற்றில் 15 செப்பேடுகள் படியெடுத்து வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் டாக்டர்.மு.இராசேந்திரன் இஆப அவர்கள் மூலங்களையோ நகல்களையோ பார்க்க மெனக்கெடவில்லை. இஆபக்கள் தமிழ்நாட்டை ஆங்கிலத்தில்தானே ஆட்சி செய்கிறார்கள். ஆகவே அவர் செப்பேடுகளின் ஆங்கில ஒலிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பு வடிவங்களை மட்டும் நூல்களில் பார்த்து அதைத் திரும்பத் தமிழில் எழுதிக் கற்பனைக்குதிரையைக் கழியாலடித்து இந்த ஆய்வுநூலை எழுதியிருக்கிறார்

இனி இன்னொரு இஆப ஆசாமி இந்நூலைத் திரும்ப ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்து அதை வேறு ஒரு இஆப மீண்டும் தமிழுக்கு மொழியாக்கம்செய்வதை நினைத்துப்பார்த்தேன். மொத்த சோழர் வரலாறே நாலைந்துமடங்காகப் பெருகிவிடும். தமிழன்னைக்கு என்ன ஒரு வாய்ப்பு!

செ.இராசு அந்நூலில் இருநூறுக்கும் மேற்பட்ட பிழைகளைக் கண்டார். ஆனால் பிழைகள் இல்லாத சொற்களும் அந்நூலில் ஏராளமாக இருந்தன என்றும் அவர் ஒத்துக்கொண்டார். தன்யகடகம் தினயகட்டாடடகா என்று ஆனதை நான் ஒருமாதிரி ஒத்துக்கொண்டாலும் சோழர் கல்வெட்டில் உள்ளதும் இன்று நாகர்கோயிலின் பகுதியாக உள்ளதுமான கோட்டாறு தூத்துக்குடியில் இருப்பதாகச் சொன்னதை அவர் இஆப வாகவே இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நான் மளிகை வாங்க தூத்துக்குடிக்குப் போகவேண்டுமென இஆப அரசாணை பிறப்பிப்பித்தால் கதை கந்தலாகிவிடும்.

செ.இராசு ஒரு பட்டியல் தட்டச்சு செய்து வைத்திருந்தார். அதில் செப்பேட்டில் உள்ள பெயர்கள் முனைவர் மு.இராசேந்திரன் இஆபவின் நூலில் எப்படி மாற்றிச் சொல்லப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். புத்தகுடி புட்டகுடி ஆவது கொஞ்சம் ஆபாசமாக இருந்தாலும் நகைச்சுவைக் கண்ணோட்டத்தில் மன்னிக்கக்கூடியது. புறக்கிளியூர் புராக்கிள்ளையூர் ஆவதும், விழிஞம் விழிந்தா ஆவதும் ,திருவழுந்தூர் திருவாலந்தூர் ஆவதும் ,கழுமலம் கலுமல்லம் ஆவதும், பூநாற்றி அணை புனருணை ஆவதும் பொதுவாக இஆபக்களின் பண்பாட்டு வழக்கம் எனலாம். அவர்கள்தானே இங்கே வெள்ளைக்காரர்களுக்காக தூத்துக்குடியை டூட்டிக்கொரின் ஆக மாற்றிக்கொடுத்தார்கள்.

ஆனால் இரண்டு விஷயங்கள் எனக்குக் குழப்பம் அளித்தன.குயவன்கழனியை இஆப அவர்கள் குயவன்காலனி என்று குறிப்பிடுகிறார். சோழர் காலத்தில் ஆங்கிலம் பரவியிருந்ததற்கான ஆதாரமாக அதைத் தமிழுணர்வாளர்கள் நாளை சுட்டிக்காட்டுவார்களா? ஆங்கிலத்தையே சோழர்கள்தான் இங்கிலாந்துக்குக் கொண்டுசென்றார்களா? கூற்றம் வளநாடு என்றெல்லாம் ஏழாம் வகுப்பில் படித்திருக்கிறோம். இஆப அவர்கள் கூற்றத்தை குர்ரம் என்கிறார்கள். குதிரைக்கு குர்ரம் என்று சொல்லலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அப்படியென்றால் உருதுகூட நந்தமிழ்ச் சோழவளநாட்டிலே உதயமானதுதானா?

