ஏன் நாம் அறிவதில்லை?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 2011 ஆம் வருடம் இயற்பியலுக்காக நோபெல் பரிசு சால் பெர்ல்முட்டேர்,ப்ரைன் மற்றும் ஆடம்ஸ் கிடைத்திருகிறது. அவர்கள் ” Discovery of theaccelerating expansion of the universe through observation of distantsupernovae ” என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று சேர்ந்தகருத்து இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதுவும்accelerating mode phase . அவர்கள் இதைத் தொடங்கியது பிரபஞ்சம் விரிவடைதல்decelarting phase என்று நிரூபிப்பதற்காக. அப்படியே 180 degree turn ஜெயமோகன். அபோது அவர்களுக்கு என்ன மனநிலை இருந்திருக்கும் என்று
நினைத்துப் பாருங்கள். ஜெ கீழே இணைத்துள்ள வீடியோ வையும் பாருங்கள்.

அதில் குறிப்பாக பிரைன் பேசும்போது இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்தும்கொண்டே இருக்கிறது அதற்குத் தேவையான energy யை சுத்த வெளி (Space )இருந்து எடுத்துக் கொண்டிருக்கலாம் என்கிறார்.

ஜெ, Gods Equation என்ற புத்தகத்தையும் படித்தபோது அவர்கள் இந்தexperiments 1998 ஆம் வருடமே ஆரம்பித்திருக்கிறார்கள். இதைப் பற்றி நம் உபநிஷத்தில் எதாவது சொல்லப் பட்டு இருக்கிறதா?
ஜெ இன்னொரு சந்தேகம் ஏன் நாம் இது போன்ற ஆராய்சிகள் செய்ய முற்படுவதில்லை . அவர்கள் பயன் படுத்திய அனைத்து equipmentsஉம்  நம்மகிட்ட நிச்சியம் இருக்கும் . ? நம்மிடம் creativity குறைந்து கொண்டு வருகிறதோ என்று பயமாக இருக்கிறது ஜெ?.

இன்னொன்று . நான் norway யில் வேலை செய்து கொண்டிருகிறேன். இங்கு weekends எல்லோரும் tent எடுத்து கொண்டு வெளியில் அதுவும் குறிப்பாகக் காட்டுக்குள் கிளம்பி விடுவார்கள். போன வாரம் அவர்களுடன் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது 2 நாட்கள். அனைவரும் இங்கு drinks use பண்ணுவாங்க . ஆனா யாரும் பாட்டிலை உடைத்துப் போடுவதில்லை. நாங்க camp fire போட்டுக் குளிர்க்காயந்தோம். அது முடிந்தவுடன். என்னுடன் வந்த norwegiansஎல்லோரும் சேர்ந்து அதை எடுத்து சுமார் 1 .5 km சுமந்து வந்து குப்பைத்தொட்டியில் போட்டோம்.

journey , creativity , awareness towards your environmentஇந்த மூன்றுக்கும் ஏதோ உறவு இருக்கிறதா?
நான் கேட்கவந்தது சரியாய்க் கேட்டேன் என்று நினைக்கிறேன்.

மிக அன்புடன்,
பன்னீர் செல்வம்.

அன்புள்ள பன்னீர் செல்வம்.

திரும்பத்திரும்ப இந்த வினா என் இணையதளத்திலேயே கேட்கப்படுகிறது. நானும் பதில் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் என் பதிலைக் கொஞ்சம் விரிவாக்கம் செய்துகொள்கிறேன். இந்த வினா ஒரு ஐரோப்பிய-அமெரிக்கச் சூழலை எதிர்கொள்ளும்போது நம் இளைஞர்களில் பலருக்கு இயல்பாகவே எழுகிறது என்று நினைக்கிறேன்.

உங்கள் முதல் கேள்விக்கான விடை சுருக்கமாக இதுதான்.

