மணிவண்ணன் அமெரிக்காவின் நல்லதுகளையும் இந்தியாவின் கெட்டதுகளையும் ஒப்பிட்டிருக்கிறார். இந்தியாவைப் போல மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையும், நான்கு மடங்கு வாழ்நிலமும் இருக்கும் நாட்டில், per capita resources அதிகம் இருத்தல் logic.
அமெரிக்காவின் பொருளாதார பலமும் அதிகம். தலைவர்களையும் ஒப்பிடும் போது, ஓபாமாவையும் மன்மோகன் சிங்கையும் ஒப்பிட்டிருக்கிறார். பில் க்ளிண்டனையும், புஷ்ஷையும் விட்டு விட்டார். sex definition சொன்ன பில் க்ளிண்டனின் hypocrisy கண்டு உலகமே சிரித்தது. புஷ்ஷின் weapons of mass destruction என்னும் மாபெரும் கண்டுபிடிப்புக்கு இன்னும் ஏன் நோபல் கொடுக்க வில்லை??
காட்ரீனா புயலில் பாதிக்கப் பட்ட கறுப்பர்களுக்கு நிவாரணம் வழங்கப்ப்ட்டு விட்டதா மணிவண்ணன்? சுனாமியில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நாங்கள் சிறிய அளவில் வீடு கட்டிக் கொடுத்து விட்டோம் – ஏழைக்கேற்ற எள்ளுருண்டை. இந்தியா கொஞ்சம் நாறும்தான் – ஆனால் ஒரு நாடாக இந்தியா, உலகத்தில் அமைதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, கீழ்த்தரமாக தாதாகிரி செய்வதில்லை. 9/11 படம் பார்த்திருக்கிறீங்களா?? 20 நூற்றாண்டில் உலகமெங்கும் போர்களுக்கும், சாவுகளுக்கும் மிக முக்கியக் காரணம் உங்கள் புண்ணிய பூமியின் காவல் தெய்வங்கள். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் டாக்டரேட். 45 வருடங்கள் அரசின் அவ்வளவு பொருளாதாரத் துறைகளிலும் பங்காற்றி உயர்ந்தவர். புஷ் மாதிரிப் பொறுக்கி இல்லை. எ
ங்களின் 8% வளர்ச்சி நாங்களே செய்தது. எங்கள் ஊர் மன்மோகன் சிங். 5 ஆண்டுகள் பிரதமராக இருந்தும் இன்னும் மாருதி 800 வைத்திருக்கும் நேர்மையாளர். புஷ்ஷை விட, ஓபாமாவை விட better qualified to run government.இந்தியாவின் வளர்ச்சி,பக்கத்து ஊர் சோனி நாடுகளுக்கு ஆயுதம் விற்று, ஏழைகளின் குருதியில் வந்ததல்ல. உலகத்தின் 5% மக்கள், உலகின் 25% எரிபொருளைக் கரியாக்கும் ஆடம� பரதான் அமெரிக்கா. இன்று வீட்டுச் செலவுக்கு சீனாவிடம் கடன் வாங்கி முழித்துக் கொண்டிருக்கிறது.உங்கள் ஊர் பாஷையில் சொல்வதென்றால் your balls are in chinese hands. உங்கள் ஊரில் வேலையில்லை என்றால் allowance உண்டு. நாங்கள் அரிசி கொடுக்கிறோம். 8 மணி நேரம் உழைப்புக்கு 80 ரூபாய் சம்பளம் உலகிலேயே மிகக் குறைவு. NREGA திட்டம் அதைக் கிட்டத் தட்ட 200க்கு உயர்த்தியிருக்கிறது. அமெரிக்காவிலும் நல்லது கெட்டது உண்டு. இந்தியாவிலும். சிறுவயதில், பசங்க யாருடைய அப்பா பெரியவர் என்று சண்டை போட்டுக் கொள்வார்கள். சின்னப் புள்ளத்தனமா இருக்கு. ரொம்ப ஜீனியர் விகடன்/நக்கீரன் படிக்காதீங்க.
