ஹீரோ

ஹீரோவை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அவன் என்னைத் தேர்ந்தெடுத்தான். 2002 ல் நான் தக்கலையில் ஒரு டீக்கடையில் டீக்குடிக்கச் சென்றேன். அருகே ஒரு ‘பெட் ஷாப்’ . அதில் ஒரு கம்பிக்கூண்டுக்குள் கன்னங்கருமையாக பளபளப்பாக ஹீரோ அமர்ந்திருந்தான். ஒரு பழையபாணி பாக்லைட் டெலிபோன் போல. கடையில் எவருமில்லை. ஹீரோ சாலையைப்பார்த்து சலிப்படைந்திருந்தான். என்னைப்பார்த்து ‘தூக்கு என்னை , என்னைத் தூக்கு’ என்று கத்தினான். நான் அருகே சென்று கம்பி இடுக்கு வழியாகக் கைவிட்டு அவனைத் தொட்டேன். கரிக்குவியலில் இருந்து தீ போல அவனுடைய செந்நாக்கு படபடத்துவெளிவந்தது. என் கைவிரல்களை நக்கியது. உடலே வாலாக ஆனதுபோல ஒரு கொண்டாட்டம். நடனம். ஆனந்த முனகல். ஹீரோ தீர்மானித்துவிட்டான். கிட்டத்தட்ட கிளம்பிவிட்டான்.

கடைக்காரர் வந்தபோது நான் விலைகேட்டேன். இரண்டாயிரம் ரூபாய் சொன்னார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ‘இது ஒரிஜினல் லாப்ரடார் சார்…நகத்தைப் பாத்தேளா, நல்ல கறுப்பு. இந்தமாதிரி கெடைக்காது’ என்றார். ஆனாலும் விலை அதிகம். பேரம்பேச மனம்வரவில்லை. ‘இங்கபாருங்க…இது எனக்க நாய். இனி அதை நான் மாத்தமுடியாது. மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு ஒரு வெலையச் சொல்லுங்க’ அவர் ‘சார் நான் அங்கியே பாத்துட்டேன். நீங்க அதைப் பாக்கிறபார்வையிலேயே மனசுக்குத் தெரிஞ்சுபோச்சுசார். உள்ள விலை சொன்னேன். எனக்கு நூறுரூபா கூட லாபம் வைக்கல்ல சார்.’ பின்னர் தெரிந்துகொண்டேன், அது நியாயமான விலைதான்.

ஹீரோவை ஒரு பைக்கில் வைத்து கொண்டுவந்தேன். கடைக்காரரே ஓட்ட நான் பின்னால் அவனைக் கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அவன் என் தோளில் ஏறிக் காதுமடலை சப்பிப் பால்குடிக்க முயன்றான். துள்ளித்துடித்துத் ததும்பிக்கொண்டே இருக்கும் குட்டி உயிர்ப்பெட்டகம். அவன் ஒரு கறுப்புத்தீ போல. எங்கே பற்றி ஏறலாம் என்று கைகால் எல்லாம் எப்போதும் துழாவிக்கொண்டே இருக்கும்.

வீட்டுக்குள் கொண்டு விட்டதும் ஒரு திகைப்பு. கால் பரப்பி அரைநிமிடம் நின்றபின் குடுகுடுவென ஓடிக் கூடத்தின் நான்கு மூலைகளையும் முகர்ந்து துளித்துளியாகச் சிறுநீர் கழித்து அடையாளப்படுத்தித் தன் வீடாக ஆக்கிக்கொண்டான். அதன்பின் படு சொந்தமாக சுற்றி ஓடினான். நாற்காலிக்காலைக் கறம்பினான். புத்தகம் மீது ஏற முயன்று கரப்பான்பூச்சிபோல மல்லாக்க விழுந்து காலாட்டிப் புரண்டு எழுந்தான். உடனே பசி கிளம்பி என்னருகே வந்து ‘மங் மங்’ என்றான். ஒரு டம்ளர் பாலையும் ஒரு பிஸ்கட்டையும் சாப்பிட்டதும் அப்படியே சைதன்யா மடியில் ஏறிப்படுத்து சுருண்டு ஒரு தூக்கம். அவள் பரவசத்துடன் ‘அப்பா..ச்ச்சின்னக் குட்டி அப்பா… ச்ச்சின்னக் குட்டி…’ என்றாள். அழுபவள்போலிருந்தாள்.