ஒரு காலகட்டத்தில் மானுட சிந்தனை ஒரு சில திசைகளில் பீரிட்டுப்பாய்கிறது. பதினாறாம்நூற்றாண்டு ஐரோப்பாவில் இயந்திரவியலில் அப்படி ஒரு பெருக்கெடுப்பு நிகழ்ந்தது நாம் அறிந்ததுதான். இப்படி ஒரு சிந்தனை உடைப்பெடுத்தல் நிகழும்போது அது சில பண்பாடுகளில் தீவிரமாக வெளிப்பாடு கொள்கிறது. அந்தப்பண்பாட்டின் வளர்ச்சி நிலை, அவர்களின் அடிப்படை இயல்புகள் என சிலவற்றை சுட்டிக்காட்ட முடியும் என்றாலும் தெளிவான காரணங்களைச் சொல்லிவிடமுடியாது. மை உறிஞ்சும் காகிதத்தில் சில இடங்களில் அதிக மை ஊறுவதைப்போல என்று எனக்குப்படுவதுண்டு

இந்த சிந்தனைப்பெருக்கு எப்போதும் அச்சமூகம் தழுவிய ஒரு பெருநிகழ்வு. அதை ஒரு பிரம்மாண்டமான கூட்டு உரையாடல் எனலாம். ஒட்டுமொத்தமாக இன்று இந்தியாவே எப்படி கிரிக்கெட்டில் ஈடுபட்டிருக்கிறதோ அதைபோல. விளைவாக நம்மில் இருந்து சச்சின் டெண்டுல்கர் உருவாகி வருகிறார். ஒரு பெரும் கடலலை மேல் ஏறி அவர் வருகிறார். நாம் அறிவியலில் அப்படி ஈடுபடுவதில்லை. நம் சமூகத்தில் அறிவியலும் கலைகளும் இல்லை. சிந்தனைகள் இல்லை. ஆகவே நம்மிடமிருந்து அந்த தளங்களில் மாமேதைகள் உருவாகவில்லை.

உலகமெங்கும் பிரபஞ்ச உருவாக்கம், பிரபஞ்சவிதிகள் பற்றிய அடிப்படை ஊகங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில் இந்திய சிந்தனையில் அது இன்னும் உக்கிரமாக நிகழ்ந்தது. இன்று நாம் அந்த நூல்களை வாசிக்கையில் அது ஒரு பிரம்மாண்டமான அறிவியக்கமாக எப்படியும் ஐநூறுவருடக்காலம் நீடித்ததைக் காணமுடிகிறது. ஒவ்வொரு தரப்பும் ஒட்டுமொத்த அறிவுச்சூழலுடன் விவாதிக்க நேர்ந்தது. ஆகவே ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக வளர்ந்தது. ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் மோதியது. ஆகவே ஞானம் நுட்பமாக ஆகியபடியே சென்றது

அதன்பின் நமக்கு பெரும் வீழ்ச்சிக்காலம். பல வரலாற்றுக்காரணங்கள். அவ்வப்போது சில எழுச்சிகள், சில கொப்பளிப்புகள் நிகழ்ந்தாலும் நாம் மீண்டும் சிந்தனையில் அந்த உச்சநிலைகளைத் தொடவே முடியவில்லை. அச்சிநதனைகள் நிகழ்ந்த மண் என்பதனால் அதன் விளைவான ஒரு ஆன்மஞானத்தளம் இங்கே எப்போதும் உண்டு. ஞானிகளும் உண்டு. அவ்வளவுதான்

ஐரோப்பிய மறுமலர்ச்சி என்று அழைக்கப்படும் காலகட்டத்தில் மேல்நாட்டில் ஓர் அறிவுப்புரட்சி உருவானது. வாழ்க்கை பற்றி, பிரபஞ்சம் பற்றி அடிப்படை வினாக்கள் எழுந்தன. கலைகளும் இலக்கியமும் தத்துவமும் அறிவியலும் வளர்ந்தன. அந்த எழுச்சி ஓர் அறிவுப்பிரவாகமாக இன்றும் நீடிக்கிறது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் அந்த அறிவுப்புலத்தை நீட்டித்துக்கொண்டிருக்கின்றன. அதில் உலகமெங்கும் இருந்து அறிஞர்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள்

