இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நான் நித்ய சைதன்ய யதியின் குருகுலத்தில் ஆரோன் என்ற அமெரிக்க இளைஞரைப்பார்த்தேன். மெல்லிய உதடுகளும் சிவந்த தலைமுடியும் பச்சைக்கண்களும் இளங்கூனலும் கொண்ட அந்த இளைஞர் ஒரு ஊதாநிறக் குடையுடன் ஊட்டியில் தனித்து அலைந்துகொண்டிருந்தார். நித்யா நடக்கச்செல்லும்போது மட்டும் கூடவே செல்வார். அவரிடம் ஒருமுறை பேச நேர்ந்தது. அவர் நித்யாவைக் கண்டுகொண்ட தருணத்தைப்பற்றிச் சொன்னார்
நான் ஒருவிஷயம் கவனித்திருக்கிறேன். மதநம்பிக்கையாளர்களில் நூற்றுக்குத் தொண்ணூறுபேர் அந்த மத அடிப்படைகளை உண்மையில் நம்புவதில்லை. அவர்கள் அந்தமதத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கை என்பது அந்த மதம்மூலம் உருவாகும் பெரும் மக்கள் திரளுடன் தன்னையும் பொருந்திக்கொள்வதற்கான ஒரு பாவனைமட்டுமே. அந்தக்குழு அளிக்கும் தன்னடையாளமும் பாதுகாப்புணர்வுமே அவர்களுடைய இலக்கு. ஆகவே அந்த மதநம்பிக்கையை அவர்கள் உள்ளூர ஆராய்வதில்லை. அதைநம்பி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில்லை. அந்த நம்பிக்கை எந்த அளவுக்கு அவர்களுக்குள் ஆழமாக இல்லையோ அந்த அளவுக்கு அவர்கள் உக்கிரமாக அதற்காக வாதாடுவார்கள். இடைவெளியில்லாமல் அதற்காக ஆள்சேர்ப்பார்கள்.
உண்மையில் அப்படி ஆழமான நம்பிக்கை இருக்கும் என்றால் அவர்கள் அந்த நம்பிக்கைமேல் விழும் அடிகளைத் தாங்களும் ஏற்றுக்கொள்வார்கள், நிலைகுலைவார்கள். அந்த நம்பிக்கை பொய்யாகுமென்றால் உடைவார்கள், இன்னொன்றைத் தேடுவார்கள். மதநம்பிக்கையாளர்களில் எவராவது அவர்களின் எந்த நம்பிக்கையையாவது தர்க்கபூர்வமாக மறுக்கப்பட்டுவிட்டது என ஒத்துக்கொண்டு பார்த்திருக்கிறீர்களா? நம்பிக்கை இழப்பால் அவர்கள் சிதறுண்டு போவதைக் கண்டிருக்கிறீர்களா?
அவர்களால் முடியாது. ஏனென்றால் அவர்கள் அந்த நம்பிக்கையின்மீது கட்டி எழுப்பிக்கொண்டிருக்கும் லௌகீகவாழ்க்கையை இழக்க அவர்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு நம்பப்படுவது முக்கியமல்ல, தங்கள் நம்பிக்கையே முக்கியம். நம்பப்படுவது அழிந்தாலும் அவர்கள் கவலைகொள்வதில்லை. தங்கள் நம்பிக்கையைப்பற்றி மட்டுமே கவலைகொள்வார்கள். ஆகவே எந்நிலையிலும் அவர்கள் தங்கள் நம்பிக்கையைப் பேணிக்கொள்ள வாதிடுவார்கள்
விதிவிலக்கு சிலர். அவர்களுக்கு மதநம்பிக்கை என்பது ஒரு குழு அடையாளம் அல்ல. ஒரு உலகியல் சின்னம் அல்ல. அந்தரங்கமான மெய்த்தேடலின் வழி அது. அங்கே அவர்களுக்குத் தாங்கள் முக்கியமல்ல, தங்களால் தேடப்படும் உண்மையே முக்கியம். அவர்கள் மூர்க்கமாக வாதிடுவதில்லை. நியாயப்படுத்துவதில்லை. புரிந்துகொள்ளவே எப்போதும் முயல்கிறார்கள். அவர்களின் விவாதங்களில் அகங்காரம் இருக்காது, அவதானிப்பு மட்டுமே இருக்கும்.
