தென்கரை மகாராஜா கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். குலதெய்வம்-கடிதங்கள் பதிவு கண்டேன். சிலர் அறியாமையால் திருப்பதி பாலாஜி குலதெய்வம் என்று கூறுகிறார்கள் என்று எழுதி இருந்தீர்கள். அறியாததால் அவ்வாறு சொல்ல வேண்டி இருக்கிறது. ஒருவருக்குத் தனது குலதெய்வம் தெரியாவிட்டால், திருப்பதி பாலாஜி குலதெய்வமாக அனுசரிக்கப்படுவார். திதி கொடுக்கும் போது, ஒருவருக்கு முப்பாட்டன் பெயர் தெரியா விட்டால், கோவிந்தா எனவும், லக்ஷ்மி எனவும் குறிப்பிடப்படும்.

வணக்கம்,
ராமகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ!

வணக்கம். எங்கள் குலதெய்வம் சித்தூர் தென்கரை மகாராஜர் சாஸ்தாவைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு ஆசியாக‌ உங்களுக்கு அந்த மகாராஜர் மேலும் பல நன்மைகளைச் செய்து கொடுப்பார்.

“நான் வேர்களைத் தேடி ஒரு பயணம்” என்ற என் கட்டுரையை 8 ஏப்ரல் 2011 ல்
http://classrom2007.blogspot.com ல் எழுதியுள்ளேன். அதில் சித்தூர் மகாராஜரைப் பற்றிய வரிகள் இவை :

சனிக்கிழமை 26 மார்ச் காலை அண்ணன் சொன்னார்,
“நமது குலதெய்வமான சித்தூர் சாஸ்தா கோவிலுக்குப் போவோம்”

“என்ன சொன்னீர்கள்?! நமது குலதெய்வம் தென்க‌ரை மஹாராஜா அல்லவா?”
இது நான்.

“இல்லை இல்லை பெரிய பெரியப்பா சொன்னது சித்தூர் சாஸ்தாதான்”

“என் அப்பா சொன்னது தென்க‌ரை மஹாராஜாதான்”

எங்க‌ளுக்குள் பெரிய மன வேற்றுமையே தோன்றிவிடும் போல் ஆகிவிட்டது.

“சரி நீங்கள் சொல்லும் சித்தூருக்குப் போய் சாஸ்தாவை தரிசிப்போம். பின்னர் நான் சொல்லும் தென்கரை மஹாராஜா கோவிலுக்கும் போகணும்” என்றேன். சரி என்று ஒப்புக்கொண்டார்.

சாஸ்தா கோவிலுக்குப் போகுமுன்னர் நாங்குனேரி சென்று தோதாத்ரி நாதரையும் ஸ்ரீவரமங்கைத் தாயாரையும் தரிசித்தோம்.என் மாமாவுக்கு தோதாத்ரி என்று பெயர். அம்மாவுக்கு ஸ்ரீவரமங்கை என்று பெயர். அம்மாவின் அப்பா அந்த ஊரில் பள்ளி வாத்தியாராக இருந்துள்ளார்.அம்மா துவக்க‌ப்பள்ளியை நாங்குனேரியில் படித்துள்ளார்கள். பேச்சு வழக்கில் “நாங்கணசேரி” என்பார்கள்.வானமாமலை ஜீயர் அங்குதான் உள்ளார்.முத‌ல் இந்திய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திரப் பிரசாதின் குடும்பத்திற்கு தோதாத்ரி குலதெய்வமாம்!

வள்ளியூர் வ‌ந்து சித்தூர் விரைந்தோம். கோவிலை நெருங்கும் போதுதான் தெரிந்தது அது நான் சொல்லும் தென்கரை மஹாரஜா கோவில்தான் என்று.

அப்போதும் அண்ணன் சொல்கிறார் அது சித்தூர் சாஸ்தா கோவில்தான் என்று.

வெளியிலேயே போர்டு தொங்குகிறது:”தென்கரை ஸ்ரீமஹாராஜராஜேஸ்வர் திருக்கோவில்,சித்தூர்”

ஆக ஒரே கோவிலைத்தான் நான் ‘தென்கரை மஹாராஜா கோவில்’ என்றேன். அண்ணன் ‘சித்தூர் சாஸ்தா’ என்றார்.கரகாட்டக்காரனில் வரும் ஜோக் போல ஆகிவிட்டது.”அந்த வாழைப்பழம் தான் இந்த‌ வாழைப்பழம்…”

இங்கும் நல்ல முறையில் எல்லா தெய்வங்க‌ளுக்கும் ஆடை சார்த்தி அபிஷேக ஆராதனை சிறப்பாக நடந்தது.ராகு காலம் குறுக்கிட்டதால் சுமார் 2 மணி நேரம் அமர்ந்து இருந்து இறைச் சிந்தனையுடன் வழிபாடு செய்தோம். அங்கேயே உள்ள பேச்சி அம்மன் , தளவாய் சுவாமி, வன்னிய மஹாராஜா ஆகியவர்களுக்கும் மக்கள் கூட்டமாக வந்து ஆடு பலி யெல்லாம் செய்து வழிபடுகிறார்கள்.சாதி ஒற்றுமை உள்ள ஒரு இடமாக அது காண்கிறது.அதிமுக‌ முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பெரிய மண்டபம் அமைத்துள்ளார்.”

மேலும் சித்தூர் மஹராஜர் என் வாழ்க்கையில் ஒரு பொதுப்பணியைத்துவக்க வழி அமைத்துக்கொடுத்த அதிசயத்தையும் அதே பிளாகில் 30 ஜனவரி 2011 அன்று “நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் ” என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.

என் கேள்வியை முன் நிறுத்தி ஒரு கட்டுரை எங்கள் குலதெய்வம் பற்றி எழுதியதற்கு மிக்க வந்தனம்.

கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

முந்தைய கட்டுரைபழமொழிகள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்- ஞானத்தின் தனிமை :சுநீல்கிருஷ்ணன்-1