ஆகவே நம் பழைய மரபில் இந்த வினாக்களுக்கான கேள்வி உண்டா என்று இன்று யோசிப்பதில் பயனில்லை. உண்டு. நுட்பமான, இன்றைய வினாகளுக்கும் விடைகளுக்கும் மிகமிக நெருக்கமான , கருத்துக்கள் உண்டு. ஆனால் அவை வேறு ஒரு அறிவுத்தளத்தில் முன்வைக்கப்பட்டவை. அவற்றை அந்த அறிவுத்தளத்தில் வைத்தே அறியவும் மதிப்பிடவும் வேண்டும். அன்றே சொன்னான் இந்தியன் என்ற வகை புளகாங்கிதங்களுக்கு அர்த்தம் இல்லை

வேண்டுமென்றால் இன்றைய அறிவியலின் தளத்தில் நுழைந்து அந்த விவாதத்திற்கு இணங்க அந்தத் தொன்மையான ஞானங்களை மறுவிளக்கமும் மறு ஆக்கமும் செய்து முன்வைக்க முடிந்தால் அது உகந்தது. அந்தத் தொன்மையான ஞானக்கூறுகளில் இருந்து இன்றைய ஞானத்தின் அடுத்த படியை நிகழ்த்தமுடிந்தால் அது படைப்பாற்றல். மற்றபடி இரண்டையும் பிரித்தே அணுகவேண்டும்

நம்மிடம் இருந்த அறிவுச்சூழல் அழிந்தது. புதியதாக உருவாகவும் இல்லை. ஏன்? அதுவே உங்கள் இரண்டாவது வினா

இருபதுவருடம் முன்பு நான் கல்லூரிகளுக்குச் சொற்பொழிவுகளுக்காகச் செல்வதுண்டு. அப்போது என்னிடம் கல்லூரி ஆசிரியர்கள் மெல்லியகுரலில் ‘எல்லாம் ஸ்டூடண்ட்ஸ். கொஞ்சம் சிம்பிளா, சாதாரணமா பேசுங்க’ என்பார்கள். ‘எல்லாருமே முதுகலை முடித்தவர்கள்தானே?’ என்று நான் கேட்பேன். ‘ஆமா…ஆனாலும் யாருக்கும் அந்த அளவுக்குப்போதாது. சீரியஸா பேசினா கவனிக்க மாட்டாங்க’ என்பார்கள்.

ஆரம்பத்திலேயே நான் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். நான் கல்லூரியில் மிகமிகத் தீவிரமாக, அவர்கள் அதுவரை கேட்டிராத ஒரு சிந்தனையை அல்லது பார்வைக்கோணத்தை முன்வைத்தே பேசுவேன். ஆனால் அதை முடிந்தவரை எளிமையாக, முடிந்தவரை சுவாரசியமாகப் பேசுவேன். என்னுடைய தீவிரம் காரணமாக அவர்கள் ஆழ்ந்து கவனிப்பார்கள். முதல் சில பேச்சுகளிலேயே அவர்கள் கவனிக்கமாட்டார்கள் என்பது பொய் என்று புரிந்தது

அதன்பின் கேள்விகள். வழக்கமாகப் பேச்சாளார்களிடம் பாய்ந்துபாய்ந்து கேள்விகள் கேட்கும் கல்லூரி மாணவர்கள் என்னிடம் கேள்விகளே கேட்கமாட்டார்கள். ‘கேளுங்க கேளுங்க’ என்று ஆசிரியர்கள் ஊக்குவிப்பார்கள். பல கேள்விகள் என் பேச்சுக்கு முன்னரே சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும் என நான் அறிவேன். சில கல்லூரிகளில் மாணவர்கள் சிலர் எழுந்து அந்தப் பொத்தாம்பொதுவான கேள்விகளைக் கேட்பார்கள். நான் அந்தக்கேள்வியைக்கூட இழுத்துக்கொண்டுவந்து நான் பேசிக்கொண்டிருந்த விஷயத்துடன் இணைத்து பதில் சொல்வேன். அதிகபட்சம் இரண்டு கேள்விகள். அதன்பின் மயான அமைதி

