அஞ்சலி : விடியல் சிவா-

இந்த அஞ்சலிக்குறிப்பை எழுத ஒரு தயக்கம் சிலநாட்களாகவே நீடித்தது. காரணம் ஒரு நண்பரின் மரணத்துடன் தேவையற்ற சில்லறை விஷயமொன்றும் கலந்துவிட்டது என்பதுதான். நண்பர்களும் எதுவும் எழுதாமல் அப்படியே இருந்துவிடலாமென்றே சொன்னார்கள். ஆனால் சிலநாட்களாகத் தொடர்ந்து கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. கடிதங்கள் அதிகரித்தபடியும் வருகின்றன. எல்லாருக்க்கும் பொதுவாக இதைப்பற்றி என் சொற்களை எழுதிவிடுவதே மேல் என்று உணர்ந்ததனால் இதை எழுதுகிறேன்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில்  விடியல் வெளியிட்ட ஒரு நூலை வாசித்துவிட்டு அதன் பதிப்பாளராகிய விடியல் சிவாவுக்கு ஒரு நீண்டகடிதம்போட்டேன். அதன் கட்டமைப்பு, தயாரிப்பு ,பிழைதிருத்துதல் ஆகியவற்றில் இருந்த கவனம் மட்டுமல்லாமல் அத்தகைய பெரிய தத்துவ நூலைத் துணிந்து வெளியிட்டமைக்காகவும் பாராட்டு தெரிவித்திருந்தேன்.கூடவே அந்நூலின் மறுதரப்பாக உள்ள சில நூல்களைக் குறிப்பிட்டு அவையும் வெளிவந்தால் நல்லது என்று எழுதியிருந்தேன்.

அதற்கு சிவா சிறிய பதில் எழுதியிருந்தார். பாராட்டுக்கு நன்றி தெரிவித்தபின் தன்னுடைய நோக்கம் அரசியல்செயல்பாடே என்றும் பதிப்பகம் அதன் கருவி மட்டுமே என்றும் சொல்லி, தன் அரசியல்தரப்பாகப் பேசும் நூல்களை மட்டுமே வெளியிடமுடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பின்பு ’பின் தொடரும் நிழலின் குரல்’ வெளிவந்தபோது நண்பர் சூத்ரதாரியிடம் விஜயாபதிப்பகத்தில் வைத்து விடியல் சிவா அந்நாவலைப்பற்றி மிகக்கடுமையாக எதிர்வினையாற்றியதாக சூத்ரதாரி சொன்னார். மேலும் நாலைந்துமாதம் கழித்து நான் விடியல் சிவாவை அவரது மிகநெருக்கமான நண்பரான தமிழினி வசந்தகுமாரின் பதிப்பக அலுவலகத்தில் சந்தித்தேன். அந்த விமர்சனம் பற்றிக் கேட்டேன், ஆமாம் அதுவே என் கருத்து என மேலும் கடுமையாக எதிர்வினையாற்றினார். கொஞ்ச நேரத்தில் இறுக்கம் தணிந்ததும் சேர்ந்து டீ குடிக்கச் சென்றோம். அத்துடன் ஒரு நெருக்கம் உருவானது.

விடியல் சிவா கொண்டிருந்த அரசியலுடன் எனக்கு உடன்பாடில்லை. அவருக்கு நான் கடைசிவரை இந்துத்துவ ஃபாசிஸ்டாகவே தெரிந்தேன். அவரது பார்வையில் காந்தியும் நேருவும்கூட இந்துத்துவ ஃபாசிஸ்டுகள் என்பதனால் நான் அதைப் பெரிதாக மறுக்கவும் முனைந்ததில்லை. ஆனால் அவருக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் மெல்லிய நட்பும் எப்போதும் நீடித்தது என்பது எல்லாருக்கும் தெரியும். புத்தகக் கண்காட்சிகளில் நான் விடியல் கடையில் சென்று சற்று நேரம் செலவிடாமலிருந்ததில்லை. என் நூலகத்தில் சிவா ’தோழர் ஜெயமோகனுக்கு’ என்று கையெழுத்திட்டு மதிப்புரைக்காக அளித்த பல பெரிய நூல்கள் உள்ளன. அவரது பதிப்பகம் வெளியிட்ட எல்லா முக்கியமான நூல்களுக்கும் நான் மதிப்புரை எழுதியிருக்கிறேன்.