அரவணையான் என்பவனை இஆப அவர்கள் அறவாணியன் என்கிறார். வாணியர் சமுதாயமே பொங்கி எழு. வாணியர் அறம்வளர்த்த கதையை ஆய்வாளர் மூடிமறைப்பதற்குள் களம்புகு என எழும் குரல்கள் புறங்கழுத்தில் ஒலிக்கின்றன. ஐயாறன் ஆயிரன் ஆகலாமென்றால் கண்டன் ஏன் கந்தன் ஆகக்கூடாது? சபரிமலை மணிகண்டன் கந்தசாமியேதானா? கற்றளி கராளியாகிறது. அரையன் ஆரியன் ஆகிறது. ஆரியச்சதி இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இஆப. அவர்கள் கைபர்கணவாய் ஆசாமி அல்ல. ஆனால் இரணசூரனை ராணாசூரா என்கிறார். ராஜபுத்திரராக இருப்பாரோ?

கணவதி என்ற பேரை இஆப அவர்கள் கன்னவாடி என்று மாற்றியிருக்கிறார். கி.ராஜநாராயணனின் மனைவி பெயர் கணவதி. உடனே அந்த அம்மையார் பெயரை மாற்றியாகவேண்டும். இஆபக்கள் சர்வ வல்லமை மிக்கவர்கள். அவர்கள் சொன்னால் தட்டக்கூடாது. மேலும் கிராவுக்கு அம்மையாரை அருமையாக அழைக்கவும் ஏற்ற பெயர்.

இஆப அவர்கள் ஒரு முறைமையை கண்டிப்பாகக் கடைப்பிடித்திருக்கிறார். இஆபக்களுக்கு அதற்கான பயிற்சி கொடுக்காமலிருப்பார்களா என்ன? குன்றனை குரன் ஆக்கியிருக்கிறார். கூத்தனார் குட்டனார் ஆகியிருக்கிறார். கொற்றன் கொரன் ஆக மாறியிருக்கிறது. அந்த முறைமையை உடனே ஆய்வாளர்கள் கண்டடைந்து அதை முறையாக ஓர் அரசாணைப்படி அறிவிக்க ஆவன செய்யவேண்டும். அதன்படி சேந்தனை இஆப அவர்கள் சொல்வதுபோல செண்டன் என்று மாற்றி கல்கியின் மொத்த நாவலையும் திருத்தி செண்டன் அமுதனுக்கு மறுவடிவம் கொடுக்கவேண்டும்.

சோழர்காலத்தில் இஸ்லாமியர் கோலோச்சியிருப்பதை இஆப அய்யா அவர்கள் ஸ்ரீகண்டனை சிக்கந்தன் ஆக்கியிருப்பதன் வழியாக அறிகிறோம். சபரிமலையை உடனடியாக மசூதியாக ஆக்க இஆப மட்டத்தில் நடவடிக்கைகள் இருக்கலாம். பெருநற்கிள்ளி பெருநாட்கிள்ளியாக ஆனதை பெரிதுபடுத்தவேண்டியதில்லை. ஆனால் முதலி என்ற சொல் மூளி ஆக மாற்றப்பட்டிருப்பதை அந்தச்சாதியினர் பொறுத்துக்கொள்வார்களா?

சொல்லாய்வு ஈதிங்கனமிருக்க இஆபய்யா அவர்கள் தமிழ்ப்பண்பாட்டை வேறுகோணத்தில் விளக்குவதை எப்படிச்சொல்ல. சிலம்பு என்பதை கொலுசு என்கிறர். மூன்றுசந்தி விளக்கு வைப்பதை மூன்று பிரகாரங்களில் விளக்கு வைப்பது என்கிறார். மூன்று சந்தியாகாலத்தில் விளக்கு வைப்பதாகச் சொன்னது பார்ப்பனச்சூழ்ச்சியாக்க்கூட இருக்கலாம்.