ஏன் என்று நான் யோசித்திருக்கிறேன். பின்னர் பேச்சுமுடிந்ததும் ஆசிரியர்கள் என்னை மாணவர்கள் நெருங்காமல் பார்த்துப் பொத்தித் திருப்பி அனுப்பிவிடுவார்கள். அதை மீறி சில மாணவர்களை அறைகளுக்கு வரச்சொல்லி பேசிப்பார்த்தேன். மாணவர்களுக்கு என் பேச்சு பிடித்திருப்பதை உணர்வேன். அவர்களில் பலர் இருபதாண்டுகளுக்குப்பின் இன்று என்னுடைய நல்ல வாசகர்களாக ஆகியிருக்கிறார்கள். பலருக்கு என் உரை ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் அப்போது மிகவும் குழம்பியிருப்பார்கள். என் உரை அவர்களுக்குப் புரிந்துகொள்ள மிகவும் சிரமமாக இருக்கும். ’அங்கங்கே புரியுது, மொத்தமா புரியலை சார்’ என்பார்கள். அவர்கள் யோசித்திருக்கும் விதங்களை அது குழப்பியடித்திருக்கும். ஆனால் என்ன நிகழ்ந்தது என்று பிடிகிடைத்திருக்காது.

ஏனென்று படிப்படியாகப் புரிந்துகொண்டேன். நம்முடைய மாணவர்களுக்குக் ’கருத்துக்கள்’ புரியாது. ஆம், கருத்துக்களைப் புரிந்துகொண்டு, உள்வாங்கி, விவாதித்து விரிவாக்கிக்கொள்ளும் மனப்பயிற்சியே அவர்களுக்குக் கிடையாது. நான் சொல்வது மிகச்சிறந்த மாணவர்களைப்பற்றி. அவர்களுடைய அறிதல் என்பது தகவல்களைத் தெரிந்துகொள்ளுவதுதான். கருத்துக்களைக்கூட அவர்கள் தெரிந்துதான் கொள்வார்கள். அவற்றை அவர்கள் தங்களுக்குள் சீராக அடுக்கி வைத்திருப்பார்கள்.

இதுதான் சிக்கல். அவர்கள் தெரிந்துகொண்டு அடுக்கி வைத்திருக்கும் முறையை நான் கலைத்துப்போட்டுவிடுகிறேன். அவர்கள் அறிந்தவை எல்லாமே தவறு என்பதுபோல ஆகிவிடுகிறது. திரும்ப அடுக்குவதற்கான முறைமை அவர்களிடமில்லை. ஏனென்றால் அவர்களுக்கு சிந்திப்பது பழக்கமில்லை. சிந்தனையைத் தர்க்கபூர்வமாக உருவாக்கிக்கொள்ள அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுவதே இல்லை. கிணற்றில் தவறிவிழுந்தவன் உயிராசையால் நீச்சல் கற்றுக்கொள்வதுபோல அவர்களில் சிலர் கற்றுக்கொண்டால்தான் உண்டு.