குட்டிகளின் அதிகாரமே வேறு. தூங்கும்போது அசைத்தால் ஹீரோ எழுந்து முறைப்பது அடிப்படை உரிமை பறிக்கப்பட்டதன் வெளிப்பாடு போலிருக்கும். பசி கிளம்பினால் அதிகபட்சம் ஐந்துநொடி அவகாசம் அளிப்பான், அதற்குள் பாலும் பிஸ்கட்டும் அருகே வந்திருக்க வேண்டும். உணவு அருகே வந்தால் அரைநொடியில் உணவும் அவனும் ஒன்றாகும் ஓர் அத்வைத நிலை கூடிவிடும். வயிறு இழுத்து தரையைத்தொட கால்ளை பப்பரக்கா என்று வைத்து நடக்கும்போதே கண்கள் தூக்கத்தில் சொக்கிச்சரியும்

வளர்ந்தபின் ஹீரோ அமைதியே உருவானான். பெரும்பாலும் ஓய்வு. மிச்சநேரம் கொஞ்சல்குலாவல். அவனைப்போல சலிப்பில்லாமல் கொஞ்சலில் லயித்திருக்கும் ஒரு பிறவியை நான் கண்டதில்லை. விதவிதமாக திருப்பி காதையும் கழுத்தையும் சொறிவதற்காக காட்டித்தரும் நளினமே தனிதான். மற்றநாய்களைப்போலல்ல லாப்ரடார். அதன் கண்கள் நேர்முன்னாலிருப்பவை, மனிதனைப்போல. ஆகவே அதன் பார்வையும் மனிதநோக்கு. பார்வையில் ஒரு அக்கறையும் கரிசனமும் உண்டு. நாம் சொல்வதை அவை புரிந்துகொண்டு எதிர்வினையாற்றும்

நான் நள்ளிரவின் தனிமையில் ஹீரோவை அனுமதிப்பேன். அவன் அமைதியாக வந்து காத்திருப்பான். எவ்வளவு நேரமானாலும். அரை மணிநேரத்துக்கு ஒருமுறை எழுந்து சடசடவென்று காதாட்டி கணினியை முகர்ந்து பெருமூச்சுவிடுவான். மேலே தெரியும் மானிட்டரின் ஒளியை கீழே உள்ள ஒரு பித்தானை அழுத்தி அணைக்கமுடியும் என அவனுக்கு தெரியும். ஒரு கட்டத்துக்குமேல் சலிப்பு வந்தால் மெல்ல வந்து அணைத்துவிட்டு ஓடிப்போய்விடுவான்.

ஹீரோ இறந்து இரண்டாண்டுகளாகின்றன. டிக் ஃபீவர் என்று டாக்டர் சொன்னார். உண்ணிகள் வழியாக வரும் காய்ச்சல். அவனுக்கு அப்போது எட்டு வயது. நாய்களுக்கு அது நடுவயது. ஆனால் இந்தியாவில் மேல்நாட்டுவகை நாய்களின் சராசரி இறப்புவயதும் அதுவே. காய்ச்சலைத்தாங்க அவன் ஈரலால் முடியவில்லை. காய்ச்சலின் ஒரு கட்டத்தில் சிறுநீர் பிரியாமல் வயிறு உப்பியது. தொடர்ந்து இரண்டுநாள் மருத்துவமனையில் இருந்தான். நாய்களை ‘அட்மிட்’ செய்ய முடியாது. அவை விழிக்கும்போது அவற்றின் ‘தலைவன்’ உடனில்லை என்றால் பதறிப்போகும். நானும் கூடவே இருந்தேன். பின்பு நம்பிக்கையிழந்து டாக்டர் திருப்பிக்கொண்டுபோகச் சொல்லிவிட்டார். கொண்டுவந்து கார்ஷெட்டில் போட்டிருந்தேன். சிறுநீர் கொஞ்சமேனும் பிரிந்தால் ஏதாவது வாய்ப்பிருக்கிறது என்றார் டாக்டர்