கடைசியாக 2010இல் அவரைப் புத்தகக் கண்காட்சியில் பார்த்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். நான் அவரது வெளியீடான பிரேம்நாத் பசாஸ் எழுதிய ‘பகவத்கீதையும் இந்திய அரசியலும்’ என்ற நூலைப்பற்றி மிகக்கடுமையாக எதிர்வினையாற்றினேன். அந்நூல் ஒரு மோசடி, அதில் கீதையைப்பற்றிப் பெரிதாக ஒன்றுமில்லை. பெரும்பாலும் பொத்தாம்பொதுவான கட்டுரைகள்தான். இந்தியதேசிய இயக்கத்தை இஸ்லாமிய தேசிய ஆதரவு நோக்கில் ஆராய்ந்து திரிபுகளை மட்டுமே முன்வைக்கும் ஓர் குரோதப்பிரச்சாரம் அது. அந்த ஆசிரியருக்கு ஆய்வாளராகவோ சிந்தனையாளராகவோ எந்த மதிப்பும் இல்லை. முக்கியமாக அதில் சிவா நம்பும் மார்க்ஸிய இயங்கியலுக்கு இடமில்லை என்றேன். சிவா அதற்கு நிதானமாக ‘அது அந்த ஊரைச்சேர்ந்த ஒரு பார்வை. நம்மூர் திராவிடர்கழகம் மாதிரி என்று சொல்லலாம். அந்தப்பார்வையும் வரட்டுமே’ என்றார். அவர் வெளியிட்டிருந்த பெரிய நூலான டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை எனக்குக் கொடுத்தார்.

நான் ஊருக்கு வந்தபின் விடியல் சிவா தொலைபேசியில் அழைத்தார். அவர் மகாகவி தாந்தேயின் டிவைன் காமெடியை கெ.சுப்ரமணியம் மொழியாக்கத்தில் ’விண்ணனோர் பாட்டு’ என்ற பேரில் நான்கு பெரும் தொகுதிகளாக வெளியிட்டிருந்தார். ’ஒரு ஒர்க்குன்னு பாத்தாக்கூட தமிழிலே நடந்த மிகபெரிய வேலை இது. ஆனால் ஒரு ரிவியூகூட வரலை… நீங்க எழுதணும்..நீங்கதான் எழுதமுடியும்’ என்று சொன்னார். அதன்பின் அவர் எழுதிய குறிப்புடன் பெரிய நூல்கட்டு வந்துசேர்ந்தது. அந்த அளவு எனக்கு அச்சமூட்டியதனால் நான் இன்னும் அதை வாசிக்கவில்லை. தூசடைந்து சிவாவின் கடிதத்துடன் அந்தப் புத்தகக்கட்டு அப்படியே இருக்கிறது.

அதன்பின் அவரிடம் தொடர்பில்லை. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிந்தது. ஆனால் அவர் நெருக்கமான நண்பர்களையன்றி பிறரைப் பார்க்க விரும்பவில்லை, நோய் பற்றிய தகவல்களை சொல்லக்கூட பிரியப்படவில்லை என்றார்கள். அந்த மனநிலை எனக்குப்புரிந்தது. ஆகவே நான் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் அவருக்கும் எனக்கும் பொதுவான நண்பர்களிடம் என் வணக்கத்தைத் தெரிவித்து சொல்லியனுப்பினேன். சென்ற எட்டுமாதங்களாகக் கடும் வலியுடன் எந்தப் பணிகளிலும் ஈடுபடாமல், பெரும்பாலும் மருத்துவமனையிலேயே அவர் இருப்பதாகவும் விடியலை அவரது தோழர்கள் நடத்துவதாகவும் சொன்னார்கள்.

