வரலாற்றைத் தாண்டி…

எண்பத்து மூன்றில் நான் கேரளத்தின் வடக்கு எல்லையில் உள்ள அரைக்கன்னட நகரமான காசர்கோட்டில் தொலைபேசித்ததுறை ஊழியனாகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். சிறுவயது முதலே இருந்த இலக்கிய ஈடுபாடு நடுவே பல தீவிரமான அனுபவங்களால் திசைமாறி ஆன்மீக அலைச்சலாக உருமாறி மெல்ல ஓய்ந்துவிட்டிருந்த காலம். தொலைபேசி ஊழியர் சங்கத்தின் கூட்டுத்தங்குமிடத்தில் மிகச்சிறந்த வாசகர்கள் இருந்தார்கள். எந்நேரமும் இலக்கியமும் அரசியலும் தத்துவமும் விவாதிக்கப்பட்டன. நான் மீண்டும் இலக்கியப்பித்து கொண்டவனானேன்.

கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்

இம்முறை மலையாள இலக்கியம். எனக்குத் தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் நான் பத்தாம் வகுப்புபடிக்கும்போதுதான் மலையாளம் படிக்கக் கற்றுக்கொண்டேன். வைக்கம் முகமதுபஷீரை வாசிக்கவேண்டும் என்பதற்காகவே மலையாளம் கற்றேன். வாசிக்க ஆரம்பித்து நிறைய படைப்புகளை வாசித்துவிட்டிருந்தேன்.ஆனாலும் கவிதைகள் எனக்குப் பிடிகிடைக்கவில்லை.

தமிழ்க்கவிதைகள் யாப்பை உதறிப் புதுக்கவிதையாக மாறி அப்போது முப்பது வருடங்கள் தாண்டிவிட்டிருந்தன. ஆனால் மலையாளக்கவிதைகள் யாப்பையும் ஓசைநயத்தையும் கைவிடவில்லை. கவிதைகளைப் பாடுவதை நான் கேரளத்தில்தான் கண்டேன். பெரும்பாலான கவிதைகளில் முக்கால்வாசி வார்த்தைகள் நேரடியான சம்ஸ்கிருதமாக இருந்தன.

பல்லில்லாதவன் சீடையை நக்கிப்பார்ப்பதுபோலப் பல மலையாளக்கவிதைகளை எடுத்து வாசித்துப்பார்த்திருக்கிறேன். மொத்தக்கவிதையும் எழுத்துக்களாக மட்டுமே நீடிக்கும் அற்புத அனுபவத்துக்கு ஆளாவேன். ஆனால் ஒரு தொகுதியில் எல்லாக் கவிதைகளும் புரிந்தன. தெளிவான ’நாட்டுமலையாள’த்தில் அமைந்த வரிகள் யாரோ ஒரு கிராமத்து ஆசாமி வண்டியோட்டிக்கொண்டோ தண்ணீர் இறைத்துக்கொண்டோ பாடுபவை போன்றவை.

ஆனால் அவை ஏன் கவிதைகள் என்று எனக்குப் பிடிகிடைக்கவில்லை. நான் கவிதை என்று நினைத்திருந்தவை தேர்ந்தெடுத்த சொல்லாட்சி கொண்டவை. நுட்பமாக உணர்ச்சிகளையும் தரிசனங்களையும் உணர்த்தக்கூடியவை. அடங்கிய குரலில் அளவான வார்த்தைகளில் பேசுபவை. பிரமிளும் சுந்தர ராமசாமியும் ஞானக்கூத்தனும் சுகுமாரனும் தேவதேவனும் எழுதும் கவிதைகள் அவை

அந்த மலையாளக்கவிதைகள் முச்சந்திவியாபாரியின் குரல் போலிருந்தன. அக்காலகட்டத்தில் திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமிகோயிலுக்கு முன்னால் மேத்தமணிக்கு அடியில் சிலர் சிறிய கவிதைநூல்களைப் போட்டு விற்பார்கள். அவர்களே எழுதி சாணித்தாளில் அச்சடித்த கவிதைகள்.’ஒற்றக்கயிறு அல்லது மறியக்குட்டி கொலைக்கேசு’ போன்ற கொலைவர்ணனைகள். ’கொல்லம்கண்டவனுக்கு இல்லம் வேண்டாம்’ என்பது போன்ற நகர வர்ணனைகள்.