பாலா
அன்புள்ள ஜெயமோகன் சார்,
மணிவண்ணன் என்பவரின் அதிகபிரசங்கிதனம் ரொம்ப ஓவர்.அமெரிக்கா, கனடா போன்ற
நாடுகளில் இருப்பவர்களுக்கு அங்கு சென்றவுடன் கொம்பு முளைத்துவிடும்
போலிருக்கிறது. இங்கு ஷார்ஜாவில் தமிழர் ஒருவர் இருக்கிறார். அவர்
கனடாவில் குடியேறி அந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். அவர் தன்னை
கனடா குடிமகன் என்று சொல்லிகொன்டலும் பரவாயில்லை, ஒரு படி மேல போய் எங்க
நாடு என்றுதான் சொல்வார். அதுபோல அமெரிக்காவில் இருப்பதால்
மணிவண்ணனுக்கு ஒருவருடைய பல வருட படிபனுபவதையும் வாழ்வனுபவதையும்
கேள்விக்குட்படுத்த முடிகிறது. இதில் கிண்டல் வேறு. இவர் சொல்வது மரணத்தை
பற்றி எழுத வேண்டுமென்றால் மரணதிற்குபின்னேர்த்தன் எழுதவேண்டும் என்று
சொல்வார் போல. உங்களுடைய
பதில் மிக பொருத்தமாக கச்சிதமாக இருந்தது.
அன்புடன்
குரு GURUMOORTHY PALANIVEL
அன்புள்ள ஜெயமோகன்,
சென்ற நாளில் மணி என்ற இளைஞர் ஒருவர் எழுதின கடிதம் எரிச்சலை உண்டுபண்ணியது. [ அவர் இளைஞர்தான் . காரணமென்னவென்றால் கொஞ்சம் முதிர்ச்சி உள்ளவர்கள் அப்படி எழுத மாட்டார்கள்] ஆனால் சம்பந்தப்பட்ட அந்தக் கடிதம் ஒரு தனிநபரின் தனிப்பட்ட மனநிலையின் பிரதிபலிப்பு அல்ல. சம்பந்தப்பட்டவர் ஒரு பெரிய இளைஞர் கூட்டத்தின் பிரதிநிதி. நான் வேலைசெய்யும் நிறுவனத்தில் இங்கே இதேபோல நிறையபேர் இருக்கிறார்கள். இவர்களிடம் நான் பேசிப்பேசி சலித்து போயிருக்கிறேன்.
நம்முடைய இ¨ளைஞர்களுக்கு நாம் எந்த Cultural education ம் அளிப்பது இல்லை. இந்தியக் கலாச்சாரத்தை பற்றி ஒரு ஆரம்ப அறிவுகூட இவர்களுக்கு இருப்பதில்லை. உலகில் வேறு எந்த நாட்டிலாவது இப்படிப்பட்ட so called elites இருப்பார்களா என்று சந்தேகம்தான். நம்முடைய தேசிய சரித்திரத்தைப்பற்றி அல்லது social conditions பற்றி ஓர் ஆரம்ப அறிவுகூட இவர்களிடமில்லை. நம்முடைய கல்விமுறை இப்படிப்பட்டது. நாம் பையன்களை படிபடி என்று சொல்லி முட்டி 99 சதவீதம் மார்க் வாங்கவைத்து proffessionals ஆக்கி அமெரிக்காவுக்கு அனுப்பி விடுகிறோம்.
