மீன்காரத்தெரு

தமிழில் இஸ்லாமியப்பின்னணி கொண்ட இலக்கியங்கள் அவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவு. இஸ்லாமிய வாழ்க்கையை தமிழில் எழுதியவர்களில் முதன்மையான படைப்பாளி ‘தோப்பில் முகமது மீரான்’தான். மீரானின் படைப்புகளில் அவர் முன்னோடியாகக் கொண்ட மலையாள எழுத்தாளர்களான யு.ஏ.காதர், வி.ஏ.ஏ.அஸீஸ், வைக்கம் முகமது பஷீர், என்.பி.முகம்மத், புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆகியோரின் பாதிப்பு உண்டு.மீரானின் ஒருகடலோரக் கிராமத்தின் கதை, துறைமுகம்,சாய்வுநாற்காலி, கூனன் தோப்பு ஆகிய நாவல்கள் அனைத்துமே முக்கியமானவை.

குமரிமாவட்டத்தைச் சேர்ந்த மீரான் மைதீன் [ஓதி எறியபப்ட்ட முட்டைகள் ] குறிப்பிடத்தக்க கதைகளை எழுதியிருக்கிறார். களந்தை பீர்முகமது கவனத்துக்குரிய படைப்பாளி. சமீபத்தில் வந்த சல்மாவின் ‘இரண்டாம் சாமங்களின்கதை’ பரவலான வாசிப்பினைப் பெற்றது. பிரபலஇதழ்சார் எழுத்தில் கருணாமணாளன்,ஜெ.எம்.சாலி ஆகியோர் இஸ்லாமியப் பின்னணியுடன் எழுதியிருக்கிறார்கள்.

ஆயினும் தமிழ்நாட்டு இஸ்லாமிய வாழ்க்கை இன்னமும் இலக்கியவட்டத்திற்கு வெளியிலேயே உள்ளது என்பதுதான் உண்மை. இஸ்லாமிய சமூகம் பொதுவாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தொழிலிலும் வணிகத்திலும் கவனம்செலுத்துவதாக இருப்பது ஒரு காரணம். இன்னொன்று, ஒரு உண்மையான படைப்பாளி தன் படைப்பூக்கத்துடன் செயல்படுகையில் மரபான அமைப்புகளை சீண்டுகிறான்,எரிச்சலூட்டுகிறான், மறுசிந்தனைகளைக் கோருகிறான். இறுக்கமான இஸ்லாமிய சமூகத்தில் இன்று அதற்கு அளிக்க வேண்டிய விலை மிக அதிகம். மரபுகளை தூக்கிப்பிடிக்கும் பேச்சாளார்களே கலாச்சாரக்குரல்களாக முன்னிறுத்தப்படுவார்கள்.

இந்நிலையில் தமிழக இஸ்லாமிய சமூகத்தின் அகம் குறித்து எழுதப்படும் படைப்புகளுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவ்வகையில் கவனத்துக்குரிய ஆக்கம் கீரனூர் ஜாகீர்ராஜா எழுதிய ‘மீன்காரத்தெரு’. ஜாகீர்ராஜா இதுவரை சில சிறுகதைகளே எழுதியிருக்கிறார். மிகுந்த பொருளியல்நெருக்கடி கொண்ட வாழ்க்கைச்சூழலில் இருந்துகொண்டு இலக்கியம் கோரும் உழைப்பை கொடுக்க முடியாது போனவர் அவர் என்று அறிந்துகொண்டேன். இது அவரது முதல் நாவல்.

கடல்சார்ந்த நாவல் அல்ல இது. மீன்காரத்தெருவில் வாழ்பவர்கள் ஒரு புராதன ஏரியில் மீன்பிடித்துவாழும் அடித்தட்டு இஸ்லாமியர்கள். பிறவியிலேயே தாழ்ச்சி கற்பிக்கப்பட்ட மனிதர்கள். ‘மீன்காரன்’ ‘மீன்காரி’ என்பது வசைக்குநிகராகவே கையாளப்படுகிறது. அவர்கள் வாழும் தெரு அழுக்கும் வறுமையும் வன்முறையும் வாழும் ஒரு கழிவிடம்போலிருக்கிறது. அவர்களைப் பொருளியல்ரீதியாகவும் பாலியல்ரீதியாவும் மதரீதியாவும் சுரண்டிவாழ்பவர்களின் இடம் பங்களாத்தெரு. இந்நாவல் இவ்விருத்தெருக்களுக்கு இடையேயான முரண்பாட்டின் கதை.

தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகில் சொல்லப்பட்டுவரும் கதை, வழக்கமான பிரச்சினைகள். ஆனால் இந்நாவல் முக்கியமானதாக ஆவது இதில் உள்ள சித்தரிப்புகளில் கைகூடியுள்ள நுண்ணிய அகமன வெளிப்பாடுகளினால்தான். மீன்காரத்தெருவின் சண்டியரான நைனாவின் குணச்சித்திரம் ஓர் உதாரணம். அவனுடைய இலக்கற்ற வன்முறையையும் மரபுமீறல்களையும் மிகையில்லாத துல்லியத்துடன் ஆசிரியர் காட்டுகிறார். அது சுரண்டலுக்கும் அவமதிப்புக்கு எதிரான அவனுடைய கலகம்தான். ஆனால் அது அவனுக்கே தெரியாது, நேரடியான கட்டற்ற வன்முறையாகவே அது வெளிபப்டுகிறது. நைனாவின் மீறல்களில் இருந்துகொண்டே இருக்கும் திமிர் இந்நாவலின் முக்கியமான அம்சம்

அடித்தட்டுப் பெண்களின் அக ஓட்டங்களை இயல்பாகத் தொடர்ந்துசெல்ல ஆசிரியரால் இயன்றிருக்கிறது.ஆமினாவின் உள்ளார்ந்த கனவுகள், தொட்டதுமே கூசிச்சுருங்கும் சுயமரியாதை, ஆனால் அதையும் மீறி அவளுக்குள் ஊறும் உலகஆசை அவளை முதலாளியின் மகனை நோக்கி மெல்ல மெல்ல ஈர்ப்பது ஆகியவற்றை சிறந்த புனைவுக்குரிய நுட்பத்துடன் வாசித்து விரித்தெடுக்க இயலும்.

நாவலெங்கும் வறுமை உருவாக்கும் கொடூரமான மனநிலையின் சித்திரங்களைக் கண்டுசெல்ல முடிகிறது.காலந்தோறும் ஒடுக்கப்பட்ட மகக்ள் படிப்படியாக உணரும் சுய இழிவிலிருந்து உருவாகும் கசப்புமிக்கச் சிரிப்பும் பகடியும் பல இடங்களில் வெளிப்படுகிறது. ”பங்களாத்தெருவுக்குப் போனாலும் போவமேயொழிய பலசாதிகிட்டே போவ மாட்டம்ல?” என்ற குரலில் வெளிப்படுவது என்ன உணர்வென்றே சொல்ல முடிவதில்லை.” குடியானவண்ட்டே போறதுக்கு இஸ்லாமானவண்டே போகலாம்” என்ற பதில் குரலிலும் அந்த புரிந்துகொள்ளமுடியாத ஒன்று உள்ளூர உருள்கிறது.

இந்நாவலை இப்போது முழுமையான ஒரு படைப்பாகக் கொள்ள முடியாது. இது உதிரிச்சித்தரிப்புகளின் தொகுப்பு போல உள்ளது. சித்தரிப்புகளும் முன்னுக்குப்பின்னாக மாற்றப்பட்டுள்ளன. தெருவையும் அங்குள்ள வாழ்க்கையையும் முழுமையாகச் சித்தரிக்க இந்த பக்க அளவு கொஞ்சம்கூட போதாது. எண்பத்தைந்து பக்கமே உள்ள நாவல் இது. ஆசிரியரே சொல்வதுபோல இந்நாவல் கோரிய உழைபபினை அளிக்க அவரால் இயலவில்லை.

ஆனால் இருவகையில் இது முக்கியமானது. பொதுப்புத்திக்குத் தட்டுப்படும் சித்திரங்களை அழுத்தமாகக் கிழித்து உண்மையான உள்சித்திரங்களை அளிக்கும் நேர்மையும் தீவிரமும் கொண்ட ஆக்கம் இது. ”நல்ல தண்ணிக்கு பள்ளிக்குடத்து கொளத்துலதானலே போகணும். இங்கிட்டு பூசணிக்கா லெவ்வ கெணத்திலயோ தொண்டுவா கெணத்திலெயோ நம்மள தண்ணி எடுக்க விடமாட்டேங்கிறாங்க..” ”ஏல நாம தொட்டா தீட்டாயிடுமா?” — என்ற குரல் முதல்முறையாகப் பதிவாகும் ஆக்கம் இது.

உரையாடல்களில் நுண்ணிய இடைவெளிகள் வழியாக காமம் என்ற ஆதியுணர்வின் சில புதிய தடங்களை தொட்டுச்செல்ல முடிந்திருப்பது இந்நாவலின் முக்கியமான கலைவெற்றி.

ஜாகீர்ராஜா இதேநாவலை இன்னும் விரிவாக எழுத வாய்ப்பிருக்கிறது.அப்போது இது தமிழின் முக்கியமான கலைப்படைப்புகளில் ஒன்றாக இருக்கும்

மீன்காரத்தெரு. நாவல். கீரனூர் ஜாகீர் ராஜா. மருதாபதிப்பகம். சென்னை.

முந்தைய கட்டுரைநம்மாழ்வார்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமின்னஞ்சல் subscription வசதி