அத்தகையோர் அபாரமான ஒரு நேர்மையை, ஒரு களங்கமற்ற அர்ப்பணிப்பைக் கொண்டிருப்பார்கள். சிலசமயம் அவர்களை நாம் அசடுகள் என்றுகூட நினைப்போம். ஆரோன் அத்தகையவர். அவர் இளமையிலேயே கிறித்தவத்தைக் குடும்ப மரபாக ஏற்றுக்கொண்டவர். கிறித்தவத்தின் எல்லா நம்பிக்கைகளையும் அவர் முழுமையாகவே நம்பியிருக்கிறார். பூமி பிரபஞ்சத்தின் மையம் என்றும், பூமிக்காகவே சூரியசந்திரர்களும் விண்மீன்களும் படைக்கப்பட்டன என்றும்,உலகம் ஆறுநாட்களில் உருவாக்கப்பட்டது, அங்கே ஏதன் தோட்டமும் ஆதமும் ஏவாளும் படைக்கப்பட்டு மானுடம் பிறந்தது என்றும்,மனிதன் கடவுளின் உருவத்தில் கடவுளால் படைக்கப்பட்டான், ஆகவே கடவுளுக்கு மனித உருவம் உண்டு என்றும்.
அனேகமாக எந்தப் படித்த கிறித்தவரும் அதையெல்லாம் உள்ளூர நம்புவதில்லை, அதிலும் அறிவியல்கல்வி முழுமைகொண்ட அமெரிக்கச்சூழலில். ஆனால் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள் , காரணம் அது அவர்களுக்கு மதம் என்ற அமைப்பை உருவாக்கி அளிக்கிறது. அவர்கள் அறிவியலையும் மதத்தையும் ஒன்றை ஒன்று தீண்டாத இரு வழிகளாக வைத்துக்கொள்வார்கள். ஆனால் ஆரோன் உண்மையாக நம்பினார். அறிவியல் அவரது மத நம்பிக்கையை உடைக்க உடைக்க அவர் உடைந்து சிதறிக்கொண்டிருந்தார். உறக்கமற்றவராக, தத்தளிப்புகொண்டவராக ஆனார். ‘அப்படியென்றால்? ஆகவே?’ என மனம் அலைகொண்டது.
அவர் அறிவியலைக் கற்றார். அறிவியலைக் கற்கக்கற்க அது அவரது தர்க்கத்தை நிறைவுசெய்வதை உணர்ந்தார். மெல்ல முழுக்கவே மதநம்பிக்கையில் இருந்து வெளியேவந்தார். அவரும் அவரது இருசகோதரர்களும் நாத்திகர்களானார்கள். ஆனால் மேலைஅறிவியல் தன்னுள் தனக்கான அறவியலைக் கொண்டிருக்கவில்லை என்பதை ஆரோன் உணர்ந்தார். அறம் சார்ந்த நிலைப்பாடுகளை அது அப்போதும் மதங்களில் இருந்தே பெற்றுக்கொண்டிருந்தது என்று கண்டார்.
அறம் என்பது துண்டுபட்ட அறிவுத்துறைகளில் இருந்து உருவாகாது. பிரபஞ்சத்தை, உலகை, உயிர்க்குலத்தை, மானுடத்தை, சமூகத்தை, மனித அகத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கும் ஒரு முழுமைநோக்கில் இருந்தே அறம் உருவாகமுடியும். அறம் என்பதே அந்த முழுமைநோக்கை நாம் வாழ்க்கையின் ஒவ்வொரு துண்டிலும் செயல்படுத்திப்பார்ப்பதுதான்.
மனிதனால் பிரபஞ்சத்தை, உலகை, உயிர்க்குலத்தை, மானுடத்தை, சமூகத்தை, மனித அகத்தை முழுமையாகக் கண்டுவிட முடியாது, வகுத்துக்கொள்ள முடியாது. ஆகவே அவன் அறிந்த சிலவற்றில் இருந்து அறியாத முழுமையைக் கற்பிதம் செய்துகொள்கிறான். உள்ளுணர்வால் உருவாக்கிக்கொள்கிறான். நம்முடைய முழுமைநோக்குகள், அதாவது தரிசனங்கள், எவையும் தர்க்கத்தால் அடையப்படுவன அல்ல. அவை கற்பனையின் விரிவாலும் உள்ளுணர்வின் எழுச்சியாலும் நம்மால் அடையப்படுபவை. அவற்றைப் புறவயமாக விளக்க முடியாது,திட்டவட்டமாக நிரூபிக்கமுடியாது. அதனால்தான் அவற்றுக்கு அறிவியலில் இடமில்லை. அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு இடத்திலேயே அவை வேர்கொள்ளமுடியும். அந்த இடமாகவே இதுநாள் வரை மதம் இருந்துவருகிறது.