இதுதான் இன்று இந்தியாவின் பொதுவான அறிவுத்தளத்தின் மிகப்பெரிய பிரச்சினை என நான் நினைக்கிறேன். ’தெரிந்துகொள்ளுதல்’ மட்டுமே இங்கே அறிவுச்செயல்பாடாகக் கருதப்படுகிறது. அதிகமாகத் தெரிந்தவன் அறிவாளி எனப்படுகிறான். அவன் தனக்கு என்னென்ன தெரியும் என்பதைக் காட்டிக்கொண்டே இருக்கிறான். ‘விஷயம்தெரிந்தவர்கள்’ நம்மைச்சுற்றி உலவிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மிடம் தெரிந்த தகவல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார் ’தினமணியின் வாசகர் கடிதங்களைப்பாருங்கோ. ஒரு ஐடியாவை பேஸ்பண்ணி வர்ர ஒரேஒரு வாசகர் கடிதத்த நீங்க பாக்கமுடியாது. ஆனால் ஒரு சின்ன தகவல்பிழைன்னா லெட்டர்ஸ் வந்து குமிஞ்சிரும்’. பின்னர் காலச்சுவடு நடத்தும்போது ஒரு கத்தை வாசகர்கடிதங்களை எடுத்துக்காட்டி சொன்னார் ‘இந்த இதழிலே எம்.என்ராய் பத்தி ஆழமா ஒரு கட்டுரை இருக்கு. பல நல்ல இலக்கியக்கட்டுரைகள் இருக்கு. ஒரு ரியாக்‌ஷன் கெடையாது. ஆனால் நாப்பது லெட்டர் இதிலே உள்ள புரூஃப் மிஸ்டேக் மாதிரி சின்னச்சின்ன தப்புகளை சுட்டிக்காட்டி வந்திருக்கு…’

இந்தத் ‘தெரிந்துகொண்ட’ அறிவுக்கு இன்றைய தகவல் உலகில் ஒரு மதிப்பும் இல்லை என்று இன்னும் நமக்குத்தெரியவில்லை. அங்கே அப்படி சொல்லியிருக்கிறது, இங்கே இப்படி எழுதியிருக்கிறது என்றவகையான பேச்சுகளுக்கு வெறும் அரட்டை என்றே இன்று பொருள். எத்தகைய உயர்ந்த, அரிய விஷயத்தைப்பற்றிய பேச்சுக்களானாலும். கருத்துக்களை உள்வாங்குவதும் சுயமான கருத்துக்களை உருவாக்குவதுமான படைப்பூக்கமே இன்று அறிவுத்திறன் என்று பொருள்படும்.இன்றைய சவால் என்பது புதிய சிந்தனையை உருவாக்குவதுதான். கலையை உருவாக்குவதுதான்.

அந்த படைப்பூக்கத்தன்மை மிக அந்தரங்கமானது. அதைக் கண்டெடுத்து ஊக்கமூட்டி வளர்க்கக் கல்வியால் முடியுமே ஒழிய உருவாக்கிக்கொடுக்க கல்வியால் முடியாது. ஒவ்வொரு படைப்பூக்கமும் தனக்கென ஒரு ரகசியப்பாதையைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய மொழியை, படிமங்களை, தர்க்கமுறையை அது தன் அனுபவங்கள் வழியாகத் தானே கண்டுகொள்கிறது. நீர் தன் பாதையைக் கண்டுபிடிப்பதுபோல. அதற்காக பயிற்சிக்களமாக நம் கல்விக்கூடங்கள் அமையவேண்டும். அப்படிப்பட்ட கல்விநிலையங்கள் அனேகமாக நம்மிடம் இல்லை.

நான் நெடுங்காலம் நம் உயர்தொழில்நுட்பக் கல்விக்கூடங்கள் அப்படிப்பட்டவை என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் இன்று என் வாசகர்களில் பலர் ஐஐடிகளிலும் ஐஐஎம்களிலும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கும் இதே வகையான தகவல்திணிப்புக்கல்வியே உள்ளது என்கிறார்கள். இன்னும் அதி உக்கிர தகவல்திணிப்பு, அவ்வளவுதான் வேறுபாடு. சிறுவயதிலேயே தகவல்களைத் திணித்துக்கொள்ளப் பழக்கப்படுத்தப்பட்ட மூளைகளே அவற்றுக்குள் நுழைய முடியும். அதிகமான தகவல்களைத் திணித்துக்கொண்டவர்கள் முதன்மைபெற்று அறியாமை மட்டுமே அளிக்கும் அபாரமான சுயபெருமிதத்துடன் வெளியே செல்கிறார்கள்.