அவர்கள் இங்கே வந்து கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்ததுமே தங்களை elites என்று கற்பனைசெய்துகொள்கிறார்கள். கேடுகெட்ட இந்தியாவின் பிரதிநிதிகள் அல்ல என்று நினைப்பு. Damn India என்று மூச்சுக்கு முப்பது தடவை முனகிக் கொண்டால் இந்தியாவுக்கு இருக்கக்கூடிய இழிவில் இருந்து இவர்கள் விடுபட்டுவிட்டதாக ஒரு நினைப்பு. எப்ப பார்த்தாலும் இந்தியாவை குறை சொல்வது பரவாயில்லை கலை, இலக்கியம், அரசியல் என்று எதைப்பார்த்தாலும் அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பொட்டி தட்டினால் இந்தியாவில் எப்படி பாலம் கட்டலாம் என்று அங்கே உள்ள எஞ்சீனியர்களுக்கு பாடம் நடத்தலாம் என்கிற நினைப்பு.
நானும் பதினெட்டு வருஷங்களாக நிறைய பேரிடம் தமிழிலே எதையாவது படியுங்கள் என்று சொல்லி தலைதலையாக அடித்துக்கொண்டிருக்கிறேன். படிக்க மாட்டார்கள். கேட்டால் தமிழிலே படிக்கும்படி ஒன்றும் இல்லை என்பார்கள். சரி ஆங்கிலத்திலே நீ அப்படி என்ன படித்து கிழித்தாய் என்று கேட்டால் மிஞ்சிப்போனால் அயன் ராண்ட் அவ்வளவுதான்.
இந்தக்கடிதத்தை எழுதியவருக்கு அமெரிக்காவைப்பற்றி இருக்கும் மாயப்பிம்பத்தை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த அமெரிக்காவிலே இன்னும் இந்தியாவிவிட பின் தங்கிய கிராமங்கள் இருக்கின்றன தெரியுமா? இங்கே உள்ள Social disparity மாதிரி உலகத்திலேயே கிடையாது. எப்பவும் டிவியே பார்க்காமல் ஏதாவது நாலு புஸ்தகம் படித்தால்கூட இதெல்லாம் தெரிந்திருக்கும்…
சரி ,எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் என்று சொல்லி இதை விட்டுவிட முடியாது. ஒரு தகவல் சொல்கிறேன். பிலிப்பைன்ஸிலே ஒவ்வொரு வருஷமும் அந்த நாட்டின் ஹீரோ ஆக ஒருவரை செலக்ட் செய்து விருது கொடுக்கிறார்கள். அவர் யார் தெரியுமா? அந்த நாட்டுக்கு அதிகமாக ·பாரீன் எக்ஸேஞ்ச் தேடிக்கொடுக்கிற வெளிநாட்டுக்குப்போய் வேலை செய்கிற தொழிலாளி. அந்த நாடே இந்த மணியார்டர் எகானமியில் பெரிதாக வளர்ந்துவிட்டது
நம்முடைய மக்களின் வரிப்பணத்திலே படித்து இதுபோல அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் வரக்கூடிய எலைட்டுகள் என்ன செய்கிறார்கள்? இவர்கள் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களைப்போல ஊருக்கு பணம் அனுப்பினாலே நம் நாடு எங்கேயோ போயிருக்குமே. நம் நாட்டு மணியார்டர் பணத்திலே ·பாரீன் எக்சேஞ்ச் என்பது 90 % சாதாரண கூலி உழைப்பாளிகள் கல்·ப் நாடுகளில் சம்பாதித்து கொண்டுவருவது. எலைட்டுகளுக்கு nasty India திரும்பவே மனமில்லையே. இங்கேயே தலைமுறை தலைமுறையாக வாழப்போவதாக நினைத்து சொத்து சேத்தவர்கள் எல்லாம் இப்போது திருடனுக்கு தேள் கொட்டியது போல முழிக்கிறார்கள்.