இச்சூழலில் வேறு ஒரு விவாதத்தில் சம்பந்தமில்லாமல் நுழைந்து சிவா எனக்கு எழுதியதாக எனக்கு அனுப்பப்பட்ட கடிதம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. நான் அவரது பதிப்பகம்மீது கொண்டிருக்கும் மதிப்பு அவருக்குத் தெரியாததா என்ன? அவரது நூல்களைப்பற்றி நான் அச்சில் எழுதியவையே எவ்வளவு பக்கங்கள். ஆனால் அக்கடிதத்தை அவர் எழுதியிருக்கக்கூடும் என நான் நம்பினேன். மரணமுனையில் மனித உள்ளம் உணர்ச்சிச் சமநிலையை இழக்கக்கூடும். அவரிடம் என்னென்ன சொல்லப்பட்டது என எனக்குத் தெரியாது.

அவரது மனம் திரிக்கப்பட்டிருக்கலாமென நினைத்தேன். ஆனால் அவரைச்சூழ இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான இலட்சியவாதிகள். அவர்கள் அனைவருக்குமே நான் ஃபாஸிஸ்டுதான். ஆனால் அவர்கள் நேர்மை தவறி நடக்கக்கூடியவர்களும் அல்ல. அத்துடன் அந்தக்கடிதமொழி சிவாவின் மொழி அல்ல. அவர் அப்படி தெளிவான நடையில் எழுதக்கூடிய எழுத்தாளரல்ல. அத்துடன் சிவாவின் மின்னஞ்சலும் புதியதாக மாறியிருந்தது. இடம் மட்டும் பதிவுசெய்யப்பட்டு இன்னும் ஆரம்பிக்கப்படாத ஓர் இணையதளத்தில் அந்த மின்முகவரி இருந்தது.

என் பதிலை விடியல் சிவா படிப்பாரா என்று தெரியாமல் நான் என் தரப்பை விளக்கி எழுதினேன். அதற்குப்பதிலாக வந்த இன்னொரு கடிதம் அதிர்ச்சியை அளித்தது. எனக்கு எவரும் அப்படி எழுதியதில்லை. என் கருத்துக்களைப் பலர் நிராகரிக்கலாம், ஆனால் ஒரு தனிமனிதனாக என்னை அறிந்த எவரும் என்னை நிராகரிக்கமாடார்கள் என்றே நான் நம்புகிறேன். ஆனால் நான் அந்த சஞ்சலத்தை எளிதாகக் கடந்து விட்டேன்.

சிலநாட்கள் கழித்து ஓர் இடதுசாரிநண்பர் சிவாவிடம் பேசிவிட்டு என்னிடம் தொலைபேசியில் பேசினார். இந்த ஒட்டுமொத்த விவகாரமே சிவாவுக்குத் தெரியாது, அவர் மிக நோயுற்ற நிலையில் கடும்வலியில் இருக்கிறார் என்றார். அந்தக்கடிதங்கள் சிவாவால் எழுதப்பட்டவை அல்ல என்பதுடன் அவற்றைப்பற்றி சிவாவுக்கு எதுவுமே தெரியாது என்றார். நான் ’விண்ணனோர் பாட்டுக்கு’ மதிப்புரை எழுதவில்லை என்பதற்குக் காரணம் அதை மொழியாக்கம்செய்த கெ.சுப்ரமணியம் ஒரு மதம்மாறிய பெந்தகொஸ்தே கிறிஸ்தவர், பிரேம்நாத் பசாஸின் நூலை மொழியாக்கம்செய்தவர் அவர்தான் என்பதாக இருக்கலாம் என்றுதான் விடியல் சிவா பேசிக்கொண்டிருந்ததாக நண்பர் சொன்னார்.