அத்தகைய நிறுவனம் ஒன்றின் ஆசிரியர் சொன்னார் ’இங்கே வர்ர பையன்களை விட கிராமத்திலே உள்ள எலிமெண்டரி ஸ்கூல் பிள்ளைங்க இன்னும் கிரியேட்டிவானவங்க. இத நான் சொல்லிட்டே இருந்தேன். ஒருவாட்டி ஒரு செர்வீஸ்புரோகிராமுக்காக உண்மையிலேயே வில்லேஜ் ஸ்கூல்களுக்குப் போனப்ப அது உண்மைன்னு தெரிஞ்சுது’ . நம்மூர் அதிஉயர்அறிவியல் கல்விபெற்று வெளியேறும் பையன்கள் உலக சிந்தனையில் எங்கேதான் இருக்கிறார்கள் என்ற பரிதாபம் நம்மைப்போன்ற வரிகட்டும் பொதுமக்களுக்கு உண்டு. தகவல்களஞ்சியங்கள் குமாஸ்தா வேலைதான் செய்யமுடியும். இவர்கள் உயர்தொழில்நுட்ப குமாஸ்தாக்கள்.

படைப்பூக்கத்தின் அடிப்படைவிதி என்பது கவனிப்பதுதான் [Observation] . இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் அவதானிப்பு [Contemplation]. புறத்தையும் அகத்தையும் கூர்ந்து அவதானிப்பது. அதுதான் மொழியையும் படிமங்களையும் தர்க்கமுறைகளையும் அளிக்கிறது. அதுதான் சிந்தனையிலும் கலையிலும் திறப்புகளை அளிக்கிறது. அதன்வழியாகவே நாம் கருத்துக்களை அறிந்து உள்வாங்கிக்கொள்ள முடியும்.இளமையில் கற்றுக்கொள்ளவேண்டியது அதுதான். ஆனால் நம் கல்விமுறை முழுக்கமுழுக்க மழுங்கடிப்பது இந்த அவதானிக்கும்திறனையே.

இன்று நாம் பரிந்துரைக்கப்பட்ட தகவல்களை, வரையறைசெய்யப்பட்ட எல்லைக்குள் மொத்தமாக மூளைக்குள் ஏற்றிக்கொள்வதையே கல்வி என்று நினைக்கிறோம். அது கல்வி அல்ல. ஒருவகையில் கல்விக்கு எதிரானது. ஒருதுறையின் ஆரம்பத்தைக் கற்றுக்கொள்ளும்போது அந்த மனப்பாடம் ஓரளவு உதவலாம். அப்போதுகூட தீவிரமான விருப்புடன் உள்வாங்கப்படவில்லை என்றால் அவை காலப்போக்கில் மங்கி மறைந்துவிடும். ஆனால் அடுத்தகட்டத்தில் அவை பெரும் சுமைகள்

அவதானிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட விதத்தில் நிகழ்வது அல்ல. எப்போதும் பிரக்ஞை விழித்திருப்பதுதான். உள்ளும் புறமும் அது கவனம்கொண்டிருப்பதுதான். அது ஓர் ஆளுமையின் அடிப்படை இயல்பாக ஆகியிருக்கும். முக்கியமான கலைஞர்கள், சிந்தனையாளர்கள் அனைவரிடமும் இந்த இயல்பைக் காணலாம். அறிவுத்துறையில் செயல்படக்கூடிய அனைவரிடமும் ஏறியோ இறங்கியோ இவ்வியல்பு இருந்தாகவேண்டும்.

இந்த அவதானிப்புநிலையைப்பற்றித்தான் நான் கவனப்படுத்த விரும்புகிறேன். இதை எப்போதேனும் உணர்ந்தவர்களால் நான் சொல்வதைப்புரிந்துகொள்ளமுடியும். மற்றவர்களுக்குச் சொல்லிப்பயனில்லை. இந்நிலை இதற்கான சில விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் கொண்டது. சில நுட்பமான பாவனைகளால் ஆனது.