மதத்தின் தரிசனம் அறிவியல் அடிப்படையுடன் இருக்கமுடியாது. அது உள்ளுணர்வுசார்ந்ததே. ஆனால் அந்த உள்ளுணர்வு அறிவியலுக்கு எதிரானதாக இருக்கமுடியாது. அறிவியலால் நிராகரிக்கப்படுவதாக இருக்கமுடியாது. அறிவியல் தன் தர்க்கம்மூலம் மெல்லமெல்ல அதை நோக்கி வந்தாகவேண்டும். அப்படி அறிவியலுக்கும் உகந்ததாக இருப்பதே சரியான மதமாக இருக்க்முடியும்.
அந்த உணர்வுடன் ஆரோன் மீண்டும் மதங்களுக்குத் திரும்பினார். பைபிளை முழுமையாகவே பயின்றார். கிறிஸ்து என்னும் மகத்தான மானுடநேயனை உள்ளுணர்ந்து அறிந்தார். கிறித்தவத்தின் செய்தியின் சாரம் என்பது எளிமையும், கருணையும், சேவையும், தியாகமும்தான் என்று புரிந்துகொண்டார். அவரது பையில் சிறிய சிலுவை ஒன்றை எப்போதும் வைத்திருப்பார். ஆனால் அந்த மதம் அவருக்குப் போதவில்லை. அது வெறும் நம்பிக்கைகளின் கூடாரம் மட்டுமே என்று தோன்றியது. அந்த நம்பிக்கைகள் தொன்மையான மேய்ச்சல்நில மக்களின் குலக்கதைகளும் தொன்மங்களும் மட்டுமே. அந்த மதம் எந்தத் தத்துவநோக்கையும் அளிக்கவில்லை. தத்துவ ஆய்வுக்கான கருவிகளே அதில் இல்லை. ஆகவே அவரது தேடல் விரிந்தது.
அஞ்சத்தக்க விதத்தில் நேர்மைகொண்டவர் ஆரோன். எது உண்மையோ அதை நோக்கி மட்டுமே செல்லக்கூடியவர். அதில் தன் இருப்பு அழிவதைப் பொருட்டாக நினைக்காதவர். அவர் முதலில் கண்டுகொண்டது ஒரு சிறிய நூலை. அதன்வழியாக இந்துமதத்தை அவர் அறிந்துகொண்டார். அந்த நூல் அவர் பயின்ற கல்லூரியில் சில கல்விகளுக்குத் துணைப்பாடமாக இருந்தது. ஒரே மணிநேரத்தில் அதை வாசித்துமுடித்தார். அன்றுவரை அவர் இந்துமதம் என்பது ஒரு ‘பாகன்’ நம்பிக்கை என்ற வழக்கமான வரி வழியாகக் கடந்துசென்றிருந்தார். இந்துக்கள் என்றால் மிருகங்கள், பொருட்கள், குலக்குறிகள் போன்றவற்றைக் கடவுளாக வழிபடுபவர்கள் என்றே நினைத்திருந்தார். அவர்களின் மதம் என்பது தொன்மையான பழங்குடி ஆசாரங்கள் மற்றும் நம்பிக்கைகளின் தொகுதி மட்டுமே என எண்ணியிருந்தார்
அந்நூல் இந்துமதம் என்பது அடிப்படையில் ஒரு மாபெரும் தத்துவதரிசனம் என்ற புரிதலை அளித்தது. முக்கியமாக இந்து மதத்தின் சாராம்சமாக உள்ள கடவுள் உருவகம் என்பது உருவமற்ற, வடிவமற்ற, அறிதலுக்கு அப்பாற்பட்ட, உள்ளுணர்வால் மட்டுமே உணரத்தக்க ஒன்று என்ற அறிதல் அவரை கொந்தளிக்கச் செய்தது. அந்த கடவுளுருவம் நம்பிக்கையாலானது அல்ல. அதைக் கறாரான தத்துவம் மூலம் மட்டுமே அறியமுடியும். தூய உள்ளுணர்வு மூலம் மட்டுமே உணர முடியும். பிரபஞ்சமாகவும், காலமாகவும், காலப்பிரபஞ்சத்துக்கு அப்பாலுள்ளவையாகவும் நிறைந்திருக்கும் ஒரு அறியமுடியாத ஒன்றுதான் இந்துக்களின் கடவுள் என அறிந்த இரவு அவர் வாழ்க்கையில் மகத்தானது.