கலாச்சாரத்தைக் கற்றுக்கொண்டால்தான் கல்வி. இல்லாவிட்டால் தொழில்தெரிந்த அசடுகளாகத்தான் நம் பையன்கள் இருப்பார்கள். இதுதான் நான் நினைத்துக்கொள்வது. ஆனால் தமிழர்கள்தான் இப்படி இருக்கிறார்கள். குஜராத்திகளும் பஞ்சாபிகளும் இப்படி இல்லை. அவர்கள் குஜராத்தையும் பஞ்சாபையும் எப்படி கட்டி எழுப்பி இருக்கிறார்கள் என்று போன வருஷம் பார்த்தேன். பிரமித்துப்போனேன். என்ன சொல்ல?
சுப்பையா நாச்சிமுத்து
அன்புள்ள நாச்சிமுத்து அவர்களுக்கு
தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவர் உண்டு. நெய்வேலியில் படித்தவர். அவர் மாலதீவில் ஆங்கில ஆசிரியராக இருந்தார். அங்கிருந்து இப்போது அமெரிக்காவில் ஒரு சின்ன கிராமத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக சென்றிருக்கிறார். விடுப்பில் வரும்போது என்னைவந்து சந்தித்து என்னிடம் புத்தகங்கள் வாங்கிச்செல்வார்
சென்ற வருடம் வந்தபோது அவர் அமெரிக்காவில் இருப்பதைப்பற்றி ஆச்சரியப்பட்டேன். அவர் சொன்ன அமெரிக்காவின் சித்திரம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அவர் வேலைசெய்வது ஏதோகிராமத்தில். அங்கே ஆசிரியர்களே வேலைக்கு வரமாட்டார்கள். வந்தாலும் உடனே போய்விடுவார்கள். மொத்த ஊரிலும் நாலே நாலு கடைகள்தான். எந்தவகையான பொதுவாழ்க்கையும் இல்லை. அவர் கற்பிக்கும் பள்ளியில் ஐந்து வகுப்புகளுக்கும் சேர்த்தே மூன்று ஆசிரியர்கள்தான்.
அந்தப்பள்ளியில் நான்காம் வகுப்பில் படிக்கும் பையனுக்கு அவன் பெயரை எழுத தெரியாது. மதியச்சாப்பாடு இலவசம் என்பதற்காகவே பிள்ளைகளைக் கொண்டுவந்து விடுகிறார்கள். மற்றபடி படிப்பைப்பற்றிய அக்கறை பெற்றோரிடமும் இல்லை. பல பிள்ளைகள் வயதிலும் உருவிலும் பெரியவை. அவை சண்டைபோடாமல் பாதுகாக்கவே பாதி உழைப்பு போய்விடும். மூன்றுநான்கு வகுப்புகளை ஒன்றாகச்சேர்த்து வைத்து எதையாவது பொதுவாகச் சொல்லிக்கொடுப்பார். இதற்கு சமூகநலத்துறை அளிக்கும் ஊதியம் மிகமிகக் குறைவு. அங்கே ஆரம்பப்பள்ளி ஆசிரியர் அந்தச் சம்பளத்தில் குடும்பமாக வாழ முடியாது. அங்கே சிக்கனமாக இருந்து அந்தப்பணத்தை இந்தியாவுக்கு அனுப்பினால் அது நல்ல தொகை.
பிள்ளைகளின் வீட்டில் பெரும்பாலும் காலையுணவு இருப்பதில்லை. விடுமுறை விட்டால்கூட இன்னொரு முறை வந்துகேட்டுவிடுச்செல்வார்கள் என்றார் நண்பர். நான் கறுப்பர்களா என்றேன். 90 சதவீதம் கறுப்பர்கள், மிச்சம் ஹிஸ்பானிய வம்சம், வெள்ளையர்களும் உண்டு என்றார். இந்நிலை இன்று தமிழகத்தின் மலையோரக்கிராமங்களில் ஒரு வேளை இருக்கக்கூடும்.அமெரிக்க ஆரம்பப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன, பிஎட் படித்துவிட்டு இருப்பவர்கள் இருந்தால் சொல்லுங்கள் என்றார் .