உதாரணமாக, இயற்கையை அவதானிக்கும் ஒருவன் அதில் ஒருபகுதியாக தன்னை உருவகித்துக்கொள்வான். அதில் கரைந்து லயிப்பதாக மாறுவான். கூடவே அவனுள் உள்ள ஒரு நுண்ணிய அகப்புலன் அவன் அடைவனவற்றை விலகிநின்று கவனித்துக்க்கொண்டுமிருக்கும். ஒருபோதும் அவன் இயற்கையைக் குலைக்க மாட்டான். அதை ‘நுகர’வும் முயலமாட்டான். இயற்கையில் தன்னைத் துருத்தி நிறுத்திக்கொள்ள மாட்டான்.

அவ்விதம் இயற்கைக்குள் நுழைய ஒவ்வொருவரும் ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கலாம். ஒருவர் நிலக்காட்சி ஓவியங்களை வரையலாம். ஒருவர் பறவைஆராய்ச்சி செய்யலாம். ஒருவர் மலையேறலாம். ஒருவர் மரங்கள் மேல் குடில்கட்டி வாழலாம். முடிவிலா சாத்தியங்கள்.

அத்தகைய அவதானிப்பு என்பது உண்மையில் பெரும்பரவசநிலை. படைப்பூக்கநிலையே மனிதனின் உச்சகட்ட இன்பம் . அவதானிப்பு என்பது அகவயமான படைப்புநிலைதான். அதை அடைந்தவன் அதையே மீண்டும் இலக்காக்குவான். அந்நிலையில் இயற்கையை அறிந்தவனுக்கு இயற்கையே பேரின்பம் அளிக்கும்.அது அளிக்கும் இன்பத்தை எந்தக் கேளிக்கையும் எந்த போதையும் அளிப்பதில்லை.இயற்கைக்கும் தனக்கும் நடுவே வரும் எதையும் அவன் தொந்தரவாகவே கருதுவான். தன் பிரக்ஞை முழு விழிப்பில் இருந்து அதை ஒரு அணுகூட தவறாமல் அள்ளிவிடவே எண்ணுவான்.

அதை உணரமுடியாதவர்களுக்கு இயற்கையை எப்படி ‘என்ஜாய்’ செய்வதென்று தெரிவதில்லை. ஆகவேதான் இயற்கையின் மடியில் பாட்டு போட்டுவிட்டுக் குத்தாட்டம்போடுகிறார்கள். விரிப்பை விரித்து அமர்ந்து சீட்டாடுகிறார்கள். விதவிதமாக சமைத்து உண்டு ஏப்பம் விடுகிறார்கள். மூக்குமுட்டக் குடித்துவிட்டு சலம்புகிறார்கள் , வாந்தி எடுக்கிறார்கள். கூச்சலிட்டு அரட்டை அடிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். ஒருவழியாக ’ஹலிடே’ யை ‘எஞ்சாய்’செய்துவிட்ட நிறைவில் திரும்பித் தங்கள் கொட்டடிகளுக்குச் செல்கிறார்கள்.

இங்கே இயற்கை என்று சொல்வதை உலகம் என்றே மாற்றிக்கொள்ளலாம். அன்றாட வாழ்க்கையின் எல்லாத் தளத்துக்கும் நீட்டிக்கலாம். இந்த அவதானிப்புநிலையே ஒருவனின் அகத்துக்குள் அவனுடைய கலைக்கும் சிந்தனைக்குமான கச்சாப்பொருளை நிரப்புகிறது. இது இல்லாதவர்களை நாம் தொடர்ந்து பார்ப்போம். வாசித்துக்குவித்திருப்பார்கள். ஆனால் நான்குவரி எழுதினால் சப்பையாக செத்து கிடக்கும் அந்த மொழி. வெற்றுத்தகவல்களுக்கு அப்பால் எதுவுமே இருக்காது. உள்ளே நுழையாது. அறிவார்ந்த மலட்டுத்தன்மை என்றே இதைச் சொல்லமுடியும்.