விஜயகுமாரன் மேனோன் என்ற ஒருவர் பிரபலம். நல்ல வெண்கலக்குரல். கொஞ்சம் கூன்விழுந்த உயரமான உருவம். சிவந்த நிறம். நுனிசுருட்டிவிட்ட மீசை. வெள்ளைச்சட்டையும் வெள்ளை வேட்டியும் உடுத்து சட்டைக்கையை சுருட்டி மேலேற்றிவிட்டுக்கொண்டு கணீர்க் குரலில் தன் கவிதையைப் பாடுவார். ஆ.மாதவன் எட்டாவதுநாள் என்ற கதையில் இவரைப்பற்றி எழுதியிருக்கிறார்.

கொல்லம் நகரின் வர்ணனை. கொல்லம் நகரத்தின் எல்லா தெருக்களும் விபச்சாரிகளால்தான் அடையாளப்படுத்தப்படும்.

‘பைக்காரா முக்காணு இவிடம். பல
மைக்கண்ணிமார் உண்டு இவிடே
செல்லம்ம எந்நொரு சுந்தரி-அவள்
வல்லாத்தொரு வெடியாணு அளியா!

நானெல்லாம் அருகே நின்று நாள் முழுக்க அவர் கவிதைகளைக் கேட்பேன். பெண்களின் உடல்களின் விபரீதமான சாத்தியக்கூறுகளைப்பற்றிய வர்ணனைகள். ஒருநாள் துணிந்து சினிமா பார்க்கவைத்திருந்த பணத்துக்கு ஒரு புத்தகத்தை வாங்கினேன். மொத்தம் பதினாறு பக்கம். வாசித்தபோது சப்பென்றிருந்தது. ஈசல் சிறகுதிர்ந்து புழுவானதுபோல.

அந்த மலையாளக் கவிதைகளும் அதைப்போலத்தான் இருக்கின்றன என்று நான் சொன்னபோது விடுதி நண்பர்கள் சோர்ந்து போனார்கள்:. அக்கவிஞர் அன்று இடதுசாரிகளின் இலட்சியபுருஷர். அவரது வரிகளைப்பாடாமல் ஒரு இடதுசாரிக் கூட்டமோ போராட்டமோ முழுமைபெறுவதில்லை.

‘நீ அவரைப் புரிந்துகொள்ளவில்லை’ என்று நந்தகுமார் சொன்னார். ‘நீ அவரது கவிதைகளை உள்ளே வாங்கவேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் மலையாளியாக ஆகவெண்டும். இன்னும் கொஞ்சம் அடித்தள மக்களிடம் பழகவேண்டும்’

ஏழெட்டு மாதம் கழித்து காசர்கோட்டில் ஒரு கட்சி விழா. களியக்காவிளையில் ஆரம்பித்த ஒரு நடைபயணம் கேரளத்தை முழுக்கத் தாண்டி காசர்கோடு வந்திருந்தது. அதற்கு என்னை நந்தகுமார் கூப்பிட்டார். ‘நீ வந்தாகவேண்டும்…’ என்றார்

அங்கே போனபின் தெரிந்தது எதற்காக என்று. அங்கே அந்தக் கவிஞர் வந்திருந்தார். கரிய தலைமுடியைத் தோளில் புரளவிட்டிருந்தார். நாலைந்துநாள் தாடியில் வெண்மை கலந்திருந்தது. பெரிய கடாமீசை. நல்ல கரிய நிறம். அழுக்குப் படிந்த வெள்ளைவேட்டியை டப்பாக்கட்டாக ஏற்றிக்கட்டி வெள்ளைச்சட்டை கையை சுருட்டி முண்டா வரை ஏற்றியிருந்தார். விஜயகுமாரன் மேனோனைப்போலவே. நான் புன்னகைசெய்தேன்.

விழாவில் மார்க்ஸிய ஆசான் பி.கோவிந்தப்பிள்ளை உட்பட பலர் பேசினார்கள். கடைசியாக அறிவிப்பு. ‘நமது பிரியப்பட்ட கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் இப்போது கவிதைபாடுவார்’ அரங்கமே கைதட்டலால் நடுங்கியது. அதுவரை அரைப்பங்கு இருந்த அரங்கு நிறைந்து எல்லா வாசல்களும் சன்னல்களும் தலைகளாயின.அவர் மேடைக்குச் சென்று நின்றபோதும் கைதட்டல் தொடங்கியது.

