யூத்து- கடிதம்

அன்பு ஜெயமோகன்,

தங்கள் “யூத்து கட்டுரை” வாசித்தேன். அருமையான கருத்தை அழுத்தமாக சொன்னதற்கு என் நன்றி. இதற்கு முன் சில சமயம் தங்கள் கருத்துக்களோடு நான் மாறுபட்டிருகிறேன். ஆனால் தங்கள் இந்த க் கட்டுரையோடு நான் முழுவதுமாக ஒத்துப் போகிறேன். தங்களைப் போல் மற்ற அறிவார்ந்த மக்களைப் போல் ரசனை இல்லாவிடினும் ஏதோ கொஞ்சம் வாசிப்பும் ரசனையும் மிக்க நான் பல சமயம் இது போன்ற யூத் கூட்டத்தால் நிராகரிகரிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் நான் இந்த சமுகத்தோடு ஒட்டாதவன் என்று எண்ணி என் வாசிப்பை, ரசனையை மாற்றிக் கொண்டு அவர்கள் கலாசாரத்தோடு ஒத்துப் போகவும் ஆசைப்பட்டிருக்கிறேன்.

மிக்க நன்றி தங்கள் கட்டுரையால் என் ரசனைகள் அங்கீகாரம் பெறுகின்றன. இது போன்று யூத் கூட்டம் பெருகி இருப்பதால் “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்ற வாக்கின்படி நல்ல ரசனை கொண்ட மக்களும் தங்களைத் தொலைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது போன்ற மனிதர்களிடமிருந்து தப்பிப்பதெப்படி? வணிக சினிமா கலாசாரம் பெருகிப் போன இந்த சமூகத்தில் எழுத்தை, எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுவது எப்படி? இல்லை நானே ரகசியமாய்ப் படித்து ரகசியமாய் ரசித்துக் கொள்வதுதானா?

ஆனந்த் பாலசுப்ரமணியன்

அன்புள்ள ஆனந்த்

இன்று ஒரு ரசனையும் வாசிப்பும் உள்ள இளைஞனுக்கு இருக்கும் மிகப் பெரிய சிக்கலே இதுதன்.

இது பெண்களுக்கு இன்னும் அதிகம்.

இரு விஷயங்கள். ஒன்று நம் தகுதிக்காக நாம் வெட்கப்படவேண்டியதில்லை. அதை ஒளிக்க மறைக்க வேண்டியதில்லை. இரண்டு என்னதான் முயன்றாலும் நம் தரத்தை விடத் தாழ்ந்த இடத்தில் நம்மால் ஒட்ட முடியாது. அது பலசமயம் நம்மைப் போலியாக நடிக்கவைத்து கேலிக்குரியவர்களாக ஆக்கும்

நாம் நமக்குரிய சுற்றத்தை நாமே கண்டடைய வேண்டியதுதான். ஆனால் அதற்கு இணையம் என்னும் போலிவெளி ஒரு வழியல்ல

ஜெ

முந்தைய கட்டுரைவிவசாயிகள்
அடுத்த கட்டுரைவேளாண்மை- கடிதங்கள்