நீங்கள் சொல்லும் மூன்றையும் ஒரேசொல்லில் அவதானிப்பு என்று வரையறைசெய்யலாம். அவதானிப்பு உடையவன் அவனுக்கான சில சுயக்கட்டுப்பாடுகள் , சுயமான சில வழிகள் கொண்டவனாக இருப்பான். அவனுடைய அவதானிப்புகளுக்கான வெளியாக ஒரு படைப்புலகைக் கண்டுகொண்டிருப்பான்.

ஆனால் நம் மாணவர்களிடம் இது உருவாவதேயில்லை. அவர்களால் தங்களைக் கூர்ந்து பார்க்கமுடிவதில்லை. எனவே வெளியே இருந்து எதையும் உள்வாங்கவும் முடிவதில்லை. விளைவாகப் புறவியல்பாளர்கள் [Extravert] உருவாகிறார்கள். புறவுலகில் உள்ள அன்றாட விஷயங்களை மட்டுமே உணரக்கூடிய ,அதில் மட்டுமே ஈடுபடும் ஆற்றல்கொண்டவர்கள் இவர்கள். இன்றைய உலகியல்சூழலில் இவர்களுக்கு அதிக பொருளியல் வெற்றிகள் சாத்தியமாகின்றன. இவர்களே இளைஞர்களின் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

சமூகப்பின்னணி காரணமாகவும், சொந்தஆளுமை காரணமாகவும் தொடர்புறுத்தலிலும் பழகும் முறையிலும் குறைபாடுள்ள அகவியல்பாளார் [Introvert] பலர் நம்மிடையே உண்டு. அவர்களும் இந்தப் புறவியல்பாளர்களைக் கண்டு இவர்களை நகலெடுக்க செயற்கையாக முயல்கிறார்கள். பலசமயம் உற்சாகத்திலோ போதையிலோ அதீதமாகப் போகிறவர்கள் இவர்கள்தான். இந்த இருவகையினரைதான் நான் பொதுவாக நம் இளைஞர்களிடம் காண்கிறேன். விதிவிலக்குகள் நம் கண்ணுக்குத்தெரியாத அளவுக்கு மிகச்சிலர்தான்.

வாழ்க்கையைப்பற்றி, சூழலைப்பற்றி எந்த சுயமான அவதானிப்புகளும் இல்லாதவர்கள் பெரும்பாலானவர்கள். ஆகவே இன்னொரு அவதானிப்பை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றலும் அற்றவர்கள். கடும் உழைப்பால் நிறைய தகவல்களைக் கற்கிறார்கள். அவற்றைப்பயன்படுத்தி உழைத்துப் பணமீட்டுகிறார்கள். படைப்பூக்கமற்ற உழைப்பு கடும் சலிப்பை உருவாக்குகிறது. ஆகவே அந்தப்பணத்தை அச்சலிப்பைத் தீர்க்கச் செலவழிக்கிறார்கள். அதற்காகக் கேளிக்கைகளை நாடுகிறார்கள். இயற்கை, கலைகள் எல்லாமே அவர்களுக்குக் கேளிக்கைதான். அவற்றை எப்படி அணுகுவதென்பது அவர்கள் அறியாதது. ஆகவே அவற்றில் ஏறி மிதித்துக் கொண்டாடுகிறார்கள்.

கிழக்கின் பழைமையை இழந்து மேற்கின் நவீனத்தையும் அடையாமல் மொண்ணையான லௌகீகமாக மட்டும் ஆகிப்போன நம் சமகாலப் பண்பாடு உருவாக்கிய விளைவுகள் இவர்கள். ஆகவே பரிதாபத்துக்குரியவர்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைவிழியில் விழுந்த கவிதை
அடுத்த கட்டுரைவிலாங்கு