ஆனால் இஆப அவர்களின் பண்பாட்டுக்கொடைகளில் முக்கியமானது சோழ மன்னர் கண்டராதித்தர் 63 நாயன்மார்களில் ஒருவர் என்ற கண்டுபிடிப்புதான். இந்திய ஆட்சிப்பணி நடைமுறைகளின்படி இல்லாத குளம் இருக்கிறது என்றால் இருக்கிறதுதான் கணக்கு. எவ்வளவு கண்டிருக்கும் நாடு. ஆக இனிமேல் 64 நாயன்மார்கள் என்று திருத்திவிட்டால் போகிறது. சைவத்துக்கும் லாபம்தானே?

இஆப என்றால் சாதாரணமல்ல என்பதை நூலில் காணலாம். தமிழகத் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் முனைவர் இரா.நாகசாமி நம் இஆபய்யாவின் செப்பேட்டாய்வுநூலை ஆழ்ந்து படித்து மகிழ்ந்து ஒரு மாபெரும் ஆய்வுநூல் என்று பாராட்டி இறும்பூது முதலான உணர்வுகளை எய்தியிருக்கிறார் என்று முன்னுரை சாற்றுகிறார். டாக்டர் மு.ராஜேந்திரன் IAS , இந்நூலின் வழி எடுத்துரைத்துள்ள அரிய செய்திகள் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் புதிய பரிணாமத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.வரலாற்று அடிப்படையிலோ அல்லது ஆய்வின் அடிப்படையிலோ குற்றம் இல்லாத வகையில் திகழும் வரலாற்று நூல் இது.பயனுடைய நூல்.-டாக்டர்.இரா நாகசாமி

’முன்னுரைச்செம்மல்’ டாக்டர் இரா நாகசாமி

ஆனால் கொல்லிமழவன் பிரதிகண்ட வர்மனின் தந்தை ஈழப்போரில் இறந்ததை ஆங்கிலத்தில் இஆப அவர்கள் ஆழ்ந்து வாசிக்கையில் Ilam என்றிருந்ததை 11 AM என தெள்ளிதின் வாசித்துப்புரிந்துகொண்டு பிரதிகண்டவர்மனின் தந்தை சரியாக காலை 11 மணிக்கு இறந்ததாகக் கச்சிதமாகப் பொருள்கொண்டிருக்கிறார். அச்சொல்லின் அருகே Ceylon என எழுதியிருந்ததும் அவரை மனத்திரிபடையச்செய்யவில்லை.

அதை செ.இராசு எங்களிடம் சொன்னபோது மறத்தமிழர் இன்றைய நேரக்கணக்கை அன்றே உணர்ந்திருந்ததை அறியாது விஜயராகவன்,கிருஷ்ணன்,கடலூர்சீனு முதலிய தமிழ் விரோதிகள் வெடித்துச்சிரித்தார்கள் என்பதை வரலாறு அறிக.

செ.இராசுவிடமிருந்து விடைபெற்றுக்கொண்டபோது பல முக்கியமான திறப்புகளை அளித்த ஓர் அரிய மாலைநேரத்தைக் கழித்த நிறைவுடன் மனமாரச் சிரித்த உல்லாசத்தையும் அடைந்தோம். ‘எல்லாருக்கும் இப்ப இதெல்லாம்தான் தம்பி வேணும். இனிமே ஆய்வெல்லாம் இந்த லெச்சணம்தான்’ என பெரியவர் சொன்னதன் வலி இருட்டுக்குள் நடந்துபோகும்போதுதான் வந்து சூழ்ந்துகொண்டது.

பழைய கட்டுரை

XXXதொல்காப்பியம்

முந்தைய கட்டுரைஎங்கும் குறள்
அடுத்த கட்டுரைமுடிவிலா இலையுதிர்தல்