’பிரம்மம்! பிரம்மம்!’ என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். அது மட்டுமே பிரபஞ்சம். அண்டவெளியும் அணுவும் அதுவே. அதுவன்றி ஏதுமில்லை. ஆகவே இங்கே எதைக்கும்பிட்டாலும் அதையே கும்பிடுகிறோம். இந்துக்கள் கல்லையும் மிருகங்களையும் குடும்பிடுவதில்லை. அவர்கள் கும்பிடுவது பிரம்மத்தை. ஒரு கைப்பிடி மாட்டுச்சாணியைக்கூட பிரம்மத்தின்ரூபம் என்று உருவகித்து அவர்களால் வழிபட முடியும். அந்த விரிவை அவரால் பல மாதங்கள் கற்பனையை விரித்து விரித்துத்தான் உள்வாங்கிக்கொள்ளமுடிந்தது. இருப்பாகவும் இன்மையாகவும் பிரபஞ்சத்தை உணரும்நிலை ஈராயிரம் வருடம் முன்னரே இங்கே நிகழ்ந்துவிட்டதென்பதை அவரால் மிகமெதுவாகவே ஏற்கமுடிந்தது.
அவரது கல்லூரியில் பணியாற்றிய ஒரு பேராசிரியர் அங்கே பணியாற்றித் திரும்பிவிட்ட நித்ய சைதன்ய யதியைப்பற்றிச் சொன்னார். ஆரோன் நித்யாவுக்குக் கடிதங்கள் எழுதினார். பலவருடங்கள். நித்யாவழியாக பல மூலநூல்களைப் பயின்றார். நித்யா வழியாக பௌத்தத்தில் ஈடுபாடுகொண்டு தலாய்லாமாவுக்கு எழுதினார். தலாய்லாமாவை நேரில்சந்தித்து உரையாடினார். நித்யாவைத் தேடிவந்து ஊட்டியில் தங்கி விவாதித்தார். வருடம் தோறும் அவர் வருவதுண்டு.
ஆரோன் நான் சந்திக்கும்போது துகள்இயற்பியலில் ஆய்வுமாணவராக இருந்தார். இசையிலும் ஆர்வமும் பயிற்சியும் உண்டு. ஓபோ என்னும் ஐரோப்பியப் புல்லாங்குழலில் வளைவுகளும் சுழிகளும் இல்லாத அவர்களின் இசையை வாசிப்பார். அவர் அத்வைதவேதாந்தத்தையும் யோகாசார பௌத்தத்தையும் ஒன்றாகவே கண்டார். அவரது அறிவியல்நோக்குடன் இணைந்துசெல்லக்கூடிய இருமதங்கள் அவை என்றார். இன்றுவரை அறிவியல் விரியும் எந்த எல்லையும் இவ்விரு மதங்களின் தரிசனத்தை மறுப்பதாக இல்லை, மாறாக மேலும் மேலும் நுட்பமாக ஆக்கக்கூடியதாகவே உள்ளது என்றார் ஆரோன். அதை நானும் இன்று உணர்கிறேன்.
ஆரோனுக்கு இந்துமதம் பற்றிய அறிமுகத்தை அளித்த அந்தச்சிறிய நூல் இது. க்ஷிதிமோகன் சென் எழுதிய ‘இந்துஞானம் எளிய அறிமுகம்’. இந்நூல் முக்கியமாக ஐரோப்பியரைக் கருத்தில்கொண்டு ஏறத்தாழ எழுபத்தைந்தாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது. இந்துமதத்தின் மெய்ஞான சாரம், தத்துவநோக்கு , வழிபாட்டுமுறைகள் ஆகிய மூன்றையும் முறையாக அறிமுகம் செய்து கீதை உள்ளிட்ட மூலநூல்களில் இருந்து சிலபகுதிகளையும் எடுத்து கொடுக்கிறது. இந்துமதத்தை அறிமுகம்செய்துகொள்ள நினைக்கும் அறிவார்ந்த நோக்குள்ள நவீனமனதுக்கு மிக இணக்கமான நூல் இது.