வேட்டியை சுருட்டி காலிடுக்கில் இடுக்கிக் கொண்டார். மைக்கின் கழுத்தை இறுகப்பற்றினார். ‘இங்கே காசர்கோட்டில் நல்ல தொழிலாளர்கள் இருக்கிறார்கள்’ என்று ஆரம்பித்தார். கனத்த கார்வையுடன் கூடிய குரல். தெளிவான உச்சரிப்பு. ‘அற்புதமான சாராயமும் கிடைக்கிறது’ அரங்கு முழுக்க சிரிப்பு கைதட்டல் ’கடம்மனிட்ட சிந்தாபாத்’ என்ற கூச்சல். ‘நான் இன்று நம் தொழிலாளர் தோழர்களுடன் அமர்ந்து நல்ல தரமான சாராயம் குடித்தேன். புரட்சிகரமான சாராயம் அது’ .அரங்கே சிரிப்புடன் முழங்கிக்கொண்டிருந்தது.

‘இந்தக் கவிதை நம்முடைய புரட்சிக்கு சமர்ப்பணம்!’ என்று சொன்னபின் கண்மூடி நின்றார். அரங்கு மெல்ல மெல்ல அமைதியாகியது. தொண்டையைச் செருமினார். மேலும் சிலகணங்கள். வெடிக்கப்போகும் பட்டாசைப்பார்ப்பது போல இருந்தது. பின் குரல் வெடித்தெழுந்தது .’ ஈற்றப்புலி நோற்றுகிடக்கும் ஈறன் கண்ணு துறந்நும்..’ அவரது கிராதவிருத்தம் என்ற அந்தக் கவிதையை நான் பத்து வருடம் கழித்து இப்படி மொழியாக்கம் செய்தேன்.

வேங்கைப்புலி காத்துக் கிடக்கும்
ஈரக்கண்கள் திறந்தும்,
கருநாகம் நுனியில் நெளியும்
புருவம் பாதி வளைத்தும்,
கருகியதோர் காட்டின் நடுவே
நிற்பான் காட்டாளன்!
நெஞ்சில் ஒரு பந்தம் நட்டு
நிற்பான் காட்டாளன்!

நீளமான கவிதை. தன் குடியையே எரித்து அழித்துத் தன் குடும்பத்தைக் கொன்றுகுவித்துத் தன் மண்ணைக் கைப்பற்றிய நாகரீகத்தின் முன்னால் நெஞ்சில் ஒரு பந்தம் நட்டு வந்து நிற்கிறான் காட்டு மனிதன். நீண்டு நீண்டு போகும் கவிதை அது. காட்டுமனிதனின் ஆவேசமும் கொந்தளிப்பும் அறைகூவலும். என் கண்முன் அந்தக்காட்டுமனிதனே வந்து மேடையில் நிற்பது போலிருந்தது. ஆயிரமாண்டுக்காலமாக அவர்களுக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்பது போலிருந்தது

கவிதையின் இன்னொரு முகத்தை அன்றுகண்டேன். எந்தப் பூடகத்தன்மையும் இல்லாத கவிதை. எந்த நளினமும் நாசூக்கும் இல்லாதது. தொண்டை உடையக் கூச்சலிடுவது. ஆனால் சந்தையின் கூச்சல் அல்ல. நெஞ்சில் கத்தி இறக்கப்பட்டவனின் மரண ஓலம். துரோகம் செய்யப்பட்டவனின் ஆற்றாத அழுகை. காட்டாறு போலக் கட்டற்றது. மலையருவி போல உக்கிரமானது.

கவிதைமுடிந்து கீழே வந்த கடம்மனிட்டாவை இளைஞர்கள் சூழ்ந்துகொண்டார்கள். நந்தகுமார் என்னிடம் வந்து என் தோளைத் தொட்டார் ‘எப்படி?’ என்றார். நான் கண்ணீர்மல்கித் தலைகுனிந்தேன். ‘இது அடிமைப்பட்டவனின் கவிதை. நெஞ்சில் ஈட்டி இறக்கப்பட்டவனின் கவிதை. இது அலறலாகத்தான் இருக்கும் தோழர்…’ என்றார் அவர்.