ஜப்பானைப் பற்றிய ஒரு சித்திரம் நமக்கு உண்டு. ஆனால் சமீபத்தில் அங்கே கொஞ்சநாள் வாழ்ந்த ஆசி.கந்தராஜா[சிட்னி] அவர்கள் அங்கே உள்ள கொடும் வறுமையின் சித்திரத்தை ஒரு கட்டுரையில் எழுதியதை வாசித்தபோது திக் என்றது. கடுமையான தன்ணீர் பஞ்சத்தில் ஒரு தொட்டி நீரில் ஒருவர் குளித்த நீரிலேயே அடுத்தவர் என்று மொத்த குடும்பமும் குளிக்கும் காட்சி கொடுமையானது.கடைசியில் குளிக்கவேண்டியவர் அம்மா.
வாழ்க்கைக்கு எப்போதுமே பலமுகங்கள் உண்டு, முகத்தின் தோற்றமல்ல பாதத்தில் இருப்பது என்ற தரிசனம் இருந்தால்போதும் தகவல்கள் தானாகவே வந்துசேரும். அந்த தரிசனம் கொண்டவனே எழுத்தாளன். ஆகவே ஒரு நல்ல எழுத்தாளனின் அவதானிப்புகள் எந்த நிபுணரின் கணிப்புகளை விடவும் கோட்பாடுகளைவிடவும் முக்கியமானவை. அதை ‘கல்வி அறிவு’ உண்மையிலேயே இருக்கும் சமூகங்கள் அறியும். இல்லாதவர்கள் எழுத்தாளன் ஏன் கல் உடைக்கப்போகக் கூடாது என்று விசனப்படுவார்கள். பரவயில்லை, ஒரு தமிழ் எழுத்தாளன் தன்னைப்பொருட்படுத்தாத கும்பலை நோக்கிப்பேசியே பழக்கப்பட்டவன்
ஜெ
அன்புள்ள ஜெ,
திரு மணிவண்ணன் அவர்களின் கடிதத்திற்கான உங்கள் எதிர்வினை. மணிவண்ணனின் முதல் கடிதம் அவர் சொல்ல வந்ததை தெளிவாக வெளிப்படுத்தாமல் இருந்ததும் ,உங்கள் தவறான புரிதலால் விளைந்த சற்று காட்டமான எதிர்வினையும் அதற்க்கு நீங்கள் மனிப்பு கேட்டு இருப்பதும் குறித்து எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால் அவரது சில கருத்துக்களுக்கு நீங்கள் மௌனம் காத்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
இந்த மௌனத்திற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். அனால் உங்கள் மன்னிபோடு இணைந்துள்ள இந்த மௌனம் என்னளவில் தவறானதாக தோன்றுகிறது. அல்லது அத்தகு தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த மௌனம் அவர் இலக்கிய ஆர்வம் உள்ளவர் அல்லது உங்களுக்கு உதவி செய்தவர் என்பதால் விளைந்த சமரசம் போல் உள்ளது. அறியாமையின் திமிர் மட்டுமல்ல அறிதலிலும் கருத்துக்கள் மேம்போக்காக அதுவும் இத்தனை காட்டத்துடன் வெளிவரத் தேவை இல்லை. அப்படி வரும் போது அது குறித்து தெளிவான எதிர்வினை ஆற்றும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. இந்தியா தேசத்தின் தவறுகள், பிழைகள் , போலித்தனங்கள் பற்றிய அவரது வருத்தம் ஞாயமானது. ஆனால் அதில் பாரபட்சம் உள்ளது. சற்று அவசரமானது. அமெரிக்க தேசத்தின் மறக்க முடியாத வரலாற்று பிழைகளும் அவற்றின் தொடர்ச்சியும் பற்றி யோசனை செய்யாமல் உணர்ச்சி வேகத்தில் எழுந்தது. இதை நீங்கள் உணராதவர் இல்லை. அதனாலேயே முதலில் அதை நாகரீகமற்ற கருத்தாக சொல்லி உள்ளீர்கள். ஆனால் அடுத்து அவர் இலக்கிய ரசனை உள்ளவர், இலக்கியவாதிகளுக்கு உதபுவர் என்றவுடன் அவரது கருத்து அல்லது அதன் வெளிப்பாடு குறித்த உங்கள் நிலைப்பாட்டை தீவிரப்படுத்தாமல் மன்னிப்பு கேட்டு வருந்துவது மிகவும் உறுத்துகிறது. மன்னிக்கவும்.