இத்தகைய நூல் தமிழில் வேறு இல்லை என்ற எண்ணம் எனக்கிருந்தது. இங்கே இந்துமதத்தை அறிமுகம்செய்யும் நூல்கள் ஏராளமாக உள்ளன. அவையெல்லாமே நம்பிக்கையாளனை நோக்கிப் பேசுபவை. அவை நம்பிக்கையை மேலும் வலியுறுத்தும் நோக்கம் கொண்டவை. ஆசாரங்களையும் தொன்மங்களையும் புராணக்கதைகளையும் விளக்கக்கூடியவை. அறிவார்ந்த பார்வை கொண்டவர்களுக்கான நூல்கள் அல்ல அவை. இன்றைய இளைஞனுக்கு அவை உதவா.
ஆகவேதான் இந்நூல் தமிழில் முக்கியமானதாக ஆகிறது. ஒரு நவீன வாசகனுக்கு இந்துமதத்தை இது சுருக்கமாக அறிமுகம்செய்கிறது. எளிமையாகச் சொல்கிறேன் என்று ஆழமற்றதாக ஆக்கவில்லை ஆசிரியர். சுவாரசியமாக்குகிறேன் என்று அசட்டுத்தனமாகப் பேச ஆரம்பிக்கவில்லை. மதத்தைப்பற்றிப் பேசும்போதுகூட நம்பிக்கையைப்பற்றி பேசாமல் ஞானத்தின் வழியிலேயே செல்கிறார்.
இந்நூல் இன்று சற்றே காலாவதியாகிவிட்டதென்பதையும் மறுக்கமுடியாது. க்ஷிதிமோகன் சென் அவரது காலகட்டத்தில் இருந்த பொதுவான பல வரலாற்று ஊகங்களை, அறிவியல் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் இந்துமெய்ஞானத்தை விளக்க முயல்கிறார். அவற்றில் பல பிற்காலத்தைய ஆய்வாளர்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஆரியர்கள் இந்தியா மீது படைகொண்டுவந்து இங்கிருந்த பூர்வகுடிகளை வென்றார்கள் என்பது போன்ற ஐரோப்பிய ஊகங்களைச் சுட்டிக்காட்டலாம். அந்தவகையான இனப்படையெடுப்புக் கோட்பாடுகள் இன்று காலாவதியாகிவிட்டன.
ஆனால் அன்றைய எல்லா சிந்தனையாளர்களும் அவற்றைக் கிட்டத்தட்ட நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்று நினைத்துத்தான் மேலே பேசிக்கொண்டு செல்கிறார்கள். திலகரானாலும் சரி. நேருவானாலும் சரி. [விதிவிலக்காக இருந்த இரு மேதைகள் சுவாமி விவேகானந்தரும் பாபாசாகேப் அம்பேத்காரும்தான். அவர்கள் இந்த வகையான ஊகங்களை ஆதாரபூர்வமாக நிராகரித்தார்கள்] ஆகவே க்ஷிதிமோகன் சென்னை இத்தகைய பிழைகளுக்காக மன்னிக்கத்தான்வேண்டும்
ஒரு ஆழமான அறிமுகநூல் இது. இந்து சாஸ்திரங்களை ஐயம்திரிபறக் கற்ற ஒரு பேரறிஞரால் எழுதப்பட்டது. தமிழுக்கு ஒரு கொடை என்று இதைச் சொல்லலாம். இதை மொழியாக்கம் செய்த சுநீல்கிருஷ்ணன் ஆயுர்வேத மருத்துவர். காந்திய சிந்தனையில் பெரும் ஈடுபாடுள்ளவர். இன்னொரு மொழிபெயர்ப்பாளரான ஜடாயு இந்திய சிந்தனைமரபிலும் காவியங்களிலும் பயிற்சி கொண்டவர். அவர்கள் இருவரின் பணியும் மிகமிகப் போற்றத்தக்கது. அவர்களுக்கு என் நன்றி
ஜெயமோகன்
நாகர்கோயில்
19-07-2012
[சொல் புதிது வெளியீடாக வெளிவந்துள்ள க்ஷிதிமோகன்சென் எழுதிய ‘இந்துஞானம் ஓர் அறிமுகம்’ என்ற நூலுக்கான முன்னுரை]
முதஇரசுரம் 19 7 2009. மறுபிரசுரம்