இரவு கடம்மனிட்ட எங்களுடன் வந்தார். அவருக்கு ஓர் ஓட்டலில் தங்க அறைபோட்டிருந்தார்கள். கடம்மனிட்டா ‘டேய் எனக்கு டீசல் தீர்ந்துவிட்டது…உடனே வேண்டும்’ என்றார். ‘வாருங்கள் தோழர்’ என்று நண்பர்கள் அவரை அழைத்துச்சென்றார்கள். நானும் கூடவே சென்றேன்

‘தோழர் இவருக்கு உங்கள் கவிதைகள் சந்தைக்கடைக் கவிதை போலத் தோன்றியிருக்கின்றன’ என்று பரதன் சொன்னார். கடம்மனிட்டா திரும்பி என்னைப்பார்த்தார். ‘எந்த சந்தைக்கடை?’ என்று கேட்டார். நான் பேசாமல் நின்றேன். பரதன் ‘திருவனந்தபுரத்தில் ஏதோ ஒரு மேனனின் பாட்டு போல இருக்கிறது என்றான்’ என்று சொல்லி என்னைப்பார்த்துக் கண்ணைக் காட்டினார்

‘விஜயகுமாரன் மேனன்தானே? அவன் என் நண்பன்…என்ன ஒரு குரல்…அவன் இரண்டு லார்ஜ் ஏற்றினால் என் கவிதையைப் பாடுவான், நீ கேட்கவேண்டும். எனக்கே கண்ணீர் வந்துவிடும். அற்புதமான கலைஞன். அவன் எழுதுவது மடத்தனமான கவி. பத்துரூபாய் கொடுத்து வேசியிடம் போக தைரியம் இல்லாத முட்டாள்களை ஏமாற்றுவதற்காக அவன் வேண்டுமென்றே எழுதுவது அதெல்லாம். ஆனால் அந்தக்கவிதையையே அப்படி அற்புதமாகப் பாடுகிறான் என்றால் அவன் எப்பேற்பட்ட கலைஞன்!’

நான் அதை யோசித்தே பார்க்கவில்லை. மேனனின் குரலும் உருக்கமும் உற்சாகமும் கொப்பளிக்கும் பாவனைகளும் நினைவுக்கு வந்தன. சந்தை முக்கில் அஸ்லம் பாஷாவிடம் அவர்கள் சாராயம் வாங்கிக் குடித்தார்கள். பாஷா கவிஞருக்கு அவருடைய சொந்த கணக்கில் ஒரு டம்ளர் சாராயம் கூடுதலாகக் கொடுத்தார்

நந்தகுமார் ‘இன்றைக்கு சாந்தா பாடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்’ என்றார். ‘சாந்தாதானே…இதோ’ என்று கவிஞர் தொடையில் ஓங்கி அறைந்தார். அவரது புகழ்பெற்ற சாந்தா என்ற கவிதையை முழங்கும் குரலில் பாடினார். மூடிக்கிடந்த சந்தையின் கடைவரிசைகளில் இருளில் அவரது குரல் தாளமுடியாத துயரத்துடன் அலைந்தது. அடுத்து பரதன் ’குறத்தி’ என்ற கவிதையைக் கேட்டார். கனத்த முலைகள் மீது கைக்குழந்தையுடன் குறத்தி வந்து சுரண்டல் அதிகாரக் கோட்டைமுன் நின்றாள். பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவிதையைக் கேட்டார்கள்.

நள்ளிரவு தாண்டிவிட்டது ‘டேய், ஒரு குப்பி கையில் வைத்திருக்கவேண்டும் என்று சொன்னேனே?’ என்றார் கவிஞர். பரதன் வைத்திருந்தார். அவர் அதை வாங்கி மீண்டும் குடித்தார்

‘போகலாமா?’என்றார் நந்தகுமார். நாங்கள் கிளம்பி நடந்தோம். இப்போது கவிஞர் தொங்கிய தலையுடன் ஆழ்ந்த மௌனத்துடன் மெல்லிய தள்ளாட்டத்துடன் எங்களுடன் வந்தார். எங்களுடன் வருகையிலும் அவர் வேறு எங்கோ இருந்துகொண்டிருந்தார். நான் அவரைப்பார்த்துக்கொண்டே இருந்தேன். அவ்வப்போது வரும் வழிவிளக்கின் ஒளியில் அவரது முகம் தீப்பற்றி தீப்பற்றி அணைந்தது.