இருபது நிமிடங்களுக்கொருமுறை நான் சென்று பார்த்துக்கொண்டே இருந்தேன். நினைவு மங்கலாக இருந்தது. அருகே சென்று அமர்ந்து ‘ஹீரோ ஹீரோ’ என்று அழைத்தால் கண்கள் அதிரும். காது அசையும். வாயருகே கையைக் கொண்டுசென்றல் நாக்கு வந்து நக்கும். ‘ஆம், நான் கூடவே இருக்கிறேன்’ என்று சொன்னேன். அதைத்தவிர வேறெதுவும் சொல்லமுடியாது என உணர்ந்தேன்.

ஒருமுறை வந்து பார்த்தபோது ஹீரோவைக் காணவில்லை. அதிர்ச்சியுடன் பார்த்தபோது அவன் பத்தடி தூரம் நகர்ந்து தன் கூண்டுக்குள் ஏறிச் சென்று கிடப்பதைக் கண்டேன். ஏன் கடைசி உயிர்த்துளியையும் செலவிட்டு அங்கே சென்றான்? இன்றும் ஆச்சரியம்தான். ‘நாய்கள் இடத்தை மாத்த விரும்பாது’ என்றார் டாக்டர். அவன் படுத்திருக்கவேண்டிய இடம் கார்ஷெட் அல்ல. அவனால் அந்த சிறிய பிழையைக்கூட விட்டுவைக்கமுடியாது. வாழ்ந்திருந்த நாளெல்லாம் அவன் சரியான கச்சிதவாதியாகவே இருந்தான். அவனுடைய தட்டில் விழாத எதையும் உண்டதில்லை. அவனிடம் ‘நோ’ என்று சொல்லப்பட்ட எதையும் செய்ததில்லை

அருகே சென்று அவன் காதுகளை வருடி ‘ஹீரோ ஹீரோ’ என்றேன். நாக்கு வெளிவந்து என் கையைத் தொட்டுச் சென்றது. ஈரமான குளிர்ந்த நாக்கு. வால் மட்டும் தரையில் விழுந்தநிலையில் ஆடியது. மேலும் சில கணங்கள். பின்கால் இருமுறை உதைத்தது. எங்கோ ஓடிச்செல்வதுபோல ஒரு பாவனை. இறந்துவிட்டது.

என் கையில் அதன் நாக்கின் ஈரம் இருந்தது. குட்டியாக இரும்புக்கூண்டுக்குள் இருந்து அது எட்டி நக்கியதை நினைத்துக்கொண்டேன். இப்போதும் அது ஒரு கண்ணுக்குத்தெரியாத குளிர்ந்திறுகிய கூண்டுக்கு அப்பாலிருந்துதான் நக்கியிருக்கிறது.

அந்த பெரும் கூண்டிலிருந்து வெளிவந்து என்னுடனிருந்த எட்டு வருடங்களில் தன் அழகிய கண்களால் அவன் வேறெவரைவிடவும் என்னுடன் பேசியிருக்கிறான்

தைதன்யா எடுத்த புகைப்படத்தில் அவனுடைய கள்ளமற்ற கண்களைப் பார்த்துக்கொள்கிறேன். அவன் பேசிய சொற்களில் மிக அழகிய ஒரு சொல் அவற்றில் இருக்கிறது.

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Aug 10, 2012

 

 


இருநாய்கள்

புன்னகைக்கும் பெருவெளி

முந்தைய கட்டுரைகடைசிமுகம் -கடிதம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: எம்.எஸ்