விடியல் சிவா அக்கடிதங்களை எழுதவில்லை என்ற செய்தி எனக்கு உண்மையில் அதிர்ச்சி. ஆனால் அவர் இருக்கும் நிலையில் அதைப்பற்றி அவரிடம் மேற்கொண்டுபேசவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். சிலநாட்கள் கழித்து மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியைச்சேர்ந்த நண்பர் ஒருவர் தொலைபேசிப்பேச்சில் விடியல் சிவா அக்கடிதங்களை எழுதவில்லை, அவருக்கு அந்த விஷயமே தெரியாது என்றார். இன்னொரு பொதுநண்பர் வேண்டுமென்றால் உறுதியாகக் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்றார். கூடவே கூடாது என சொல்லிவிட்டேன். நான் சற்றுப்பழைய மனிதன். எனக்கு மரணம் மிகப்பெரிய ஒரு நிகழ்வு. நாம் அறியக்கூடிய கண்கூடான கடவுள் அதுவே. அதன் சன்னிதியில் அற்ப விஷயங்களைக் கொண்டுசெல்லவேகூடாது. ஒருபோதும் விடியல் சிவா இந்த விஷயங்களை அறியக்கூடாது என்று திட்டவட்டமாகச் சொன்னேன்.

விடியல் சிவாவின் நெருக்கமான நண்பர் ரவி என்பவர் எழுதிய இந்த அஞ்சலிக்குறிப்பில் விடியல் சிவா அக்கடிதங்களை எழுதவில்லை என்றும் அவர் பெயரில் அக்கடிதங்கள் வந்ததில் அவருக்கு வருத்தமிருந்தது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஈழ கம்யூனிச இயக்க இணையதளத்தி அச்செய்தி வந்துள்ளது. எழுதியவர் இந்திய அரசியல் வம்புகளுடன் சம்பந்தப்பட்டவரும் அல்ல. மேலும் அதே இணையதளம் முன்பு சிவாவின் கடிதத்தை அவர் அனுப்பியது என நம்பி வெளியிட்டிருந்ததும்கூட.

இன்றுவரை வாசகர்கள் இந்த குறிப்பைச் சுட்டிக்காட்டி எனக்கு எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இத்தகைய விஷயங்கள் இப்படி வெளிப்படையாகத் தெளிவாவது மிக அபூர்வம். தற்செயலாக இது பதிவானதில் ஒரு மெல்லிய ஆறுதல், நண்பர் என்னைப்பற்றிய தேவையற்ற கசப்புடன் விடைபெறவில்லை என்பது. ஆனால் இரண்டு நாட்களுக்குப்பின்னால் இன்று இதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டியதில்லையே என்ற எண்ணமே மேலோங்குகிறது.

சேலத்தில் வசதியான நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தவர் விடியல் சிவா. ஒருமுறை நான் அவருடன் பசுமைப்புரட்சிக்கு எதிராக விவாதித்தபோது பசுமைப்புரட்சியால்தான் தன் குடும்பம் மேலே வரமுடிந்தது என்றும் கோவையில் பட்டினி மறைய அதுவே காரணம் என்றும் சிவா வாதிட்டிருக்கிறார். அவரது அண்ணன்கள் கடைசிவரை அவருக்கு உதவியாக இருந்தனர்.

இளமையிலேயே இடதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்டார். திருமணம்செய்துகொள்ளவில்லை. இடதுசாரிக்குழுக்களின் உள்போராட்டங்களில் பெரிய மனவருத்தமிருந்தாலும் புரட்சிகர இடதுசாரிக் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். ஒரு சிறுமியை தத்தெடுத்து வளர்த்து மணம்செய்து வைத்தார். அவரது சாதனை அவர் வெளியிட்ட முக்கியமான மொழியாக்கநூல்கள்தான். கடைசிக்காலத்தில் கோவையில் ஒரு பெரிய ஆய்வுநூலகம் ஒன்றை பிரெஞ்சு அறிஞர் பிராங்ஸ்வா குரோ உதவியுடன் அமைப்பதற்கான முயற்சியில் இருந்தார். அது நிகழவில்லை.

விடியல் சிவா அவர் நம்பிய அரசியலில் கடைசிக்கணம் வரை தீவிரமாக இருந்தார். தளரா உறுதியுடன் சென்று மறைந்தார். அவரை முழுமையாக நிராகரிக்கும் என்னைப்போன்ற ஒருவனின் முழுமரியாதையைக்கூட ஈட்டியவராக இருந்தார். மனிதர்கள் செய்யக்கூடுவது அதையே

அவருக்கு என் அஞ்சலி.

ஜெ

 

ரவீந்திரன் பேஸ்புக் பக்கம்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்நாட்களில்…