நந்தகுமாரும் நானும் பின்னால் தள்ளி வந்தோம். நாங்க இருவரும்தான் குடிக்காதவர்கள்.அரசுப்பள்ளியின் மைதானம் வந்தது நந்தகுமார் என் கையைத் தன் வெதுவெதுப்பான கையால் பிடித்துக்கொண்டு கனத்த குரலில் சொன்னார் ‘நீ இன்று கேட்டது மழைவிட்டபின் வந்த தூவானம்தான்…எழுபதுகளில் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் என்றால் யார் தெரியுமா? கேரளத்தையே அடக்கி ஆண்ட கவிச்சக்ரவர்த்தி அல்லவா? இந்திராகாந்தியின் அவசரநிலைக்கு எதிராக அவர் தனியாளாகக் கொதித்து எழுந்தார். இந்தக் கிராதவிருத்தம், குறத்தி போன்ற கவிதைகள் அப்போது அன்றைய அதிகாரவர்க்கத்துக்கு எதிராக எழுதப்பட்டவை. அவசரநிலைக்காலகட்டத்தில் அவரைப் பிடிக்க போலீஸ் அலைந்தது. ஆனால் அவர் சாதாரண மக்களுடன் மக்களாக குடிகாரராக அலைந்ததனால் பிடிக்கமுடியவில்லை. திடீரென்று அவர் ஒரு சாலைச்சந்திப்பில் வந்து நிற்பார். கையில் அகப்பட்ட தட்டையோ பலகையையோ தட்டுவார். நூறுபேர் இருநூறு பேர் கூடிவிடுவார்கள். கவிதையைப் பாடிமுடிக்கும்போது அந்த இடமே உறைந்து நின்றுகொண்டிருக்கும். போலீஸ்காரர்கள்கூடக் கவிதையைக் கேட்டுப் பேசாமல் நிற்பார்கள். கூட்டத்தோடு கூட்டமாக அவரும் மறைந்துவிடுவார்’

நான் முன்னால் ஆடி ஆடிச்செல்லும் கவிஞரையே பார்த்தேன். எந்த ஆற்றல் அவரை ஒரு பேரதிகாரத்தின் முன்னால் தன்னந்தனியனாக வந்து நிற்கச்செய்கிறது? சொற்களுக்கு அந்த அளவுக்கு விசை உண்டா என்ன?

‘எமர்ஜென்ஸி முடிந்ததும் கவிஞர் இந்த ஊருக்கு வந்தார். இதே மைதானத்தில் இதே கிராதவிருத்தம் கவிதையைப் பாடினார். என்ன கூட்டம் தெரியுமா? மைதானம் முழுக்க தலைகள். பத்தாயிரம் பேருக்குமேல் இருக்கும். நகரமே ஸ்தம்பித்துவிட்டது. அவர் மேடை ஏறியபோது அப்படி ஒரு அமைதி. மைக்கைப்பிடித்து ‘ஈற்றப்புலி நோற்றுகிடக்கும்’ என ஆரம்பித்தபோது சட்டென்று ‘இன்குலாப் சிந்தாபாத்’ என்று ஒரு குரல் வெடித்தது. அரைமணிநேரம் காதுகள் உடையும் அளவுக்கு கோஷம். கவிஞர் மைக்கைப் பிடித்தபடி காத்து நின்றார். அவர் கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. பின்பு மெல்ல சத்தம் அடங்கியது. கவிஞர் பாட ஆரம்பித்தார். குரலே வெளிவரவில்லை. நாலைந்து முறை கனைத்தார். அதன்பின் கம்மியகுரலில் அழுதபடியே இந்தக்கவிதையைப் பாடினார்’

பரதனும் பின் தங்கி எங்களுடன் வந்து சேர்ந்தார். ‘நான் எழுபதுகளில் நடந்த கூட்டத்தைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன்’ என்றார் நந்தகுமார். ‘நானும் அதைத்தான் நினைத்தேன். எங்கே போயிற்று அந்த வேகம்? அந்த வரலாறே கனவுபோல ஆகிவிட்டதே…’என்றார்

நந்தகுமார் ‘அடக்குமுறை இருந்தால்தான் சுதந்திரத்தின் மகத்துவம் மக்களுக்குத் தெரிகிறது. உரிமைக்காகப் போராடும்போதுதான் கவிஞர்களும் தியாகிகளும் அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். நோய் குணமானால் மருத்துவர்களை மறந்துவிடுகிறோம் இல்லையா?’ என்றார்

கவிஞர் நின்றார். ‘டேய் இந்த மைதானத்தில் நான் ஒன்றுக்கு அடிக்கப்போகிறேன்’ என்றார். ‘அதனாலென்ன?’ என்றார் பரதன் முன்னால் சென்றபடி. கவிஞர் நின்றபடியே அந்த மைதானத்தில் சிறுநீர் கழித்தார். பின்பு தள்ளாடினார். வேட்டியைக் கட்டும்போது கால்கள் நிலைகொள்ள மறுத்தன. பரதன் பிடித்துக்கொண்டார்

‘நான் இந்த சரித்திரத்திலே இப்படியே தடம்பதித்துவிட்டு முன்னால் போவேன்…நாய் அப்படித்தான் போகும்…நான் எல்லாவற்றையும் கடந்து போகிற நாய், தெரியுமா?’ கடம்மனிட்டா சொன்னார்.
நந்தகுமார் ‘பிடி’ என்றார். பரதனும் இன்னொருவரும் பிடித்துக்கொண்டார்கள்.

