காந்தி, அண்ணா -கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

காந்தி மீதான அவதூறு குறித்து சில எண்ணங்கள். ஃபேஸ்புக்கில் காந்தி பற்றிய எந்த செய்தி இருந்தாலும், அதில் முகவர் கருத்துக்கள் பெரும்பாலும் எதிர்மறையாகவே உள்ளன. ஃபேஸ்புக் என்பது படித்த இளைய தலைமுறையினால் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது எனும்போது, இது போன்ற கருத்துக்கள் வருத்தத்தையே அளிக்கின்றன.

யோகா போல, காந்தியும் மேலை நாடுகள் வழியாக வந்தால்தான் நாம் ஒப்புக் கொள்வோம் போலும்.

இது மாறும் என்று நினைக்கிறீர்களா? காந்தி போன்ற ஒரு மனிதர் நம் மண்ணில் எள்ளி நகையாடப்படுவது, நம் நாட்டின் மொத்த சிந்தனைத்திறனின் மேலுமே ஒரு அவநம்பிக்கையை உருவாக்குகிறது. ஒரு மனிதனின் தியாகமும், அறமும் ஐம்பது வருடங்களில் மறக்கப்பட்டு விடுமா? இவ்வளவுதானா நாம்?

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

அடிப்படையில் நாம் நுகர்வு வெறிகொண்ட சமூகமாக ஆகிக்கொன்டே இருக்கிறோம். அதாவது ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பா இருந்த நிலையை நோக்கிச்செல்கிறோம். நுகர்வே இன்பம் என பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் காந்தியை உள்வாங்குவது கடினம்

இந்தியா என்ற ஒரு தேசத்துக்கு எதிரான அவநம்பிக்கைகளைப் பல்வேறு சிந்தனைகளின் வடிவில் பரப்பும் நிறுவனங்களின் தீவிரமான பணி நம்மைச்சுற்றி நிகழ்கிறது. அவர்களைத் தவிர ஆக்கபூர்வமாக சிந்திப்பவர்களுக்கு ஊடக கவனமே இங்கில்லை

இரு எல்லைகளில் காந்தியம் துரத்தப்படுகிறது. ஆனால் இந்த இரு நோய்களுக்கும் அதுவே மருந்து

ஜெ

அன்புடன் ஜெ.மோ அவர்களுக்கு,

உங்களுக்கு இருக்கும் பல ஆயிர வாசகர்களில் நானும் ஒருவன்.

தங்களின் “அண்ணா ஹசாரே : ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்” நூலைப் படித்தேன். அண்ணா அவர்களின் போராட்டத்தை மிக எளிமையாக விளக்கியிருந்தீர்கள். காந்தியப் போராட்டத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும், உங்கள் விளக்கம் சிறு நம்பிக்கை வர வைத்துள்ளது.

சமிபத்தில் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக வரும் கூட்டம் குறைந்து விட்டதே ! அண்ணா ஹசாரேவையும் ஒரு அரசியல்வாதியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்களா ? அண்ணாவின் மீது நம்பிக்கை குறைந்து விட்டதா ? அல்லது அண்ணாவால் மக்கள் ஆதரவு ஒன்று திரட்ட முடியவில்லையா ?

உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கும் வாசகன்.
அன்புடன்,
குகன்
guhankatturai.blogspot.com

அன்புள்ள குகன்

அண்ணா ஹசாரே இன்று தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். அவரது முக்கியத்துவம் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் நம் ஊடகங்கள். எல்லாவிதமான தேசவிரோத பிரிவினைவாத சிந்தனைகளுக்கும் அவர்கள் அளிக்கும் இடம் அண்ணா ஹசாரேவுக்கு அளிக்கப்படுவதில்லை.

இன்று இடதோ வலதோ எந்தச்சிந்தனையும் ஊடகங்களை நம்பியே உள்ளது. ஊடகங்கள் சிலரது கையில் உள்ளன. அந்த ஊடகங்களை நம்பி ஆரம்பிக்கப்படும் எந்தப்போராட்டமும் ஒரு கட்டத்தில் அவர்களால் கைவிடப்படும்

இதை நான் பலியபால், நர்மதா போராட்டம் முதல் இறால்பண்ணை, கூடங்குளம் வரை கண்டுகொன்டிருக்கிறேன். ஆரம்பத்தில் அதன் செய்திமதிப்புக்காக அதை முன்னிறுத்துவார்கள். பின் அதைத் திரிக்கும் வேலையைச் செய்வார்கள். பின்பு நகைச்சுவையாக ஆக்கிக் கைவிட்டு அடுத்தவேலைக்குச் சென்று விடுவார்கள்

காந்தி அன்றைய எந்த ஊடகத்தையும் நம்பாமல் தனக்கென்றொரு செய்தி ஊடக வலையை உருவாக்கினார். பல பத்தாண்டுகள் வழியாக அவர் மெல்ல மெல்ல உருவாக்கிக்கொன்டது அது. அதைப்போல ஒன்று இப்போதும் தேவையாகிறது

என்னவாக இருந்தாலும் ஊழலை ஒரு தேசியப்பிரச்சினையாக ஆக்கியதில் அண்ணா ஹசாரே வெற்றியடைந்தார் என்றே நம்புகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைமரபு, நவீனத்துவம், பின் நவீனத்துவம் – சதுரங்கத்தின் வரலாற்றில்: கெ.எம் நரேந்திரன்
அடுத்த கட்டுரைகருக்கலைப்பு-ஒரு கடிதம்