ராஜரத்தினம்
அன்புள்ள ராஜரத்தினம்,
மணிவண்ணன் எந்த உதவியும் எனக்குச் செய்யவில்லை. அவரது நல்ல நோக்கத்தைப்புரிந்துகொன்டபின் கடுமையாகச் சொல்லியிருக்கலாகாதோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நான் எவரயும் தனிப்பட்டமுறையில் புண்படுத்த விரும்பவில்லை.
மணிவண்ணன் கடிதம் ஓர் ஆழமான ஆய்வுக்கோ பதிலுக்கோ தகுதியானதல்ல. அவரது மனப்பதிவு மிக மேம்போக்கானது. ஆகவேதான் அந்த மனநிலையை மட்டுமே என் இலக்காகக் கொன்டேன். இந்தியாவின் இன்றைய நிலைக்கு காரணமான சமூக, வரலாற்று, பொருளியல் காரணிகளைப்பற்றி இந்த இணையதளத்தில் பல கட்டுரைகளில் விரிவாகவே பேசியிருப்பதாகவே எண்ணுகிறேன்
ஜெ
வணக்கம்
அமெரிக்க சமுதாயத்தின் “அறிவியல் கல்வியின்மை” (scientific illiteracy) உலக பிரசித்தி பெற்றது. கார்ல் சாகன் இது குறித்து விரிவாக “The demon haunted world” எனும் நூலில் எழுதியுள்ளார். அமெரிக்க செனேட்டர்களுக்கும் மாஃபியாக்களுக்குமான தொடர்பு பிரசித்தி பெற்றது. அதனை கொஞ்சம் ஆராய முயற்சித்தாலும் அவர்கள் சுட்டுக்கொல்லப் படுவார்கள் என்பதுதான் உண்மை. மற்றபடி சட்டையை பிடித்து இழுத்து நடுத்தெருவில் வைத்து கேள்வி கேட்கமுடியும் என்பதெல்லாம் எங்கும் அரசியல்வாதிகள் ‘அனுமதிக்கக் கூடிய‘ நாடகங்கள்தான்.
: இந்தியாவில் ஊழல் இல்லையென்றோ அல்லது இந்திய அரசியல்வாதிகள் நல்லவர்கள் என்றோ அமெரிக்காவிடமிருந்து நாம் படிக்க வேண்டிய பாடம் எதுவும் இல்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் நிச்சயமாக இத்தகைய மேம்போக்கான ஒப்பீடுகளை செய்யும் நபர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்பது கவலையை தருகிறது.
. நீங்கள் எந்த மனிதரிடமும் வெறுப்பை காட்டி நான் பார்த்ததில்லை. (சில குணங்களை நீங்கள் வெறுத்து ஒதுக்குவீர்கள். ஆனால் அது தனிமனித காழ்ப்பாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து கற்று கொள்ள முயலும் கடினமான ஒரு குணம் அது.) அது உங்கள் இயல்பும் அல்ல. ஆனால் நீங்கள் ஒருவரிடம் உள்ள தவறை மிக மென்மையாக நகைச்சுவையாக சொல்ல முயலும் போது கூட அவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
நீலகண்டன் அரவிந்தன்
|
அதிலும் அவர்கள் ஆசாரிய பீடத்தில் அமர்ந்து உபதேசம் செய்யவும் முற்படும் போது …உங்கள் பொறுமையை பார்த்துதான் படிக்க வேண்டியிருக்கிறது