கவிஞர் ‘நாய்…நான் ஒரு நாட்டு நாய்…தெருநாய்…நான் போகும் இடங்களுக்கு சரித்திரம் எல்லாம் வராது…நான் பீக்காட்டுக்குள் போவேன்…சரித்திரம் இங்கேயே நின்றுவிடும்.’ கடம்மனிட்டா ‘நான் நாய்…நான் நாய்’ என்று என்று சொல்லிக்கொண்டு பரதனின் தோளிலேயே தூங்கிவிட்டார். கிட்டத்தட்ட தூக்கியபடி அவரை அவரது அறைக்குக் கொண்டுசென்று கட்டிலில் போட்டோம். ‘நெஞ்சத்தொரு பந்தம் குத்தி..’ என்றபடி புரண்டுபடுத்தார்.

வெளியே நின்ற ஜெகதீசன் ‘தூங்கிவிட்டாரா?’என்றார். நந்தகுமார் ‘கடம்மனிட்டா தூங்கிவிட்டார். காட்டாளான் தூங்கவில்லை’ என்றார்


கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்

கேரளத்தில்பத்தனம்திட்டா அருகே கடம்மனிட்டா என்ற கிராமத்தில் மார்ச் 22, 1935ல் பிறந்தவர் ராமகிருஷ்ணப் பணிக்கர் என்ற கடம்மனிட்ட ராமகிருஷ்ணன். இளமைக்காலம் முதல் கடைசி வரைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினராகவும் செயலாளியாகவும் கடம்மனிட்டா இருந்தார். இளமையில் மாணவர்சங்கத்தில் பொறுப்பிலிருந்தார். தொழிற்சங்கப்பணி ஆற்றியிருக்கிறார். 1992ல் கேரள புரோகமன சாகித்ய சங்கம் [ முற்போக்கு எழுத்தாளர் சங்கம்] துணைத்தலைவராகப் பொறுப்பேற்றார். 2002 ல் அதன் தலைவராக ஆனார். 1996ல் ஆறன்முள தொகுதியிலிருந்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி வேட்பாளராக சட்டசபைக்கு தேர்வுசெய்யபப்ட்டார். 1982ல் அவருக்கு கேரள சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

கடம்மனிட்டாவின் பங்களிப்பு கேரளக் கவிதையில் அவர் கொண்டுவந்த ஆவேசமான நாட்டார்தன்மைதான். படையணிப்பாடல் போன்ற நாட்டார் மெட்டுகளுள்ள அவரது ஆக்ரோஷமான கவிதைகள் எழுபதுகளின் இடதுசாரி எழுச்சிகளின் முகப்புக்குரலாக மாறின.கடம்மனிட்ட கனத்த குரலும் தாளக்கட்டுள்ள பாடும் முறையும் கொண்டவர். ஒருவகையில் இன்று ஆந்திராவில் புகழ்பெற்றிருந்த கத்தாருக்கு முன்னோடி அவரே. அவரது கவிதைவெளிப்பாட்டு நிகழ்ச்சி மங்கட ரவிவர்மா இயக்கிய நோக்குகுத்தி என்ற படத்தில் உள்ளது. ஞெரளத்து ராமப்பொதுவாளின் இடைக்காவுடன் இணைந்து அதில் அவர் பாடுகிறார்.

கடம்மனிட்டாவின் நல்ல கவிதைகள் அப்போதே தமிழில் வெளிவந்தன. வானம்பாடி இதழ் அவரது கவிதைகளுக்காக ஒரு சிறப்புமலர் வெளியிட்டது.கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் மார்ச் 31,2008 அன்று கேரளத்தில் பத்தனம்திட்டாவில் காலமானார்.

[மறுபிரசுரம் – முதற்பிரசுரம் செப்டெம்பர் 2012]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 22
அடுத்த கட்டுரைகனடாவில்